ஃபிளிப்கார்ட் அறிவித்த 'பிக் பில்லியன் டே' தள்ளுபடி விளம்பரத்தால் ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் அளித்த புகார் குறித்து பரிசீலிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மின் வணிக இணையதளமான ஃபிளிப்கார்ட் கடந்த திங்கட்கிழமை 'பிக் பில்லியன் டே' என்ற மாபெரும் தள்ளுபடி அளிப்பதாக அதிரடியான விளம்பரங்களை அளித்தன. இந்த அறிவிப்பால் இணையவாசிகள், எதிர்ப்பார்ப்புடன் அன்று காலை முதலே ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் பொருட்களை வாங்கும் எண்ணத்துடன் செயல்பட்டனர். ஒரே சமயத்தில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் ஃபிளிப்கார்ட் தளம் முடங்கியது.


பொருட்களைத் தேர்வு செய்த சிலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. பொருட்களுக்கான டெலிவரி சேவை உங்கள் பகுதிக்கு இல்லை, விற்று தீர்ந்துவிட்டது என பலருக்கும் ஏமாற்றமான பதில்கள் கிடைத்தன.


இதனால் ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் நிறுவனம் முறையற்ற ரீதியில் விளம்பரம் செய்து ஏமாற்றியதாக மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இணையதள வணிக நிறுவனங்கள் தங்களது விற்பனை நோக்கத்துக்காக கவர்ச்சியான விளம்பரங்களை செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாகவும் புகார்கள் அமைச்சகத்துக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "அமைச்சகத்துக்கு தொடர்ந்து இந்த விவகாரம் மீது புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சட்ட ரீதியான நடவடிக்கை வேண்டும் என்று சில ஆலோசனைகள் வருகின்றன. இவை அனைத்து குறித்தும் நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம்.


வர்த்தக நோக்கத்தில் வரும் விளம்பரங்கள் தொடர்பாக கொள்கை மாற்றம் தேவையா? என்பது குறித்தும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அதே போல வெளிநாட்டு வர்த்தக கொள்கைகளிலும் விரைவில் மாற்றம் கொண்டு வர கவனம் செலுத்தி வருகிறோம். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என்றார்.


இதனிடையே திங்கட்கிழமை 'பிக் பில்லியன் டே'-வின் முடிவில் 600 கோடி ரூபாய் மதிப்புக்கு வர்த்தகம் நடைபெற்றதாக அறிவித்த 'ஃபிளிப்கார்ட் நிறுவனம், வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள அதிருப்தியை அடுத்து 'ஃபிளிப்கார்ட் நிறுவனர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


அந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் சச்சின் பன்சால் மற்றும் பிண்ணி பன்சால் இது தொடர்பாக கூறும்போது, "எங்கள் நிறுவத்தின் அறிவிப்பால், நிஜமாகவே அந்த தினம் பிக் பில்லியன் டேவாக இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியாதது வருத்தம் அளிக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்காததும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதுக்கும் மனதார மன்னிப்பு கோருகிறோம்" என்று தெரிவித்தது.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 'பிக் பில்லியன் டே' தள்ளுபடி விவகாரத்தில், வாடிக்கையாளர்கள் அளித்துள்ள புகார்கள் மீது மத்திய வர்த்தக அமைச்சகத்தின் நடவடிக்கை...
 அவசியமே
 அவசியம் இல்லை
 நோட்டா

நன்றி :- தி இந்து