பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 30, 2014

எத்தனை தடைகள் வந்தாலும் கேரளத்தில் மது விலக்கை அமல்படுத்துவது உறுதி: உம்மன் சாண்டி

சத்தியமூர்த்தி பவனில், காமராஜர்- சத்தியமூர்த்தி சிலைகள் திறப்பு: கேரள முதல்மந்திரி-தலைவர்கள் பங்கேற்பு
சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி சிலைகள் திறப்பு விழாவில் பங்கேற்றவர்கள் (வலமிருந்து) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசன், சத்தியமூர்த்தி சிலையைத் திறந்து வைக்கும் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காமராஜர் சிலையை திறந்து வைத்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மூத்த தலைவர் குமரி அனந்தன், காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் திருநாவுக்கரசர்.

எத்தனை தடைகள் வந்தாலும் கேரளத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்து அவர் பேசியது:
கேரளத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முடிவெடுத்து முதல்கட்டமாக மதுபார்களை மூட உத்தரவிட்டோம். மதுபார்களை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்புகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மதுவின் கொடுமைகளில் இருந்து சமுதாயத்தையும், இளம் தலைமுறையினரையும் காப்பாற்றுவதே கேரள காங்கிரஸ் அரசின் முக்கிய நோக்கமாகும்.
எத்தனை தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்துவிட்டு கேரளத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். மது ஒழிப்பில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு கேரளம் முன்மாதிரியாக விளங்கும்.
தமிழகத்தில் குக்கிராமங்களிலும் பள்ளிக்கூடங்களைத் திறந்து கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராஜர். தமிழகத்தின் இன்றைய சமூக, பொருளாதார வளர்ச்சிக்கும் காமராஜரே காரணம். உயிருடன் இருக்கும் போதே அவருக்கு சிலை திறக்கப்பட்டது. அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்க தலைவராக காமராஜர் விளங்கினார்.
1984 தேர்தலில் பாஜகவுக்கு இரண்டு இடங்களே கிடைத்தது. ஆனால், இன்று அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட கட்சி. அனைத்து மாநிலங்களிலும் மக்கள் ஆதரவைப் பெற்ற கட்சி. காங்கிரஸýக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு தாற்காலிகமானது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
தமிழகத்தில் வலுவுடன் இருந்த காங்கிரஸ் மீண்டும் அந்த வலிமையைப் பெற வேண்டும். கேரளத்தைப் போல தமிழகத்திலும் காங்கிரஸ் பலம் மிக்க கட்சியாக மாற வேண்டும் என்றார் உம்மன் சாண்டி.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன்: கடந்த 45 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி இல்லை. ஆனாலும், லட்சக்கணக்கான தொண்டர்கள் காங்கிரஸýக்காக உழைக்கத் தயாராக இருக்கின்றனர். நமக்கும் ஒரு காலம் வரும். நாமும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை வேண்டும். நாளைய விடியல் நமக்கானது என்று நம்ப வேண்டும்.
அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. ஆந்திரம், புதுச்சேரியில் இப்போது ஆட்சி இல்லாவிட்டாலும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வலுவுடன் காங்கிரஸ் உள்ளது. ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. நாம் ஒன்றுபட்டு உழைத்தால் 2016-ஆம் ஆண்டே காமராஜர் ஆட்சியை அமைக்க முடியும் என்றார்.
மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாகும். அதனை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.
மத்தியில் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி அரசு புதிதாக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. காங்கிரஸ் அரசின் திட்டங்களை தங்களது திட்டங்களாக விளம்பரப்படுத்தி வருகிறது.
காங்கிரஸேயும், அதன் தலைவர்களையும் யார் விமர்சித்தாலும் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்பேன் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் வி. நாராயணசாமி, கே.வீ. தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர்கள் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் கோபிநாத், எஸ். விஜயதரணி, மாநிலப் பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் புறக்கணிப்பு
சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காமராஜர், சத்தியமூர்த்தி சிலைகள் திறப்பு விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த விழாவை, மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு  முழுப் பாதுகாப்பு
விழாவில் பேசிய மத்திய முன்னாள் இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குத் தேவையான வசதிகளும், பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் திருநாவுக்கரசர் பேசியபோது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் இணக்கமாக அரசியல் நடத்தியவன் நான். அந்த வகையில் அவர் சிறையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
ஆனால், இந்த வழக்கிலிருந்து அவர் நீதிமன்றம் மூலமாகவே விடுபட முடியும். மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் அதிமுகவினர் போராடுவது சரியல்ல என்றார்.
நன்றி :- தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment