பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 9, 2014

தமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் !
ஞெமன்  தெரிகோல்  அன்ன  செயிர்தீர்  செம்மொழி  

அக நானூறு  -349  - 3, 4

செம்மொழி  மாதவர்  சேயிழை  நங்கை

தம்  துறவு  எமக்குச்  சாற்றினள்..

சிலம்பு - வரந்தரு  காதை  32, 33.

இந்தச்  சிக்கலுக்கு  இன்னது  தீர்வு  

என்று எடுத்துக்  கூறப்படும்  செய்திக்குச்  

செம்மொழி  என்று பெயர்.


நிறைமொழி,  மறைமொழி,  நன்மொழி  என்ற  வரிசையில்  செம்மொழி என்பது  தமிழின்  ஒரு  தனிப்பண்பு  என்று  தெரிகிறது.  சிலப்பதிகாரத்தில்  “செவ்வை  நன்மொழி”  என்ற  குறிப்பு  இடம்  பெற்றுள்ளது. செவ்வை  என்ற  சொல்  செம்மை  என்றாகும்  என்பதனை  அறிஞர்கள் மறுக்கவில்லை.  அவ்வை  அம்மையாவது  போல,  கொவ்வை  கொம்மையாவது  போல  செவ்வை  நன்மொழி  என்பது  செம்மொழி  ஆகிறது  எனப்  பழந்தமிழ்    இலக்கியங்கள்  பதிவு  செய்திருக்கின்றன  என்று  கொள்ளலாம்.

அகநானூற்றுப்  புலவர்  மாமூலனார்  குறிப்பிடும்  செம்மொழியும்,  சிலம்பு  குறிப்பிடும்  செம்மொழி  மாதவச்  சேயிழை  நங்கையாகிய  மணிமேகலையின்  துறவுச் செய்தியும்,  பாண்டிய  மன்னன்  சிலம்பில்  குறிப்பிடும்  செவ்வை  நன்மொழியும்  ஒத்த  பொருளைத்  தோற்றுகின்றன  என்பது  உற்று  நோக்கத்தக்கது.  (  மாதவர்  சேயிழை  என்ற  சொல்  மாதவச்  சேயிழை  என்று  இருந்திருக்கலாம்  )  தேரா  மன்னா  என்று  தொடங்கி,  உன்னால்  கொலைக்களப்பட்ட  கோவலன்  மனைவி  கண்ணகி  யான்  என்று  வழக்குரைக்கிறாள் ஓர்  இளம்பெண்.  பாண்டியன்  மறுக்கிறான்.

கள்வனைக்  கோறல்  கடுங்கோல்  அன்று
வெள் வேற் கொற்றம்  காண் !  -  என்று  விளக்கம்  தருகிறான். 

( மக்களுக்காகவும்  அறத்தை  நிலைநாட்டவும்  மன்னன்  செய்ய  நேரிடும்  உயிர்க்கொலை  அவனது  தனி  உயிருக்கு  வினைப்பதிவை  ஏற்படுத்தாத  அளவில்  ஆன்றோர்குழு  தாங்கிக்  கொள்வது  மன்னனுக்குக்  கொற்றம்  தரும்  அடிப்படைவேலை  எனப்  பழந்தமிழ்  இலக்கியங்களில்  செய்திகள்  தென்படுகின்றன. அதுதனி  ஆய்வாக  விரியும்  பண்புடையது -கலித்தொகை ) 

இனிப்  பேசிப்  பயன் இல்லை;  இவன்  கொற்ற  வேந்தன்  இல்லை;  தன்  கணவனைக்  கொன்ற  பழி  இவன்மீது  படிந்திருக்கிறது  என்பதனைத்  தன்  உள்ளுணர்வினாலும்,  தனது  பெண்மைப்  பண்புநலன்  சார்ந்த  அரியவகை  நுண்  உணர்வினாலும்  விளங்கிக்கொண்ட  கண்ணகி  நேரடியாகச்  செயல்பாட்டிற்கு  வருகிறாள்.

நற்றிறம்  படராக்  கொற்கை  வேந்தே
என்  காற்பொற்சிலம்பு  மணியுடையரியே 

(  சிலம்பு : வழக்குரை காதை - 66, 67 )

 என்று  கூறுகிறாள்.  இதனைப்  பாண்டிய  மன்னன்  வரவேற்கிறான்,

தேமொழியுரைத்தது  செவ்வை  நன்மொழி
யாமுடைச்  சிலம்பு  முத்துடை  அரியே

( சிலம்பு - வழகுரை  காதை  - 68 )    

இந்தச்  செய்தியை  முதன்முறையாகக்  கேள்விப்படும்  பாண்டிய  மன்னன் பாராட்டுகிறான்.  சிலம்பு  கொண்டுவரப்படுகிறது.  அதிலிருந்து  முத்து வெளிப்படும்  என்று  எதிர்பார்த்த  மன்னன்  மணிப்பரல்கள் வெளிப்பட்டதையறிந்து  அதிர்ச்சியில்  மாண்டு  போகிறான்.

.இங்கே  ”செவ்வை  நன்மொழி”  அல்லது  செம்மொழி  என்பது,  ஒரு  செய்தி  தக்க  நேரத்தில்  எடுத்துச்  சொல்லப்படுவது  என்ற  பொருத்தமான  மொழிவடிவத்தைக்  குறிக்கிறது  என்று  கொள்ளலாம்.   

“என்  காற்  பொற்சிலம்பு  மணியுடையுரியே “  என்று  கண்ணகி  கோவலனிடம்  இதற்கு  முன்பும்  கூறியிருக்கக்  கூடும்;  கூறியிருத்தலும்  வேண்டும் :  அது செம்மொழியாகக்  கருதப்படவில்லை.  அதே  செய்தியின்  வெளிப்பாடு  ஒரு  வினையைத்  தூண்டும்போதும்,  அது  அறம்  சார்ந்த  தீர்வாக  அமையும்போதும்  மட்டுமே  செம்மொழியாகக்  கருதப்படுகிறது  என்று  கொள்வது  வெற்றுக்  கற்பனையாகாது.  

இந்த  அளவுகோலின்படி  செம்மொழிப்  பண்புள்ள  பல  செய்திகள்  வெவ்வேறு காலக்கட்டங்களில்  வெளியாகும்  என்று  எதிர்பார்ப்பதில்  தவறு இல்லை.

செவ்வியல்  என்றசொல்  தமிழில்  அண்மைக்காலப்  பயன்பாடு.  "CLASSICAL"  என்ற  ஆங்கிலச்  சொல்லுக்கு  இணையானது.  மொழிக்கும்,  மரபு  வழிப்பட்ட  கலைகளுக்கும்  இச்சொல்  பொதுவானது.  செவ்வியல்  இலக்கியங்கள்  என்பது  உலகின்  பல  மொழிகளிலும்  உள்ள  பொதுமைக்  கூறு.  செம்மொழி  என்பது  தமிழின்  தனிப்பண்பு  ஆகும்.

செவ்வியல்  மொழிகள்  என்று  பட்டியலிட்டுவிட்டு  செம்மொழி  என்று  நாம்  அழைத்துக்  கொள்கிறோம்.  “சாஸ்திரிய  பாஷா”  என்றுதான்  வடவர்  அழைக்கின்றனர்.

2010 -ஆம்  ஆண்டில்  அன்றைய  தமிழக  அரசு  நடத்திய  முதல்  உலகத்  தமிழ்ச்செம்மொழி  மாநாட்டில்  அரிய  நிகழ்வாக  ஒரு  நூல்  வெளியிடப்பட்டது.  41  இலக்கியங்களைப்  பட்டியலிட்டு  உரைகளின்றி  மூலபாடம்  மட்டும்  இடம்பெறுமாறு  வெளியிடப்பட்டது.

தொல்காப்பியம்  முதல்  மணிமேகலை  ஈறாக  இடம்பெற்றுள்ள  பழந்தமிழ்  இலக்கியங்கள்  காலத்தின்  தொன்மையாலும்,  இலக்கிய நயம்,  தூய்மை  போன்ற  பண்புகளாலும்  நேர்த்தியாக  வகைப்படுத்தப்பட்டுள்ளன  என்பதில்  அறிஞர்களிடையே  மறுதலிப்புகள்  ஏதும்  இல்லை.  ஆயினும்  இவற்றை  எப்படி  வகைப்படுத்தினர் ?  யார்  வகைப்படுத்தியது  என்ற  உண்மைகளை  அந்தநூலின்  பதிப்பாசிரியர்  திரு.ம.வே. பசுபதி  அவர்களோ,  அன்றையத்  தமிழ்ப்பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர், திரு.  ம.  இராசேந்திரன்  அவர்களோ  அந்த நூலில்  குறிப்பிடவில்லை.

”செம்மொழித்  தமிழ்  இலக்கண  இலக்கியங்கள்”    என்று  பெயரிடப்பட்ட  அந்த  நூலில்  செம்மொழித்  தமிழாய்வு  மத்திய  நிறுவனத்திற்கு  எந்தப்  பங்களிப்பும்  இல்லை என்பதும்  ஈண்டு உற்றுநோக்கத்தக்கது..  தஞ்சாவூர்த்  தமிழ்ப்  பல்கலைக்  கழகமே  மேற்படி  நூலை  வெளியிட்டுள்ளது.

பிலிப்பைன்சு  நாட்டிலிருந்து  தருவிக்கப்பட்ட  எடை  குறைந்த  தரமான  தாளில்  1.6  கிலோ  எடையில்  1500  பக்கங்களில்  மிகவும்  அழகாகக்  கட்டமைக்கப்பட்ட  அந்த  நூலை  மலிவுப்  பதிப்பாக  ரூ.300/-க்கு  வெளியிட்டது  அன்றைய  அரசு.  10%  தள்ளுபடியோடு  ரூ.270/-க்கு  இன்றைய  அரசு  விற்றுக்கொண்டிருக்கிறது.  தஞ்சைத்  தமிழ்ப்  பல்கலைக்  கழகத்தின்  பதிப்புத்துறையில்  அரண்மனை  வளாகத்தில்  இன்னும்  4000  புத்தகங்கள்  இருப்பில்  உள்ளன.  ஒவ்வொரு  தமிழனின்  கையிலும்  இருக்கவேண்டிய  நூல்.  தமிழ் மொழியை,  தமிழ்  இலக்கண  இலக்கியங்களை  அவற்றின்  உரை  நூல்களை  முறையாகப்  பயிலாத  பொதுநிலை  ஆய்வாளர்களுக்கு  இந்நூல்  சிறந்த  வழிகாட்டியாகும். 

இந்த  41  இலக்கியங்களைத்  தொகைவகை  செய்தது  யார்  என்ற  தேடலுக்கு விடையாக  ஒரு  செய்தி  உள்ளது.  2004-ஆம்  ஆண்டில்  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  நான்கு  தமிழ்  அறிஞர்கள்  ஒன்றுகூடிப்  பேசி நிறைவேற்றிய  தீர்மானத்தின்  அடிப்படையில்  இவ்வாறு வகைப்படுத்தப்பட்டதாகப்  பேராசிரியர்  திரு.  சோ.  ந.  கந்தசாமி  அவர்கள் மேடைகளில்  குறிப்பிடுகிறார் .   

01.  திரு. வ. அய். சுப்பிரமணியம்

02.  திரு. ச.  அகத்தியலிங்கனார்

03.  திரு.ச.வே. சுப்பிரமணியனார்

04.  திரு. சோ. ந. கந்தசாமி

மேற்கண்ட  நால்வருமே  அந்த  அறிஞர்கள்.  இவர்களில், ச.வே.சுப்பிரமணியனார்,  சோ.ந. கந்தசாமி  ஆகிய  இருவர்மட்டுமே  இன்று நம்மோடு  வாழ்ந்து  வருகின்றனர்.  அவர்களிடம்  நேரில்  கேட்டு  மேல்  விளக்கம்  பெறலாம்.

அரசியல்  துணிவு :-

இந்த  நான்கு  அறிஞர்களும்  எடுத்த  முடிவில்  ஓர்  அரசியல்  துணிவு   இருக்கிறது.  ஒரு  மொழியின்  வேர்க்கால்களை  அயன்மை  இன  ஊடறுப்பு காயப்படுத்தும்போது  தற்காப்புச் செய்துகொள்ளும்  அச்சவுணர்வு  என்பது தமிழ்ப்புலமை  மரபினற்குத்  தன்னியல்பாகவரும்  என்பதை  யாவரும்  புரிந்து கொள்ளவேண்டும்.

தந்தை  பெரியார்  உழவு  செய்த  தமிழ்நாட்டு  அரசியல்  வயலில்  மறு  உழவு செய்யாமல்  வேறு பயிர்  விளைவிக்க  முடியாது  என்பதனை உண்மைத்தமிழர்கள்  உணர்ந்து  கொள்ளவேண்டும்.

வகைப்படுத்தப்பட்ட  இந்த  41  இலக்கியங்களுக்குள்  தமிழின்  செம்மொழிப்  பண்புகள்  அணிவகுப்பாக மறைந்து  நிற்கின்றன  என்ற  உண்மையை  உயராய்வின்  வழியில்  புலப்படுத்தலாம்.  இந்த  41  இலக்கியங்களுக்கும்  “செம்மொழித்தமிழ்  இலக்கண  இலக்கியங்கள் ”  என்று  யார்  பெயரிட்டிருந்தாலும்  அவர்கள்  பாராட்டுதற்குரியோர்.

இந்த  நூலின்  அடுத்த  பதிப்பினையும்  தமிழ்ப்  பல்கலைக் கழகம்  உரியமுறையில்  அச்சுப்பிழை  நீக்கி  மலிவுப்பதிப்பாக  வெளியிடுமானால்  தமிழ்  அறிஞர்கள்  பெரிதும்  வரவேற்பர்.  

எதிகாலத்  தமிழ்த்  தலைமுறை  பின்பற்றவும் ,  போற்றிக்  காப்பாற்றவும் தக்கதொரு  பாடப்புத்தகமாக  இந்த  41  இலக்கியங்களின்  தொகுப்பு  திகழும் என்பதில்  ஐயமில்லை.

ஆனால்,  தமிழர்கள்  தங்கள்  மன  இறுக்கத்தையும்,  மூளை  வடுவையும் புறந்தள்ளி  வைத்துவிட்டு  ஒரு  சிறிய  திருத்தத்தினை  ஏற்றாக  வேண்டும்.

ழந்தமிழ்  இலக்கியங்களுக்குள்  புதைந்துகிடக்கும்  செம்மொழிப்  பண்புகள் எவையும்  எள்ளளவும்  ஆரிய  வைதிகம்  சார்ந்தவை  இல்லை.  திராவிடம் சார்ந்தனவும்  இல்லை.  தமிழ்த்  தேசியம்  சார்ந்தவை.  அதிலும்  குறிப்பாக ‘மரபுவழித் தமிழ்த்தேசியம்”  சார்ந்தன  என்ற  உண்மையினைப்  புரியும்படி உலகுக்கு  எடுத்துச்  சொல்ல  வேண்டும்.  அதற்குக்  கடுமையாக  உழைக்க வேண்டும்.

வலுவான ஆளுங்கட்சி  இன்றியும்,  வலுவான  எதிர்க்கட்சி  இன்றியும் வேற்றினப்  படையெடுப்புகளிலிருந்து  தற்காத்துக் கொள்ள  வழியின்றி தமிழ்நாட்டினர்  மிகப்  பெரியதொரு  கருத்தியல்  பாழ்நிலையில்  உழன்று கொண்டிருக்கின்றனர்.

எழுத்தறிவு  பெற்ற  தமிழர்கள்  செம்மொழித்தமிழ்  நூலைக் கைக்கருவியாகக் கையாள  வேண்டும்.  தமிழில்  எளிய  தமிழ்  என்றும்  இலக்கியத்  தமிழ் என்றும்  இரண்டு  பிரிவுகள்  கிடையாது.  திரும்பத் திரும்பப்  படித்தால்  தமிழ் என்றுமே  எளிய  தமிழாகத்தான்  வாழ்ந்து  வருகிறது  என்பது  விளங்கும். அதன் செம்மொழிப்  பண்புகள்   தமிழினத்திற்கு வாழும்  உரிமையயும்,  ஆளும்  உரிமையையும் பெற்றுத்தரும்.  ஒரு  தலைமுறை  தலைநிமிரும்.!  


கட்டுரை  ஆக்கம்


தென்னன் மெய்ம்மன்

ஆசிரியர் : வெளிக்கரு

thennanmeimman@gmail.com

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment