பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 4, 2014

கனிச்சாறு 7 : அனைத்தும் ஒன்றே ! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்புகழ்எனக்குப் பொருட்டில்லை; நோக்கமில்லை:
பெருமையில்லை; பொருளும் இல்லை !
இகழ் எனக்குத் தாக்கமில்லை; துன்பமில்லை;
இழிவில்லை; இழப்பும் இல்லை !
திகழ்தமிழின் இனம்நாட்டின் பெருமையெல்லாம்
தேய்ந்தழிந்த உரிமை எல்லாம்
அகழ்வெடுக்கும் முயற்சியிலே இழிவெனினும்
அழிவெனினும் அனைத்தும் ஒன்றே !


துன்பம்எனைத் தொளைப்பதில்லை; அரிப்பதில்லை;
தொய்வடையச் செய்வ  தில்லை!
இன்பமெனக் கினிப்பதில்லை;  உவப்பதில்லை;
ஏக்கழுத்தும் செருக்கும்  இல்லை !
அன்புறுநம் செந்தமிழுக்கும்  இனத்திற்கும்
நாட்டிற்கும் உழைக்கும்  என்னைத்
தென்புறுத்தும் நல்லுணர்வில் மூழ்கிவிட்ட
திளைப்பினிலே எவையும் ஒன்றே !


சிறையெனக்குத் துன்பமில்லை; கொடுமையில்லை;
சிறிதுமெனைச் சிதைப் பதில்லை !
நிறைபணியால் சோர்வதில்லை; சலிப்பதில்லை;
நேர்மைநிலை குறைவ தில்லை !
குறைவறுநம் தூய்தமிழ்க்கும் மக்கட்கும்
நாட்டிற்கும் தொண்டு செய்தே
மறைவுறுநம் பெருமைகளை, உரிமைகளை
மலர்த்துகையில் அனைத்தும் ஒன்றே.  1994

கனிச்சாறு -ஏழாம் தொகுதி

தென்மொழி பதிப்பகம்

செந்தமிழ் அடுக்ககம்

(சி.கே.அடுக்ககம் (

மேடவாக்கம் கூட்டுச்சாலை

மேடவாக்கம், சென்னை - 600 100
-----------------------------------------
94444 40449


 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment