பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 29, 2014

100 ஆண்டு உத்தரவாதத்துடன் கட்டப்பட்ட மதுரை ஏ.வி. மேம்பாலத்துக்கு 125 வயது: சீரமைப்பு பணியுடன், கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல்

மதுரையில் கம்பீரமாக நிற்கும் ஏ.வி. மேம்பாலம் | (கோப்புப் படம்)

மதுரையில் கம்பீரமாக நிற்கும் ஏ.வி. மேம்பாலம் | (கோப்புப் படம்)


100 ஆண்டு உத்தரவாதத்துடன் கட்டப்பட்ட மதுரை ஏ.வி. மேம்பாலம் வரும் டிசம்பரில் 125-வது வயதை நிறைவு செய்கிறது. அந்தப் பாலத்தை சீரமைத்து, விழா எடுக்க வேண்டும் என்பது மதுரை மக்களின் கோரிக்கை.

வைகை அணை கட்டப்படும் முன்பு, ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மதுரை நகர் மட்டுமின்றி மாவட்டமே போக்குவரத்துத் துண்டிக்கப்படும் சூழ்நிலை நிலவியது. இந்தக் குறையைப் போக்குவதற்காக ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில், வைகையின் குறுக்கே பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கோரிப்பாளையம் - நெல்பேட்டை இடையே பாலம் கட்ட 1886-ல்அடிக்கல் நாட்டப்பட்டது. சுண்ணாம் புச்சாந்து, பதநீர், கடுக்காய் கலந்த கலவையுடன் கற்கள், செங்கற்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆங்கிலேயர்களின் தொழில்நுட்பத்துடன் உள்ளூர் மக்களின் உடல் உழைப்பு காரணமாக 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் செலவு ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 687 ஆகும்.

அரைவட்ட வடிவ தூண்கள்

வெள்ளப்பெருக்கு காரணமாக அடிக்கடி பணிகள் பாதித்ததால், கோச்சடை அருகே தடுப்பணை கட்டி கால்வாய்கள் மூலம் தண்ணீர் திருப்பிவிடப்பட்டது. 12 மீட்டர் அகலம், 240 மீட்டர் நீளம் கொண்டதாகக் கட்டப்பட்ட இந்தப் பாலத்தை தாங்கும் வகையில், 16 அரைவட்ட வடிவ தூண்கள் அமைக்கப்பட்டன. கணிதவியல் கோட்பாட்டின்படி, அரைவட்ட வடிவத்துக்கு அதிக உறுதித்தன்மை உண்டு என்பதால் இவ்வாறு கட்டினர். பால கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 1889-ம்
ஆண்டில் திறப்பு விழா நடத்தப்பட்டது. அப்போது பிரிட்டன் இளவரசராக இருந்த ஆல்பர்ட் விக்டரின் நினைவாக அவரது பெயர் பாலத்துக்கு சூட்டப்பட்டது.

மேலும் ஒரு பாலம்

இந்தப் பாலம் 100 ஆண்டுகள் வரை உறுதியாக இருக்கும் என்றும், தொடர்ந்து பராமரிப்பு செய்யப்பட்டால், மேற்கொண்டு 50 ஆண்டுகள் அதனைப் பயன்படுத்த முடியும் என்று ஆங்கிலேயப் பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மதுரையில் மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கம் காரணமாக இந்தப் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கல்பாலம் அருகே கடந்த 2000-ம் ஆண்டு மேலும் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டது. இதன்பின்னர், இவ்விரு பாலங்களும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டன. இருப்பினும் தொடர்ந்து, கம்பீரமாக நின்று மதுரையின் போக்குவரத்துக்கு உறுதுணையாக இருக்கிறது ஏ.வி. மேம்பாலம்.

நடவடிக்கை வேண்டும்

6.12.1889-ம் தேதி இந்தப் பாலம் திறக்கப்பட்டது. வருகிற டிசம்பர் மாதம் வந்தால் 125 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஆனாலும், உழைக்கிறது ஏ.வி. பாலம். சாதாரணமாக 25 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறுகிற ஊழியர்களுக்கு பெரிய அளவில் பாராட்டு விழாக்கள் நடைபெறுகின்றன. மதுரைக்காக 125 ஆண்டுகள் சேவை செய்து, இன்னமும் உழைக்கச் சளைக்காமல் இருக்கும் ஏ.வி.மேம்பாலத்தை கவுரவிக்கும் விதமான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறையினரும், மாநகராட்சி நிர்வாகமும் எடுக்க வேண்டும்.

சேதப் பகுதிகளை புனரமைத்து, புதிய வர்ணம் பூச வேண்டும். சுவர் விளம்பரங்களால் மறைக்கப்பட்டுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தி மக்கள் பார்வைக்குத் தென்படும்படி வைக்க வேண்டும். 125-வது ஆண்டை நினைவூட்டும் விதமாக அருகிலேயே மற்றொரு கல்வெட்டு பதிக்க வேண்டும். மதுரையின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக விழா எடுக்க வேண்டும் என்பது மதுரை மக்களின் எதிர்பார்ப்பு.

http://tamil.thehindu.com/

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment