பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, September 13, 2014

காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார்


குற்றாலக் குறவஞ்சி பாடிய திரிகூட ராசப்ப கவிராயர். "முக்கூடற்பள்ளு' ஆசிரியர், "திருவருட்பா' பாடிய ராமலிங்க சுவாமிகள், "காவடிச்சிந்து' பாடிய அண்ணாமலை ரெட்டியார் ஆகியோர் வழக்கமான செய்யுள் நடையை விட்டு விட்டு, புதிய வழியில் பாடல்களை இயற்றியவர்கள்.

கம்பருக்குப் பின்னும் பாரதியாருக்கு முன்னும் தமிழ்ப்பாட்டு நடைக்குப் புத்துயிர் ஊட்டிய மறுமலர்ச்சியாளர்களுள் அண்ணாமலை ரெட்டியாருக்குத் தனியிடம் உண்டு. ஆனால், அவர் பெயர் அதிகம்பேருக்குத் தெரியவில்லை. அவர் பாடிய காவடிச் சிந்து பாடல்கள் தமிழுக்குப் பெருமை சேர்ப்பவை.
சிந்து என்பது ஒருவகை இசைப்பாட்டு. தாளக்கட்டும், எளிய நடையும் இதன் உயிர். பெரும்பாலம் இவை நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டவை.

நந்தன் சரித்திரம், பள்ளு, குறவஞ்சி, பதினெண் சித்தர் பாடல்கள் முதலிய நூல்களில் அநேக பாடல்கள் நாட்டுப்பாடல்களின் சாயலிலேயே அமைந்திருப்பதைக் காணலாம்.

அண்ணாமலை ரெட்டியார் பிறந்த சென்னிகுளம், நெல்லை மாவட்டம் சங்கர நயினார் கோயிலுக்கு ஆறு மைல் வடக்கே உள்ளது. சிறு கிராமம். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றுத்தேர்ந்த ரெட்டியாரின் தமிழ்ப் புலமைத் திறனைக் கண்ட சேற்றூர் ஜமீன்தார் சுந்தரதாஸ் பாண்டியன், ஆதரவளித்து உபசரித்தார்.
ஒரு நாள் ரெட்டியாரிடம், ""அரண்மலையில் சாப்பாடு வசதிகளை ஒழுங்காகச் செய்து வருகிறார்களா?'' என்று கேட்டார் ஜமீன்தார். அன்று சாப்பிட்ட கீரைக் குழம்பு மோசமாக இருந்தது. அதனால், ரெட்டியார்,

""கீரை எனும் குழம்பதனால்
மனம் குழம்பிச் செரியாமல்
கிலேச முற்றேன்.
ஆரை இனி நோவதய்யா?
உலகினிலே இதுவும் என்றன்
அதிர்ஷ்டம் தானே!''

என்று பதிலளித்தார். அன்று முதல் அவருக்கு நல்ல முறையில் உணவளிக்க உத்தரவு பிறந்தது.
ரெட்டியார், மேலும் தமிழ் கற்பதற்காக, தஞ்சை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வந்து, அங்கிருந்த தமிழ் வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும், உ.வே.சாமினாத ஐயரிடமும் தமிழ் பயின்றார்.

ஆதீனத் தலைவர் மீது ஒரு பாடல் பாடினார். அதில் தன்னை "அரசன்' என்று குறிப்பிட்டுக் கொண்டார். அரசன் என்பதற்குப் பொருள் கேட்டபோது, "ரசமில்லாதவன்' என்று ரெட்டியார் பொருள் கூறவே, ஆதீன கர்த்தர் அவரை மெச்சி, ""நீர் ஜாதியிலும் ரெட்டி, புத்தியிலும் ரெட்டி'' என்று பாராட்டினார். (ரெட்டி - இரட்டிப்பு. "ஒட்டிக்கு ரெட்டியா செலவாயிடுச்சு' öன்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவதைக் காணலாம்.
இரு பொருள்பட சாதுரியமாகப் பேசுவதில் எப்போதும் ரெட்டியாருக்கு விருப்பம். ஒருமுறை, நண்பருடன் உலாவச் சென்றார். திரும்பும்போது, ரெட்டியார் சற்றுப் பின்தங்கி விட்டார். முன்னால் சென்றவர் திரும்பிப் பார்த்து, ""ஏன் தாமதம்?'' என்று கேட்டார்.

""முட்டாளுடன் வந்து விட்டதால் தாமதமாகி விட்டது !'' என்றார் ரெட்டியார்.

நண்பருக்கு திகைப்பு.

""ஆம். முள் தாளுடன் (காலோடு) வந்து விட்டதால் தாமதமாகி விட்டது,'' என்று பதம் பிரித்து விளக்கினார்.

ரெட்டியார் தன் இருபத்து ஆறாவது வயதில் (1891) தை அமாவாசையன்று, சென்னிகுளத்தில், காலமானார்.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

1 comments: