பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, October 12, 2015

பிறருக்காகச் சிந்தித்தல் - ம.திருமலை


மனிதன் தோன்றி காடுமேடுகளில் அலைந்து திரிவதிலிருந்து தன் வாழ்க்கையைத் தொடங்கினான். தனக்குப் புரியாத இயற்கை நிகழ்வுகள் குறித்து அவன் முதற்கண் பயம் கொண்டான். புரியாத விஷயங்கள் குறித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்த போதுதான் அவன் சிந்திக்கத் தொடங்கினான். மனிதனின் சிந்தனை எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறது என்பதே இன்றைய கவலை. 

 மனிதனின் சிந்தனை காலப்போக்கில் பொதுமை நோக்கில் இருந்து தனி மனித நோக்கிற்கு மாறி விட்டதானது வேதனைக்கு உரிய விஷயமாகி விட்டது. இவ்வுலகம் தன்னைப் பற்றிச் சிந்திக்காமல் அடுத்தவரைப் பற்றிச் சிந்திப்பவர்களாலும், மற்றவர்களுக்காக முயற்சி செய்பவர்களாலும் மட்டுமே நிலைத்துச் சுழல்கின்றது என்று பாண்டிய மன்னனும் தமிழ்ப் புலவருமான கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி கூறியுள்ளார். "உண்டாலம்ம இவ்வுலகம்..... தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே' என்பது புகழ்பெற்ற பாடல் வரிகளாகும்.

 இற்றை நாள்களில் சமூகத்தின் மிகப் பெரிய மனிதனிலிருந்து கடைகோடி மனிதன் வரை சிந்தனை பெரிதும் தன்னை மையமிட்டதாக மாறி விட்டதை எவராலும் உணர முடியும். 

 மிகப் பெரிய நிறுவனங்கள், வங்கிகள் முதலியவை பெரும் இழப்புகளைச் சந்தித்து இருப்பதை நன்கு அறிகிறோம். பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடுகளில்கூட, சில ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் துறைகள் வீழ்ச்சி அடைந்ததை அனைவரும் அதிர்ச்சியுடன் நோக்கினர். இந்த திடீர் வீழ்ச்சிக்கு சில பொறுப்பான தனி மனிதர்கள்தான் காரணம் என்பதை பலரும் அறியார்.

 சமுதாயம் நன்கு திகழ வேண்டுமானால், மனிதர்கள் பொதுநலன் உடையவர்களாக மனமாற்றம் அடைய வேண்டும். இந்தியாவின் பண்டைய இதிகாசங்கள், காவியங்கள், புராணங்கள், தமிழர்களின் நீண்ட சிந்தனை மரபில் வரும் இலக்கியங்கள், நவீனக் கவிதைகள் என்று இன்று வரை தொடர்ந்து வரும் கருத்து வெளிப்பாடுகள் அனைத்திலும் பிறருக்காகச் சிந்தித்தல் எனும் பொதுநோக்கு பேரிடம் பெறுவதை ஊன்றிக் கவனித்தால் உணரலாம்.

 இந்தியர் சிந்தனை மரபில் இன்று வரை மேற்கோளாக எடுத்துக்காட்டப்படும் மகாபாரதம் பிறருக்காகச் சிந்திப்பதன் மூலம் சமுதாய அறம் காக்கப்படுவதை நன்கு எடுத்துக்காட்டுகிறது. 

 மூதறிஞர் ராஜாஜி வியாசர் விருந்து என்ற தலைப்பில் எழுதி, பின்னர் மகாபாரதம் என்ற தலைப்பிலேயே இப்போதும் விற்பனையாகும் நூல் தான் நான் தொண்ணூறுகளில் படித்து வியந்தது. அந்நூலில் ஓர் இடத்தை ராஜாஜி தமது காந்திய, அரசியல் ஞானத்துடன் விளக்குகிறார். 

 பாண்டவர்களின் வனவாச காலத்தில் அவர்கள் பல சோதனைகளைச் சந்திக்கிறார்கள். அத்தகைய ஒரு நாளில் திரெüபதிக்கு கடும் தண்ணீர் வேட்கை ஏற்படுகிறது. சிறிது தூரத்தில் பறவைகளின் நடமாட்டம் இருப்பதைக் கவனித்த சகாதேவன், அங்கு தடாகம் இருக்கும் என்று கூற முதலில் நகுலன் தண்ணீர் கொணரச் செல்கிறான். ஒரு தாமரை இலையை எடுத்து கூம்புகள் செய்து தண்ணீரை முகர முயற்சி செய்கிறான். தானும் தண்ணீரால் தாகத்தைத் தணித்துக்கெள்ள முயற்சி செய்கிறான். 
 அப்போது அங்கே மறைந்திருக்கும் யட்சன் அசரீரியாக, "நான் இப்போது கேட்கப் போகும் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் தண்ணீரை எடுத்துச் செல்ல முடியாது. மீறிச் சென்றால், நீ இறப்பது உறுதி' என்று எச்சரிக்கை செய்கிறான். எச்சரிக்கையை நகுலன் மீறுகிறான். கீழே வீழ்ந்து இறக்கிறான். இதேபோல் சகாதேவன், வீமன், விசயன் ஆகிய அனைவரும் இறந்து விடுகின்றனர். தண்ணீர் கொணரச் சென்ற எவரும் திரும்பி வராமையை எண்ணி தருமன் தடாகத்திற்குச் செல்கிறான்.

 அனைவரும் இறந்து கிடப்பதைக் கண்டு ஏதோ விபரீதம் என்பதை உணர்கிறான். பின்னர் யட்சன் கூறும் நிபந்தனைக்கு உள்பட்டு வினாக்களுக்குப் பதில் கூறுகிறான். யட்சன் மிகவும் மகிழ்ந்து "நீ வேண்டிய அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்; அது மட்டுமல்ல, நீ விரும்பும் ஒரு சகோதரனை மீண்டும் உயிருடன் அழைத்துக் செல்லலாம்' என்று வரம் தருகிறான். தருமன் சிறிதும் யோசிக்காமல் நகுலன் உயிருடன் கிடைக்க வேண்டும் என்று வரம் கேட்கிறான். யட்சன் அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறான்.

 "எதிர் வரும் பாரதப் போரில் துரியோதன மன்னனை வெல்லும் வலிமை படைத்தவன் வீமன். நீ அவனை உயிர்ப்பிக்க வரம் கேட்பாய் என்று எதிர்பார்த்தேன். இல்லாவிட்டாலும் கர்ணனை வெல்லக் கூடிய வலிமை படைத்த அர்ச்சுனனைக் கேட்டிருந்தாலும் நான் ஆச்சரியப்பட்டு இருக்க மாட்டேன். பயன்பாட்டு நோக்கில் அதுவும் சரியே அல்லது நன்மை தீமைகள் பற்றி எடுத்துரைத்து அறிவுரைகள் வழங்கக்கூடிய சகாதேவன் கூட உனக்குப் பயன்படுவான். இப்படி குறிப்பிட்டுக் கூறக்கூடிய நிலையில் இல்லாத இயல்பான, சாதாரண வீரனாக நகுலனை உயிருடன் கேட்கிறாயே தருமா?' என்று யட்சன் தனது வியப்பை வெளிப்படுத்துகிறான்.
 இதற்கு தருமன் கூறிய பதிலாக ராஜாஜி எடுத்துக்காட்டுவதுதான் மெய்சிலிர்க்கச் செய்கிறது. 

 தருமன் கூறும் பதில்: "யட்ச தேவனே! நான் என்ன வரம் கேட்பது என்பதை நன்கு உணர்ந்துதான் கேட்கிறேன். நகுலன் பாரதப் போரில் வீமனைப் போலவோ, அர்ச்சுனனைப் போலவோ பயன்படமாட்டான்தான். 

 ஆனால், வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் நமக்கு என்ன பயன் இதனால் என்றே பார்ப்பது மனித இனத்தை வாழ வைக்காது. அறம் (தர்மம்), பொதுநோக்கு, பொதுநலன் போன்றவை தான் மனித இனத்தைக் காப்பாற்றக்கூடியவை. எனவே, நம்முடைய கடமை தர்மத்தைப் பாதுகாப்பது ஒன்றே! அதைச் சரியாகச் செய்துவிட்டால், மற்றவை எல்லாம் நேராகி விடும்' என்று கூறுகிறான். யட்சன் மிகவும் மகிழ்ந்து வீமன், விசயன், சகாதேவன், நகுலன் போன்ற அனைவரையும் உயிர்ப்பிழைக்கச் செய்து தருமனுடன் அனுப்புகிறான்.

 இம்மகாபாரதக் கிளைக் கதை பிறருக்காகச் சிந்தித்தல் என்ற கருத்தியலை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. தருமன் அவ்வாறு முடிவு செய்ய என்ன காரணம்? 
 தருமனே கூறுகிறான்: என்னுடைய தந்தை பாண்டுவின் இரண்டு மனைவியருள் மூத்தவரான குந்தியின் பிள்ளைகள் மூவரில் மூத்தவரான நான் இப்போது உயிருடன் இருக்கிறேன். என் சிற்றன்னையான மாத்ரியின் பிள்ளைகளில் மூத்தவனான நகுலன் உயிருடன் இருப்பதே தர்ம நியாயத்திற்கு ஏற்றது. எனவே, நகுலனை நான் கேட்டேன் என்பதே தருமன் கூறும் பொது நீதி.

 பிறருக்காகச் சிந்தித்தல் என்ற இக்கருத்தியலை நமது வள்ளுவப் பேராசான் ஒப்புரவறிதல் என்று குறிப்பிட்டு விளக்குகிறார். ஒப்புரவு அறிதல் என்பதற்கு உலகத்தின் போக்கிற்கு ஏற்றவற்றைத் தாமே அறிந்து செய்தல் என்பது பொருளாகும். 

 அதாவது, உலகத்தின் பொதுப் பணி போக்கிற்கு ஏற்ற நன்மைகளைச் செய்தல் என்பது பொருள். உலகத்திற்கே வழிகாட்டிய வள்ளுவர்,

 இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன்அறி காட்சி யவர் என்று கூறுகிறார். நன்மை செய்ய இயலாத சூழ்நிலையிலும் அறத்தின் - தருமத்தின் - பாதையை உணர்ந்தவர்கள் நன்மை செய்யத் தவற மாட்டார்கள் என்று வள்ளுவர் சந்தேகத்திற்கிடமின்றிக் கூறுகிறார்.

 மகாபாரதம் நச்சுப் பொய்கை கதையின் மூலமாக விரிவாகக் கூறிய செய்தியை வள்ளுவர் செறிவாக எடுத்துக் கூறுகிறார் எனில் வள்ளுவரின் பெருமையை நாம் சொற்களால் விளக்க முடியுமா?

 பிறருக்காகச் சிந்தித்தல் என்பதை ஒரு வாழ்க்கை நெறியாக நம் முன்னோர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். பிசிராந்தையார் என்னும் புலவர், "மன்னனானவன் மக்களைத் துன்புறுத்தாமல் வரி வசூலிக்க வேண்டும். அப்படிச் செய்தால், விளைபொருள் நீண்ட காலத்திற்குப் பயன்படும். அவ்வாறில்லாமல் தன் விருப்பம் போல் மன்னன் செயல்பட்டால் யானையின் காலில் சிக்கிய விளை நிலம்போல நாடு கெட்டுவிடும்' என்று அறிவுரை கூறுகிறார்.

 யானை புக்க புலம்போலத்தானும் உண்ணான், உலகமும் கெடுமே என்று புலவர் எத்தனை கரிசனத்துடன், பொதுநோக்குடன் அரசனுக்கு அறிவுரை கூறுகிறார் பாருங்கள்! மன்னனாக இருந்தாலும் சுயநலமாக இருக்க முடியாது என்ற சமூக நடைமுறை எவ்வளவு துல்லியமாகக் கூறப்படுகிறது. 

 மன்னனே உலகத்தின் உயிர் என்று மக்கள் நம்பினாலும் தான் குற்றமற்ற உயிராக இருக்க வேண்டும் என்று ஓர் அரசனே பொறுப்புடன் சிந்தித்த பாங்கினைத் தொண்டைமான் இளந்திரையன் எனும் அரசன் பாடிய பாடல் உணர்த்துகிறது.

 மகாகவி சுப்பிரமணிய பாரதியார், "நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்' என்று பொது நோக்கினைப் புலப்படுத்தினார். பாவேந்தர் பாரதிதாசன், "தன்னைப் பற்றியே சிந்தித்தவனைக் கடுகுபோல் உள்ளம் கொண்டான்' என்று இடித்துரைத்தார். பிறருக்காகச் சிந்திப்பவனை, "அன்புள்ளம், பெரிய உள்ளம் கொண்டான்' என்றார்.

 நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சான்றுகளை நம்மால் அடுக்க முடியும். இனிமேலாவது நம்மைப் பற்றியே சிந்திப்பதை விட்டுவிட்டு பிறருக்காகச் சிந்திப்போம். பிறரை வாழவைப்பது குறித்துச் சிந்திப்போம். பிறர் நலமாக இருந்தால்தான் சமூக வாழ்க்கை நன்றாக இருக்கும்.

 இந்தியாவின் பண்டைய இதிகாசங்கள், காவியங்கள், புராணங்கள், தமிழர்களின் நீண்ட சிந்தனை மரபில் வரும் இலக்கியங்கள், நவீனக் கவிதைகள் என்று இன்று வரை தொடர்ந்து வரும் கருத்து வெளிப்பாடுகள் அனைத்திலும் பிறருக்காகச் சிந்தித்தல் எனும் பொது நோக்கு பேரிடம் பெறுவதை ஊன்றிக் கவனித்தால் உணரலாம்.

நன்றீ :- ம.திருமலை , தினமணி


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment