பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, September 13, 2014

புகையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்! - தினத்தந்தி


னித வாழ்வில் கல்விச்செல்வம், பொருட்செல்வம் என்று எத்தனையோ செல்வங்கள் இருந்தாலும், உடல் ஆரோக்கிய செல்வம் இல்லையென்றால், மற்ற செல்வங்களையெல்லாம் மகிழ்வோடு அனுபவிக்க முடியாது. அந்த வகையில், நோய்கள் வராமல் தடுப்பதிலும், வந்த நோய்களில் இருந்து மீண்டு வருவதிலும், மக்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். 

சில நோய்களைப் பொறுத்தமட்டில், இன்னும் அதை முழுமையாக குணமாக்கும் வகையிலான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதில் முன்னிலை வகிப்பது எய்ட்ஸ், புற்று நோய்தான். புற்றுநோயைப் பொறுத்தமட்டில் பலவிதமான புற்றுநோய்கள் இருந்தாலும், நுரையீரல் புற்றுநோய்தான் அதிகமாக பலரை தாக்குகிறது. நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் சிகரெட், பீடி, சுருட்டு போன்ற புகை பழக்கம்தான். இந்தியாவில் புகையிலை பயன்படுத்துவதுதான் 40 சதவீத புற்றுநோய்களுக்கு காரணம் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரு சிகரெட்டை புகைப்பதன் மூலம் ஒருவனது ஆயுளில் 11 நிமிடங்களைக் குறைக்கிறது. இந்தியாவில் 27 கோடியே 50 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துகிறார்கள். இதில், 35 சதவீதம் பேர் பெரியவர்கள், 14 சதவீதம் பேர் 13 வயது முதல் 15 வயதுள்ள குழந்தைப் பருவத்தினர் என்ற அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. 

பா.ஜ.க. அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து, புகை பழக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்கும் வகையில், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் பட்ஜெட்டிலேயே சிகரெட் மீதான கலால்வரியை 11 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக உயர்த்தியிருக்கிறார்கள். இதுபோல, மற்ற புகையிலை பொருட்கள் மீதும் வரி அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

பொதுவாக எந்த பொருளின் மீது வரி உயர்த்தப்பட்டாலும், மக்களிடையே எதிர்ப்பு இருக்கும். ஆனால், இவ்வளவு வரி உயர்வு அறிவிக்கப்பட்டாலும், மக்கள் அதை பெரிதும் வரவேற்றார்கள். ஏற்கனவே பொதுஇடங்களில் புகைபிடிப்பதற்கு தடை இருக்கிறது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு அருகில் பீடி, சிகரெட்டுகள் விற்கக்கூடாது, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது என்று தடை இருந்தாலும், இன்னும் அவைகள் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 


இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நியமித்த நிபுணர் குழு, பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ.20 ஆயிரம் அபராதம், பாக்கெட்டாக இல்லாமல் உதிரியாக சிகரெட் விற்க தடை, 18 வயதுக்கு குறைந்தவர்கள் புகைபிடிக்க இப்போது இருக்கும் தடையை, 25 வயதாக உயர்த்துதல் என்பது போல பரிந்துரைகளை செய்து இருக்கிறது. இதை, மத்திய அரசாங்கம் பரிசீலித்துக்கொண்டிருக்கிறது. இவ்வளவு அபராதம் என்பது தாங்கக்கூடியது அல்ல என்றாலும், கடுமையான அபராதம் விதிப்பது உள்பட மற்ற பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, அதற்கான சட்டத்திருத்தங்களை மத்திய அரசாங்கம் கொண்டுவந்து, அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றவேண்டும். இது நிச்சயமாக புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த நல்லதொரு ஆயுதமாகும். ஆனால், இந்த ஆயுதத்தை கையில் எடுக்கும் அரசாங்க அலுவலர்களுக்கு பணம் சம்பாதிக்கும் ஆயுதமாகிவிடக்கூடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், இந்த புகையிலைப் பழக்கத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் நோய்களைக் குணமாக்க தமிழக மக்கள் ஒரு ஆண்டுக்கு ரூ.1,171 கோடி செலவழிக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனத்தின், ‘‘தமிழ்நாட்டில் புகையிலை தொடர்பான நோய்களால் ஏற்படும் பொருளாதார சுமை’’ என்ற ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மக்களுக்கே இவ்வளவு செலவென்றால், அரசாங்க மருத்துவமனைகளில் அரசு செலவழிக்கும் தொகை எவ்வளவு ஆகும் என்றால் மலைப்பாக இருக்கிறது. 


இந்த நிலையில், தமிழக அரசு விரைவில் புகைப்பழக்கம் அதிகம் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் புகையிலை பழக்க மீள் மையங்களை தொடங்க இருக்கிறது. இது நிச்சயமாக வரவேற்கவேண்டிய, பாராட்டவேண்டிய நடவடிக்கையாகும். ஆனால், இதை 10 மாவட்டங்களோடு விட்டுவிடாமல், அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி, புகையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகளை முழுவீச்சில் தொடங்கவேண்டும்.

நன்றி : தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment