
கருத்து சுதந்திர அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளில் எழுத்தாளர்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், பிரபல கவிஞர் சச்சிதானந்தனும் சாகித்ய அகாடமி பொதுக்குழுவில் இருந்து ராஜினாமா செய்தார்.
எழுத்தாளர்கள் அதிருப்தி
பிரபல கன்னட எழுத்தாளர் எம்.எம்.கால்பர்கி கடந்த ஆகஸ்டு மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக கூறி எழுத்தாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
மேலும் உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முகமது இக்லாக் என்பவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவமும், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இந்த சம்பவங்களை கண்டிக்கும் வகையில் பிரபல எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.
விருதுகள் ஒப்படைப்பு
அந்தவகையில் பிரபல எழுத்தாளர்களான நயன்தாரா சேகல், உதய் பிரகாஷ், இந்தி கவிஞர் அசோக் வாஜ்பேயி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர்.
மேலும் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும், சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினருமான சஷி தேஷ்பாண்டே நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கே.சச்சிதானந்தன்
இதைப்போல பிரபல கவிஞரான கே.சச்சிதானந்தனும், சாகித்ய அகாடமி பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார். கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவும், எழுத்தாளர்களின் சார்பாக இருக்கவும் அகாடமி தவறி விட்டதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார்.
கேரள எழுத்தாளரான சாரா ஜோசப்பும், தனக்கு வழங்கப்பட்டிருந்த சாகித்ய அகாடமி விருதை நேற்று திரும்ப அனுப்பினார்.
சுதந்திர இந்தியா அல்ல
இது குறித்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, ‘கால்பர்கியின் கொலை, தாத்ரி சம்பவம் போன்றவை என்னை மிகவும் வருத்தியது. இந்த அரசின் கீழ் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுகின்றனர். பாடகர் ஒருவர் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கிறார்கள். இது சுதந்திர இந்தியா அல்ல’ என்று கூறினார்.
இதற்கிடையே, ‘எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேறு வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அகாடமியை அரசியலாக்க வேண்டாம்’ எனவும் சாகித்ய அகாடமி தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினத்தந்தி
0 comments:
Post a Comment