பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, October 20, 2014

மதுக் கடைகள் மாற்றுக் கடைகளாகட்டும்!


தமிழகத்தின் அண்டை மாநிலங்களுள் ஒன்றான கேரளத்தில் மது விற்பனை படிப்படியாகக் குறைத்துக்கொள்ளப்படுமென அந்தமாநில முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், நட்சத்திர விடுதிகளிலுள்ள குடிப்பகங்களில் மது விற்பனை தொடரும் என்று அவர் அறிவித்திருப்பதற்கு "பணக்காரர்கள் மட்டும்தான் மது அருந்தும் தகுதி உடையவர்களா?' என உச்சநீதிமன்றம் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. மதுவிற்கு எதிராகப் போராடிய மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு தொடர்ந்து அமலில் உள்ளது ஆறுதல் அளிப்பதாய் உள்ளது.

தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள், பொது மக்கள் மற்றும் ஒரு சில அரசியல்வாதிகள் குரல் கொடுத்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகளால் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் லாபம் கிடைப்பதனால் மதுவிற்பனையை அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது. இச்செயல் ரத்தம் விற்ற பணத்தில் சோறு திண்பதற்கு ஒப்பானது என்றே தோன்றுகிறது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையோ நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே போகிறது. பள்ளி மாணவர்கள்கூட மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் படைத்த இளைய தலைமுறையே குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது வருத்தத்திற்குரியது; மாற்றப்பட வேண்டியது. மதுகுடிப்பது ஏதோ நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதது போன்ற மாயை உருவாகிப்போனது. இன்று வெளிவரக்கூடிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் மதுஅருந்தும் காட்சிகள் கட்டாயம் இடம்பெறுவது, இளசுகள் குடிப்பழக்கம் மீது ஆர்வம் ஏற்பட வழி வகுக்கிறது. குடிப்பழக்கத்தை மையப்படுத்தி தமிங்கல மொழியில் (தற்போது தமிழர் நாம் பேசும் மொழி) கவர்ச்சி நடனமிக்க குத்துப்பாட்டு ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம்பெறுகின்றது.

எம்.ஜி.ஆர் ஒருபோதும் மது அருந்துவது போன்ற காட்சியில் நடித்தவரல்லர். இதனை இன்றையத் தலைமுறை நடிகர்களும் கடைபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் காலப்போக்கில் மதுகுடிப்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படைக் கடைமையென அடுத்த தலைமுறை நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாடெங்கிலும் பெருகிவரும் கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் பெண்களுக்கெதிரான வன்குற்றங்களுக்கு மதுவே முக்கிய காரணியாகிறது.

இந்நிலைமாற தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை அகற்றி தமிழகத்திலும் படிப்படியாக மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களும், உள்ளூர் நிறுவனங்களும் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ரூ.20 முதல் ரூ.25 வரை வியாபாரம் செய்து கொள்ளை லாபம் அடைந்துவருகின்றன.

தற்போது ரூ.10-க்கு அதே தரத்திலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தமிழக அரசு வழங்குவது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனியார் உணவகங்களில் அரைவயிற்றுக்கு சாப்பிடவே ரூ.40 செலவாகின்றது. ஆனால், தமிழக அரசின் உணவகங்களிலோ ரூ.10-க்கு சாப்பிட முடிகின்றது. இத்திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளன. அதே வேளையில் டாஸ்மாக் கடைகள் குடும்ப சச்சரவுகளை ஏற்படுத்துகின்றன.

டாஸ்மாக் கடைகளின் வருமானத்தை ஈடுகட்ட மாற்று வழிகளை கையாளலாம். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகம் பயன்படுத்தும் மளிகைக்கடைகளாகவோ, பல்பொருள் அங்காடியாகவோ, மருந்தகமாகவோ அல்லது காய்கனி அங்காடியாகவோ உருமாற்றம் செய்யலாம்.

டாஸ்மாக் கடை குடிகாரர்களுக்கு மட்டுமே அவசியம். ஆனால், அத்தியாவசியப் பொருள்களோ அன்றாட வாழ்கைக்கு அனைவருக்குமே அவசியம்.

எனவே மதுக்கடை வருமானத்தைவிட இத்தகைய நன்மை பயக்கும் வியாபாரங்கள் மூலம் அரசுக்கு வருமானம் அதிகமாகவே கிடைப்பதோடு டாஸ்மாக் கடைப்பணியாளர்களுக்கும் மக்களுக்கு நன்மைதரும் வேலை செய்கிறோம் என்ற மனநிம்மதியை ஏற்படுத்தலாம்.

டாஸ்மாக் கடைகளை ஆக்கபூர்வ வியாபாரப் பொருள்களின் விற்பனைக் கடைகளாக உருமாற்றம் செய்து தனியார் அங்காடிகளைவிட குறைந்த லாபம் நிர்ணயித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் ஏழை மற்றும் நடுத்தரவர்க்க மக்கள் பயனடைவர். அதோடு வளர்ந்துவரும் இளம் சமுதாயத்தினை குடிபழக்கமில்லாதவர்களாகவும், சுயமரியாதையுடையவர்களாகவும் உருவாக்க முடியும்.

நன்றி :- ம.சமதர்மன், புதுக்கோட்டை, கருத்துக்களம், தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment