பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 8, 2014

வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி III



09. நூலைப் படி 

‘நூல்’ என்னும் சொல்லோடு ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து நூலை என நிற்கிறது.

‘படி’ என்னும் வருமொழிக்கு ஏற்ப நூலை என்னும் நிலைமொழியின் பின் வல்லெழுத்து மிகுந்துள்ளது.

இவ்வாறு ‘ஐ’ உருபு வெளிப்பட நிற்பது இண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடராகும்.

இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :-

மூட்டையைக் கட்டு !

உண்மையைச் சொல் !

யாரைப் பிடித்தாய் ?

பாட்டைக் கேள் !

மலையைச் சுற்றி வா !

பாலைக் குடி !

ஊரைச் சுற்றாதே !

கையைத் தட்டு !

பாடத்தைப் படி !

விரலைத் தொடு !


10. தமிழ் படித்தேன்


தமிழைப் படித்தேன் என்னுந் தொடரே தமிழ் படித்தேன் என்று தொகையாக நிற்கிறது.

‘ஐ’ உருபு மறந்திருப்பதால் இது இரண்டாம் வேற்றுமைத் தொகை.

தமிழ் என்பது அஃறிணை.

அஃறிணை  இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :-

வெற்றி கொண்டான், விடை பெற்றார், முடி புனைந்தான், தலைகொண்டான், பூச்சிகொல்லி,

ஆத்திசூடி, கல்வி கற்றார், எறும்பு தின்னி, தலை கொடுத்தான், சுமைதாங்கி.

11.பெரியார்ப் போற்று

‘பெரியாரைப்போற்று’ என்னுந்தொடரே பெரியார்ப் போற்று எனத் தொகையாக நிற்கின்றது.

‘ஐ’ என்னும் உருபு மறந்திருக்கிறது. ஆகவே இஃது இரண்டாம்வேற்றுமைத்தொகை.

பெரியார் என்பது உயர்திணை.

உயர்திணை இரண்டாம் வேற்றுமைத் தொகையானால் இடையில் வல்லெழுத்து மிகும். அல்லது வேறு மாற்றங்களைப் பெற்று வரும்.

எடுத்துக்காட்டு :-

ஒண்ணலர்ச் செகுத்தார்

தெளிந்தார்ப் பேணுமின் !

ஒம்ன்னார்த் தெறலும்

பெரியார்ப் பிழையேல்

நம்பினார்க் கைவிடேல்


12. யானைப் பாகன் 

‘யானைப்பாகன்’ என்பதில் ‘ஐ’ உருபு மறைந்திருக்கிறது. ஆனால் உருபு மட்டும் மறந்திருக்கவில்லை. பொருட் பயன் தரும் மற்றொரு சொல்லும் சேர்ந்து மறைந்திருக்கிறது.

யானைப் பாகன் என்பதை விரித்தால் ‘யானையை உடைய பாகன்’ என்று அமையும். அதுவே, இஃது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடந்தொக்க தொகையாகும்.

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :-

கொடித் தேர், முடித் தலை, பொடிக் குடுக்கை, செருப்புக் கால், வளைக் கை, திரைக் கடல், தொடித் தண்டு, தாமரைக் குளம்.


13. கணவனொடு சென்றாள்

‘ஒடு’ என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. கணவன் என்னும் பெயரால் ஏற்கப்பட்டுள்ளது. சென்றாள் என்னும் வருமொழி நோக்கி வல்லெழுத்து மிகவில்லை.

ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் வல்லெழுத்து மிகாது.

( ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் என்பன மூன்றாம் வேற்றுமை உருபுகள் )

எடுத்துக்காட்டு :-

கண்ணொடு கண், 

வண்டொடு புகுந்தது

நீரொடு தந்தான்

பொய்யொடு பிறந்தவன்

எட்டொடு பத்து

வேலோடு சாய்ந்தான்

மார்போடு தழுவினார்

கையோடு கூட்டிவா

பணிவோடு செய்தான்

முத்தோடு பவளம்

14. வெள்ளிக் காசு !

வெள்ளியால் ஆன காசு என்பதனையே வெள்லிக்காசு  என சுருங்கக் கூறுகிறோம்.

ஆல் என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. ஆன என்பது பொருட்ப்யன் தரும் சொல். வெள்ளிக் காசு என்பதில் உருபும்பயனும் சேர்ந்து மறைந்திருக்கின்றன.

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :-

பருத்தித் துணி

பட்டுப் புடவை

இருப்புப் பாதை

பிளாச்சுத் தட்டி

செப்புக் குடம்

இருப்புச் சட்டி

நெகிழிக் கூடை

கம்பிக் கூண்டு

மலர்ப் பந்து

துணிக் கட்டு 


15. குழந்தைக்குக் கொடு !


‘கு’ என்பது நான்காம் வேற்றுமை உருபு. ‘கு’ உருபு வெளிப்பட நிற்பது நான்காம் வேற்றுமை விரி.

குழந்தை என்னும் பெயரொடு சேர்ந்து நிற்கும் ‘கு’ உருபின் பின் கொடு என்னும் வருமொழி நோக்கி வல்லெழுத்து மிகுந்துள்ளது.

நான்காம் வேற்றுமை விரியில் வலி மிகும்.

எடுத்துக்காட்டு:- 

பாம்புக்குப் பகை

மாட்டுக்குத் தீனி

நூலுக்குத் தடை

கூலிக்குச் செய்

பாலுக்குச் சர்க்கரை

காலுக்குச் செருப்பு

கடைக்குப் போ

எடைக்குப் போடு

வெளுப்புக்குக் கொடு

பாம்புக்குப் பாலா ?

16. சூர்ப்பகை !

சூர்க்குப் பகை என்பதைச் சூர்ப்பகை என்று தொகையாகக் கூறுகிறோம்.

அஃறிணை நான்காம் வேற்றுமைத் தொகையிலும் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

கடிப்பகை

தலைவலிச் சூரணம்

பூச்சிக் குண்டு

மாட்டுத் தீனீ

வயிற்றுப் பாடு

எறும்புப் பொடி

நன்றி :

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

இறையகம்

5 / 731 , நடுவண் புலனாய்வுத் துறைக்காவல் அலுவலர் குடியிருப்பு

( C.B.I. POLICE OFFICER"S COLONY )

மேடவாக்கம், சென்னை - 600 100

விலை : உரு.10/-

 ( இன்னும் வரும் )

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment