பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 30, 2014

வாராணசியில் பாரதியார் வசித்த வீட்டை இன்று பார்வையிடுகிறார் தருண் விஜய்


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசியில் பாரதியார் வசித்த வீட்டையும் அங்குள்ள அவரது உறவினர்கள், வாராணசி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரை தமிழுக்கு குரல் கொடுத்துவரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் புதன்கிழமை சந்திக்கவுள்ளார்.
இது தொடர்பாக அவர் தில்லியில் "தினமணி' நிருபரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்திய மொழி, கலாசாரம், வரலாறு ஆகியவற்றுக்குப் பெருமை சேர்த்தவர்களை கௌரவிக்கும் வகையில், நம் நாடு இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் முதலாவதாக திருவள்ளுவர் தினத்தை "இந்திய மொழிகள் நாள்' ஆக அறிவிக்க வேண்டும் என்று நான் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன்.
உலகின் மிகப் பழைமைவாய்ந்த தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில், உலகப் பொதுமறையாகத் திகழும் திருக்குறளை வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் கற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.
தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரிடமும், மத்திய சட்ட அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளேன். இவை அனைத்தும் தமிழ் மொழி மீது எனக்கு ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக செய்து வருகிறேன்.
தமிழ் மொழிக்கு மட்டுமின்றி தேச விடுதலைக்காகவும் பெண் உரிமை, தேச வளர்ச்சிக்காகவும் நாட்டில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் பற்றிய கனவை கவிதையாக வடித்தவர் மகாகவி பாரதியார்.
விடுதலைக்கு 20 ஆண்டுகள் முன்பே அவர் கண்ட கனவைத்தான் இப்போது நாம் நனவாக்கி வருகிறோம். பாரதியின் சமூக சிந்தனை வாரணசியில் தங்கியிருந்த காலத்தில்தான் செழுமையானது.
ஆனால், அவர் வாழ்ந்த இடத்தை யாரும் இப்போது கண்டுகொள்ளவில்லை. அவர் வாழ்ந்த வீட்டை "தேசிய நினைவிடம்' ஆக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளேன். இதன் அவசியம் குறித்து மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத நாயக்கிடமும் விளக்கியுள்ளேன். இதன் தொடர்ச்சியாக பாரதி, வாராணசியில் வாழ்ந்த வீட்டை புதன்கிழமை பார்வையிடுகிறேன். அங்கு வாழும் பாரதியின் தங்கை வழி மகன் கிருஷ்ணன் குடும்பத்தாரைச் சந்தித்து எனது முயற்சிக்கு ஆதரவு கேட்கவுள்ளேன். வாராணசியில் உள்ள தமிழ்ச் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து இக்கோரிக்கை குறித்து விளக்கவுள்ளேன்.
உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அந்தமாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரைச் சந்தித்தும் பாரதி வீட்டை தேசிய நினைவிடமாக்க மத்திய அரசை வலியுறுத்தும்படி கேட்கவுள்ளேன். இது ஒரு தொடர்ச்சியான முயற்சி என்பதால், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், இலக்கியவாதிகள், சமூக சிந்தனையாளர்கள் ஆகியோரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்' என்றார் தருண் விஜய்.
நன்றி :- தினமணி

நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment