பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 2, 2014

சிந்துக்குத் தந்தை ? - க. கைலாசபதி


இராமநாடகக் கீர்த்தனை இயற்றிய அருணாசலக் கவிராயர், காவடிச் சிந்து பாடிய சென்னி குளம் அண்ணாமலை ரெட்டியார் தத்துவராய சுவாமிகள், இராமலிங்க சுவாமிகள், கோபாலகிருஷ்ண பாரதியார், குற்றாலக்குறவஞ்சி ஆசிரியர் மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர், மற்றும் பள்ளு, நொண்டிநாடகம், முதலாய இலக்கிய வடிவங்களின் ஆசிரியர் பலர், ஆகியோரே பாரதியின் பாட்டுத் திறத்தைப் பாதித்துள்ளனர்.



சமீப காலத்தில் மேற்கூறிய புலவர்கள் பாடினவற்றுக்கும் பாரதி பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் சிலரால் ஆங்காங்கு எடுத்துக் காட்டப்பட்டு வருகின்றன. உதாரணமாக, ம.பொ. சிவஞானம் வள்ளலாரும் பாரதியும் என்னும் நூலில் இரு புலவர்க்கும் பொதுவான சிந்தனைகளை ஓரளவு சுட்டிக் காட்டியுள்ளார். வள்ளலாரின் அவதாரமாகவே பாரதியாரை அவர் வருணிக்கிறார். அஃதெவ்வாறாயினும், பாரதி வள்ளலாரை 'மஹான்' என்று வருணிப்பது உண்மை. திரு.சிவஞானம் இருவருக்கும் பொதுவான கருத்துப்படிவங்களையே விதந்து காட்டுகின்றார். 


இலக்கியத் திறனாய்வு நோக்கில் ஒப்பாராய்ச்சி செய்தல் இன்றியமையாதது. ஆனால் பாரதிக்கும் வள்ளலாருக்குமுள்ள ஒருமைப்பாட்டை அழுத்திக்கூறும் ஆசிரியர் முக்கியமான வேறுபாடுகளைக் காட்டவில்லை. அவையும் அத்தியாவசியமன்றோ; மேலே காட்டிய பி.ஸரீ.யின் மேற்கோள் மனங்கொளத்தக்கது.


கோபாலகிருஷ்ண பாரதியார், இராமலிங்கர் மட்டுமன்றி அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், திரிகூடராசப்பக் கவிராயர், என்போரும் பாரதியோடு ஒப்புநோக்கி ஆராயப்பட வேண்டியவரே. தனக்கு முன்னிருந்த புலவரைப் பின்பற்றினான் பாரதி என்று கூறி மரபமைதி நிலைநாட்ட வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு இன்று இல்லை. அவ்வாறு நூல்களை ஆய்வதே முற்கால-தேங்கிநின்ற-சமுதாயத்தின் நெறியாயிருந்தது. 


பாரதியோ முழுப் பிரக்ஞையோடும் புதுமையைப் போற்றியவர். ஆகவே வள்ளலார் போன்றாரோடு கவிஞர்பிரானை ஒப்பிடும்போது ஒருமைப்பாட்டின் பகைப்புலத்தில் தற்புதுமையான பண்புகளைக் கண்டு காட்டுவதே வேண்டப்படுவது, பாரதியின் சமூக சீர்திருத்த உணர்வைச் சிலர் வள்ளலாருடன் ஒப்பிடுவர். 


வள்ளலார் மட்டுமின்றி வேறு சிலரும் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் என எண்ணுகிறேன். உதாரணமாக, சமுதாய உணர்வு சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் மெல்ல மெல்ல உருவாகி வந்ததைக் காணலாம். தாதுவருஷம் (1876) பாண்டி நாட்டிற் பெரும் பஞ்சம் தோன்றிப் பலகாலம் அழகிய சொக்கநாத பிள்ளை காந்திமதி அந்தாதி பாடினார். 


வில்லியப்பிள்ளை பஞ்சலட்சணத் திருமுகவிலாசம் என்ற 'கலியுகப் பெருங்காவியத்' தைப் பாடினார். 


இவற்றைவிட மக்கள் இலக்கியமாம் நாட்டுப் பாடல்களும் அக்கொடியபஞ்சத்தை வருணித்துள்ள
பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம்
பரிதவித்தே உயிர் துடி துடித்தே
துஞ்சி மடிகின்றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லையே!"


என்று நெஞ்சு பொறுக்காமற் பாடிய பாரதி தனது மாவட்டத்தின் கலைப் பொக்கிஷங்களான முற்கூறிய சமுதாயப் பாடல்களை நிச்சயம் அறிந்திருப்பான் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் திரு. ரகுநாதன் குறிப்பிடுவதுபோல "தாதுவருஷப் பஞ்சம் என்ற சொல்லாட்சியே தமிழ் நாட்டு மக்களிடையே கொடிய வறட்சியைக் சுட்டிக்காட்டும் குறியீடாக நிலவிவிட்டது." (சமுதாய இலக்கியம், பக்.174) 


சென்ற தலைமுறைக் காலத்திற் கூட முதியவர்கள் தாதுவருஷப் பஞ்சம் பற்றிச் செவிவழிச் செய்திகளைக் கூறி வந்துள்ளனர். தற்காலத் தமிழிற்குக் கவிப்பெருக்குப் பாய்ச்சிய பாரதி வறண்ட பூமியாம் கோயில்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த சிற்றூரிற் பிறந்தவனே. பஞ்சம் அவர் பார்த்தறிந்த கொடுமையாகவும் இருக்கக் கூடும். 


பாரதி ஒரு யுகக் கவிஞன் என்று அடிக்கடி பலர் கூறுவர். தன யுகத்தின் பண்புகள் சிலவற்றை மேற்கூறிய கவிஞர் தொட்டுக் காட்டியுள்ளனர் என்பதைப் பாரதி நன்குணர்ந்தமையே பாரதியின் கால உணர்வுக்குச் சிறந்த சான்று பகருகின்றது. 


வெகுகாலத்திற்க முன்னர்த் தோன்றிய நூல்கள் பற்றி ஒருவர் கருத்துத் தெரிவிப்பது மிகவும் எளிது. காலம் நூல்களைக் கணித்துத் தரம் பிரித்துத் தருகின்றது. ஆயின், சமகால நூல்களுள் உயிர்த்துடிப்புள்ளவற்றைக்கண்டு கொள்ளுவது அத்துணை எளிதன்று. 


இலக்கியத்தின் இயக்கவியலை உள்ளுணர்வாகவே தெரிந்துகொள்ளும் படைப்பாளியும், திறனாய்வாளனுமே இவ்வாறு தனது காலத்து நூல்களைச் சரியாக எடைபோடமுடியும். பாரதி இவ்வுணர்வைப் பெருமளவிற் பெற்றிருந்தான். அவனது வெற்றியின் இரகசியமும் அதுவே. 


தனது அருட் பாக்களைத் "தெருப்பாடல்" என்று அடக்கமாக அழைத்துக் கொண்ட இராமலிங்கர் போன்றவரின் நோக்கும் வாக்குமே தனது யுகத்திற்கு உகந்தவை என்றுணர்ந்து, அவற்றை ஆதாரமாகக் கொண்டு உழைத்தான் பாரதி. "பொதுமக்களுக்கு உகப்பான பல்வேறு கவிஞர்களையும் இவர் பின்பற்றியுள்ளார்" என்று கூறுகிறார் எஸ்.வையாபுரிப் பிள்ளை.


இப்பாடல் வகைகள் எத்தகையவை? இலக்கியத்தின் பிரிக்க முடியாத பகுதியாக உள்ள இவற்றைப் பொதுவாக இசைப்பாக்கள் என்பர். சிந்து முதலிய ஒன்பது வகை இசைப் பாக்கள் வழங்கி வருவதைப் பலரும் அறிவர். இசைத் தமிழ்ப் பிரிவு பன்னெடுங்காலமாக இருந்து வருவதொன்று எனினும் மேற்கூறிய சிந்து முதலாய இசைப்பாக்கள் பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததில்லை என்பர். இவ்விசைப் பாக்களைச் "சாகித்தியம்" என்றும் வழங்குவர். 


இலக்கிய வழிவந்த சந்தப்பாக்கள், வரிப் பாடல்கள் ஆகியவற்றின் பின்னணியிலே, நாட்டுப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, முகிழ்த்தனவே இவ்விசைப் பாடல் வகைகள். சமயச் சார்புள்ளனவாகத் தோன்றிய இவ்விசைப் பாக்களைச் சமயச் சார்பு குறைவாகவும், அரசியற் சமூகச் சார்பு கூடுதலாகவும் அமைந்த புதுப் பாடல்களுக்கு அடிப்படையாக அமைத்ததிலேதான் பாரதியின் வெற்றியிற் பெரும் பகுதி தங்கியுள்ளது. அழகுக்கு அழகு செய்தான் அவன்.


தனது முன்னோடிகள் தொடக்கிவைத்த புதிய செய்யுள் வகைகளைப் "பாரதி அபூர்வத் திறமையுடன், நூதன வேகத்துடன் ஆட்சியில் கொண்டுவந்தனர்" என்று வையாபுரிப பிள்ளை குறிப்பிடுவது மனங்கொளத் தக்கதே. பாரதி திறமையுடனும், வேகத்துடனும் கையாண்ட பாவகைகளிற் சிந்து சிறப்பானதொன்று. பழைய யாப்பிலக்கண நூல்களிலே இதற்கு இலக்கணங் கூறப்படவில்லை. கிளிக்கண்ணி, கீர்த்தனம், கும்பி, தெம்மாங்கு, சிலாசம் போன்ற பிற்காலச் செய்யுள் வகைகளைச் சேர்ந்தது சிந்து; இதனடிப்படை நாட்டுப் பாடல் என்றால் தவறாகாது. சிந்தின் இயல்பு பற்றித் கல்குளம் குப்புசாமி பதிப்பித்த காவடிச் சிந்து நூலின் முகவுரையிற் காணப்படுவது -


"சிந்து இசைத் தமிழின் பாகுபாடுகளில் ஒன்று. அது ஐந்துறுப்புகளாலாயதோர் யாப்பு விசேடம். அவ்வுறுப்புகளாவன-பல்லவி, அநுபல்லவி, மூன்று கண்ணிகள் அடங்கிய சரணம், இப்பெயரை வகித்துப் பல்லவியும், அநுபல்லவியும் இன்றி சரணங்கட்குரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று நடைபெறுவன சிலவகைச் சிந்துகள். சிந்து என்பது கும்மி, குறம், வழிநடைப்பதம் என்பவற்றின் நடையையே பெரும்பான்மையும் தழுவிச் செல்லும்."


பல்லவியும் அநுபல்லவியும் தவிர்த்துச் சரணங்கட்குரிய கண்ணிகளைக் கொண்டு நடைபெறுவனவே பாரதியார் இயற்றிய சிந்துகளிற் பெரும்பாலானவை. நொண்டிச் சிந்து, காவடிச்சிந்து மெட்டுகளிலே பல பொருள் குறித்த பாடல்களை யாத்துள்ளனர் பாரதியார். ஆற்றல் மிக்க கவிஞர்கள் தாங்கையாளும் யாப்புகளின் உயிர் நிலையையறிந்து அவற்றின் சக்தியைப் பூரணமாக வௌிக்கொணர்வர். சம்பந்தரும் கம்பனும் விருத்தத்தையும், புகழேந்தி வெண்பாவையும் ஏவல்கொண்டு எண்ணரியவிந்தைகள் புரிந்ததை மறக்கமுடியுமோ? தாழிசையைக் கருவியாகக் கொண்டு சமயங்கொண்டார் சப்த ஜாலங்கள் செய்ததை நினைவினின்று அகற்ற முடியுமோ? மேற்கூறிய யாப்பமைதிகள் இலக்கண நூல்களிற் காணப்படுவன. இலக்கண நூல்களின் அங்கீகாரம் பெறாத யாப்பு ஒன்றினை எடுத்துக்கொண்டு அதனைப் "பழைய முறையில் ஆண்டதேயன்றி, புதுப்புது வடிவங்கள் கொடுத்தும்" பாடினான் பாரதி. சிந்து பாரதிக்கு முந்திய சில கவிஞராற் கையாளப்பட்டதெனினும் அவனது ஆட்சிக்குப் பின்னரே இலக்கியத் தகுதியும் மதிப்பும் பெற்றது.


சிந்து என்ற இசைப் பாடலின் வரலாற்றை நோக்கும் பொழுது சித்தர் பாடல்களுக்குச் சென்று விடுகிறோம். பாம்பாட்டிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர் முதலாயினோர் இவ்விசைச் செய்யுளைத் தாராளமாகப் பயன்படுத்தியுள்ளனர். தம்மளவிற் சமயப் புரட்சியாளரான சித்தர்கள் தமது நெஞ்சிற்குச் சொல்வனவும் பிறருக்குச் சொல்வனவுமாகப் பல உண்மைகளை எடுத்துரைத்தனர்; சில வேளைகளில் மறைபொருள் மிகுந்தமையால் அவை பெருவழக்குப் பெறாவாயின.


"எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தரப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்"


என்று பாடும் பாரதி சித்தர் பாடல்களை ஈடுபாட்டுடன் படித்தான் என்பதற்கு அகச்சான்றுகள் அநேகம் உண்டு. சித்தர் பாடல்களில் சிந்து முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால் சித்தர்கள் கையாண்ட சிந்துவைக் கையாண்டபொழுது செய்யுள் வகையை மாத்திரம் பாரதி பெற்றுக் கொள்ளவில்லை; பொருள், தொனி, உணர்வு ஆகியவற்றிலும் சிறிதளவு கூடவே முகந்து கொண்டான்:


"ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்
சீருக்கெல் லாமுத லாகும் - ஒரு
தெய்வந் துணை செய்ய வேண்டும்"


என்ற முச்சீரிரட்டைச் சமநிலைச் சிந்து, பாரதி பழைய சித்தர் குரலிற் பேசுவதைக் காட்டுகிறது, 


பதினெட்டாம் நூற்றாண்டின் சிறப்புமிக்க கவிஞரில் ஒருவரான மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியில் பல ஓசை வேறுபாடுள்ள சிந்துகள் வருகின்றன. சிருங்கார ரஸத்தைச் சிந்து மூலம் சிந்தி விடுகிறார் கவிராயர்; சிங்கன், சிங்கி வாக்குவாதமும் சிந்துவில் அமைந்ததே. ஆயினும் சிந்துச் செய்யுளைப் பத்தொடு பதினொன்றாகவே பயன்படுத்தினார் திரிகூடராசப்பர். அதுமட்டுமன்று. நூலின் நாடகப் பண்பில் சிந்து மறைந்து விடுகிறது எனவும் கொள்ளலாம். இத்தகைய வளர்ச்சியின் விளைவாகச் சிந்துகள் விரிவடைந்தன. 


வழிநடைச் சிந்து, காவடிச்சிந்து, நொண்டிச் சிந்து, தங்கச் சிந்து எனப் பலவாம். சிந்துவின் வரலாற்றில் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து தனியிடம் வகிக்கிறது. அண்ணாமலை ரெட்டியார் (1861-1890) முருகன் கோயில்களுக்குக் காவடி எடுத்துச் செல்லும் அடியார்களுடைய ஆசையை நிறைவேற்றுமாறு பல்வேறு சந்தங்களிற் பாடியவையே காவடிச் சிந்துப் பாடல்கள். சமயம், அல்லது சிருங்காரம் ஆகிய இரு பொருள்களுக்கு வாகனமாக இருந்து வந்த சிந்து, ரெட்டியார் நாவில் மிக உயரிய நிலையைத் தொட்டதெனலாம். சிந்து என்றால் அண்ணாமலை ரெட்டியார் என்றிருந்தது. 


எட்டையபுரம் சமஸ்தானத்தில் பாரதி இருந்த காலத்தில் யாரோ விட்ட சவாலை ஏற்று, "இன்று மாலைக்குள் ஒரு சிந்துடன் வருகிறேன்" என்று கூறியபடியே ஒரு காவடிச் சிந்தை மன்னர் முன்னிலையில் அரங்கேற்றினாராம். அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே எமக்குக் கிடைத்துளது. பள்ளிக்கூடத்திற் படிக்கும் பிராயத்தில் இவ்வளவு துணிச்சலுடன் காவடிச் சிந்து ஒன்றை இயற்றியமை வியப்புக்குரியதாயினும், அப்பாடலில் ரெட்டியாரின் செல்வாக்கைச் சந்தேகமின்றிக் காணலாம்.


"பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கௌ மாரன்-ஒளிர்
பன்னிரு திண்புயப் பாரன்-அடி
பணி சுப்பிர மணியர்க் கருள்
அணி மிக்குயர் தமிழைத்தரு
பக்தர்க் கௌியசிங் காரன்-எழில்
பண்ணு மருணாசலத் தூரன்."


அண்ணாமலை ரெட்டியாரையும் அருணகிரியையும் இவ்வடிகளில் நாம் காணலாம். இப்படியே தொடர்ந்து பாடியிருந்தால், பாரதி கேவலம் திறமை மிக்க இரண்டாம்படிக் கவிஞனாகப் பரிணாமித்திருப்பான்; ஆனால் நாம் முன்னர்க் கண்டது போல பழைய வடிவங்களைத் தனதாக்கிப் புதிய புதிய பொருள்களைச் சுமத்தினான்.


அண்ணாமலை ரெட்டியாரால் காவடிச் சிந்து பிரபல்யமடைந்ததாயினும், இலக்கிய அந்தஸ்தைப் பெறத் தவறியது. தெய்வங்களைப் பாடியபோதும் நாட்டுப் பாடலாகக் கற்றோராற் கருதப்பட்டது. 


தென்னிந்தியாவில் மட்டுமல்லாது இலங்கையிலும் சில பிரதேசங்களிற் சிந்து பெரு வழக்காயிருந்தது. திரிகூடராசப்பக் கவிராயர் அங்க வருணனைக்குப் பயன்படுத்தியதைப் போல மிருகங்கள், பட்சிகள் முதலியவற்றால் உண்டாகும் அழிவுகளை வருணிக்கச் சிந்து உபயோகமானது. முல்லைத்தீவு, வன்னிப் பகுதிகளில் கொக்குச் சிந்து, குருவிச் சிந்து என்பன வழங்கியதாகத் தெரிகிறது. ஈழத்திற் பிரபலமாயிருந்த அம்மன் சிந்து குறிப்பிடத்தக்கதே. சிலப்பதிகாரக் கதையினின்றும் நுணுக்க விவரங்களில் வேறுபடும் இப்பாடல் பத்தினி வழிபாட்டைப் பற்றியது. மகாபாரதக் கதை கூறும் ஐவர் சிந்து மற்றொன்று. இவையெல்லாம் கற்றோர் நோக்கில் 'விழுமிய' பொருளைக் கூறுவனவல்ல; நன்னடையைப் பெற்றனவுமல்ல:



"காலமாம் வளத்திண்டக் கோலமா மரத்தின் மீது"
என்று தொடங்கும் காவடிச் சிந்து முன் காணாத பொருட் சிறப்பும் உணர்வு மேம்பாடும் கொண்டது. 'காவடிப்' பண்பு மறைந்து சிந்து, கருத்தைக் காவும் தண்டாக மாறியது. கண்ணன் பாட்டில் சிந்துகள் தத்துவக் கொடுமுடிகளைத் தொட்டன. ஆடலுக்கும் பாடலுக்கும் என்றிருந்த தங்கச் சிந்து முதலியன அரும்பொருள் உணர்த்தும் செய்யுளாக அற்புத உருமாற்றம் பெற்றன. சுருங்கக்கூறின் அநாதையாக இருந்த சிந்து என்ற பா வகையை இலக்கிய அரியாசன மேற்றியவன் பாரதி. கம்பன் வாயிலே விருத்தம் பெற்ற மகிமையைப் பாரதிவாக்கிலே சிந்து பெற்றது. 


இவ்வுண்மையை உணர்த்துவது போலப் பாடியுள்ளார் பாரதிதாசன்.
"பைந்தமிழ்த் தேர்ப்பாகன்; அவனொரு செந்தமிழ்த் தேனீ;
சிந்துக்குத் தந்தை, குவிக்கும் கவிதைக் குயில்..."


பழைய பாக்களையும் பாவினங்களையும் பாரதி ஆங்காங்குக் கையாண்டான். ஆயினும் சிந்து முதலாய புதிய இசைப்பாக்களையும் தனது உணர்ச்சி வௌிப்பாட்டிற்குரிய முக்கிய சாதனமாகக் கொண்டான் என்பதில் ஐயமெதுவுமில்லை. பாரதிக்கு பின்வந்த கவிஞர் பலரும் இத்துறையிற் பாரதியையே பின்பற்றியுள்ளனர்.



சிந்து என்ற பாவகையைப் பாரதி கையாண்டதிலே குறிப்பிடத்தக்க அமிசம் ஒன்று ஒண்டு. காண விசாரதா எம்.எஸ். இராமசாமி ஐயர் கூற்றுப் படி சாகித்தியங்கள் இருவகையின. உரையியல் சாகித்தியங்கள், இசையியல் சாகித்தியங்கள் என்பன அவை. முன்னதில் உரைநடை மிகுந்தும், சங்கீத நடை சுருங்கியும் காணப்படும். பின்னதில் சங்கீத நடை மிகுந்தும், சங்கீத நடை சுருங்கியும் காணப்படும். 


சிந்து இயல்பாகவே இரண்டாவது பிரிவைச் சேர்ந்தது. திரு.கு.அழகிரிசாமி கூறுவதுபோல, "இசையின்பமும், சொல்லழகும், தாளக்கட்டும், பிராசலட்சணமும், எளிய நடையுமே சிந்துக்கு அழகும், உயிரும் கொடுப்பவை. இதில் பிரமாதமான தத்துவக் கருத்துக்களோ, சமயக் கருத்துக்களோ கவிதை அழகோ நிறைந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை." உண்மைதான். கோபால கிருஷ்ண பாரதியார், அண்ணாமலை ரெட்டியார் முதலியோர் கையாண்ட முறையில் சொற்களும், அவற்றின் பொருளாழமும் முக்கியத்துவம் பெற்றன எனக் கூறுதல் இயலாது. இசைப் பண்பே தலைதூக்கி நின்றது. பாரதியோ, சாமானிய புலவன் அல்லன். தன்னுணர்வுடன் வேண்டுவன அறிந்து பாடியவன் அவன்.


"சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற் புதிது சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
மகா கவிதை....
என்று தனது கவியைச் சிலராவது பாராட்டக் கேட்டவன். 


இதற்கு ஆதாரமாகச் சொல்லழகில் மட்டுமன்றிச் சொற்பொருளிலும் ஆழம் பார்த்தவன் அவன் என்பதை நினைத்துப் பார்த்தல் வேண்டும். நவநவமான தத்துவத்தையெல்லாம் சொல்லில் வடித்தவன் அவன். எனவே இசைப் பண்பினை அளவுடன் நிறுத்திக் கொண்டு, பொருள்வளமும் சேர்த்தான். அந்த வகையில் முன்னோரை மிஞ்சினான். தன்னளவில் புதுமையின் முதலும் முடிவுமானான். தான் கையாண்ட யாப்பிலும் உருவ அமைதியிலும் இவ்வாறு காலத்திற்கேற்ற புதுமை செய்யத் தூண்டுகோலாய் இருந்தது பாரதியின் கவிதா நோக்கு என்றே கூறல்வேண்டும். எனினும், இனிமையிலும் பாரதிக்குப் பலவழிகளிலே முன்னோடிகளாக விளங்கிய கவிஞர்களும் சமயத்தின் வழி நின்று இலக்கியம் படைத்தவர்களே. தெய்வ பக்தியிலே பாரதி அவருக்கு எவ்விதத்திலும் சளைத்தவன் அல்லன். ஆயினும் அவன் சமூகத்தின் வழிநின்று இலக்கியம் படைத்தனன்.



"சுவை நண்ணும் பாட்டினொடு தாளம்-மிக
நன்றா வுளத்தழுந்தல் வேண்டும்-பல
பண்ணிற் கோடிவகை இன்பம்-நான்
பாடத் திறனடைதல் வேண்டும்"
என்று வீரை சக்தியிடம் வரம் கேட்டான். எதற்காக?
"என்றன் பாட்டுத் திறத்தாலே- இவ்வையத்தைப் பாலித்திட வேணும்."
ஏனெனில்,
"நமக்குத் தொழில் கவிதை
நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ்
சோராதிருத்தல்"



என்று பாரதி வாக்கு. இத்தகைய மாபெருஞ் சமூக நோக்கு இருந்தமையாலேயே பழகும் தமிழ் மரபில் வந்த எளிமையையும், இனிமையையும் கையேற்றதோடு, அவற்றுடன் புதுமையையும், பொருளாழத்தையும் கலந்து கவிதைகளைக் கொட்டித் தந்தான். உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் உள்ள நுண்ணிய பிணைப்பையறிந்துகொள்ளப் பாரதியைவிட வேறு சிறந்த உதாரணக் கவிஞன் வேண்டுமோ?

(Article from the Book on Bharathiar by Sri Kailasapatthy)
ஸ்ரீனிவாசன் (சீனு தாத்தா)
சீனு தாத்தாவின் இணையதளம்:

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment