பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, October 10, 2015

5000 -ம் ஆண்டுகளுக்கு முன்னரே மங்கையின் உண்ணாவிரதப் போராட்டம்! -சு.சொக்கலிங்கம்

மக்களாட்சி இல்லாத ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே உண்ணாநிலைப் போராட்டத்தின் மூலம் மன்னனின் கவனத்தைத் திருப்பி வெற்றி கண்டாள் பெண் ஒருத்தி என்பதை அகநானூறு கூறுகிறது.
பசுமை நிறைந்த அந்தக் காட்டை முதுகோசர்கள் என்னும் நில உரிமையாளர்கள் எருதுகள் பூட்டி, உழுது, நீர்ப்பாய்ச்சி, பண்பட்ட நிலமாக்கி, பயிறு விதைகளை விதைத்து சிறந்த தோட்டமாக்கிப் பாதுகாத்து வந்தனர்.
ஒருநாள் அந்தத் தோட்டத்தில் பசு ஒன்று மேய்ந்து விடுகிறது. அதுகண்ட முதுகோசர்கள் அப்பசுவிற்குரியவனை அழைத்து விசாரிக்கின்றனர். அவன் தன்னுடைய கவனக் குறைவால்தான் இப்படி நேர்ந்தது என்று தன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். அதற்காக வருந்துகிறான். ஆயினும் முதுகோசர்கள் சினம் அடங்கினாரில்லை. தம் கண்ணிலும் மேலாகக் காத்த அத்தோட்டம் அழிவதற்கு இவனே காரணம் எனக் கூறி அவன் கண்களைப் பிடுங்கி விடுகின்றனர். இதைக் கேள்வியுற்ற அவன் மகள் அன்னிமிஞிலி கொதித்தெழுகிறாள். தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நியாயம் கிடைப்பதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறாள். உண்கலத்தில் உணவிட்டு உண்ணாமலும், தன்னை அழகுப்படுத்திக்கொள்ளாமலும், தூய உடை உடுத்தாமலும் இருக்கிறாள். இப்போராட்டம் பல நாள்கள் தொடர்கிறது.
போராட்டத்தைக் கைவிடும்படி கேட்கும் ஊராரிடம் "தன் தந்தையைக் கொடுமை படுத்தியவர்களை மன்னன் ஒடுக்கும் வரை ஓயாமல் போராடுவேன்' என்று கூறிப் போராட்டத்தைத் தொடர்கிறாள். இச்செய்தி நாடெங்கும் பரவி, மன்னன் திதியனின் செவிக்கும் எட்டுகிறது. போராடும் அப் பெண்ணை அழைத்து, அவளை உசாவி, உண்மை நிலையை அறிந்து கொள்கிறான். இக்கொடிய செயலைக்கேட்ட மன்னன் கொதிப்படைகிறான். தன் குடிக்கீழ் வாழும் ஒருவனுக்கு இக்கொடுஞ்செயல் செய்த அந்த முதுகோசரைக் கொன்றொழிக்கிறான். இச்செய்தியைக் கேட்ட அன்னிமிஞிலி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுகிறாள். மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
மக்களாட்சியில் ஏழையின் குரலுக்கு மதிப்பளிப்பதில் வியப்பொன்றுமில்லை. ஏழைப் பெண்ணின் உணர்வுகளுக்கும் முடியாட்சியில் மன்னர்கள் மதிப்பளித்து ஆண்ட தமிழகம் இது என்பதைக் காட்டும் சங்க இலக்கியப் பாடல் இதுதான்:
""முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்
பகடுபல பூண்ட உழுவுறு செஞ்செய்
இடுமுறை நிரம்பி ஆகுவினைக் கலித்துப்
பாசிலை அமன்ற பயறுஆ புக்கென
வாய்மொழித் தந்தையைக் கண்களைத் தருளாது
ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிது மூடாஅள்
சினத்தில் கொண்ட படிவ மாறாள்
மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்
செருவியல் நன்மான் திதியற் குரைத்தவர்
இன்னுயிர் செகுப்பக் கண்டுசின
- மாறியஅன்னிமிஞிலி போல''
(அகம்.மணி.262,1-12)
-சு.சொக்கலிங்கம்

நன்றி :- தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment