பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, November 4, 2014

ஆபத்தை அறிவிப்போம்


இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பவற்றில் முக்கியமானவை மதுவும், புகையிலையும்தான். வளமான, நோயற்ற உடல், பொருளாதார முன்னேற்றத்திற்கான முதல் படி.

இன்றைய இளைஞர்களில் மதுவுக்கும், புகையிலைக்கும் அடிமையாகாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு மதுவும், புகையிலை பொருள்களும் இளைஞர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டன. 
சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்களால் ஏற்படக்கூடிய தீமைகளை கருத்தில் கொண்டு அவற்றின் பயன்பாட்டை குறைப்பதற்காக, அவற்றின் விலை உயரும் வகையில், மத்திய அரசு அடிக்கடி வரிகளை உயர்த்தி வருகிறது.

இப்போது, மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புகையிலை பொருள்களின் பொட்டலங்கள் மீதுள்ள எச்சரிக்கை அறிவிப்பின் அளவை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருள்கள் (பேக்கேஜிங் அண்ட் லேபிலிங்) சட்டம் 2008-இல் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி, ஒவ்வொரு பொட்டலத்தின் வெளிப்பக்கத்திலும் 85 சதவீத இடத்தில் புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்த புகைப்படத்தையும், விழிப்புணர்வு வாசகத்தையும் அச்சிட வேண்டும்.

இந்தப் புதிய சட்டம் அடுத்த ஆண்டு (2015) ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இப்போது, 40 சதவீத அளவுக்கு எச்சரிக்கை புகைப்படம் அச்சிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் புகையிலை பொருள்களின் பயன்பாடு குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனவே, அவற்றின் பயன்பாட்டை மேலும் குறைக்க, 85 சதவீத அளவுக்கு எச்சரிக்கை வாசகத்தை உயர்த்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புகையிலைக்கு இணையாக, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருவது மதுபானம்.
மதுவின் தீமை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு கூறிக் கொள்ளலாம். மதுபாட்டில்களில் "மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு' என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.

அதை உருப்பெருக்கி (லென்ஸ்) கொண்டுதான் படிக்க வேண்டும். அத்தனை சிறியதாக அந்த வாசகம் இடம்பெற்றுள்ளது. அதை "குடி' மகன்கள் யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

மதுவிலக்கு இல்லாத மாநிலங்களின் வருவாயில் சராசரியாக 10 சதவீதம் மது விற்பனையால் கிடைக்கிறது. ஆதலால், வருவாய் பாதிக்கும் என்பதால் மதுவிலக்கை அமல்படுத்த மாநிலங்கள் தயக்கம்காட்டி வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் வருவாயில் 27 சதவீதம் மது விற்பனையில்தான் கிடைக்கிறது.

இங்கு மது விற்பனையால் கிடைத்த வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.23,401 கோடி ஆகும். இந்த ஆண்டு வருவாய் ரூ.25 ஆயிரம் கோடியை எட்டிவிட வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதிகாரிகள் உழைத்து கொண்டிருக்கிறார்கள்.

கேரளத்தைபோன்று தமிழ்நாட்டிலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனாலும் அரசின் காதுகளை அது இன்னும் எட்டவில்லை.

மாநிலத்தின் வருவாயில் 27 சதவீதத்தை இழக்க அரசு அத்தனை எளிதில் முன்வந்து விடுமா என்ன? மதுவை முற்றிலும் ஒழிக்க அரசுக்கு மனது இல்லாவிட்டாலும், அதன் பயன்பாட்டை குறைக்கவாவது நடவடிக்கை எடுக்கலாமே என்ற விரக்தியே பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் 7-ஆவது அட்டவனையில் மது இடம்பெற்றுள்ளது. எனவே, மதுவை தடை செய்வது, விற்பனையை ஒழுங்குபடுத்துவது போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுதான் மேற்கொள்ள வேண்டும்.

சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையைப் போன்று மதுவின் பயன்பாட்டை குறைக்க, விலையை உயர்த்துவதோடு அதன் தீமை குறித்த எச்சரிக்கை புகைப்படத்தையும், வாசகத்தையும் மது பாட்டில்களின் வெளிப்புற லேபிளில் 85 சதவீத இடத்தில் பெரிதாக அச்சிட வேண்டும்.

சிகரெட் மற்றும் புகையிலை பொருள்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தைப் போன்று மதுவுக்கும் அமல்படுத்த வேண்டும்.

நன்றி :- தினமணி   படங்கள் :- இணையத்தில்.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment