பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, October 4, 2014

தவறாகப் பயன்படுத்தப்பட்டால் தண்டனை
னநாயகத்தின் 4 முக்கிய தூண்களான சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம், பத்திரிகை ஆகியவை மக்களுக்கு பல வசதிகளை செய்துகொடுத்து இருக்கின்றன. இதில், பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஏதாவது சட்டங்கள் தொடர்பாகவோ, நிர்வாகத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் தொடர்பாகவோ ஏதாவது சர்ச்சைக்குரிய அம்சங்கள் இருந்தாலோ, விதிமீறல்கள் இருந்தாலோ, அதற்கு நிவாரணம் பெற இந்திய குடிமகன் யாரும் நீதிமன்றங்களில் முறையிட்டு தீர்வுபெறும் வசதி இருக்கிறது. அந்த வசதிகளை நல்லநோக்கத்தோடு பயன்படுத்தினால், உண்மையிலேயே எல்லோருக்கும் நன்மைபயக்கும். ஆனால், இத்தகைய பல வசதிகளை சிலர் தங்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்தும் போக்கு இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது.

இந்த வகையில், தங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும், பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும், பொதுநலன் காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தின் கதவுகளைத்தட்டுவதற்காக ஒரு ஒப்பற்ற வசதி மக்களுக்கு இருக்கிறது. இதற்காக அவர்கள் நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகளை தொடர்ந்து நீதிஅரசர்களிடம் நியாயம் பெறமுடியும். இப்படி ஒரு வழக்கு தொடரும்போது, நீதிபதிகளும் தங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து, சட்டங்களை அலசி ஆராய்ந்து, வழக்கின் தன்மையை உன்னிப்பாக படித்து தான் தீர்ப்பு வழங்குவார்கள். ஆனால், இந்த வசதிகளையும் பலர் தங்கள் சுயலாபத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும், அடுத்தவர்களை ‘பிளாக் மெயில்’ பண்ணுவதற்காகவும் பயன்படுத்தும்போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோல, தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள் மீது ஏதாவது வழக்கு இருக்கும்போது, அதற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் தங்களையும் அந்த வழக்கில் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும் என்று முறையிடுவதும் வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட பெஞ்சு ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஜெயலலிதா மீது பெங்களூர் தனிக்கோர்ட்டு விதித்த தீர்ப்பைத்தொடர்ந்து, அவரும், அவரது அமைச்சரவையும் தொடர்ந்து பதவியில் நீடிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்ட கட்சி ஆட்சி அமைக்கமுடியும். அந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, தங்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித்தலைவராக ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். அந்த தலைவர் அவர்கள் தன்னை தேர்ந்தெடுப்பதற்காக நிறைவேற்றிய தீர்மானத்தை எடுத்துக்கொண்டு கவர்னரை சந்தித்து, தன்னை அரசு அமைக்க அழைக்கும்படி கோரிக்கை விடுப்பார், கவர்னரும் அவரை ஆட்சி அமைக்க அழைப்பார். இதெல்லாம் இந்திய அரசியல் சட்டத்தில் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அப்படியே அரசியல் சட்டவிதிகளைப் பின்பற்றி, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், ஒ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுத்தனர். கவர்னரும் விதிகளின் அடிப்படையில், அவரை ஆட்சி அமைக்க அழைத்து, அவரும் தன் அமைச்சரவையோடு பதவி ஏற்றுவிட்டார்.

இந்த நேரத்தில், டிராபிக் ராமசாமி, என்.ராஜாராமன் ஆகியோர் கவர்னரையும் ஒரு பிரதிவாதியாக குறிப்பிட்டு ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில், ஒ.பன்னீர்செல்வம் கோர்ட்டில் தண்டனைபெற்ற ஜெயலலிதாவின் கட்சியைச் சேர்ந்தவர். அவரை தலைவராக ஏற்றவர், அவரும் மற்றவர்களும் அமைச்சரவை அமைக்கக்கூடாது என பொதுநல வழக்கு தொடர்ந்தனர். நீதி அரசர்கள் நெற்றி அடியாக இனி யாரும் இதுபோல தேவையில்லாமல் எந்த வழக்கும் போடுவதற்கு அச்சப்படும் வகையில், நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். பொதுநல வழக்கு என்று போட்டுவிட்டு, தங்கள் முறையீட்டுக்கு ஆதரவாக எந்த சட்டத்தையோ, நீதிமன்ற தீர்ப்பையோ குறிப்பிடவில்லை. யார் இந்த பதவிக்கு வரக்கூடாது என்கிறார்களோ?, அவரை ஒரு பிரதி வாதியாக சேர்க்கவில்லை. ஆக, இது விளம்பரத்துக்காக போடப்பட்ட வழக்கு, கோர்ட்டின் நேரத்தை வீணடித்துவிட்டார் என்று கூறி, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, அதை காஷ்மீர் வெள்ளநிவாரண நிதியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளனர். எதிர்காலத்தில் நீதிமன்றத்தை தங்கள் சுயலாபத்துக்காக யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதற்கு ஒரு நல்ல வழிகாட்டி இந்த தீர்ப்பு. பொதுவாக, பொதுநல வழக்குகள் மக்களுக்கு அபரிமிதமான நன்மை அளித்தாலும், சில நேரங்களில் தவறான நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அதை நீதிமன்றங்கள் இனியும் பொறுத்துக்கொள்ளாது என்பதற்கு இந்த தீர்ப்பு நல்ல ஒரு எடுத்துக்காட்டாகும்.

நன்றி :- தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment