பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 30, 2014

தனித்துவமான தமிழ் சினிமா




ந்த ஒருமனிதனும் 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டே இருக்கமுடியாது. அதுபோல, 24 மணி நேரமும் ஓய்வு எடுத்துக்கொண்டோ, அல்லது தூங்கிக்கொண்டோ இருக்கமுடியாது. அவனுடைய உடலும், உள்ளமும் சோர்வடையாமல் உற்சாகமாக இருக்கவேண்டுமானால், ஏதாவது ஒரு பொழுதுபோக்கு நிச்சயமாக தேவை. பொழுதுபோக்கில் முக்கிய இடத்தில் இருப்பது சினிமாதான். டெலிவிஷனில்கூட சினிமா பார்ப்பதே முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்திய சினிமா கடந்த ஆண்டு 100 வயதை தாண்டிவிட்டது. ஆங்கிலேயர் தங்கள் காலடியை இந்தியாவுக்குள் வைத்து, அவர்கள் ஆட்சியை கொண்டுவந்தவுடன் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கு பல மிஷனரிகளும் வந்தனர். அவர்கள் கிறிஸ்தவ மதம் தொடர்பான குறிப்பாக ஏசுநாதர் பற்றிய மவுன படங்களை, ஊர் ஊருக்கு திரையில் போட்டு காட்டினார்கள். அப்போது பல இந்துக்களுக்கு நம் தெய்வங்களை இப்படி திரையில் பார்க்கமுடியாதா? என்று ஏக்கம் இருந்தது.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே என்ற மராத்தியரும் அந்த கனவில்தான் 1912–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லண்டனுக்கு சென்று சலன படங்கள், அல்லது ஊமை படங்கள் என்று அழைக்கப்படும் படங்களை தயாரிக்க படித்துவிட்டு, அதற்கான கருவிகள், கச்சா பிலிம்களை வாங்கிக்கொண்டு இந்தியா திரும்பினார். தன்னுடைய முதல் ஊமைப்படமான ராஜா ஹரிசந்திராவை தயாரித்து 1913–ம் ஆண்டு மே மாதம் 3–ந் தேதி வெளியிட்டார். ஹரிசந்திரா கதை அனைவருக்கும் தெரியும் என்பதால், ஊமை படமாக இருந்தாலும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதன்காரணமாக இந்தியா முழுவதிலும் அனைத்து இடங்களிலும் பலர் ஊமை படங்களை தயாரிக்க முற்பட்டனர். தமிழ்நாட்டில் இத்தகைய ஊமை படத்தை முதலில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு ஸ்டுடியோவை அமைத்து,  வேலூரைச்சேர்ந்த நடராஜ முதலியார் கீசகவதம் என்ற படத்தை தயாரித்து 1919–ம் ஆண்டு வெளியிட்டார். முதல் தமிழ் பேசும் படமாக காளிதாஸ் என்ற படம் 1931–ம் ஆண்டு வெளிவந்தது. அதன்பிறகு தமிழ் சினிமாவுக்கு ஏறுமுகம்தான். ஒருபக்கம் இந்தி படங்களும், மற்றொரு பக்கம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்பட அனைத்து மொழிப்படங்களும் அனைத்து தொழில் நுட்பங்களிலும் தயாரிக்கப்பட்டு நடிகர்களும், நடிகைகளும் கொடிகட்டிப் பறந்தனர்.

இந்த நிலையில், தற்போது ஐ.நா.வின் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், இந்திய படங்களில் பெண்களை மிகவும் செக்சியாக காட்டுகிறார்கள்,
35 சதவீத பெண் கதாபாத்திரங்களை ஆடை குறைப்போடுதான் காட்டுகிறார்கள், பெண் கதாபாத்திரங்களுக்கு 24.9 சதவீதம்தான் உரையாடல் வழங்கப்படுகிறது, பெண் தயாரிப்பாளர்கள், பெண் எழுத்தாளர்கள் எல்லாமே குறைவாக இருக்கிறது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் எதுவுமே தமிழ் சினிமாவுக்குப் பொருந்தாது. சினிமா பார்ப்பது என்பது ஒரு பொழுது போக்குக்குத்தானே தவிர, நீதி போதனைகளை படிப்பதற்காக செல்லும் இடம் அல்ல. திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவதற்கு முன்பு, சென்சார் சர்டிபிக்கேட்டு பெறவேண்டும். அதற்கென சில விதிமுறைகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சியும் குறிப்பாக கதைக்கு தேவையான கற்பழிப்பு, அல்லது கற்பழிப்பு முயற்சி, சண்டை போன்ற காட்சிகள் எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்பதற்கு தெளிவான விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிகளை அப்படியே பின்பற்றினாலே எந்த குறைக்கும் இடம் இருக்காது.

சினிமா பொதுமக்களிடம் சிறந்த பொழுதுபோக்காக கருதப்படுவதால்தான், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 281 தமிழ்படங்கள் வெளிவந்துள்ளன. தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு தனியாக ஒரு ஆய்வு தேவையில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு எத்தகைய படங்கள் ஓடுகின்றன என்பதைப் பார்த்தாலே புரிந்துவிடும். மக்களின் ரசனைக்கேற்ப விதிகளுக்குட்பட்டு மக்களின் பொழுதுபோக்குக்காக இன்னும் தரமான திரைப்படங்களை தமிழ் திரைஉலகம் தயாரித்து, தமிழ் சினிமா தனித்துவம்மிக்கது என்ற பெருமையை கொண்டுவரவேண்டும். அதற்கு சென்சார் போர்டின் பங்களிப்பும் மிகவும் அத்தியாவசியமானது. 

நன்றி :- தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment