பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 29, 2014

சரித்திரம் படைத்த சுதேசிக் கப்பல்! - த.ஸ்டாலின் குணசேகரன்



தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்தை பி.ஐ.எஸ்.என். (British  India Steam Navigation Company) என்ற பிரிட்டிஷ் நிறுவனம் தங்கு தடையின்றி நடத்தி வந்தது. இந்த இரண்டு ஊர்களுக்குமிடையில் கடல்வழி வாணிபம் அக்காலகட்டத்தில் செழித்தோங்கியிருந்தது.

இச்சூழலில் தூத்துக்குடியில் வாழும் வர்த்தகப் பிரமுகர்களில் சிலர் ஒன்று கூடி, 
தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே சுதேசிக் கப்பல் விட முயற்சித்தனர். வ.உ.சி.யின் நண்பர் சிவபுரம் நிலக்கிழார் சி.வ.நல்லபெருமாள் பிள்ளையைக் குறிக்கும் வகையில் "சி.வ. கம்பெனி" என்ற பெயரில் ஒரு சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினர். இந்த சுதேசிக் கப்பல்கள் பம்பாய் வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் குத்தகைக்கு எடுக்கப்பட்டவையாகும்.

தூத்துக்குடியில் ஏற்கெனவே வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்த ஆங்கிலேயக் கப்பல் கம்பெனியினர், சுதேசிக் கப்பலைக் குத்தகைக்குக் கொடுத்து உதவிய பம்பாய் வர்த்தகரை அணுகி, அவரைத் தங்களது சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைத்து சுதேசிக் கப்பல் முயற்சியை மூழ்கடித்தனர்.

குத்தகைக்குக் கப்பல்களை எடுத்து ஓட்டுவதால் ஏற்பட்ட இடையூறுகளை உணர்ந்த வ.உ.சி. சொந்தமாகக் கப்பல்களை வாங்கி ஓட்டத் துணிந்து முடிவெடுத்தார்.

1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி "சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட்" என்ற பெயரில் ஒரு கப்பல் கம்பெனியை அமைத்தனர். இச்செய்தியைக் கேட்டறிந்த பாலகங்காதர திலகர் "திருநெல்வேலியில் உத்தம தேசாபிமானியாகிய சிதம்பரம் பிள்ளை, தூத்துக்குடிக்கும் சிலோனுக்கும் சுதேசிக் கப்பல் போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது சுதேசியத்திற்கு அவர் செய்திருக்கும் பெரும் பணிவிடையாகும்" என்று பாராட்டிய செய்தி 24.10.1906ம் தேதிய சுதேசமித்திரன் இதழில் வெளியாகியிருந்தது.

புதிய சுதேசிக் கப்பல் முயற்சிகள் குறித்த திட்டத்தை விளக்கி ஓர் அறிக்கை 
வெளியிடப்பட்டது. அதில் கப்பல் கம்பெனியின் மொத்த மூலதனம் ரூபாய் பத்து இலட்சம் என்றும், பங்கு ஒன்றுக்கு ரூபாய் இருபத்தைந்து வீதம் நாற்பதாயிரம் பங்குகள் சேர்க்கப்படும் என்றும், இந்தியர், இலங்கையர் முதலிய ஆசிய கண்டத்தாரிடமிருந்து பங்குகள் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பாலவநத்தம் ஜமீன்தாரும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவருமான பாண்டித்துரைத் தேவர் சுதேசிக் கப்பல் கம்பெனியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

•ஹெச்.ஏ.ஆர்.ஹாஜி பக்கீர் முகமது சேட் அண்ட் சன்ஸ்
 கெளரவ செயலாளர்களாகவும்

•வ.உ.சிதம்பரம் பிள்ளை துணைச் செயலாளராகவும்

•வழக்கறிஞர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்

•திருநெல்வேலி வழக்கறிஞர் கே.ஆர்.குருசாமி அய்யர்

•கோழிக்கோடு வழக்கறிஞர் எம்.கிருஷ்ண நாயர்

•தூத்துக்குடி வழக்கறிஞர் டி.எல்.வெங்கு அய்யர்

ஆகியோர் சட்ட ஆலோசகர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கம்பெனியின் இயக்குநர்களாக 15 முக்கியப் பிரமுகர்கள் செயல்பட்டனர். அவர்களுள் புகழ்மிக்க வர்த்தகக் குழுவான ஹெச்.ஏ.ஆர்.ஹாஜி பக்கீர் முகமது சேட் அண்ட் சன்ஸ், முகமது ஹாகீம் சேட், சி.வ. கப்பல் கம்பெனியைச் சேர்ந்த சி.வ.நல்லபெருமாள் பிள்ளை ஆகியோரும் அடங்குவர்.

இக்கம்பெனி தொடங்கப்படும்போதே இதன் நோக்கம் இன்னதுதான் என்று தெளிவாக உலகறியக் கூறிவிட்டனர்.இக் கம்பெனியினர் பிரகடனப்படுத்திய எட்டு நோக்கங்களையும் ஆழக்கற்றுணர்ந்தால் வெள்ளையர்களிடமிருந்து முற்றாக விடுபட்டு, சொந்தக்காலில் நிற்கத் தூண்டுகிற போர் முரசாகவே அவை புரிந்து கொள்ளப்படும்.

வெறும் கப்பல் விடுவது மட்டுமல்லாது இந்தியர்கள், இலங்கையர்கள் மற்றும் ஆசியக் கண்டத்தவர் அனைவருக்கும் கப்பல் நடத்தும் தொழிலைப் பழக்குவித்து, அதன் மூலம் வரும் இலாபத்தை அவர்களே அனுபவிக்கச் செய்வது கம்பெனியின் நோக்கங்களில் ஒன்றாகும். கப்பல் நடத்தும் தொழிலோடு, கப்பல் நிர்மாணம் செய்யும் தொழிலையும் கற்பித்தல், கப்பல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் கற்றுத் தருகிற பல்கலைக்கழகங்களை ஏற்படுத்துதல், கப்பல் தொழிலும் இன்னபிற வியாபார முறைகளிலும் இந்தியா - இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்தி, ஒன்றுபட்டு உழைக்கும் மனோபலத்தை வளர்த்தல், வணிகம் நிறைந்த ஊர்களுக்கு இந்தியா, இலங்கை முதலிய ஆசியக் கண்டத்தவர்களை ஏஜெண்டுகளாக 
நியமித்தல், நீராவிப் படகு, நீராவிக் கப்பல்கள் போன்றவற்றை உருவாக்குவதற்கும், அவற்றைச் செப்பனிடுதல், சுத்தப்படுத்துதல் போன்றவற்றிற்குமான தனித்தனி துறைகளை ஏற்படுத்துதல், கம்பெனியார் விரும்பும் வேறுபல சுதேசி தொழில்களிலும், வியாபாரங்களிலும் ஈடுபடுதல் ஆகியவையே சுதேசிக் கப்பல் கம்பெனியின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டன.

வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் முயற்சிக்கு முன்னோடிகள் உள்ளனர். 1884ம் ஆண்டு வங்கத்தில் தொடங்கப்பட்ட உள்நாட்டு நதிவழி நீராவிக் கப்பல் போக்குவரத்து பணி முதல் முயற்சியாகும். வெள்ளையர் இந்த முயற்சியைத் தோற்கடித்த பின்னர், 1905ல் சுதேசி இயக்கம் சுடர்விட்டு பிரகாசித்தபோது "பெங்கால் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" உருவாயிற்று. 1905 முதல் 1930 வரை சுமார் இருபது சுதேசிக் கப்பல் கம்பெனிகள் இந்தியாவில் தோன்றின.

இவை அனைத்தும் சுதேசி முயற்சிகளாக இருப்பினும், வணிக நோக்கு, தனி மனித இலாபம் முதலியவை உள்ளடங்கியதாக அமைந்திருந்தன. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக வ.உ.சி. யின் முயற்சி திகழ்ந்தது. முழுக்க முழுக்க இந்தியர்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற சுதேசி உணர்வும், அந்நியர்களின் ஆதிக்கத்தை அடியோடு எதிர்க்கும் தன்னலமற்ற தன்மானச் சிந்தனையும், வெள்ளையர்களின் அடிமைகளாக இந்தியர்கள் இருக்கலாகாது என்ற விடுதலை 
வேட்கையும் ஒன்றிணைந்த கருத்துக் கலவையாகத் திகழ்ந்தவர் வ.உ.சி.

சுதேசிக் கப்பல் முயற்சியில் தனக்கு முன்னோடிகள் இருப்பினும், புரட்சிகர சிந்தனைகளின் மூலம் தானே ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் வ.உ.சி.
திட்டத்தை அறிவித்த பின்னர், அத்திட்டத்தைச் செயல்படுத்த சூறாவளிபோல் சுழன்று சுழன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அவர்.

நிதி திரட்டும் பணிக்காக பம்பாய் புறப்பட்டுச் சென்றபோது, மீண்டும் தமிழ்நாட்டுக்கு 
சுதேசிக் கப்பல்களோடுதான் வரப்போவதாகவும், அவ்வாறு கப்பல்களுடன் திரும்ப இயலாத சூழல் ஏற்படுமெனில், அங்கேயே கங்குகரை காணாத கடலில் மூழ்கி தனது உயிரை தானே மாய்த்துக் கொள்ளப்போவதாகவும் சபதமேற்றுத்தான் தமிழ்நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார் வ.உ.சி.

வ.உ.சி. பம்பாய் சென்றிருந்தபோது, அவரது மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோன செய்தி அவரை எட்டியது. அப்போது வ.உ.சி.யின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. வ.உ.சி. யை உடனே ஊருக்குத் திரும்புமாறு உறவினர்கள் வலியுறுத்தினர். ஆழ்ந்த கவலைக்குள்ளான வ.உ.சி., தகவல் தந்தவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, சுதேசிக் கப்பல் பணியை அங்கிருந்தவாறே தொடர்ந்து மேற்கொண்டார்.
கப்பல் முயற்சியின் ஒரு கட்டமாக வ.உ.சி. இலங்கைக்குச் சென்றார். இலங்கையில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ்கள் இவரின் வருகையைப் பாராட்டி தலையங்கம் எழுதின. வ.உ.சி. யின் பெருத்த முயற்சிக்குப் பின்னர் 1907 மே மாதத்தில் "எஸ்.எஸ். காலியோ, எஸ்.எஸ். லாவோ" என்ற இரண்டு கப்பல்களும் வெவ்வேறு நாள்களில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. இந்திய தேச பக்தர்கள் வ.உ.சி. யின் பகீரத முயற்சியை வெகுவாகப் பாராட்டினர்.

"வெகுகாலமாய் புத்திரப் பேறின்றி அருந்தவம் செய்து வந்த பெண்ணொருத்தி, ஏக காலத்தில் இரண்டு புத்திரர்களைப் பெற்றால் எத்தனை அளவற்ற ஆனந்தமடைவாளோ, அத்தனை ஆனந்தத்தை நமது பொது மாதாவாகிய பாரத தேவியும் இவ்விரண்டு கப்பல்களையும் பெற்றமைக்காக அடைவாளென்பது 
திண்ணமே. ஸ்ரீ வ.உ.சிதம்பரம்பிள்ளையும், அவருடனின்றுதவிய மற்ற நண்பர்களும், தாம் பிறந்து  வளர்ந்த தாய் நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து விட்டார்கள்" என்று 1907 ஜூன் 15ம் தேதி வெளிவந்த "இந்தியா" இதழில் அதன் ஆசிரியர் மகாகவி பாரதியார் குதூகலத்துடன் குறிப்பிட்டார்.

தூத்துக்குடி - கொழும்புக்கு இடையிலான சுதேசிக் கப்பல் போக்குவரத்து வெற்றி நடை 
போட்டது. இத்தகைய இமாலய சாதனையை சற்றும் எதிர்பாராத பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியினர் அதிர்ச்சியடைந்தனர். சுதேசிக் கப்பல் கம்பெனி திவாலாக சதித்திட்டம் தீட்டினர். எடுத்த எடுப்பிலேயே பயணக் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தனர். படிப்படியாகக் கட்டணம் இல்லாமலேயே ஏற்றிச் செல்வதாக அறிவித்தனர். பொதுமக்களிடம் தேசபக்த உணர்ச்சியைத் தூண்டி, சுதேசிக் கப்பலை ஆதரிக்கச் செய்வதில் வெற்றி பெற்ற வ.உ.சி., பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட 
பங்குதாரர்களிடம் வெற்றிபெற முடியவில்லை.

வ.உ.சி. க்கு பங்குதாரர்கள் ஒரு பக்கம் நெருக்கடி கொடுத்தனர்; ஆட்சியாளர்கள் இன்னொரு பக்கம் இறுக்கிப் பிடித்தனர். எவ்வளவோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையிலும் வ.உ.சி. யின் தனிப்பெரும் மக்கள் செல்வாக்கால் சுதேசிக் கப்பல் வணிகம் சுருண்டு படுக்காமல் காப்பாற்றப்பட்டது.
இருப்பினும், சுதேசிக் கப்பல் நிர்வாகிகள், கப்பல் கம்பெனிக்கு எதிராக பிரிட்டிஷ் 
ஆட்சியினர் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையைக் கண்டு அஞ்சினர். தங்களது கம்பெனி நிர்வாகக்குழுக் கூட்டத்தை அவசர அவசரமாகக் கூட்டினர். கம்பெனி பிழைத்துத் தப்பிக்க வேண்டுமானால் வ.உ.சி. தனது அரசியல் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்கள் கேட்டுக் கொண்டவாறு அரசியலில் இருந்து விலகுவதற்கு பதிலாக, சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகி, முன்னிலும் தீவிரமாக அரசியலில் மூழ்கினார் வ.உ.சி.எந்தக் கப்பல் கம்பெனியாரை எதிர்த்து வ.உ.சி. சுதேசிக் கப்பலை மிதக்க விட்டாரோ, அதே பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியினருக்கு சுதேசிக் கப்பலை விலைக்கு விற்றுவிட்ட செய்தி சிறையிலிருந்த வ.உ.சி.யை எட்டியது.

இதைக் கேட்டுக் கொதித்தெழுந்த பாரதியார், "சிதம்பரம், மானம் பெரிது! ஒருசில ஓட்டைக் காசுகளுக்காக எதிரியிடமே அக்கப்பலை விற்றுவிட்டார்களே, பாவிகள்! அதைவிட அதைச் சுக்கல் சுக்கலாக நொறுக்கி, வங்காள விரிகுடாக் கடலில் மிதக்கவிட்டாலாவது என் மனம் ஆறுமே! இந்தச் சில காசுகள் போய்விட்டாலா தமிழ்நாடு அழிந்துவிடும்? பேடிகள்!" என்று ஆவேசத்தோடு எழுதினார்.

"அந்தக் கப்பல் கம்பெனி முறிந்து போனாலும், அதனால் தேசத்துக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. குறைந்த சார்ஜை வசூலித்ததினாலும் கம்பெனிக்கு 15 இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. ஆயினும் அந்தப் பணம் நம்முடைய தேசத்தை விட்டுப் போய்விடவில்லை. நாங்கள் குறைந்த சார்ஜுக்கு விடுவதை உத்தேசித்து வெள்ளைக்காரக் கம்பெனியார்களும் குறைந்த சார்ஜில்விட, ஆரம்பத்தில் அவர்களுக்கு 95 இலட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்தப் பணமும் நமது தேசத்தில்தான் இருந்திருக்கிறது. ஆகவே, அந்தக் கம்பெனி முறிந்து போனாலும் இந்தியாவுக்கு இலாபமே தவிர நஷ்டமில்லை" என்று சுதேசிக் கப்பல் கம்பெனியின் வீழ்ச்சி குறித்து 1919ம் ஆண்டு வெளியான சுதேசமித்திரனில் குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி.

நன்றி: தினமணி
-- 
இப்படிக்கு நன்றிகளுடன் கோ. வெங்கடேசன் கோயம்புத்தூர் அலைப்பேசி: 8903449780


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment