பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, October 26, 2014

ஒவ்வோர் உடம்பும் ஒவ்வோர் உலகம் !


பாவலரேறு பெருஞ்சித்திரனார்

ஒவ்வோர்  உடம்பும்
ஒவ்வோர்  உலகம் !
ஒவ்வோர்  உடம்பிலும்
உள்ளியங்(கு)  உயிர்தான்

உலகினில்  உள்ள
இயற்கையை  ஒத்ததாம்!
அலகிலா  அணுக்களே
அனைத்துலக  உயிரினம் !

மண்டுதசை  எலும்பெலாம்
மண்ணும்  மலைகளும் !
அண்டுசளி,  கோழை
அடுபனி,  குளிர்நிலை !

கடல்போல்  அரத்தம்
கனப்பே  நெருப்பு !
உடலிடை  ஓடும்
உயிர்ப்புவளி  காற்று !

மூளை,  ஆ  காயம்
மூண்டறிவு  இறைமை !
ஈளையும்  காய்ச்சலும்
எழுகுளிர்,  கோடை !

நம்முடல்  உலகினை
நல்லாட்சி  செய்திடும்
நம்மின்  ‘நான்’  உணர்வே
நாடாளும்  அரசனாம் !

அரசன்  எவ்வழி
அவ்வழி  குடிகள்போல்
இருக்கும்’நான்’  உணர்வே
இயல்பாய்  இயங்கினால்.

உடல்,  உலகு  ஆட்சி
ஒழுங்குற  நடந்திடும் !
உடலுறுப்  பனைத்தும்
ஒத்துழைத்  தியங்கும் !

இருக்கும்  ‘நான்’  உணர்வே
இறுமாப்பின்  இயங்கினால்
செருக்கு  மிகுந்  தாட்சி
சீர்கெட்டுப்  போகும் !

உடம்பின்  பூதங்கள்
ஒவ்வொன்றும்  நலமுடன்
திடம்பெற  அமைதலே
முதன்முதல்  தேவையாம் !

அவரவர்  உடம்பை
ஆளப்  பழகலே
எவர்க்கும்  இயற்கை
ஈந்த  வாழ்க்கையாம்!

அறிவெனும்  இறைமைத்
துணையுடன்  மாந்தச்
செறிவெனும்  நன்மனம்
சீர்மையோ  டியங்குதல்

உடலுலக  ஆட்சி
நடைபெற  உதவிடும் !
கடனிதாம்  எவர்க்கும்;
கடமை  தவ  றாதீர்!       -  1989

----------------------------------------------------------------------------------

கனிச்சாறு  -  தொகுதி -6  -காதல், இயற்கை, இறைமை

பாவலரேறு  பெருஞ்சித்திரனார்  பாடல்கள்
-------------------------------------------------------------------------------------

தென்மொழி  பதிப்பகம்,  மேடவாக்கம்  கூட்டுச்சாலை,

மேடவாக்கம்,  சென்னை - 600 100
-------------------------------------------------------------------------------------
94444 40449

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment