
உயிரின் மகத்துவத்தை உணர்ந்த முற்காலத் தமிழன் எழுத்துகளுக்குக்கூட உயிர் எழுத்துகள் என்று பெயரிட்டான். ஐந்தறிவு படைத்த விலங்குகள்கூட தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்களோ, தங்களின் விலை மதிப்பற்ற உயிரை விபத்துகளில் தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வெளிச்சத்தோடு விடிய வேண்டிய பொழுதுகள் விபத்துகளோடு விடிவது இன்றைய வாடிக்கை. அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் விபத்துகளும் தவிர்க்க முடியாததொன்றாகிவிட்டது. நாளொரு விபத்தும் பொழுதொரு மரணமுமாய் நகர்வதே மனித வாழ்க்கை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளோ, உறுப்பு இழப்புகளோ விபத்துக்குள்ளான ஒரு மனிதரோடு மட்டும் முடிந்து போவதில்லை. அவரது குடும்பத்திற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் வாழ்நாள் முழுதும் தொடரும் பெரும் சோகமாகும்.
விபத்துகள் பலவிதம். உடலை ஊனப்படுத்துவதிலும், உயிர்களைப் பலிகொள்வதிலும் இன்று முதலிடம் வகிப்பது சாலை விபத்துகள். மனிதனின் பயணத்திற்காகப் போடப்பட்ட சாலைகள் மரணத்திற்குப் போடப்பட்ட சாலைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
அவசரம், அலட்சியம், சாலை விதிகளை மீறுதல், போதையால் பயணப் பாதை மரணப்பாதையாதல், கைப்பேசியில் காலனின் அழைப்பே காலர் டியூனாதல் இவையெல்லாம் எமலோக பயணத்தின் காரணிகள்.
ஓட்டுநர் உறங்கும்போது எமன் விழித்துக்கொள்கிறான். உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே களவாடப்படுவது உன்னத உயிர்கள். தரைவழி, வான்வழி, நீர்வழி அனைத்தும் மரணத்தின் வழிகளாக மாறிப் போயின. எமலோகப் பதவிக்குக்கூட எத்தனைப் போட்டிகள். வாழ்க்கைத் தரம் உயர உயர விபத்துகளின் விழுக்காடும் உயர்ந்து கொண்டே போகிறது.
விபத்துகள் மனித சமுதாயத்திற்கு அடிக்கப்படும் எச்சரிக்கை மணி என்பதை நாம் ஏனோ உணர்வதில்லை. கண் முன் நிகழும் உயிரிழப்புகளை ஒரு நிமிட அனுதாப பார்வையோடு பார்த்தபடி மனிதர்களின் அவசரப் பயணம் தொடர்கிறது. அவர்களுக்கு இருக்கும் வேலைகளுக்குள் இழப்பின் சோகமும், விபத்தின் கோரமும் கரைந்து போவது காலத்தின் கோலம். பூத்துக் குலுங்க வேண்டிய வாழ்வு விபத்துகளால் மரணம் எனும் புதைகுழிக்குள் போகிறது. அரசின் நஷ்ட ஈடுகளும், ஆறுதல்களும் இழப்புகளுக்கு ஈடாவதில்லை. இழப்பீடு என்பது விலைமதிப்பற்ற மனித உயிர்களுக்கு கொடுக்கப்படும் மலிவு விலை.
இன்று சாலை விபத்துகளோடு போட்டி போடும் சமையல் எரிவாயு உருளை வெடிப்புகள், கள்ளச்சாராய சாவுகள், மலர வேண்டிய மொட்டுகளுக்கு மரண சாசனம் எழுதும் ஆழ்துளைக் கிணறுகள், ஆலைகளின் பாய்லர் வெடிப்பு, கட்டுமான பணிகளின்போது காலன்வாய்படும் ஏழைத் தொழிலாளிகள், இந்த மரணங்கள் எல்லாம் இன்று வாடிக்கைகள்.
நொடிப் பொழுதில் மரணத்தைப் பரிசாக வழங்கும் விபத்துகளும், மனித உயிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் குடிக்கும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளும், கொடூர மனங்கொண்டவர்கள் நிகழ்த்தும் கொலைகளும், மரணத்திற்கு வரவேற்பு வாழ்த்துப்பா படிக்கும் மது பழக்கமும், வாழ்வதற்குக் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகள் சாவின் சமாதிகள் ஆவதும் மனித உயிர்கள் மலிவாகிப் போய்விட்டன என்ற கசப்பான உண்மையைக் காட்டும் கண்ணாடிகள்.
நம் உயிர் நம் கையில் என்பதே விபத்துகளிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடம்!
நா. இராதாகிருட்டிணன், கடலூர்., கருத்துக்களம், தினமணி
0 comments:
Post a Comment