பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 8, 2014

வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் -பகுதி II01.பசுமைப் புரட்சி

பசுமை’ என்பது ஒரு நிறத்தின் பெயர். நிறம், குணம், அளவு, சுவை, வடிவம், தன்மை ஆகியன பண்புகள் ஆகும்.

பண்புப் பெயர்கள், பசுமை, நன்மை, சிறுமை, இனிமை, தண்மை என்பனவற்றைப்போல் பெரும்பாலும். ’மை’ என்னும் இறுதிநிலை பெற்றும், நீலம், கசப்பு என்பவற்றைப்போல் சிறுபான்மை ‘மை’ இறுதி பெறாமலும் வரும்.

பண்புப் பெயர்கள் பண்பைக் கொண்டுள்ளவற்றின் ( பண்பின் ) பெயர்களோடு சேரும்போது ‘பசுமையாகிய புரட்சி’ என்பது போல் நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் ‘ஆகிய’ என்னும் இடைச்சொல் ( பண்புரு ) இடம் பெறுதல் வேண்டும்.

இப் பண்புருபு ( ஆகிய ) மறைந்து நின்று பொருள் கொடுப்பது பண்புத் தொகை எனப்படும்.


பண்புத் தொகையில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு

இளமைக் காலம் ,புதுமைப் பெண்,  உண்மைக் கதை ,முதுமைப் பருவம்

கருப்புக் கொடி, வெள்ளைத் தாள் ,சிவப்புச் சட்டை , இனிப்புப் பண்டம்


02.சிறு கதை

சிறுமையாகிய கதை என்பது சிறுகதை என அமைந்து நிற்கிறது.


சிறுமை என்பது அளவு பற்றிய பண்புப் பெயர். ஆகிய என்னும் பண்புருபு மறைந்து நிற்றலால் சிறுகதை என்பது பண்புத் தொகை ஆகும்.

சிறுமை என்னும் பண்புப் பெயரின் இறுத்கிநிலையாகிய ‘மை’ கெட்டுச் ‘சிறு’ என நின்று கதை என்னும் வருமொழியோடு சேர்ந்து ‘சிறுகதை’ அமைந்துள்ளது.

இவ்வாறு இறுதிநிலையை கெட்டுப் புணரும் பண்புத் தொகையில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :

முதுகண்ணன், சிறு தொழில், முதுகூத்தன், சிறுபாட்டி

குறிப்பு : ‘புது’ ‘பொது’ ’தனி’ என்னுஞ் சொற்களின்பின் வலி மிகுதலே வழக்கு.

எடுத்துக்காட்டு :

புதுப்பட்டி, பொதுப்பணம், தனிக்கட்சி. 

சிறுத்தொண்டர் என்னும் சிறப்புப் பெயர் தவிரச் சிறு என்னும் சொல்லோடு கூடிய பிற சொற்களில் வல்லெழுத்து மிகவில்லை.

03. கோடிச் செல்வர்

‘கோடி’ என்பது எண்ணுப் பெயர்களுள் ஒன்று.

கோடிக் கணக்காகப் பணத்தையோ பிற செல்வங்களையோ குவித்து வைத்திருப்பவர்களைக் கோடிச் செல்வர் ( கோடீஸ்வரர் ) என்பர்.

கோடி என்னும் எண்னுப் பெயர் செல்வர் என்னும் பெயரோடு புணரும்போது இடையில் வல்லெழுத்து மிகுந்துள்ளது.

கோடி, பத்து, எட்டு எனவும், அரை, பாதி எனவும் வரும் எண்ணுப் பெயர்களின் முன்னெழுத்து மிகும்.

கோடிப் பெயர்,  அரைக் கால், பத்துத் தலை, அரைச் சீட்டு, பத்துப் பாட்டு,

பாதிக் கட்டணம், எட்டுக் கால், பாதித் துணி, எட்டுத் தொகை

பிற எண்ணுப்பெயர்களின் பின் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :-

ஒன்று செய், இரண்டு சொல், மூன்று பரிசு, ஏழு பக்கம், ஏழு பிறவி

நான்கு பக்கம், ஐந்து தலை, ஆறு பக்கம், ஒன்பது துளை, அறு பொழுது

04. சாரைப் பாம்பு

சாரை என்பது ஒருவகைப் பாம்பின் சிறப்புப் ப்ர்யர். பாம்பு என்பது பலவகைப் பாம்புகளுக்கும் உரிய பொதுப் பெயராய் வழங்கி வருகின்றது.

இரண்டும் தனித் தனிப் பெயர்களேயாயினும் சிறப்புப் பெயயரும் பொதுப் பெயரும் ஆகிய இவை ஒரு பொருளைக் குறிக்குமாறு இணந்து நிற்பதால் இது இருபெயர் ஒட்டு எனப்படும்..

‘சாரையாகிய பாம்பு’ என்னுமாறு நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் இடம்பெற வேண்டிய ‘ஆகிய’ என்னும் பண்புருபு மறந்து நிற்பதால் ‘இரு பெயரொட்டுப் பண்புத் தொகை’ எனப்படுகின்றது.

இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு ;- 

செவ்வாய்க் கிழமை,    தச்சுத் தொழில், பன்னீர்ச் செல்வம்,  ஆடவைத் திங்கள், 

வேங்கைப் புலி, சிறுத்தைப் புலி, சக்கரப் படை

05. தொடர்கதை    

’தொடர்கதை’ என்பது இறந்த காலமா ?, நிகழ் காலமா ?, எதிர் காலமா ? என்று தெரியவில்லை. ஆயினும் சொல்லமைப்பால் மூன்றமைப்பிற்கும் பொருந்துமாறு காலம் மறந்து நிற்கிறது.

இவ்வாறு வருவதனைக் காலத்தொகை எனினும் சாலப் பொருந்தும். காலம் வினைச் சொலுக்குக் கட்டாயம் ஆகையால் இது வினைத்தொகை என்றே வழங்கப் பெற்றுள்ளது.

வினைத்தொகையில் நிலை,மொழி செட், எடு, சுடு என்பன போல் வினைப்பகுதி அளவினதாகவும், வருமொழி பெயர்ச் சொல்லாகவும் இருக்கும்.

வினைத்தொகையின் இடையில் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்க்காட்டு :-

அணிகலன், புனை பெயர் , நடுகல், செய்குன்று, வரைபடம், தேய்பிறை,

வெடிகுண்டு, திருவளர் செல்வன், புதை சேறு, திருநிறை செல்வி. 

6. வெற்றிலை பாக்கு

பெயர்களை ஒன்று, இரண்டு, மூன்று எனத் தொடர்ந்து சொல்லும்போது ‘ வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்பும் புகையிலையும் ‘ என்பதுபோல ஒவ்வொன்றின் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் சேர்ந்து வரும்.

இது உம்மைத் தொடர் எனப்படும்.

‘உம்’ என்னும் சொல்லையே ‘உம்மை’ என்கிறோம்.

உம்மையில் முற்றும்மை முதலாகப் பலவகை உண்டு. இங்கு நாம் காண்பது எண்ணும்மை.

‘வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு’ என்பதுபோல உம்மை மறந்து நிற்பதும் உண்டு. அது உம்மைத் தொகை எனப்படும்.

உம்மைத் தொகையில் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு : -

தாய் தந்தை, சேர சோழ பாண்டியர், செடி கொடிகள், இரவு பகல், 

முல்லை குறிஞ்சி பாலை, பூரி கிழங்கு, தூங்காமை கல்வி, தம்பி தங்கையர், சட்டி பானை, கை, கால்.  

07. மூக்குத்திப் பூ

ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமை.

மூக்குத்திப் போலும் பூ என்பது ஓர் உவமைத் தொடர்.

போலும் ( போன்ற, போல ) என்பது உவம உருபு எனப்படும். புரைய, மான, கடுப்ப முதலியனவும் உவம உருப்புகளே.

மூக்குத்திப் பூ என்பது போல உவம உருபு மறைந்து நின்று பொருள் கொடுப்பதும் உண்டு. அது உவமைத் தொகை எனப்படும்.

உவமைத் தொகையில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு:-

மலர்க்கை, மதிக்குடை, குவளைக்கண், வேய்த்தோள், மலைத்தோள், முத்துப்பல்

08. மங்கை பாடினாள்

பெயர்கள் எவ்வகையான திரிபும் இல்லாமல் பயனிலைகளைக் கொண்டு முடியுமாறு இயல்பாக நிற்பது எழுவாய்த் தொடர் எனப்படும்.

மங்கை என்னும் பெயர்ச்சொல், பாடினாள் என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது.

எழுவாய்த் தொடரில் வல்லெழுத்து மிகாது. 

எடுத்துக்காட்டு:-

செல்வி பாடினாள் , தம்பி சென்றான் , வழுதி படித்தான்
அல்லி சிணுங்கினாள், மாடு கத்தியது, துணி கிழிந்தது,
நாய் குரைத்தது, வாணி கேட்டாள், பலா சாய்ந்தது, பொழுது புலர்ந்தது.நன்றி :

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

இறையகம்

5 / 731 , நடுவண் புலனாய்வுத் துறைக்காவல் அலுவலர் குடியிருப்பு

( C.B.I. POLICE OFFICER"S COLONY )

மேடவாக்கம், சென்னை - 600 100

விலை : உரு.10/-

 ( இன்னும் வரும் )
                   

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment