பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 1, 2014

உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பணி - க.பழனித்துரை




உயர்கல்வி நிறுவனங்கள் உயர்வதும் தாழ்வதும், அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தது. நல்ல தொழில்நுட்பத்துடன் வகுப்பறை, தங்குவதற்கும், படிப்பதற்கும் தேவையான நல்ல வசதிகளுடன் சூழல் இருந்தாலும், கல்வி கற்றுத் தரும் தரமான ஆசான் இல்லை என்றால், உயர்கல்வி என்பது உயராது.

நல்ல கல்வி நிறுவனங்கள், நல்ல ஆசிரியர்களை நியமனம் செய்து, அவர்கள் தங்கள் நிறுவனங்களை விட்டுச் சென்றுவிடாத அளவுக்கு அவர்களை மகிழ்வுடன் வைத்து உள்ளனர். தரமான, திறன் கூட்டப்பட்ட ஆசிரியர்கள், மூன்று மிக முக்கி யமான அடிப்படைப் பணிகளான கற்பித்தல், ஆராய்ச்சி செய்தல், விரிவாக்கம் செய்தல் என, மூன்றையும் திறம்பட செய்ய வேண்டும். அப்படி திறனுடன் செயலாற்றக்கூடிய ஆசிரியர்கள் ஒரு நிறுவனத்திற்குக் கிடைத்து விட்டால், அவர்கள் தான் அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய சொத்து.'இந்தக் கல்விச்சாலைகளில் படித்தால் எனக்கு மரியாதை கிடைக்கும், இந்த ஆசிரியர்களிடம் படித்ததாகச் சொன்னால் எனக்கு மரியாதை கிடைக்கும்' என, மாணவர்கள் சிந்தித்து, அந்தக் கல்விச்சாலைக்கு பயணிக்கின்றனர். சில உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் பெயர்களைச் சொன்னால், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களை மதிக்கத் தோன்றும்; அதேபோல், பல ஆசிரியர்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, அதில் பணிபுரிவதாகக் கூறினால், அந்த மனிதர்களை மதிக்கத் தோன்றும்.

உயர்கல்வி நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர் என்பவர், எப்பொழுதும் கற்றுக் கொள்ளும் மனோபாவம் கொண்டவர். ஆசிரியர், அறிவை விற்க வந்தவரும் இல்லை; மாணவர்கள், அறிவை வாங்க வந்தவர்களும் இல்லை; இருவரும் சேர்ந்து அறிவை உருவாக்கத்தான் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வருகின்றனர். எந்த ஆசிரியர், மாணவர்களுக்கு கற்றுக்கொள்ளும் முறைமையைச் சொல்லிக் கொடுக்கிறாரோ அவர் மட்டும்தான், பாடம் படிப்பதை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக மாற்ற முடியும். அவர்தான் மாணவர்களை முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் இறக்கிவிடக் கூடியவர்.எந்தப் பொருளை விவாதிக்கும் போதும், ஒரு நிலைப்பாட்டை எடுத்து விவாதிக்காமல், விழிப்புடன் உண்மையை நோக்கி விவாதம் செய்ய வேண்டும் என்ற உணர்வை, மாணவர்களிடம் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். அதேபோல் எந்தப் பொருளையும் பற்றி கற்றுக் கொள்ளும்போது, ஆசிரியர் சொல்வதையோ, பாடப்புத்தகத்தில் படிப்பதையோ அப்படியே ஏற்றுக்கொண்டு விடாமல், பகுத்துப் பார்க்கும் மனோபாவத்தை, மாணவர்களிடம் உருவாக்க வேண்டும்.

மாணவர்கள் பெரிதும் ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்ப்பது, வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதல்கள். வகுப்பறைத் தொடர்பு என்பது, ஆசிரியர்கள் மாணவர்களிடம் வைக்கும் பொதுத் தொடர்பு. மாணவர்கள் கல்விச்சாலைகளுக்கு வரும்போது கல்வி கற்கும் சாதனங்களுடன் மட்டும் வருபவர்கள் அல்ல; எண்ணற்ற எண்ணச் சுமைகளுடன் வருகின்றனர். இந்த எண்ணச் சுமைகளுக்கு விடை தேடும் வகையில், ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வெளியில் மாணவர்களுக்கு வழிகாட்டினால், அதுதான் மாணவர்களை நல்வழிப்படுத்தும். அதைத்தான் மாணவர்களும் எதிர்பார்கின்றனர்.இந்தியச் சூழலில், ஏற்றத்தாழ்வு மிக்க சமுதாயத்திலிருந்து மாணவர்கள், கல்விச்சாலைகளுக்கு வருகின்றனர். அவர்களின் எண்ணச் சுமைகளை இறக்கி வைக்க உதவிடும் நண்பர்களாக, ஆசிரியர்கள் இருக்க வேண்டும். எந்த இடத்திலும் மாணவர்கள் மத்தியில், ஏற்றத்தாழ்வு பிரதிபலிக்கும் வகையில் ஆசிரியர்கள் நடந்து கொள்ளக் கூடாது.

யாரையும் ஒதுக்கிவிடாமல் உள்வாங்கி, சமத்துவப் பார்வை பெற்ற இடமாக வகுப்பறையை வைத்துக் கொள்ள, ஆசிரியர்கள் முனைய வேண்டும்.

உயர்நிலைக்கல்வி நிறுவனங்களில் அடுத்த முக்கியமான பணி ஆராய்ச்சி. உயர்கல்வி நிலையங்களில் செயல்படும் அனைத்து ஆசிரியர்களுமே, அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள்தான்.ஆசிரியர் என்பவர் அறிவுத் தளத்தில் பயணிக்கும் ஒரு பயணி. அந்தப் பயணத்தின் விளைவுகள் என்பது ஆராய்ச்சி அறிக்கைகளாக, ஆராய்ச்சிக் கட்டுரைகளாக, புத்தகங்களாக தொடர்ந்து அந்த ஆசிரியர் பெயரில் வெளிவந்த வண்ணம் இருக்க வேண்டும்.

உயர்நிலைக்கல்வி நிலையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் மூன்றாவது பணி, விரிவாக்கப் பணி. ஒரு சட்டக் கல்லுாரியில் பணிபுரியும் ஆசிரியர், அவருக்கு அருகாமையில் வாழும் மக்களுக்கு ஏன் அரசியல் சாசனம் மற்றும் இன்னபிற சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு தரக்கூடாது? ஒரு ஊட்டச்சத்துத் துறையில் பணிபுரியும் ஆசிரியர், ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை களுக்கும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஓர் ஆசிரியர், பக்கத்து கிராமத்திற்குச் சென்று, சுத்தம் சுகாதாரம் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இதே போன்று உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், எந்த அளவுக்கு சமூகத்துடன் தொடர்பு வைத்திருக்கின்றனரோ, அந்த அளவுக்கு ஆசிரியரின் சமூகப்பார்வை கூர்தீட்டப்படும். அதன் விளைவாக அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, ஆசிரியர்கள் முனைவர்.ஆசிரியர்கள், சமூக மாற்றத்திற்கு வித்திடும் வித்தகர்கள். மக்களாட்சி நடைபெறுகிற நாட்டில், மக்களாட்சி மிளிர பணி செய்யவேண்டிய பொறுப்பு, நம் உயர்கல்வி நிலைய ஆசிரியர்களுக்கு உண்டு.இன்றைய நிலையில், மூன்று பணிகளையும் இணைத்துச் செயலாற்றுகிற ஆசிரியர்கள், நம் உயர்கல்வி நிலையங்களில் மிகக் குறைவு. கல்வி நிறுவனங்களால், சமூகத்தில் என்னென்ன பணிகளையெல்லாம் செய்ய முடியுமோ அவைகள் அனைத்தையும் செய்து, சமூக மாற்றத்திற்கும், சமூக மேம்பாட்டிற்கும் உதவிடலாம். இதுதான், இன்று நாம் உயர்கல்வி நிலையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் எதிர்பார்ப்பது.

இ-மெயில்: gpalanithurai@gmail.com

நன்றி : தினமலர்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment