பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, October 20, 2014

ஆறுதல் தராத கல்விஅமெரிக்காவில் கல்வித் துறை பதவிகளெல்லாம், பெயருக்குப் பின்னால் இடப்படும் வெறும் அடையாளங்களாக மாறிவிடக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், முனைவர் பட்ட மாணவர்கள் ஒருவிதத் தவிப்பிலும் மன அழுத்தத் திலும் ஆழ்ந்துள்ளனர். அவர்களுடைய மனக் கவலையைப் போக்கும் செயல்களில் அந்தந்தத் துறை பேராசிரியர்களும் உளவியல் நிபுணர்களும் இன்னும் இறங்காமல் இருப்பதுதான் விசித்திரம்.

இதுகுறித்து, வடஅமெரிக்காவைச் சேர்ந்த டெட் ஷெய்ன்மேன் இவ்வாறு கூறுகிறார்: “முனைவர் பட்ட மாணவர்கள் தங்கள் லட்சியம், சுதந்திரம், சுயவிருப்பம் ஆகியவற்றையெல்லாம் விட்டுக்கொடுக்கும் வகையில், பல்கலைக்கழக நிர்வாகங்களுடன் ஆறு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர். அந்த ஆறு ஆண்டுகளும் அன்றாடம் பட்ட வகுப்பு மாணவர் களுக்குப் பாடம் நடத்த வேண்டும். ஆய்வு தொடர் பாகத் தினமும் எழுதிக் குவிக்க வேண்டும்.

இதற்காக அன்றாடம் சலிப்பில்லாமல் 12 மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது. இதற்காக, பல தியாகங்களை அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. சொந்த ஆசாபாசங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, ஆய்வில் ஈடுபடுங்கள் என்கின்றனர் பேராசிரியர்கள். உண்மையில், குறிப்பிட்ட காலத்தில் ஆய்வு மாணவர்கள் மனதளவில் சோர்ந்துவிடுகிறார்கள்.”

தேவை அன்பான வழிகாட்டல்

“பேராசிரியர்களின் அன்பான பேச்சும் கனிவான வழிகாட்டலும் சுமையைப் பெருமளவு குறைத்துவிடும். நல்ல அறிவுக் கூர்மையும் திறமையும் வாய்ந்த அறிஞர்கள் பலருக்கு அவர்களுடைய பேராசிரியர்களும் வழிகாட்டிகளும் பக்கபலமாக இருந்திருக்கின்றனர். அதுதான் எல்லா ஆய்வு மாணவர்களுக்கும் தேவைப் படுகிறது” என்று வலியுறுத்துகிறார் ஷெய்ன்மேன்.
‘சயன்ஸ்’ என்ற பத்திரிகையில், கேரி அர்னால்டு என்பவர் இதுதொடர்பாக விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். ஆய்வு மாணவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல்கள், தன்னிரக்க மனநிலை, குழப்பங்கள் ஆகியவற்றைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். ஷெய்ன் அதைத் தனது வாதத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்.

“ஆய்வு மாணவர்கள், பட்ட வகுப்பு மாணவர்களைப் போன்றவர்கள் அல்ல. அவர்களது ஆய்வுக்களம் விரிவானது, நீண்ட காலத்துக்கானது. பல ஆய்வு மாணவர்கள் திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வாழ்கின்றனர். அந்தக் குடும்பம் ஆய்வாளரின் வருமானத்தையே நம்பியிருக்கிறது. தங்களுடைய ஆய்வு, பயிற்சி ஆகியவற்றுக்கு ஆகும் செலவை அவர்களே ஏற்க வேண்டும். அத்துடன் ஆய்வு தொடர்பான கட்டுரைகளைத் தயாரித்து அவ்வப்போது அவற்றுக்குண்டான பத்திரிகைகளில் வெளிவரச் செய்ய வேண்டும். ஆய்வுக் கட்டுரையைத் தயாரிக்கவே நிறையச் செலவாகும். இவற்றையெல்லாம் அவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் அர்னால்ட்.

ஏழை படும் பாடு!

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் ஆய்வில் ஈடுபடும்போது அவர்கள் மிக அதிகமான துயரங்களைச் சந்திக்க நேர்கிறது. சர்கோசோனா என்ற மாணவி இது தொடர்பாக எழுதியதை ஷெய்ன்மேன் சுட்டிக்காட்டுகிறார். ஏழைகள் மட்டுமல்ல, ஓரளவுக்கு வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட இப்போது இந்தத் துயரம் ஏற்பட்டுவருகிறது. ஆய்வு மாணவர்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடன் பெற்றுச் செலவுசெய்கிறார்கள். சிலர் வங்கிகள் மூலமும் கடன் அட்டைகள் வாயிலாகவும் கடன் வாங்கி பெரும் கடனில் மூழ்குகிறார்கள். ஆய்வுக்குப் பல்லாயிரம் டாலர்கள் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் படித்து, முனைவர் பட்டம் வாங்கிய பிறகு, கைநிறையச் சம்பளம் கிடைப்பதும் நிச்சயமில்லை. நிரந்தர வேலை கிடைக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. கல்விக்கூடங்களில் இப்போதெல்லாம் வேலைவாய்ப்பு என்பது பிரமிடு எனப்படும் முக்கோண வடிவில் இருக்கிறது.

தொடக்கக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, கல்லூரி ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் அந்த முக்கோணத்தைப் போலவே அடிமட்டத்தில் அகலமாகவும் நிறையவும் இருக்கிறது. போகப்போகக் குறுகிக்கொண்டே போகிறது. முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகள் சில இடங்களில்தான். அந்த இடத்துக்குப் போட்டியாளர்களோ பலர். எனவேதான் குறைந்த ஊதியமும் நிச்சயமற்ற நிலையும் நீடிக்கின்றன. இந்தக் காரணங்களால்தான் இப்போது முனைவர் பட்ட மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

அமண்டா டிராட் என்ற மாணவி வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக உள்ளார். அவருக்கும் இந்த மன அழுத்தம் நிறைய இருக்கிறது. அவர் வாரத்துக்கு ஒரு முறை தன்னுடைய உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து ஆய்வில் தனக்குக் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட சோதனைகள், பிரச்சினைகள், சிக்கல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்கிறார்.
அவர்கள் முடிந்தால் அவற்றுக்குத் தீர்வுகளைச் சொல்கின்றனர். இல்லையென்றாலும் ஆறுதல் கூறி, ஊக்கப்படுத்துகின்றனர். ஆய்வு மாணவர்கள் தங்கள் துறையைச் சேர்ந்த பேராசிரியர்களிடம் எதிர்பார்ப்பதும் இதைத்தானே!

© தி நியூயார்க் டைம்ஸ்,
- தமிழில்: சாரி.


நன்றி :- தி இந்து

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment