பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, September 28, 2014

மின்னுவதெல்லாம் பொன்னல்ல...


ழங்காலம் தொட்டு, தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், ஆங்கிலம் உள்பட அனைத்து மொழிகளிலும், ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல...’ என்ற பழமொழி சொல்லப்பட்டு வருகிறது. இது நிதர்சனமான உண்மையாகும். தங்கத்தில்கூட ஒரிஜினல் தங்க நகைகளைவிட, கவரிங் நகைகள்தான் பளபளவென மின்னும், ஒரிஜினல் வைரத்தைவிட செயற்கை வைரங்கள்தான் ஜொலிக்கும். அதுபோலத்தான், அங்கிங்கெனாதபடி எல்லா பொருட்களிலும், எல்லா துறைகளிலும் காலூன்றிவிட்ட போலிகளின் அட்டகாசம்தான் அதிகமாக இருக்கிறது. சில பெரிய கம்பெனிகள் தங்கள் பொருட்களை விற்கும்போது, போலிகளைகண்டு ஏமாறாதீர்கள்... என்பார்கள். அதுபோல, அனைத்து பணிகளிலும் போலிகள் ஏராளமாக பயிர்களுக்கு நடுவே விளையும் களையைப்போல வளர்ந்து விட்டார்கள். இதை உடனடியாக அகற்றாவிட்டால் ஆபத்துத்தான்.


எல்லோரையும் பதறவைக்கும் அளவில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யால் பல்வேறு நாசகாரியங்களை செய்வதற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டவர்தான், அருண் செல்வராசன் என்ற இலங்கை தமிழர். இலங்கை குடியுரிமை பெற்ற அவர், எப்படித்தான் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தார் என்பது புரியாத புதிராக உள்ளது. அவர், வெறுமனே 35 ஆயிரம் ரூபாய் செலவழித்து தமிழ்நாட்டில் படித்ததாக போலி எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ், வருமான வரித்துறை வழங்கியது போல போலி பான்கார்டு, எல்லாவற்றுக்கும் மேலாக போலியான இந்திய பாஸ்போர்ட்டும் வாங்கி முழுக்க முழுக்க இந்தியராகவே நடமாடி இருக்கிறார். போலிகளின் நடமாட்டத்தை சான்றாக கூற இதைவிட வேறு என்ன சம்பவம் வேண்டும். 



அதுபோல, தமிழ்நாட்டில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் ஆங்காங்கே உலாவிக்கொண்டு இருக்கிறார்கள் என்று இந்திய மருத்துவ சங்கத்தலைவரே கூறியிருக்கிறார்.



மருத்துவத்துறையில் இவ்வளவு போலி டாக்டர்கள் என்றால், அவர்களிடம், சிகிச்சைபெறும் அப்பாவி நோயாளிகளின் கதை என்னவாகும்? என்பதை நினைக்கவே  அச்சமாக இருக்கிறது!. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் போலி சான்றிதழ்கள் வழங்கிய ஒரு கும்பலை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி, பல பல்கலைக்கழகங்களில் தேறியதாக போலி பட்டங்களை அள்ளி வீசியிருக்கிறார்கள். இந்த போலி சான்றிதழ்களை வைத்துக்கொண்டு, ஆங்காங்கு பணிபுரியும் போலிகளால் கட்டப்படும் கட்டிடங்களின் கதை என்னவாகும்? நிச்சயமாக, அரசு பணிகளில் அனைத்து மட்டங்களிலும் இதுபோல போலி சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பணிபுரிபவர்கள் இருப்பார்கள். அடிக்கடி, பத்திரிகைகளில் வரும் மற்றொரு செய்தி, போலி போலீஸ்காரர்கள் ஆங்காங்கே நின்று வசூலில் ஈடுபடுகின்றனர் என்பதுதான். ஆக, போலிகளின் இந்த வசூல்வேட்டையால், நேர்மையான போலீசார் மீதும் மக்களுக்கு சந்தேகப்பார்வை வருகிறது. போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உலாவந்த ஒரு பெண் தன் குடும்பத்தையும், அந்த போலி அட்டையை வைத்து ஏமாற்றிக்கொண்டுவந்த ஒரு சம்பவம் சமீபத்தில்தான் அரங்கேறியது. போலி நிருபர்கள் எல்லா இடத்திலேயும் ஊடுருவி, முறைகேடான செயல்களை செய்கிறார்கள் என்று எவ்வளவோ பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். மொத்தத்தில், சமுதாயத்தில் உள்ள முக்கியமான பணிகளில் எல்லாம் போலிகள் புற்றீசல்கள்போல முளைத்துவிட்டார்கள். நிச்சயமாக, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நேரம் இதுதான். 



இதுவரையில் வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்டுகள், பான்கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகள், ரேஷன் கார்டுகள் போன்றவற்றையெல்லாம் மீண்டும் ஆய்வு செய்யவேண்டியது மிக, மிக அவசியமாகும். அதுபோல, அரசு பணிகளில் அனைத்து மட்டங்களிலும் பணியாற்றுபவர்களின் சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்கவேண்டும். போலி பத்திரிகையாளர்களை பொறுத்தமட்டில், அரசின் செய்தித்துறை தீவிரமாக கவனம் செலுத்தவேண்டும். தனியார் நடத்தும் விழாக்களிலும் விழா ஏற்பாட்டை செய்பவர்கள், அந்தந்த பத்திரிகை அலுவலங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்களைக்கொண்டு வருபவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கவேண்டும். பல, பல பணிகளுக்கென அவரவர்களே ஸ்டிக்கர்களை அச்சடித்து, வாகனங்களிலும் ஓட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு ‘ஸ்டிக்கர்கள்’ ஓட்டுவதையும் முறைப்படுத்த வேண்டும். இதற்காக காவல்துறையில் சிலை தடுப்பு, வரதட்சணை ஒழிப்பு, விபசார தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, திருட்டு வி.சி.டி. ஒழிப்பு போன்ற பல அமைப்புகள் இருப்பதுபோல, சிறிது காலத்திற்கு ‘போலிகள் ஒழிப்பு’ என்ற தனிப்பிரிவையும் அமைத்து, போலிகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவேண்டும்.

நன்றி :- தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment