பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, October 10, 2015

காரைக்குடி கம்பன் கழகத்தில் பிளவு :: சொத்து, சாத்தான் நுழையும் வாயில் !





'காரைக்குடியில் கம்பன் கழகம் உடைந்து விட்டதே ஏன்?' என்று பரவலாகக் கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு ஒரே வார்த்தை பதில்- "சொத்து'.

 சாத்தான் நுழைவதற்கு வாயிலை அகலத் திறந்து வைப்பதே சொத்துத்தான்!
 "மூன்று நாட்கள் கம்பன் விழா நடத்துவதற்கு எதற்கு இவ்வளவு பெரிய சொத்து?' என்று சா. கணேசனிடம் கேட்டேன். அவர் பெரிய தியாகி; காந்தியைப் போல் சட்டை அணியாதவர்; தன்னலமற்றவர்; உறுதியானவர்!

 பெரியார் இராமாயணத்தை ஒழிக்க எதிர்ப்பியக்கம் கண்டு, அது திராவிட மாட்சிமைக்கு மாறானது என்று வரிந்து கட்டிக் கொண்டு நின்றபோது, "கம்பன் காக்கப்பட வேண்டும்' என எதிர்நிலை கண்டவர் சா. கணேசன்!

 வால்மீகி இராமாயணம்தான் மூலம் எனினும், கதையை மட்டும் பெற்றுக் கொண்டு, கம்பன் திராவிடக் கூறுகளை உட்படுத்தி அந்தக் காப்பியத்தைத் தன் போக்கிற்குச் செழுமைப்படுத்தியவன்!
 கண்ணகிக்குப் பாஞ்சாலிதான் மாறுபட்டவளே ஒழிய, சீதை அல்லள்!
 கம்பனை நீக்கி விட்டால், தமிழில் பாதி நீங்கி விடும் என்பதால், தான் நடத்திய விழாவுக்குப் பக்தி சார்ந்து இராமாயண விழா என்று பெயரிடாமல் இலக்கியம் சார்ந்து "கம்பன் விழா' என்று பெயரிட்டார் சா. கணேசன்!

 வால்மீகியின் இராமனைவிட கம்பனின் இராமன் மேம்பட்டவன் என்று கருதியதால், தன்னுடைய பேரனுக்கு இராமன் என்று மொட்டையாகப் பெயரிடாமல் "கம்பராமன்' என்று துல்லியமாகப் பெயரிட்டார் அவர்!

 இது பெரியாரோடு கூடவே நடந்தும், பெரியாரை விட்டு விலகியும் கம்பனை நிலைநிறுத்திய கூரறிவு!

 இவ்வளவு பெரிய சா. கணேசனிடம், "கீற்றுக் கொட்டகையில் நடத்தினால் கம்பன் நிற்க மாட்டானா? எதற்கு இவ்வளவு பெரிய சொத்து?' என்று கேட்டேன்! கம்பன் மண்டப விரிவுக்குப் பல நோக்கங்கள் உண்டென்றாலும், அதற்கொரு நிலையான வருவாயைத் தேடி வைக்க வேண்டும்; அந்த வருவாயிலேயே கம்பன் விழாவைக் காலகாலத்திற்கும் நடத்த வேண்டும் என்பதுதான் அவருடைய மண்டப உருவாக்கத்தின் மைய நோக்கம்!

 "தருமம் கூடத் தனக்குரிய வருவாயைத் தன்னிடமிருந்தே உருவாக்கிக் கொண்டு நீடித்து நடக்க வேண்டும் என்னும் ஒரு நகரத்தார் மனப்பான்மை இது'' என்று நான் கேலியாகச் சொன்னபோது, "போங்கடா... காலிப் பயல்களா' என்று என்னையும் அவருடைய சீடன் சே.நா. விசயராகவனையும் செல்லமாக வைதார் அந்தச் சட்டை போடாத தியாகி!

 எந்த ஒரு கொள்கையும் பிறக்கும்போது, தன்னை நிலைநாட்டிக் கொள்ளத் தேவையான வசதியையும் உடன்கொண்டு பிறப்பதில்லை.

 அந்தக் கொள்கை ஒரு கூட்டத்தின் நன்மைக்கு உகந்ததென்றால், அந்தக் கொள்கையால் பயன்பெறும் கூட்டம், அந்தக் கொள்கை செயல்படத் தேவையான வசதிகளை உண்டாக்கிக் கொடுத்து, அந்தக் கொள்கையை நிலைபெறச் செய்து விடும்!

 மரத்தின் நிழலால் பயன்பெறப் போகின்றவர்கள், அதைச் செடிநிலையிலிருந்து வளர்க்கத் தேவையான நீரை ஊற்றுவது போன்றதுதான் அது!

 பக்தி இயக்கக் காலத்தில் சமண - பௌத்த மோதல் நிலையில் சைவ - வைணவ சமயங்களை எடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கெனவே இருப்பவற்றை அழித்து, அந்த இடத்தில் புதியவற்றை ஊன்றுவது எளிதானதில்லை.

 ஏற்கெனவே நீலமணிமிடற்றோனையும், கார்முகில் வண்ணனையும் தமிழர்கள் அறிவார்கள் எனினும், அவர்களைச் சுற்றி நிறுவனங் கட்டுகிற முயற்சி முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டது.
 சமயங்கள் நிறுவனங்களாயின; சமய நெறிகளைப் பரப்புவதற்கு, அதையே வேலையாகக் கொண்ட அடியார்கள் தேவைப்பட்டார்கள். அவர்களுக்குச் சோறூட்டித் தங்க வைக்க மடங்கள் தேவைப்பட்டன. புதிய மடங்களைக் கட்டவும், அடியார்களின் பராமரிப்புக்கும் பணம் தேவைப்பட்டது. சமயப் பற்றாளர்கள் நிலங்களை மடங்களுக்குத் தானமாக வழங்கினர்!
 இன்று சைவம் என்பது ஒருவனின் பிறப்பு அடிப்படையில் தானாகவே நிலைபெற்று நிற்கிறது. அது பரப்பப்பட வேண்டிய இயக்கத் தேவையைப் பெற்றிருக்கவில்லை! இனி எதற்கு மடங்கள்?
 ஒரு மடாதிபதி தெற்கிலிருந்து வடக்கே நீண்ட தொலைவு பயணப்பட்டு ஒரு கூட்டத்திற்குப் பேச வருகிறார் என்றால், அவருக்கு முந்தி, அவர் அமர்வதற்கான வெள்ளிச் சிம்மாசனம் அதே நீண்ட தொலைவுக்குப் பயணமாகிறது. அவர் கூட்டத்தில் மற்றவர்களுக்குச் சமமாக, மற்றவர்கள் உட்காரும் நாற்காலிகளில் உட்கார மாட்டார்! இவர் கூட்டத்தில் வந்து அமர்ந்தவுடன், ஒரு வேலையாள் அந்தக் கூட்டத்தில் ஆளுயர வெள்ளிச் செங்கோலைப் பிடித்துக் கொண்டு அவருக்குப் பக்கவாட்டில் நிற்பான்! இவர் எந்த நாட்டை ஆள்கிறார்?

 சைவத்தைப் பரப்ப எழுதி வைக்கப்பட்ட சொத்துகள் எது எதற்குப் பயன்படுகின்றன என்று பாருங்கள்! அவர்கள் சட்டை போட்டுக் கொள்வதில்லை; சட்டப்படி மணந்து கொள்வதில்லை என்பவை மட்டுமே சைவத்தை வளர்க்கப் போதுமானவையா?

 திருவாசகத்தை எட்டணா விலையில் மலிவாக விற்பதற்கும், சில கோயில்களில் உழக்கரிசிச் சோற்றை நைவேத்தியமாகக் காட்டுவதற்கும் எதற்கு இத்தனை ஆயிரம் வேலி நிலங்கள்?

 வள்ளலார் எந்த மடத்திற்கு அதிபதியாக இருந்தார்? அவருடைய கட்டுப்பாட்டில் எந்த நிலம் இருந்தது?

 பசித்தவர்களுக்குச் சோறிடுவதற்காகப் பசிக்காதவர்களிடமிருந்து அரிசி பருப்பைப் பெற்றார். எளிய ஆனால் பெருமனம் படைத்த வன்னிய விவசாயிகளிடமிருந்து கொஞ்ச நிலம் பெற்றுச் சத்திய தருமச்சாலையை உருவாக்கினார்!

 பசி என்று வாயிலில் வந்து நிற்கிறவனுக்குச் சோறிட முனையும் ஒரு மனைவியைக் கணவன் தடுத்தாலும், அவளைப் படைத்த ஆண்டவனே தடுத்தாலும், அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பசித்தவனுக்குச் சோறிட வேண்டும் என்றார் வள்ளலார்!

 "பசி என்னும் பாவிக்கு' எதிராக அவர் மூட்டிய அடுப்பு இன்றுவரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறதே! அதற்கு எத்தனை நூறு வேலி நிலம் வைத்து விட்டுப் போனார் வள்ளலார்? அந்தக் காரியம் தொடர்ந்து நடக்காமல் போய்விட்டதா?

 தனக்குப் பிறகு தன்னுடைய இடத்தில் இருந்து சொத்துத்தான் அந்தக் காரியங்களைத் தொடர்ந்து நடத்தும் என்று கொடையாளர்கள் நினைக்கிறார்கள். சொத்து என்பது சாத்தான்! உணர்வுபூர்வமாக நடக்க வேண்டிய காரியங்களைச் சடங்கு பூர்வமாக ஆக்கி, அந்தக் காரியங்களில் "சாரம் இல்லாமல்' செய்யப் போவது அந்தச் சொத்துத்தான்!

 நம்முடைய தலைமுறையின் ஈடு இணையற்ற திராவிடத் தலைவர் பெரியார். திராவிடர்கள் தன்மானம் பெறுவதற்காகக் கடவுளை ஒழிக்கவும், காந்தியை ஒழிக்கவும், ஆரியர்களை ஒழிக்கவும் முனைந்து நின்றார்! 

 இவர்கள் மூன்று தரப்பார்க்கும் பெரியாரால் எந்தச் சேதாரமாவது ஏற்பட்டதுண்டா? காந்தியை ஒழிக்கவும் காந்தியிடம் கற்றுக்கொண்ட நெறிமுறைகளையே பின்பற்றியவர் அவர்!
 ஆனால், தனக்குப் பிறகும் திராவிடர் கழகமும், தன்மான இயக்கமும் செயல்பட வேண்டும் என பெரியார் விரும்பினார். தன்னுடைய தகப்பனார் வழியில் தனக்குக் கிடைத்த பெருஞ் சொத்தையும், தான் பொது வாழ்வில் இதற்கெனச் சேர்த்த பெரும் பணத்தையும் ஓர் அறக்கட்டளையாக உருவாக்கி அதை யார் கையில் ஒப்படைப்பது என்று மருக்கடிப் பட்டு, "என் கண்ணுக்கு மணியம்மையைத் தவிர வேறு யாரும் நம்பிக்கையாகத் தெரியவில்லை' என்று தன் துணைவியாரிடமே சொத்துக்களை ஒப்படைத்தார் பெரியார்.

 மனம் புண்பட்ட அண்ணா வெளியேற நேர்ந்தது! அண்ணா தலைமையில் திராவிட இயக்கம் வீறு கொண்டது வேறு கதை!

 ஆனால், எல்லாவற்றிலும் காந்தியைப் பின்பற்றும் பெரியார், இந்த ஒன்றில் மட்டும் சைவ மடங்களைப் பின்பற்றிவிட்டார்!

 எழு நூறு ஆண்டுகளாகச் சைவ மடங்கள் நிலைபெற்று நிற்பதுபோல, திராவிடர் இயக்கமும் நிலைபெற்று நிற்க வேண்டுமென அவர் விரும்பினார்!

 திருவிளையாடற் புராணத்தை அவர்கள் மலிவாகப் பதிப்பிப்பது போல், தன்னுடைய எழுத்துகளைத் திராவிடர் கழகம் மலிவாகப் பதிப்பித்தால் போதும் என இவரும் திரண்ட சொத்துகளை இதற்கென ஒதுக்கினார்!

 ஒரு காலகட்டத்தில் சாதியால் ஏற்படும் மாபெரும் தீங்கான ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துத் தமிழர்களைச் சைவத்தின் பெயரால் ஒருமைப்படுத்தியவர்கள் அப்பர் அனைய சைவர்கள்தாமே!
 இன்று சைவ மடங்கள் இற்றுப் போனதற்கு என்ன காரணம்? சொத்து!

 சைவ மடங்களின் சாயலில் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கச் சொத்துப் பரிபாலனத்திற்கு, பெரியாருக்குப் பின்னால் வந்திருக்கும் வீரமணி, பெரியாரால் செதுக்கப்பட்டவர். திராவிட உணர்வுகளில் ஊறி வளர்ந்தவர்!

 அவருக்குப் பின்னால் பெரியார் திடலில் ஒரு மடம் உருவாகும்; அது திராவிட மடம் எனப் பெயர் பெறும்!

 "நமச்சிவாய வாழ்க' என்னும் மந்திரம் திருப்பனந்தாளில் நாள்தோறும் ஒலிப்பது போல, எழும்பூர் பெரியார் திடலில் நாள்தோறும் "கடவுளை நம்புகிறவன் முட்டாள்' என்னும் மந்திரம் ஒலிக்கும்!

 மந்திரங்கள் வேறு வேறு; செயல்பாடு ஒன்றுதானே! ஒரு இயக்கத்திற்குச் சொத்தை உருவாக்குவது சாத்தானுக்கு வரவேற்பிதழ் வாசித்துக் கொடுக்கும் செயலாகும்!

 ஒவ்வோர் அரசியல் கட்சித் தலைவரும் தனது கட்சிக்குத் தலைநகரிலிருந்து மாவட்டங்கள் மற்றும் பேரூர்கள் வரை பளிங்கு மாளிகைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்! அவற்றையும், அவர்கள் கடைசியில் எடுத்துச் செல்ல முடியாத அளப்பரிய பணத்தையும் ஆளப் போகிறவர்கள் யார் யாரோ?

 பெரியாரை அறக்கட்டளைகள் அல்ல; காலம் தூக்கி நிறுத்தும்!

 இவ்வளவு அரசியல் குறைநிறைகளுக்கிடையே ஐம்பது ஆண்டுகளாகக் கருணாநிதியை வீழ்த்த முயன்றும் வீழ்த்த முடியவில்லையே! ஏன்?

 கருணாநிதியைத் தூக்கி நிறுத்துபவர்கள் அவருடைய தொண்டர்களில்லை; அவருடைய எதிரிகள்!
 இந்தி ஐ.நா. மன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பவர்கள்; பிறப்பால் மேல்கீழ் பேசுகிறவர்கள்; சமக்கிருதம் மட்டும்தான் கடவுளுக்குப் புரியும் என்பவர்கள்; இந்துத்துவத்தால் திராவிட இன மரபை அழித்து அவர்களை இந்துக்களாக அடையாளப்படுத்த முயல்பவர்கள்; இவர்கள்தாம் முதலில் கருணாநிதியை எதிர்த்து மூர்க்கம் கொள்கிறார்கள்!

 ஒருவரின் நிலைபேற்றுக்கான இன்றியமையாமையைத் தொண்டர்கள் தீர்மானிப்பதில்லை; எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்!

 இதை மருத்துவர் இராமதாசு ஐயா உணரும்போது, திராவிட இயக்கத்தை ஒழிக்க நினைக்க மாட்டார்; அந்த இயக்கத்தின் எதிரிகளை ஒழிக்க நினைப்பார்! எதிரிகள் ஒழிந்து விட்ட நிலையில், அந்த இயக்கத்திற்கான தேவை அற்றுப் போகிற காரணத்தால், அந்த இயக்கம், தலைமை அனைத்துமே தேவையற்றுப் போகும்! இதுதான் திராவிடத்தை ஒழிக்க எளிய வழி!
 எந்த இயக்கமானாலும் அதைச் சொத்தால் நிலைநிறுத்த முடியாது!

 காந்தி "திலகர் சுயராச்சிய நிதியாக' ஒரு கோடி சேர்த்து விடுதலைப் போராட்டத்திற்கென அந்த நிதி முழுவதையும் செலவழித்து முடித்துவிட்டார்!

இன்னும் பல நூறு கோடிகளைச் சேர்த்து வைத்து, அதிலிருந்து வருகின்ற வருவாயில் சுயராச்சியப் போராட்டத்தை நடத்தலாமே என்று யோசனை சொல்லப்பட்டபோது, காந்தி மறுத்துவிட்டார்!
 பணம் இல்லாத நிலையில் ஓர் இயக்கத்திற்குத் தகுதி வாய்ந்தவனின் தலைமை ஏற்படும். 
 பணமோ, சொத்தோ இருந்தால், தன்னல அக்கறைச் சக்திகள் எல்லாவிதத் தந்திரங்களையும் பயன்படுத்தி அந்த இயக்கத்தைக் கைப்பற்றி விடுவார்கள்; இயக்கம் தோற்றுப் போகும் என்றார் காந்தி!

 சொத்து, சாத்தான் நுழையும் வாயில்

நன்றி :- தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment