பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 25, 2014

மராட்டிய சட்டசபை தேர்தலில் அதிரடி திருப்பம் பா.ஜனதா–சிவசேனா கூட்டணி முறிந்தது காங்.–தேசியவாத காங். கூட்டணியும் உடைந்ததுசட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு சிக்கல் எதிரொலியாக மராட்டிய அரசியலில் அதிரடி திருப்பமாக சிவசேனா– பா.ஜனதா கூட்டணி உடைந்தது. மேலும் காங்கிரஸ்–தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் முறிந்தது.

சட்டசபை தேர்தல்

மராட்டிய சட்டசபை தேர்தல் அக்டோபர் 15–ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (சனிக்கிழமை) முடிகிறது. மராட்டியத்தில் 25 ஆண்டுகளாக கூட்டணி வைத்து செயல்பட்டு வரும் சிவசேனா – பா.ஜனதா கட்சிகள் இந்த சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்தன.

இதனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. இரு கட்சி தலைவர்களும் கூடி பேசி வந்தனர். ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை.

இறுதி பேச்சு

இந்த நிலையில் நேற்று சிவசேனா, பா.ஜனதா தலைவர்கள் இறுதியாக கூடி பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் சிவசேனா 151 தொகுதிகளில் போட்டியிடும் என்று ஆரம்பத்தில் இருந்தே பிடிவாதமாக இருந்தது. பா.ஜனதாவுக்கு 119 தொகுதிகளும், கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு 18 தொகுதிகளையும் ஒதுக்க சிவசேனா முன்வந்தது.

ஆனால் பா.ஜனதா சரிபாதியான 144 தொகுதிகள் வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியது. பின்னர் 135 தொகுதிகளை கேட்டது. அதன்பிறகு 130 தொகுதிக்கு இறங்கி வந்தது. இரு கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பாக தங்களது திட்டத்தை அறிவித்தன.

மற்றொரு திட்டம்

இந்த நிலையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது சிவசேனா மற்றொரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி சிவசேனா 151, பா.ஜனதா– 127, சிறிய கட்சிகள்–10 தொகுதிகள் வீதம் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்தது.

சிவசேனாவின் இந்த திட்டத்தை பா.ஜனதா ஏற்க மறுத்தது. இதனால் பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மராட்டிய மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் வினோத் தாவ்டே (பா.ஜனதா) ஆகியோர் பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டணி முறிந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

கூட்டணி உடைந்தது

இந்தநிலையில் சிவேசனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் திவாகர் ராவ்தே, அனில் தேசாய் எம்.பி. ஆகியோரை பா.ஜனதா தலைவர்களை சந்திக்க அனுப்பி வைத்தார். ஆனால் கடைசி வரை உடன்பாடு எட்டவில்லை. இதனால் 25 ஆண்டு பழமையான சிவசேனா – பா.ஜனதா கூட்டணி எதிர்பாராதவிதமாக உடைந்தது.

இதுபற்றி பா.ஜனதா மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

கனத்த இதயத்துடன் முடிவு

கூட்டணி விவகாரத்தில் சிவசேனா கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் அந்த கட்சியுடன் கூட்டணியை முறித்து கொள்ள நாங்கள் முடிவு செய்து விட்டோம். இது தொடர்பாக சிவசேனாவுக்கு தகவல் அனுப்பி விட்டோம். கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்து உள்ளோம். 25 ஆண்டு கூட்டணி முறிந்தாலும், சிவசேனாவுடன் நட்பு தொடர்ந்து நீடிக்கும். தேர்தல் பிரசாரத்தின் போது சிவசேனாவை விமர்சிக்க மாட்டோம். ஊழல் காங்கிரஸ்–தேசியவாத காங்கிரஸ் அரசை அகற்றுவதே எங்களது இலக்கு. ஏற்கனவே கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

காங்கிரஸ் கூட்டணி 

சிவசேனா– பா.ஜனதா கூட்டணி உடைந்த நிலையில், மராட்டியத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணி அரசை நடத்தி வந்த காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையேயும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை.

தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளில் சரிபாதியாக 144 தொகுதிகளை தேசியவாத காங்கிரஸ் கேட்டது. மேலும் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்–மந்திரி பதவியை சுழற்சி அடிப்படையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

கூட்டணி முறிந்தது

இந்த இரண்டு கோரிக்கைகளையும் காங்கிரஸ் நிராகரித்தது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேசியவாத காங்கிரசுக்கு 114 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தடவை 10 தொகுதிகளை கூடுதலாக ஒதுக்கி, 124 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதன்பிறகு இரு கட்சி தலைவர்களும் ஒன்று கூடி ஆலோசிக்கவில்லை.

இதற்கு மத்தியில் காங்கிரஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல்கட்டமாக 116 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான், சதாரா மாவட்டத்தில் உள்ள தெற்கு காரட் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் 15 ஆண்டு கால கூட்டணியும் முறிந்ததாக கூறப்பட்டது.

அவசர ஆலோசனை

இந்த நிலையில் அடுத்த கட்ட முடிவு எடுப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று துணை முதல்–மந்திரி அஜித்பவார் வீட்டில் நடந்தது. இதில் கட்சியின் தேசிய தலைவர் சரத்பவார், மாநில தலைவர் சுனில் தத்காரே, துணை முதல்–மந்திரி அஜித்பவார், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், பிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் தனித்து போட்டியிட இருப்பதாக அந்த கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தனர்.

 நன்றி :- தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment