பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 2, 2014

சித்தராரூட நொண்டிச் சிந்து - இயற்றியவர் பெயர் தெரியவில்லைஅத்திமா முகவன் செய்ய வடியினைக் கமலம் போற்றிச்
சித்தரா ரூடம் தன்னில் செப்பிய பொருளா ராய்ந்து
சுத்தமா யெவர்க்கும் தோன்றச் சுருக்கமாய் நொண்டிச்சிந்தாய்
வித்தகர் அருளினாலே தமிழினால் விளம்பல் உற்றேன்

சித்தராரூடம் - சித்தர் எழுதிய ஆருடம் என்னும் நூல் (விஷவாகடம்)
அத்திமாமுகவன் - யானைமுகனாம் விநாயகர்
வித்தகர் - ஞானமுடையோர்

குமார நாயகன் துணை

தெட்சிணாமூர்த்தி கடாட்சம் முன்னிற்க வேணும்

கடாட்சம் - கடைக்கண் நோக்கு

திருமருதூர் வளரும் நாகலிங்கர்
சீர்பாதக் கமலமென் சிந்தையுள் வைத்து
மருவுசித்த ராரூடப் பொருளிதனை
வகுத்துச் சொல்லுறேனிந்த மகிலத்தில்
புண்டரீகத் திலுறை வோன்படைத்ததிற்
பொல்லாத விஷச்சந்து எல்லாமுமே
விண்டுரைக்கக் கேளுமினி நல்ல பாம்பு
விரியன்வழலை கொம்பேறி மூக்கன்
சாணார மூர்க்கன் புடையன் மண்டலி
சவளக்காரை மண்ணுளி சாரை
5
1 - 5.
திருமருதூர் - ஆசிரியரின் ஊராகலாம்
மகிதலம் - உலகம்; புண்டரீகம் - தாமரை
விண்டு - விளக்கமாக;விரியன், வழலை, கொம்பேறி மூக்கன், சாணார மூர்க்கன்,
புடையன், மண்டலி, மண்ணுளி, சாரை - பாம்பு வகைகள்

வாணாளை வாட்டும் செய்யான் இருதலை
மேலான சிலந்திப் புலிமுகப் பூச்சி
தேள்புள்ளி வண்டு பூரம் பச்சோந்தி
செவ்வட்டைபேய் நரிநாய் சோர்வெலி
வாள்பல்லுப் பூனை புலிபிங்கவங்கம்
வனத்துத்தவளை யட்டை வாசிமுதலை
அரணை நட்டுவக் காலி முதலியவை
அல்லாது சீவசெந்துவும் அனேகம் உண்டாம்
உரகத்தின் போநிறமும் சாதியும்
ஊரும் மணமும் மற்றுஉறைவிடமும்
10
6 - 10.
புள்ளி - பல்லி; பூரம் - பூரான்; அரனை - பாம்பரனை எனப்படும்
நட்டுவக்காலி - ஒரு நச்சுயிர் - நண்டு வாய்க்காலி என்ப
சீவசெந்து - வாழும் விஷ உயிர்கள்; உரகம் - பாம்பு

படமெடுத்தாடும் குறியும், முட்டை யிட்டுப்
பருவமறிந்து பொரித்தூரும் பரிசும் சில்
விடமுறு தங்கக் குறியும் கடித்திடும்
விடமும் கடித்தகடிமீளாததும்
கால்கடி அடக்ககுறி வேகக் குறி
கருதிய தூதரின் கண் குறிப்பும்
சீலமுள்ள மணி மந்திரத்தால் கருடதியானத்தால்
மருந்தினால் தீர்க்குஞ் செயலும்
குருமலரடி வணங்கி வகை யாய்க்
கூறுகி றெனிந்த குவலயத்தில்
15
11-15.
பரிசு - விதம்; தந்தம் - பல்
குரு - நூலாசிரியரின் ஆசிரியராகிய சித்தர்
குவலயம் - உலகம்

மருமலர்ப் பொருட்டுறைவோன் பயன்றருள்
மகவென வந்துதித்த மாதவத்தினோன்
காசிபன் மனைவிய ரில்மிக்கான கத்துரு
வயிற் றுதித்த கட்செவிகளைப்
பேசிடில் பேரனந்தன் வாசுகி பிலத்த
தக்கன் கார்கோடன் பற்பன்
மகாபற்பன் சங்கு பாலன் குளிகன் இம்
மாநாகம் எட்டுப் பேர்தானாதியிதில்

பாம்பின் சாதி

தேசுகட் செவி அனந்தன் குளிகனும்
செகத்தில் வேதியனென்று வகுத்தனரே
20
16 - 20
மருமலர்ப் பொருட்டுறைவோன் - பிரமன்
கத்துரு - காசிப முனிவரின் மனைவி. நாகங்களின் தாய்.
104 பிள்ளைகளையும் ஒரு பெண்ணையும் பெற்றவள்.
கட்செவி - பாம்பு
அனந்தன், வாசுகி, தக்ஷன், கார்க்கோடன், பத்மன், மகாபற்பன்,
சங்குபாலன், குளிகன் - கத்துரு பெற்ற எட்டுப் பாம்புகள்
நாகர் - பாம்புச் சாதியினர்; வேதியன் - அந்தணன்

வாசுகி சங்குபாலன் இதுரெண்டு மன்னவனாகு
மென்று சொன்னார் முன்னோர்
தேசுறு தற்கன் மகாபற்பன் ............
தே......... வணிகனென்று மொழிந்தனரே
சூத்திரன் கார்க்கோடன் கனபற்பன் என்று
சொன்னார்களிவரில் முன்சொன்ன பாம்பு
மூத்திடும் ஆணாகும் பின்னாக மொழிந்த
பெண்பாம்பென்று மொழிந்தனரே

பாம்பின் உணவு,இரை எடுக்கும் நாள்

ஆதித்த வாரம் அனந்தன் வாசுகி
அடுத்த திங்கட்கிழமைக்கு இரை எடுக்கும்
25
21 - 25
ஆதித்தவாரம் - ஞாயிற்றுக்கிழமை; இரை - உணவு

போதித்த செவ்வாய் தக்கன் கார்கோடன்
புதன்கிழமை அன்றைக்கு இரைஎடுக்கும்
விடங்கொண்ட துளையெயிற்றுப் பற்பன்
வியாழக்கிழமை தனில் இரைஎடுக்கும்
படர்ந்துசென்று இரை எடுக்கும் தேடிமகா
பற்பராசன் வெள்ளிக் கிழமைதனில்
கூறுசனிக் கிழமை பகல் சங்குபாலன்
குளிகன் இராக்காலம் இரைஎடுக்கும்
பூநில மறிந்த பாப்பான் வாயுவும்
பூமண மிரண்டும் பொசித்திருக்கும்
30
26 - 30
போதித்த - கூறப்பெற்ற
பொசித்திருக்கும் - உண்டிருக்கும்

அரசன் அருகங் கிழங்கு வண்டும் எடுத்தருந்த
வளைதனில் சென்றிருந் திடுமே
சூத்திரன் மீன்தவளை தண்ணீர்த்
துறைதனில் சென்றருந்தும்

இருக்குமிடம் ஆடும் குறி

சாத்திரம் சொன்னபடியே நாலு வகைச்
சாதியிருக்கு மிடந்தனைக் கேளும்
வேதியன் கோவிலிலே மரத்தினில் வேந்தன்
மனையில் செட்டி சூத்திரன் புற்றில்
நீதியாய் வாழ்ந்திருக்கும் நால்வரும்
நின்றாடும் குறிதனை நிகழ்த்துகின்றேன்
35
31 - 35
அருகங்கிழங்கு - அருகம்புல்லின் கிழங்கு
சாத்திரம் - பாம்பு சாஸ்திரம்
நாலுவகைச்சாதி - அநதணர், அரசர், வணிகர்,சூத்திரர்
நின்றாடும் குறி - பாம்பு ஆடும் திறம்

அண்ணாந்து பார்த்தாடும் வேதியன் அரசன்
செவ்வே பார்த்தாடி நிற்கும்
கண்ணாலே தெற்கும் வடக்கும் திசை
காட்டிக்கொண்டு நின்றாடும் செட்டிப்பாம்பு
வெள்ளாளன் பூமி தன்னையே பார்த்தாடும்
வேத முறைப்படி தப்பாதிதுவே

படத்தின் குறி, நிறம், மணம்

முள்ளாகும் பாம்பின்படம் தனில் வைத்த
முத்திரையைச் சொல்லுகின்றேன் சித்திரமாக
பார்ப்பான் படத்தில் சங்கு மன்னவன்
படத்தினில் சக்கரம் பதித்திருக்கும்
40
36 - 40
செவ்வே பார்த்தாடி - நேராகப் பார்த்தாடும்
கண்ணாலே ... செட்டிப்பாம்பு - வணிகப் பாம்பு தன் கண்களை
தெற்கும் வடக்கும் நோக்கியபடி ஆடும்
வெள்ளாளன் - சூத்திரன்; சங்கு - சங்கு போன்ற குறி

காப்பான வில்லு வணிகன் படத்தினில்
காரளன் படத்திற்புள்ளடி யிருக்கும்
*(பூசுரன் ரெத்த நிறமாம் புரவலன்
பொன்னிறம் செட்டி மதியின் நிறமாம்
மாசில்லாச் சூத்திரநிறந் தீட்டிய
மைநிற மாமிது மெய்யாகுமே)
அந்தணன் நாவிமணம் யிறையவர்க்கு
ஆகில் மலர்தாழை மணமாகும்
வந்திடும் வைசியன் மணம் பாதிரி பூமணம்
சூத்திரன் மனமிலுப்பையின்பூச்
45
41 - 45
வில்லு - வில் போன்ற குறி; காராளன் - வேளாளர்
புள்ளடி - பறவையின் அடிபோன்ற குறி
*இவை பாண்டிச்சேரி ஏட்டுப் பிரதியில் கண்டவை
பூசுரன் - அந்தணன்; ரெத்த - இரத்தத்தின் சிகப்பு நிறம்
புரவலன் - அரசன்; செட்டி - வணிகன்
மைநிறம் - கருப்பு நிறம்; நாவி - புனுகு மணம்
வைசிகன் - வணிகன்

முட்டையிட்டுப் பொரித்திடல்

சாதியிந்த வகைநாலும் ஆணும் பெண்ணும்
தழுவிப் பிணைந்து கர்ப்பம் தரித்தபின்பு
நீதியாய் முட்டையிட்டுப் பொரித்திடும் 
நெறியையும் சொல்லுகிறேன் அறியவுமே
காற்றுறு ஆடிமாதம் ஆணும் பெண்ணும்
கலந்து புணர்ந்துடலில் கர்ப்பமுற்று
தோற்றிய கார்த்திகையினில் கருமுற்றிச்
சூல்உளைந்து ஈனுமன்று தொட்டேளுநாள்
இருநூற்று நாற்பத் தெட்டுமுட்டை யிட்டும்
இருநூற்றிருபத்தெட்டு மேழு நாளில்
50
46 - 50
பிணைந்து - கூடி; காற்றுறும் - காற்று மிகுந்த
கார்த்திகை - கார்த்திகை மாதம்; உளைந்து - வருந்தி
தொட்டேளு நாள் - தொட்டு ஏழு நாள்

பருகிடும் நாலுமுட்டை சாமுட்டை
பதினாறு முட்டை நல்ல பக்குவத்திலே
ஒருமித்திருபத் தேழாம் நாளில்
உச்சிதமாகப் பொரிந்தூர்ந்து திரியும்

விஷமேறும் குறி

நாலாறு காலும் உண்டாய்த் தோன்றிய
நாளேழு நாளினில் நஞ்சு வேண்டி
மேலேறு மாதித்தனைப் பார்த்தாடும்
விளங்கு மேல்வாயின் பல்லு நான்கிலும்
கொடுவிடம் வந்துதிக்கும் பால் சுரக்கும்
கூறுபோல் ஊறுமென்று மாறாமலே
55
51 - 55
சாமுட்டை - கெட்டுபோன முட்டை
உச்சிதமாய் - தகுதியாய்; ஆதித்தன் - சூரியன்
பால்சுரக்கும் கூறு - பால்சுரக்கும் மடிபோல்

கடுவிடம் நாலெயிற்றுக்கும் பேர் காளி
காளாத்திரியி யமனி மதூதன்
மேல்வாய் அலகு தன்னில் அரவுக்கு 
விளக்கமாய் நாலுபல்லு முளைத்திருக்கும்
நாலுபல்லுக்குந் துளையிருக்கும் கடியுறில்
நச்சுப்பல் துளைவழியே நஞ்சுகழன்றுவந்து
கடிவாயினிறங்கித் தொண்ணூற் றெட்டு
மாத்திரை நின்றுடலின் மண்டியேறும்
அந்தமுள்ள படத்துரகம் தோன்றினால்
அறுபதில் தோலுரிக்கு மாறாமதியில்
60
56 - 60
காளி,காளத்திரி, யமன், யமன்தூதன் - பற்களின் பெயர்கள்
வாயலகு - மேல்வாய்
தொண்ணூற்றெட்டு மாத்திரை - 98 நொடி
படத்துரகம் - பாம்புப் படம்

குதித்திடும் விடமெயிற்றி லிதுரெண்டும்
கொண்டவா ளரவுக்குக் கண்டமென்பரால்

கடிவாயின் குறி

குதித்திடு மெயிற்றரவம் பல்லுத் தைக்கும்
கடிவாயின் குறியினைக் கழறுகின்றேன்
காளியென்னும் பல்லுத் தைத்தால் புள்ளடிபோல்
கடிவாயின் குறியினில் பனீர்போல் வடிவாகும்
மீளாத காளாத்ரி தைத்த வாயில்
விளங்கு முக்கோண மஞ்சள்நீர் பொசியும்
கோதாய் நமன்தோட்டிப் பல்லுத் தைத்தால்
கூர்முனையிற் செந்நீர் பாயும்
65
61 - 65
வடிவாகும் - வடியும்; பொசியும் - வடியும்
தோட்டிப்பல் - கோடரி போன்ற பல்

தூதனென்ற பல்லுத் தைத்தால் வில்போன்ற
சுவடில்கழு நீர்வந் துவட்டெடுக்கும்
பசியினில் பயத்தில் நொந்தால் கோபத்தால்
பல்லில் விடமிகுத்தால் மெல்ல மிதித்தால்
இசையுறு தேவர் முனிவர் காலனிவர்
ஏவலினால் வினைத் தாவலினால்
செய்தநன்றி குன்றின பேரைப் பூருவ 
சென்மப் பகையினவரை வன்மமுள்ளோரைப்
பையரவம் வந்து கடிக்கும் இதிலொரு
பல்பட்டால் விஷம்தோலைப் பற்றியேறும்
70
66 - 70
வட்டெடுக்கும் - வடியும்; நொந்தால் - பாம்பு வருந்தினால்
மெல்ல மிதித்தால் - மனிதர் மிதித்தால்
வினை தாவலினால் - வினை வயத்தால்
பூர்வசென்மம் - முற்பிறப்பு; வன்மம் - வைராக்கியம்
பையரவம் - நச்சுப்பையினை உடைய பாம்பு

பல்லுரெண்டும் பட்டால் விசமாங் கிசத்தை
பற்றியேறும் மூன்றுபல் பட்டால் விஷம்
வல்யெலும்பைப் பற்றியேறும் நாலு பல்லால்
வகிர்ந்தால் மூளை புகுந்தேறும்
கால்கடி யொருபல்பட்டால் இரண்டு பல்லாய்க்
கடித்தால் கடியரைக் கடியாமே
மேல்பல்லு மூன்றும் பட்டால் கடிபட்ட
விடமுக்கால் கடியென்றிட லாமே
முளைத்தபல் நாலும்பட்டால் அந்தக்கடி
முழுக்கடியா மென்று வழுத்துவரே
75
71 - 75
மாங்கிசம் - மாமிசம், சதை; வகிர்ந்தால் - பல்லால் கீறினால்

துளைப்பல்லில் ஒருபல் பட்டால் அந்தக்கடி
துசங்கட்டி தியானிக்க விடந்தீரும்
இரண்டுபல்பட் டவிடத்தை மணிபதித் தேற்கு
மந்திரத்தாலும் தீர்க்க லாமே
முரண்டுமூன்று பல்பட்டால் அந்தக் கடிகை
மூலிகை கலிக்கம் நசியத்தால் தீரும்
அரவின்பல்நாலும் பட்டால் மணிமந்திர
அவுஷதம் தெய்வச் செயலால் தீர்க்கவேணும்
இரவினில் பாம்பு கடித்தால் அந்தக்கடி
மீளாத குறியிடம் விளம்புகிறேன்
80
76 - 80
துசங்கட்டி - துவசங்கட்டி, கொடிகட்டி
(உறுதியாக நின்று என்பதும் பொருள்)
கைமூலிகை - மூலிகை மருந்து
கலிக்கம் - கண்ணுக்கிடு மருந்து
நசியம் - மூக்கில் இடும் மருந்து
அவுஷதம் - அவுடதம், மருந்து வகை

உள்ளங்கால் உள்ளங்கை நெற்றி மார்பு
கழுத்து உதடுமுலை மூக்குபுருவம் கொப்புள்
தெள்ளுநாசிச் சந்தும் குதிக்கால் செவிபுறத்
தோடி ஆலமரத் தூரடியில்
புன்னைபுளி மூங்கிலரசில் நாணலில்
புற்றுக் கிணற்றில் புறமடையில்
பின்னமுள்ள பரன்கோவில் பாழ்
வீட்டில் பிணமிடு நிலத்தில்
நந்தவனம் புத்துமடத்தில் ஏரிக்கரை
நதிக்கரை சுனைக்கரை யாக சாலையில்
85
81 - 85
நாசிச் சந்து - மூக்குத்துவாரம்
புன்னை, புளி, மூங்கில், அரசு - மரவகைகள்
பிணமிடு நிலம் - சுடுகாடு; புத்துமடம் - புற்றுள்ள இடம்

அந்திசந்தி முச்சந்தியில் உறக்கத்தில்
ஐயன் பிடாரி துர்க்கை ஆலயத்தில்
மாயவரில் பாம்பு கடித்தால் தீராத
மரணநாள் சொல்லுகிறேன் பரணிமகம்
ஆயிலியம் திருவோணம் மூலம் கார்த்திகை
ஆதிரை சுளகு சித்திரை சோதி
சென்ம நாள்அனு சென்மநாள் திரிசென்ம
சேர்ந்திடுநாள் வதமவை நாசியங்
கன்மமும் நவமி சஷ்டி குளிகனில்
கடித்திடில் அந்தக் கடிநொடிக்குள் கொல்லும்
90
86 - 90
மாயவரில் - திருமால் கோட்டம்
பரணி, மகம், ஆயில்யம், திருவோணம், மூலம், கார்த்திகை,
ஆதிரை, சுளகு, சித்திரை - நட்சத்திரங்கள
சுளகு - விசாகநட்சத்திரம்; சோதி - நட்சத்திரம்
குளிகன் - குளிகை நேரம்

தானோடிக் கிடந்திடனும் அந்தக் கடி
தப்பாமல் கொல்லுமென்று செப்பலாமே
கடித்தவாய் தடிக்கில் கொல்லும்-வீங்கியே
கடுத்தெரிகினும் கொல்லும் கண்டம் சொரித்தும்
குடித்த மருந்தெடுக்கில் கொல்லும்-கடித்தவாய்
குமுறினும் செங்குருதி பாயினும் கொல்லும்
விடங்குதித் தொழுகில் கொல்லும்-நாவரண்டு
விழிசிவக்கினும் கொல்லும் மெய் நடிக்கினும்
படம்கொண்ட பொறியரவம் நாவெயிறும்
பதியப்படினும் கொல்லும் பல்லும் உகிரும்
95
91- 95
தடிக்கில் - வீங்கினால்; கண்டம் - கழுத்து
குடித்த மருந்தெடுத்தல் - வாந்தி எடுத்தல்
குமுறினும் - வெந்தால்; மெய்நடிக்கினும் - மெய் நடுங்குதல்
எயிறு - பல்; உகிர் - நகம்

கறுத்திடில் கொல்லும் உரகம் சீறியே
கடித்தவுடன் மலநீர் விடுக்கிற் கொல்லும்
விறைத்திடில் கைகால்விரல் நிமர்ந்திரு
விழி சொருகினும் கொல்லுமென்னலாமே

விஷத்தின் குணம்

நச்சரவில் ஆண் கடித்தால் மேல்நோக்கும்
நயனம்பெண் பாம்பெனில் கீழ்நோக்குமே
அச்சமில்லாமல் அடக்கில் வேர்வை மிகும்
அலிப்பாம்பெனில் விடம்கலிப் பாகும்
சூலாகி வயிறுளையும் முட்டையிட்ட
துட்டனெனில் நெட்டைவிழி முட்டை சிவக்கும்
100
96 - 100
நயனம் - கண்
அலிப்பாம்பு - ஆண், பெண் இரண்டுமல்லாத பாம்பு
கலித்தல் - மிகுதல்

மேலெயிற்றுக் காளி கடித்தால் வலதுகண்
வேதனை செய்யுமகில் பாம்புகடித்தால்
கடித்தவாய் வீக்கம் காணும் வேகமாயிளங்
கன்னிக் கிடதுகண் வேதனை காணும்
துடித்திடும் குட்டிப் பாம்பு கடித்திடில்
சோர்வு மயக்கமுடன் பாரில்வீழ்த்தும்
கருநாகம் கடித்ததென்றால் உடனிரு
காதும் செவிடாமென் றோதினாரே
ஒருநாகத் தடைவிதுவே பலவிடத்து
உரகங்கள் சரித்திர முரை செய்கிறேன்
105
101 - 105
காளி - பல்லின் பெயர்

முரட்டுப் பல்பொறி விரியன் சூல் கொண்டு
முதுகுதனில் வெடித்துக் குஞ்சு பொரித்தால்
கரட்டோணான் தேள்பூரம் நட்டுவாக்
காலிசிலந்தி புலிமுகப் பூச்சி
செய்யானுடன் பொறிவண்டு முதற்பல
சீவசந்துகள் அதிலே பிறக்கும்
மெய்யான பெருவிரியன் கடித்திடில்
வீங்கிக் கடுத்தெரிவு மீறிக்குருதி
வடிந்திடும் கடிவாயில் கண்ணுறங்கும்
மயங்கி உடல்வெதும்பித் தியக்கிடுமே
110
106 - 110
பொறிவண்டு - புள்ளியுடைய வண்டு
கடுத்தெரிவு - கடுத்தலும், எரிச்சலும்
இயக்கிடும் - இயங்குதல்

கடித்திடுமே ரத்தவெறியன் பல்லுபடக்
கடித்திடில் வாயிடம் காணும்குருதி
கற்றளி விரியன் கடித்திடில் வயிற்றினில்
காய்ந்தும் வயிற்றை வலித்திருந்து கொல்லும்
மற்றுமுள்ள மூவிரியனும் கடித்திடில் 
வலித்துக் கடுத்தெரிந்து வீங்கும் கடிவாய்
வழலைக்கு வாய் வெளுத்தும் - கடிவாயில்
வடியும் ரத்தம்; கரு வழலைக் கெனில்
அழலென மேனிவெதும்பி வேர்வை மிகுந்து
அகங்கையும் காலும் சிவந்தைந் திரண்டும்
115
111 - 115
காய்ந்தும் - வெந்தும்
வழலை - பாம்பு
அழலென - தீயென
ஐந்திரண்டும் - பத்து விரல்களும்

மார்பினை அடைத்துக் கொல்லும் செவ்விரத்த
மண்டலிக் கெனில்மயிர்க் கால் வழியே
தாரைவிட் டோடும் குருதி சீதளம்
தானா மண்டலிக் குடல்குளிர்ந் தாட்டி
ஒழுகிடும் வேர்வைநீர் மூர்க்கனுக்குத் தான்
முதுகுகடி தடமும் நொந்து
பழகிய வாயும் கழுத்தும் திருகியே 
பகரும் குரலும் நலிந்துடல் உதறும்
சுற்றுமயக் காராகில் இரு கண்ணும்
சுழன்றடிக் கடிமதி மயக்கிடுமே
120
116 - 120
இரத்தமண்டலி - பாம்பு
சீதளம் - குளிர்ச்சி
கடிதடம் - மறைவிடம்
மதி மயக்கிடும் - அறிவு மயங்கிடும் 5

பற்றுமுறுக் காராகில் உடல் முற்றும்
பதறிமுறுகித் திருகிடும் பூரம்
நின்றூதும் உகிர் கருக்கும் தேளுக்கு
நெறிகட்டிக் கடுத்தெரிக்கும் வேர்க்கும்
என்றார் நட்டுவாக் காலி கடிக்கில் 
எரித்துக் கடுத்துக் குமுறிடும் வீங்கும்
செய்யானேல் பற்பட்ட கடிவாய் வீங்கியே
தேளின் சதமடங்கோர் நாளும் கடுக்கும்
பொய்யாஞ் சோர்அரவுக்குக் காயத்தில்
புள்ளிபோல் எங்கும் தடித்திடும் சிவப்பாய்
125
121 - 125
பூரம் - பூரான்; உகிர் - நகம்
கடுத்தெரிக்கும் - கடுத்து எரியும்
குமுறிடும் - வெந்திடும்; சதம் - நூறு
பொய்யாஞ் சோர்அரவு - பொய்யான் என்னும் விஷப்பாம்பு

கறுத்திடும் சோர்வுக்குத் தேக முற்றும்
கறுத்துத் தடித்துப் படர்ந்திடு மதர்க்கும்
ஒறுத்திடும் சிலந்தியெனில் கடிவாயில் 
ஒருபொழு திருபொழு தெரித்த ழற்றும்
வண்டுகடிக்(கு) உடல்முழுதும் சில நாளில்
வட்டமிட்டுத் தடித்திட்டுப் படர்ந்தரிக்கும்
தண்டிய செவ் வட்டைகடித்தால் கடித்தவாய்
தடித்துச் சிவப்பேறி மதர்த் திருக்கும்
இன்னமொரு கோடியுண்டாம் அவையெல்லாம்
எடுத்துரைத் தோதுவதெவரால் முடியும்
130
126 - 130
ஒறுத்திடும் - வதைக்கும்; மதர்த்திருக்கும் - உணர்வற்றிருக்கும்

பாம்பின் வயது

பன்னகங்கள் வயதினையும் செயித்திடும்
பகையும் பிரிவினையும் பகருகிறேன்
பாப்பானுக் காயிரத்தெட்டுப் பாராளும்
பார்த்திபர்க்கு எண்ணூறு மாதம் வயது
வாய்ப்பான பதியார்க் கைந்நூறாம் என்று
வகுத்தனர் சூத்திரர்க்கு முன்னூறாம் என்றார்
இருதலை மயிணன் செந்நாய் மயக்கோடி
எருத்தின் குளம்பு மின்னலடி கீரி
கருமயில் கரடிபன்றி செம்போத்துக்
கெருடன் முதலையன லாந்தை, கூகை
135
131 - 135
பன்னகம் - பாம்பு; பகருகிறேன் - கூறுகிறேன்
பதியார் - வணிகர்
இருதலை மணியன் - மணி பொருந்திய இரண்டு தலைகளை
உடையதென்று சொல்லப்பெறும் பாம்பு
செம்பொத்து - ஒரு வகைப் பறவை; கூகை - கோட்டான்

செயலுள்ள மான்குளம்பு வேழ முதல்
செப்பியசத் துருவுக்குத் தப்பிப் பிழைத்தால்
வயதுநூற் றிருபத்துக்கும் சாகாமல் 
மண்மிசை வாழ்ந்திருக்கும் உண்மை இதுவே
மண்மீது நூற்றிருபது பருவம் வாழ்ந்து
பிற(கு) உடல் தேய்ந்து குறுகி
ஒன்றான படம் சிறியதாய்ப் பறக்கும்போ
தந்தச் சிகையில் மணியொன்று தோற்றும்
தோற்றிய நாகமெட்டும் புவி விட்டுத்
தொடரும் வனத்தினும் விண்ணாடர் வெற்பினும்
140
136 - 140
வேழம் - யானை; சத்துரு - பகை உயிர்கள்
நூற்றிருபது பருவம் - நூற்றிருபது ஆண்டு
சிகை - தலை உச்சி; மணி - நாகரெத்தினம்
விண்ணாடர் வெற்பு - தேவருலகம்

போற்றிய பனிகோடிக் காவினுள்
புரவலர் போலிருந்தரசு செய்யும்
மானாகமென்னும் பேரரவங் கெருடற்கு
மாத்திரம் பயப்படும் நேத்திரமாக
தானாலு பல்லில் விடமும் இருகண்ணில்
கரித்திடும் பார்த்தவுடனெ ரித்திடுமே
பாம்பின் ராசாளி என்றும் புகலுவர்
பருவநூற் றிருபது சென்றதுபோக
தான்பெற்ற வயது குறையும் இருந்து பின்
சாலோக பதத்து மேலாகுமே
145
141 - 145
பனிகோடிக்கா - பாம்பு வாழும் காடு;
கெருடற்கு - கருடனுக்கு
சாலோகபதம் - இறைவன் உலகில் வாழும் பேறு

தூதன் வரும் குறிப்பு

தூதன் வந்துநிற்கும் வடிவும் ஆருடம்
சொல்லும்குறி தொடுகுறி பல்லின் குறியும்
நீதியுடன் சொல்லுகிறேன் ராகுவின்
நிலையில் பதறிவந்து நின்று சொல்லினும்
செய்யபூச் சூடிவரினும் கருந்துகில்
செய்யதுகில் புனைந்து பையவரினும்
கையில்தடி யூன்றிவரினும் கெடையா
கத்திகயிறு பிடித்துச் சுத்தி வரினும்
கண்ணில் நீர்வார்ந்து நிற்கினும் வாய்குழறி
கையை விரித்து நின்று மெய்பதறி
150
146 - 150
தூதன் - செய்தி கொணர்பவன்; ராகு - பாம்பு
செய்ய - செம்மை; கயிறு - பாசக்கயிறு

விண்ணோக்கிப் பார்த்து நிற்கினும்-தூணினும்
விறகினும் சாய்ந்துநின்று மெய்புகலினும்
மண்ணினைக் கால்கொண்டு கீறினும் தரையில்கை
வைத்துவரினும் உடைசுத்தி வரினும்
எண்ணெய் இட்டுவரினும் பாரில் விழுந்து
எழுந்து புலம்பித் தொழுதேங்கி வரினும்
பாம்பின்பேர் முன்பு சொல்லினும் பாம்பின்பல்
பட்டவன்பேர் பின்பு கண்டு நெட்டுயிர்ப்பினும்
சோம்புடன் கொட்டாவி விடினும் மார்புசந்தில்
சொறியினும் தன்மயிரைத் தூற்றிநிற்கினும்
155
151-155
விறகு-மரம்; எண்ணெய் இட்டு-எண்ணெய் தேய்த்து
தூற்றி-உதறி

வந்தவன் உயர்ந்து நிற்கினும் நோயாளன்
வரினும் மயிர்களைந்தோன் வந்து நிற்கினும்
அந்தகன் கைகால் தரிபட்டோன் மூக்குக்
காதறுபட்டோன் ஒற்றை விழிமறைபட்டோன்
இங்கிவர்கள் வந்து சொல்லினும் பூனைக்கண்
இயம்பினும் கால்கடி யென்று சொல்லலாமே
பாங்குடன் முன்வந்த தூதன் ஆருடம்
பதினாறு திசைக்கும் யான் பகருகின்றேன்
அருக்கினில் நல்லபாம்பு தேள்வழலை
ஆலைநீர்ப் பாம்புரக மெலிமண்டலி
160
156 - 160
மயிர்களைந்தோன் - நாவிதன்; அந்தகன் - குருடன்
தறிபட்டோன் - வெட்டுப்பட்டோன்; அருக்கு - அருகம்புல்

இருக்குநற் சாரைப்பாம்பு மாநாகம்
எறும்பு மயக்கார் வண்டரவமுடன்
பூரம்விரியன் சிலந்தி யிந்தப்படி
பூர்வமுதல் ஈசன் பரிந்துரைக்கும்
ஆருடமிதுவாகும் தூதன் நிலை
அறிந்தின்ன செந்துவென்று தெரிந்து கொள்ளே
முன்னே வந்துநின்ற தூதன் மூக்கையும்
முகத்தையும் தொடில்நல்ல பாம்பென்னலாம்
பண்ணும் களம்தனைத் தொட்டிடில் வழலையாம்
பருத்தவிரியன் கரத்துரத்தைத் தொட்டால்
165
161 - 165
மாநாகம் - தலைநாகம்; செந்து - ஜெந்து, விஷ உயிர்
களம் - கழுத்து; உரத்தை - மார்பை

சந்தாகில் மண்டலியாம் இரண்டுமுழந் தாளில்
தொடில்புடையன் கீழில் சிலந்தி
வந்தோன் இந்திரன் முதலாய் நாலுதிக்கும்
வரிகினும் அரணை என்று நிகழ்த்தினரே
ஈசன்அங்கு நிருதி திசைதனில் சொல்லில்
ஏந்திழையர் என்று தேர்ந்துரைத்தார்
வாசியுள்ள காற்றுத் திசையியம் பிடில்
வனத்து மிருகங்கள் தன்னினத்தில் என்றார்
கீழ்த்திசை வரும் தூதன் அகரமுன்
கிளத்திலொரு பல்யமன்றிசைக்கு ரெண்டாம்
170
166 - 170
சந்து - மார்புப் பகுதி; அரணை - பாம்பரணை
நிருதி - தென்மேற்குத் திசை; ஏந்திழையர் - பெண்கள்
காற்றுத்திசை - வடமேல் திசை; யமன்திசை - தெற்கு

வாட்டமிலா மேற்றிசையில் மூன்றுபல்
வடதிசைநாற் பல்லென்றிட லாமே
தென்திசை வரும் தூதன் இகரமுன்
செய்யில்ஒரு பல்மேற்கு ரெண்டுபல்லாம்
குன்றான வடதிசையில் மூன்றுபல்
குணதிசை நாலுபல்லும் பணிப்பலென்பாம்
மேற்றிசை வரும்தூதன் உகரமுன்
விளம்பிலொருபல் வடதிசைக்கு ரெண்டாம்
தோற்றுமிந்திரன் மூன்று தென்திசையில்
சொல்லிற்பல் நாலென்று சொல்லலாமே
175
171-175
குணதிசை-கிழக்கு

சோமனிலே வருதூதன் எகரமுன்
சொல்லிலொரு பல்கிழக்கு ரெண்டுபல்லாம்
பூமியிலிய மன்றிசையில் மூன்றுபல்
போலும் வருணனுக்கு நாலுபல்லாம்
எண்டிசை வருதூதன் ஒகரமுன்
இயம்பிடில் ஒருபல்லும் இல்லை எனலாம்
பண்டை வெள்ளை யாடைபுனைந்து வந்தொருவன்
பதறாமல் நிற்கில்விடம் சிறிதென்னலாம்
தூதன்சொன்ன சொல்லதனை யெழுத் தெண்ணித்
துணிந்தொரு மூன்றினில் ஈந்தசேடம்
180
176 - 180
சோமன் - சந்திரன்

ஓதுமொன்று சாவுதிண்ணம் ரெண்டினுக்
குயர்ந்துவிடம் தலைக்கொண்டே மீளும்
சரிவாய் யீய்ந்ததென்றால் விஷமில்லை
சாவு லெட்சணத்தையும் உரை செய்கிறேன்
சொரிஒரு பூரணத்தில் வந்தொருவன் 
சூனிய திசையினில் போனானென்றால்
பல்பட்டான் பட்டானென்பாம் சூனியத்தில்
பதறாமல் வந்துநின்ற பூரணத்தில்
முற்பட்டான் எனில்விடத்தில் மெய்மயங்கி
மூர்ச்சித்துக் கிடந்தாலும் தீர்க்காயுளாம்
185
181 - 185
திண்ணம் - உறுதி; சொரி - சுழல்தல்
பூரணம் - முழுநிலவு; சூனியம் - ஆகாயம்

இடக்காந்தும் காரத்தைக் கண்ணினால் எழுதிப்
பார்த்திடில் தந்தம் வெளுக்கில் ஒன்று
வடிபொன்னிற மாகில் ரெண்டுபல்
வண்ணம் சிவக்கில் மூன்றுபல் எனலாம்
கறுத்திடில் நாலுபல்லாம் முகர்ந்திடில்
கடிமலர்த் தாழை வாசனை காணின்
மதித்தது நல்ல பாம்பு பாதிரிப்பூ
மணக்கில் வழலை புளி மணம் விரியன்
மல்லிகைப்பூ மண்டலியர் மிளகு சுக்கு
மணக்கின் சிறுபாம்பின் குணமாம்
190
186 - 190
தந்தம் - பல்

சொல்லிய முற்பழைய கையை அரவொன்றும்
தொடவில்லை என்று சொல்லும் திடமாம்
முற்பக்கத் திருளாகில் ஆணினைச் சர்ப்பம்
தொடர்ந்து வலக்காலில் கடிக்கும்
பொற்புறு மடவியரை யரவிடப்
புறந்தாள் தனில் கடித்தூர்ந்திடுமே
நற்பகலில் ஆணையிடத்தில் கடித்திடும்
நாரியரை வலத்தில் நாடிக் கடிக்கும்
விற்பகத் திருளாணை இடத்தினில் பெண்ணினை
வலப்புறம் நண்ணு பகலில்
195
191 - 195
மடவியர் - பெண்கள்; நாரியர் - பெண்கள்
விற்பக்கம் - ஒளிப்பக்கம்; நண்ணுதல் - பொருந்துதல்

கடித்திடும் ஆணை வலத்தில் பெண்ணினைக்
கடிக்கும் இடப்புறத்தில் மடிப்பாகப்
பிடித்திடும் வேகக் குறிதனைச் சொல்வேன் 
பிணித்தேறு வேகம் மூவகையாகும்
வாயுவின் வேகமெட்டுக் குளிர் தரும்
வருணன் தனக்குமூ வேகம் என்பார்
தேயுவின் வேகம் பத்து மாத்திரை தரும்
வருணனுக்கு மூவொன்பதாகும் சரசம்
காற்றினுக் கைம்பதாகும் தேயுவுக்குக்
கணித்திடு மாத்திரை நூற்றைம்பதாம்
200
196 - 200
மடிப்பாக - வேகமாக
வேகம் மூன்று - வாயு,தேயு,வருணன்
கணித்திடும் - கணக்கிடும்

சாற்றிய வாயு வேக முதல் வேகம்
தானவரில் மூர்ச்சித்து வேர்வை வரும்பின்
இரண்டுக்கு வெதுப்ப முண்டாம் மூன்றில்
கண்ணேறச் சொருகும் நாலில் சோத்தியம் செய்யும்
திரண்டஞ்சிலக் கோழை யடைக்கும் ஆறுக்குச்
சிந்தை அறவழிக்கு மேழில் விறைக்கும்
எட்டாகில் உயிர் போக்கும் வருணனில்
எழுந்தமுதல் வேகமயிர்க் கூச்சாய்
நெட்டுடல் முட்டச் சிவப்பாம் இரண்டு
மட்டுமுடல் கரிந்துபாயும் உலர்ந்து
205
201 - 205
தானவரில் - தான் + அவரில்; வெதுப்பம் - வெப்பம்
சோத்தியம் - புலன்கள் செயலற்ற நிலை
கோழை - சளி; நெட்டுடல் - நெடிய உடல்

வெதும்பிடு மூணுவேக முன் விளைக்கும்
விளங்க நல்வேக மெனல் உளங்கலங்கித்
ததும்பிடும் கபம் கக்கும் அஞ்சினில்
தலையை நடுக்கும் நெஞ்சில் அறிவழிக்கும்
ஆறாகில் கண்ணை விழித்து மேல் பார்க்கும்
மீறுமோரேழ் வேகமெய் விறைக்கும்
கூறான இருநான்கில் அடக்கமாய்க்
குறித்திடு சுக்கிலம் ஒன்பதில் என்பரால்
பத்தாகில் மரணமென்பாம் அழல் வேகம்
பகருமுதல் வேகம் கண்கள் சிவந்து
210
206 - 210
கபம் - சளி; விறைக்கும் - மரத்து விடும்
சுக்கிலம் - இந்திரியம்; அழல் வேகம் - தேயுவேகம்

சத்தான முகம் கருகி ரெண்டினில்
கறுத்துச் சிறுநீரும் கடுத்திறங்கி
முகம்வேர்த்து உடல் முழுதும் ரோமங்கள்
முளைத்துக் கிளைத்ததெனத் திளைத்து நிற்கும்
செகமதில் மூவேகம் வாய் குளறிச்
சிந்தை கலங்கியுடல் நொந்து வீழ்த்தும்
நாலினில் குடலிறைந்து சோரஞ் செய்து
நாசியில் நீர்வடிந்து தேசுமாறும்
மேலெழும் ஐந்தனுக்கும் உடல் முற்றும்
வெடுவெடுத் தாட்டிக் கொள்ளுமாறாகில்
215
211 - 215
ஜெகம் - உலகம்; குடலிறைந்து - குடல் கெட்டு
சோரம் - வஞ்சனை; நாசி - மூக்கு

பல்லொடுபல் கடிக்கும் விறைத்துடல்
பதைக்கும் இருமூக்கில் நீர்பாயும்
சொல்லுரை கெடுமேழில் எட்டில்
சுவாசம்மேல் ஏறாமல் விழிமேல் நோக்கும்
ஓன்பதில் ஒடுங்குமுயிர் பத்தினில்
உடல்விட்டுப் பறந்திடும் உயிர்வானில்

அடக்ககுறி

என்புள்ள தாபரத்தில் அடக்கமாய்
இருக்குமுயிர்க் கலையை இயம்புகின்றேன்
அடக்க முற்றிடும் பொழுதில் இருவிழி
அதுமேல் நோக்கில் உயிரதுமேலாம்
220
216 - 220
பல்லொடுபல் கடிக்கும் - பல் கிட்டித்தல்
அடக்ககுறி - உயிர் அடங்கியிருக்கும் நிலை
என்பு - எலும்பு; தாபரம் - தாவரம், உடம்பு

மடக்கியவிழி கீழாய் விழித்திடில்
மானமான உயிர்கீழே நிற்கும்
பக்கத்தில் விழியொதுங்கில் சீவனும்
பக்கத்தில் இருக்குமென்றார் மிக்காகவே
சத்தெதிர் விழித்திருக்கில் சீவனும்
சடத்தில் நேர்நிலையெனத் திடத்துச்சொல்லே
ஒடுங்கு முன்னே பாதத்தைப் பிரம்புகொண்டு
ஓங்கி அடிக்கிலுடல் தடித்திடினும்
சடந்தணல் என வெதும்பில் மெய்சிவக்கில்
தண்ணீரில் போட்டிடில் தாழ்ந்திடிலும்
225
221 - 225
சீவன் - உயிர்; சடம் - உயிரற்ற உடம்பு; பாதம் - கால்

குடத்துநீர் மேல்சொரியில் உடல் முற்றும்
குளிர்ந்துமயிர் கூச்செறி வளைத்திருக்கில்
பிடித்துகை விரலில் நெட்டி பறித்திடில்
பிலத்தழுத்திட மயிர் வலுத்திருக்கில்
ஊன்றிடும் குடோரியிடில் செவ்விரத்தம்
ஒழுகின் தாதுஒன்று நடக்கில்
தோன்றிடும் ஆவியுள்ளே அடக்கமாய்ச்
சூட்சமாய் இருக்குமது மாட்சியறியே
229
விருத்தம்

(அடக்கம் எழுப்பவகை)

அடக்கமென் றறிந்த போதே அவர்தலை உச்சி கீறிக்
குடத்துவா யோட ழுத்திக் கொடும்புரை யடைத்துப் பின்னர்
விடுத்திடும் வேளைச் சாத்தை விட்டுமேல் ஒட்டை வைத்துக்
கடுக்கினில் எரிக்க மீண்டு கடிவிஷம் கடிவாய் காணும்

சிந்து

சிரசில் குடோரியிட்டுப் - பள்ளுஞ்
சேந்ததில் சூதம் களஞ்சியிட்டு
230
226 - 230
பிலத்தழுத்திட - பாதாளத்தில் அழுத்துவது போல் அழுத்திட
குடோரி - கீறி மருந்திடும் முறை; குடத்துவாய் - தலையின் ஓடு
வேளை - மருந்துச் செடி; கடுக்கினில் - விரைவில்

விரிவாயோர் ஓட்டை வைத்து ஓட்டு
மேல் கொடுந்தணல் தானெரிக்கில்
அடங்கிக் கிடந்த உயிர் காய்த்த
போல்வரும் சபை மெய்ப்புவரும்
காலன்தனை எழுப்பத் தந்திரம்
கற்றுணர்ந்தோர் சொன்ன வேத்தியத்தை
மேலான தந்திரத்தை யானும்
விஸ்தார மாய்ச்சொல்லத் தத்தையரே
கேளாய்நீ ஆடவர்க்கு ஞாளம்
கேள்படி ஆறுவிரல் நீளம்
235
231 - 235
சூதம் - ரசம்; களஞ்சி - சூதபாடானாம்
வேத்தியம் - முறை; தத்தையர் - கிளியனையர்
ஞாளம் - தண்டு

தாளாத மங்கையர்க்கு ஞாளம்
தானெட்டுக் கைவிரல் நீளமுமாய்
செம்பில் தகட்டி லடித்துவளர்
சென்னெலின் தாளின் பருவமொன்றும்
நம்பும் சிறுவிரல்போல் ஒன்று
ஞாள மிரண்டும் திரட்டியதை
ஊமத்தம் பூப்போல மேலாய்
ஒருபுறமும் விரிவாய் இருக்கும்(படி)
நேமித்துத் தண்டினிலே செல்ல
நீளம் அறுவிரல் ஞாளமதைச்
240
236 - 240
சென்னெல் - செந்நெல்; நேமித்து - வட்டமாக

செலுத்திக் குளத்தலையில் ஒரு
தீபத்தணல்வைத் ததின்மேல் சூதம்
நிலத்தில் அரைக் கழஞ்சி விட்டு
ஞாள வழிசென்று கீழிறங்கி
கால்கடி கடித்தே யுயிர்க்கை
கடந்தே உள்மெய் அடங்கி
மாலாய்க் கிடந்திடினும் சீவன்
வந்து புகுந்து கலந்திடுமே
பெண்ணாட்கும் இப்படியே செய்யப்
பிழைப்பள் உனக்கும் அளப்பிதுவே
245
241 - 245
கழஞ்சு - பன்னிரண்டு பண எடை
மாலாய் - மயக்கமாய்
சீவன் - உயிர்
அளப்பிதுவே - கூறமுடியாது 0

பண்ணும் தைலமொன்று செய்து
பட்ட பிணத்தையும் தொட்டெழுப்பிச்
செய்யும் வகைகேளாய் வளர்
செங்குன்றித் தோடுமியும் கருதி
துய்ய பருப்பெடுத்துக் கொண்டு
சோதித் தொருபிடி யோரதிலே
எருக்கன் இலைச்சாறும் வீழி 
இலைச்சாறும் இரண்டும் ஒன்றாக விட்டுப்
பருப்பை அதில்போட்டு வைத்துப்
பத்துநாள் ஊறியெடுத் தரைத்து
250
246 - 250
செங்குன்றி - குண்டுமணி; வீழி - ஒரு வகை மருந்துச்செடி

கடிதாய் இரண்டும்ஒன்றாய்க் கட்டிக்
கஞ்ச கலத்தினில் அப்பிவைத்து
வெயில்முகத் திருக்க வைத்து
வீழும் தைலத்தைத் தானெடுத்துப்
பைய நிறுத்திக்கொண்டே அதில்
பாதிதான் வால்உளு வைஅரிசி
பொடித்தே உடன்சேர்த்து சேர்த்த
போதில் தைலத்தில் நாற்கழஞ்சும்
துடித்தாடும் சூதமொன்று நாற்றம்
தோன்றிய கெந்திவிருகன் ஒன்றும்
255
251 - 255
கடிதாய் - வேகமாய்; கஞ்சக்கலம் - வெண்கலம்
வால் உளுவை - ஒரு மருந்து (பெருஞ்சீரகமாகவும் இருக்கலாம்)
கெந்திவிருகன் - கந்தகம்

கூட்டி உத்தாமணியின் பஞ்சில்
கொள்ளவே தோய்த்ததை மெள்ளவைத்து
நாட்டில் அடக்கமுற்ற பேர்க்கு
ஞாளத்தைத் தண்டினிலே செலுத்தி
இருப்புச் சிலாகையொன்று ஞாளம்
நின்றமட்டும் விட்டுக் கொண்டிருந்தால்
உடனே எழுந்திருந்து பேசும் உண்மை
என்றே சொன்னார் இன்னமொன்று
சுடர்நாறும் கந்தகமும் காயம்
சூதம் எருக்கம்பால் வார்த்து
260
அரைத்து வழித்தெடுத்து வெள்ளை
ஆடையில் பூசித் திரியாக்கி
திரித்தே அனல்கொளுத்தித் தண்டில்
சேர்ந்திடும் நாளம்புகவே புகைத்தால்
அடக்கம் எழுப்புமென்று சொல்லிப்
போதித்தார் ஆருடம் சோதித்தவர்

விருத்தம்

நச்சர வான தெல்லாம் நாட்டில்மா னிடரைத் தீண்டிக்
குச்சித விடங்கள் மிஞ்சிக் கொடுவிடம் தலைமேல் கொண்டால்
வெச்ச மந்திர தந்திரத்தால் மருந்தினால் தீரா விட்டால்
உச்சித மாகத் தீர்க்கும் கெருடனை உரைக்கல் உற்றேன்

சிந்து

வேதியர் குலத்தின்கண் காசிபர்க்கு
வினதை பயந்தெடுத்த கனயோகன்
சாதியில் பட்சிராசன் அருணனுக்குத்
தம்பியென உதித்த கம்பீரன்
265
261 - 265
ஆருடன் சோதித்தவர் - முதல் நூல் ஆசிரியர்
நச்சரவு - நஞ்சினையுடைய பாம்பு
குச்சித - அசுத்தமான; உச்சிதம் - அருமை
வினதை - இவள் தட்சன் குமாரி; காசிபர் தேவி; கருடன், அருணன்,
சடாயு, சம்பாதி,சேநன் முதலியவர்களைப் பெற்றவள்.
கனயோகன் - கருடனின் பட்டப் பெயர்

அட்டமா நாகங்களைப் பாதாளம்
மட்டும் துரத்திவென்று வாகை புணைந்தோன்
துட்டனெனும் இந்திர ஜித்து தொட்ட நாகக் 
கட்டுவிடந் தட்டுக்கெட விட்டபெரியோன்
பலத்தினில் சவுரியத்தில் ஒப்பில்லாப்
பலசாலி யானவெகு குணசாலி
குலத்தினில் பிரமகுலன் கீழ்க்கடல்
குடகடல் தென்கடல் வடகடலும்
நொடியினில் சுற்றிவருவோன் பாற்கடல்
நடுவினில் கண்வளரும் நாரணற்கு
270
266 - 270
துட்டனெனும்...பெரியோன் - இந்திரஜித்தின் நாகபாசத்தால்
கட்டுண்ட இலக்குவனைக் காப்பாற்றி நாகபாசத்தைப்
போக்கி இராமனின் அருளைப் பெற்ற கதை கூறப் பெறுகிறது.
சௌரியம் - வீரம்; நாரணர் - திருமால்

கொடிவாகன மானோன் தீவில்ஒரு
கோடிநிசா சரரைத் தேடி நுகர்ந்தோன்
கதியினில் நிலத்தின் காணும்நிலவும்
கனலியம் துதிசெய்யு மதிவேகன்
தாவில்நெடு மூக்கினாலும் சிறகாலும்
தடக்கையினாலும் இரு தாளினாலும்
மலைத்தவர் வெருண்டோட வென்றுசெய்
வாகை புனைந்து மனம் ஓகையுடன்
தலத்தினில் சிறுதாயாம் கத்துருமுன்
தங்கக் குடத்தமு தங்கே வைத்துச்
275
271 - 275
நிசாசரர் - இரவில் சஞ்சரிப்பவர்,அரக்கர் (பாம்பும் எனலாம்)
கனலி - ஞாயிறு
கருடன் தன் சிறிய தாயான கத்துரு என்பாள் முன் அமிர்தத்தைக்
கொண்டுவந்து வைத்து தன் தாயான வினதையின் இடுக்கண்
தீர்த்த வரலாறு கூறப்பெறுகிறது.
வினதையின் இடுக்கண்: இந்திரன் குதிரைவால் வெள்ளையா
யிருப்பது என்றும், அன்றாயின் நினக்கு அடிமையாவேன்
என்றும் வினதை கத்துருவினோடு பந்தயம் வைக்க, அவள்
அதனை வஞ்சனையால் கரிய தாக்க அஃதறியாது அவளுக்கு
அடிமையாகி வருந்துதல்.
அதனைக் களைதல்: இந்திரன் அமராவதிக்கண் கொண்டு
வைத்த அமிர்தம்தரின் அவள் அடிமை நிலை ஒழியுமென்று
கத்துரு சொல்ல அவளுக்குக் கருடன் அதைக் கொண்டு
வந்து கொடுத்துத் தாயை அடிமைத் தளையிலிருந்து மீட்டது.
(பரிபாடல் - உ.வே.சா பதிப்பு பக் 20)
ஓகை - உவகை - மகிழ்ச்சி 0

சாபத்தை அறத்தீர்த்த சுத்த வீரன்
தானும் தனக்கிணை தானானவன்
சிவதவநியமம் பெற்றோன் கெருட தியானம்
சிறகுரெண்டும் பச்சை நிறமாய்
விளர்சிவப்பாக மேனி முற்றிலும் (கண்டம்)
வெள்ளை நிறமாக விண்மண் ஒன்றாய்
அளவிடல் போலும் நிமிர்ந்த உருவமுமாக
அமுதகுடம் கரத்தில் வைத்து
திதிதரும் அசுரர்களும் அதிதி தரும் 
சிறுவரும் பாற்கடல் அதனில் அமிர்தம்
280
276 - 280
நியமம் - நெறி
திதி - அசுரர்களின் தாய்
அதிதி - தேவர்களின் தாய்

கடைந்திட மேருவரையை வேரோடும்
பிடுங்கி மத்தாக நட்ட பெருமையினான்
மடந்தைக் கத்துருவெனும் தாய்சொல் சபத
மாற்றிட வேணுமென்று மனம் துணிந்து
பறந்து விண்ணுலகில் சென்று தெய்வேந்திரன்
பதியில் கருவூரில் மதிள்கதவைத்
திறந்துகொண்டு உள்புகுந்து காத்திருந்த
தேவ கணங்களையும் ஓட விரட்டி
பொற்குடம் நிறைந்திருக்கும் அமிர்தத்தைப்
பொற்புடனே எடுத்து வௌியில் வந்து
285
281 - 285
தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்தபோது மேருமலையை
மத்தாகக் கொண்டு வந்து நிறுத்தியவன் கருடன்;
தாயின் துன்பத்தைத் தீர்த்தவன்.
தெய்வேந்திரன் - தேவேந்திரன்

மாற்கெதிர் பொருளை அயிராபதம்
முதல் முப்பத்து மூன்று கோடி
தேவர் கின்னர முனிவர் கந்திருவர்
சித்தியர்களா சுத்தி வளைந்தோரைப்
பேறாக மணிகோடி செபம் செய்த
பலபணி வண்ணமாலை தரித்தவராய்
பொன்னாடை ரெத்தினமகுடம் நுதலிலும்
சென்னியிலும் தரித்த திறத்தினராய்
மாலோனைப் புயத்தில் வைத்துக் கருணைநீர்
வழிந் தொழுகிய திருநயனமுமாய்
290
286 - 290
மாற்கெதிர் - போர்செய்வதற்கு எதிர்ந்த
கின்னரர் - பதினெண் கணத்துள் ஒருவர்
சித்தியர் - தெய்வமங்கையர்
நுதல் - நெற்றி; சென்னி - தலை; மாலோன் - திருமால்

மேலான விண்ணிற்பறந்து திசையெட்டும்
விளங்கவே இருளெனும் களங்கமற
வருபவராக நினைந்து கருடனை
மனதினில் தியானம் செய்ய வல்விஷங்கள்
பருதியைக் கண்ட பனிபோல் தட்டுக்கெட்டுப்
பறந்திடுமே உயிர் சிறந்திடுமே

மருந்துப் புடலம்

விருத்தம்

துதித்திடும் பணிகள் நான்கின் தோற்றமும் ஒடுக்கம் தானும்
விதித்திடும் வெவ்வே றான சாயின விதங்கள் தானும்
பயிற்றிடும் எயிற்றால் உற்ற குணங்களூம் வகுத்தேன் இப்பால்
கதித்திடும் விஷத்துக் கெல்லாம் மருந்தினைக் கழற லுற்றேன்

சிந்து

அத்தர்தென் மருதூர் காரண
சித்தர்புர மெரித்த தேவதேவர்
மத்தொடு கடுக்கை தும்பை கங்கைபிற
வைத்த சடிலர் யோகத்த ரானோர்
295
291 - 295
பருதி - சூரியன்; பணி - பாம்பு
எயிறு - பல்; கதித்தல் - மிகுதல்
புரம் - திரிபுரம்; மத்து - ஊமத்தை
கடுக்கை - பாம்பு; சடிலர் - சடையினை உடையவர்

கடுவமர்காள கண்டர் மான்மழுக்
கரத்தர்புலிச் சரமுரித் துடுத்தோர்
நடுவனை உரத்து தைத்தோர் தேடிமுன்
நாரண நான்முக ரானவர் காணாதவர்
சேடனுக்காக வந்நாள் சுயம்புதிரு
வுருவாக வந்த செகதீசர்
வேடனுக் கருள் புரிந்தோர் நாகய்யன்
வேதனுக்கன்று ரசவாதம் புகன்றோர்
தரித்திரந் தீரமதி மால் தனக்குமுன்
தந்தோலையர் திகிரிதனை யளித்தோர்
300
296 - 300
கடுவமர் - நஞ்சினையுடைய
காளகண்டர் - கரிய கண்டத்தை உடையவர்
புலிச்சரம் - புலித்தோல்; நடுவன் - யமன்
மார்க்கண்டேய வரலாறு இவ்வரியில் கூறப்பெறுகிறது.
சேடன் - ஆதிசேடன்; வேடன் - கண்ணப்பன்
நாகய்யன் - திருமரூதூர் இறைவன் பெயர்
திகிரி - சக்கரம்

கிரித்தளப் படையுடையோர் பணிமொழி
கிரியர சீன்றெடுத்த கிரிமகளும்
மலர்மகள் கலைமகளும் அருந்ததி
வனதுற்கை யகலிகை மாது
தவமுறு நெடுமாலும் கௌதமன்
சதுர்முகன் பருதி சந்திர முருகன்
பாணபத்திரன் கபில ெனெட்டு
மானாகர் அகஸ்தியர் திசைபாலர்
சேணிலத் தமரர்களும் முனிவரும்
தெரிசித்துப் பூசைசெய்யக் கதிகொடுத்தோர்
305
301 - 305
கிரித்தளப்படை - முத்தலைவேல்
கிரியரசன் - இமயத்தரசன்
கௌதமன் - முனிவன்
சதுர்முகன் - நான்முகன்; பருதி-சூரியன்
பாணபத்திரன் - மதுரையிலிருந்த பாடகன்

மெய்யென நம்பும் அடியார் தங்களுடை
வெய்யவினை யகற்றி விளங்கவைப்போர்
பொய்யெனச் சொல்வர்பால் ஒருநாளும்
புகுதாதவர் வினை கருதாதவர்
கலியுக வரதரென விளங்கிய
காரணத்தர் சதுரா ணத்தர்
மலைமகள் அழகிய நாயகிதனை
வலப்பாகம் வைத்துகந்த மகிமையாளர்
பத்தர்கள் பரிபாலர் நாகலிங்கர்
பாதமலர் எனது சிரத்தில் வைத்து
310
306-310
மலைமகள் - மலையத்துவசன் மகள், பார்வதி
பரிபாலர் - காப்பாற்றுபவர்

சித்தர்கள் அதிசயிக்கும் நாகமுதல்
சிற்றெறும் பாதியாய்ச் சேர்ந்த விஷயங்கள்
தீர்ந்திட நசியங்களும் ஒற்றிடச் செய்யும்
விஷமும் விடம் தீண்டினவுடன்
மாந்திடற்குள் மருந்து மாத்திரையும்
மையும் குழம்பும் கையிகிள்ளாக்கையும்
சோற்றினில் பாகில் கொடுக்கு மூலிகை
துவரும் முறுக்கும் கடிவாயில் பூச
மாற்றிடு...கா...ம் அஞ்சனமும்
வகைவகை யாகவேயான் பகருகின்றேன்
315
311 - 315
நசியம் - மூக்கில் இடும் மருந்து
மாந்துதல் - குடித்தல்; பாகில் - தேனில்
கடிவாயில் - பாம்பு கடித்த இடத்தில்

சோதனை பார்க்க வேளை வேர்தின்னத்
துவக்க கசக்க விஷமில்லை என்னலாம்
போதவே இனித்ததென்றால் நல்லபாம்பு
புளிக்கில் வழலை துவர்த்திடில் விரியன்
செருக்கிடில் மயக்கர் வரள்உப்பு
உறைக்கில் சிறிய புடையன் என்று அறிவாயே
நருக்குறு மிளகுரைக்கில் மண்டலியாம்
நாக்கில் கடுக்கில் மூர்க்கனாம்
இப்படி அறிந்திடுநீ சோதனை
எல்லா விடத்துக்கும் ஏக நசியம்
320
316-320
வேளை - ஒரு வகை மருந்துச்செடி
செருக்கிடில் - இருமிடில்; வரள்உப்பு - படிகாரம்
மிளகு - உணவுக்குரிய மிளகு 305

செப்பவும் கேளணங்கே வெற்றிலை
சிறியமிளகு கறியுப்பு நறுக்கிக்
கண்செவி மூக்கில் பிழியஉடல் விட்டுவிண்
புகுந்திட்ட உயிர் மீண்டு வருமே
பண்ணேர் மொழியினமே முருக்கிலை 
படரும் எருக்கினில் தும்பை இலையும்
பிழிந்திடில் நாசிதனில் உடல்விட்டுக்
கழிந்த உயிரும் வந்து கலந்திடுமே
குளிர்ந்திடும் துளசியிலை தும்பையிலை
கொடிய மிளகும் கறியுப்பும் கசக்கி
325
321 - 325
அணங்கு - பெண்
பண்ணேர் மொழியினம் - இசையினை ஒத்த
மொழியினை உடைய பெண் இனம்
எருக்கு - எருக்கஞ்செடி; கறியுப்பு - உணவுப்பு

நாசியில் பிழிந்திடவே உயிர்விட்டுப்
பேசாமல் கிடந்த பிரேத மெழுமே
வீசிய முதல்வேகம் கண்சிவக்கில்
வெள்ளுள்ளி பெருமரப்பட்டை வசம்பு
பீநாறிப்பட்டை சிறுநீர் மூக்கினில் 
பிழிந்திட முதல் வேகம் ஒழிந்திடுமே
ஆனாவிரண்டு மூன்று வேகத்துக் காற்றும்
மிளகு சுக்கு கடுகு இந்துப்புச்
சாரணை வெற்றிலையின் சாற்றினில்
தட்டி நசியமிட விட்டோடுமே
330
326 - 330
பிரேதம் - உயிரற்ற உடல்
வெள்ளுள்ளி - வெள்ளைப்பூண்டு
பெருமரப்பட்டை - பெருங்கள்ளிப்பட்டை (தலைச்சுருளிஎன்றும் கூறுவர்)
பீநாறிப்பட்டை - மருந்துப் பட்டை

காரணமாக வேகம் நாலைந்து
கடுகுமோர் ஆறேழுக்கு நசியம்
புகன்றிடும் இலுப்பைக் கட்டி நறுக்கியே
பொடித்துச் சிறுநீர்விட்டு மூக்கில் பிழிய
அகன்றிடும் அந்தவேகம் அப்பாலெட்
டதிவேகம் வந்தெழுந்து மதி மயக்கில்
கெந்தகமுள்ளி வசம்பு மிளகுடன்
கெடியான தும்பை துளசியிலை
தந்திடு முலைப்பாலும் நாசியில்
தறுகாமல் பிழிந்திட மறுமறுகிடுமே
335
331 - 335
இலுப்பைக்கட்டி - இலுப்பைப் புண்ணாக்கு
சாரணை - ஒரு வகைப் பூண்டு
கெந்தகம் - கந்தகம்; உள்ளி - வெங்காயம்
மறுமறுகிடும் - விஷம் நீங்கிடும்

சீலையில் எருக்கலாம்பால் தைவேளை
சிறந்திடும் சாறும் பெரும்பறட்டைச் சாற்றொடு
வேலை வைத்துத் தீயிடு சிறுநீர்தனில் 
விட விடம் அறுமே
கொடிக்கள்ளிப் பால்கறந்து சீலையில்
கொள்ளவே தோய்த்துலர்த்திச் சுக்கும் வசம்பும்
அடித்திடும் பச்சைப் பாம்பு மிளகுகாயம் 
அம்புவில் வமும் சமன் கூட்டித்
திரித்திடு துணியில்வைத்துத் திரிதனதை
தீயில் கொளுத்தி நெடுமூக்கில் புகைக்க
340
336 - 340
சீலை - மருத்துவத்திற்குப் பயன்படும் காரச்சீலை
எருக்கலாம்பால் - எருக்கஞ்செடியின் பால்
தைவேளை - தைவளைச் செடி
கொடிக்கள்ளி - காரமுள்ள கள்ளி
அம்பு - திப்பிலி; சமன் - சமமாக

மரித்திடும் மரணமெனினும் சீக்கிரம்
கருத்துடனே எழுப்பும் காலனில்லையே

ஒற்றடம் துவாலை

ஒற்றிடும் வேலிப்பருத்தி தைவேளை
ஊருடன் முதலியார் பூனை வணங்கி
மற்றுள்ள வேர்குருந்தும் பொன்னிறமாய்
வறுத்துடன் ஒற்றஉயிர் நிறுத்திடுமே
கீழ்வாய் நெல்லி துளசி முருக்கிலை
கிளறுமொடு வடக்கியிவை நாலும்
தாழாமல் இடித்தெடுத்துப் பிழிந்திடும்
சாற்றினைச் சடலமெங்கும் தேய்த்திடப்போம்
345
341 - 345
மரித்திடும் - இறந்திடும்
வேலிப்பருத்தி, தைவேளை - மருந்துச் செடிகள்
பூனைவணங்கி - குப்பைமேனி; வடக்கி - வதக்கி
சடலம் - உயிரற்ற உடம்பு

பேய்ச்சுரை பேய்க்குமட்டி .... ளிசிலை
பேய்ப் பீர்க்கில் சிறுநீர் விட்டிடித் தெடுத்து
தேய்த்திடு சடமுழுது விடத்தினால்
செத்த பிணமும் எழுந்திருந்திடுமே
முறுக்கி ஆணைவணங்கி சமூலம் கொடுவந்து
துவைத்துப் பூசி முறுக்க
உள்ளுக்குத் தூள்மருந்து கொல்லன் கோவைக் கிழங்கு
குப்பைக் கிழங்கு கையெடுத்தொழுது முழுது
தெள்ளிய சுலை சுருளி வேரிவை
திருந்தவிடத்துத் தெள்ளி வெருகடித்தூள்
350
346 - 350
பேய்ச்சுரை,பேய்க்கும்மட்டி,பேய்ப்பீர்க்கு - மருந்துச் செடிகள்
ஆனைவணங்கி - தேள்கொடுக்குப் பூண்டு
சமூலம் - வேர்முதல்; உள்ளுக்கு - உடம்பினுள்
கொல்லன் கோவை - ஒரு செடி

அள்ளியே எடுத்து வெந்நீர்தனில் கொள்ளக்
கொள்ளை விடங்கள் எல்லாம் குடிபோமே
பேயருசும் சமனாகக் கொண்டு வந்து
பெரியகுந் தாணியில் துவைத்தெடுத்து
காய்பிஞ்சுறு காராட்டின் நீர்விட்டு
கலந்திரவு முழுதும் கலத்தூறில்
பகலினில் நிழலுலர்த்தித் தூள் பண்ணிப்
பலபல விடத்துக்கும் வெருகடித்தூள்
சுகமுள்ள வெந்நீரில் கலக்கியே பயந்
துடவிட மெல்லாம் சுருண்டிடுமே
355
351 - 355
கொள்ளைவிடங்கள் - மிகுதியான நஞ்சு
குடி - விலகி; குந்தாணி - பெரிய உரல்
சித்தராரூட நொண்டிச் சிந்து 
முற்றும்


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment