பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, September 14, 2014

மாண்டிசோரி கல்வியில் என்ன இருக்கிறது?


மான்டிசோரி கல்விமுறை இத்தாலியில் பிறந்த மருத்துவர் மரியா மாண்டிசோரியின் பல வருட ஆய்வுகள், பணிகளின் பயனாய் உருவான கல்வித்திட்டம். கல்வி கற்றல் என்பது குழந்தைகளிடம் நேரிய ஆளுமையை, தன்மதிப்பை கட்டமைப்பதாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தக் கல்விமுறை காலப்போக்கில் எப்படியோ மேல்தட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் எட்டுவதாகிவிட்டது. இந்த நிலையை மாற்ற ஸ்ரீராமசரண் ட்ரஸ்ட் என்ற தன்னார்வத் தொண்டுநிறுவனம் பெருமுயற்சி மேற்கொண்டதன்

 பயனாய் இன்று சென்னையிலுள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் தமிழக அரசு இந்தக் கல்விமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 


 அப்படி என்னதான் இருக்கிறது இந்த மாண்டிசோரி கல்வித்திட்டத்தில்...?


 இதோ! எடுத்துரைக்கிறார் மாண்டிசோரி ஆசிரியை செல்வி.


 அன்றாட வாழ்க்கையின் செயல்முறைகளே மான்டிசோரி கல்விமுறை. குழந்தைகளிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமோ அல்லது வகுப்பறைக்குள் மட்டுமோ என்பதல்ல. 3 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைப் பருவத்தில்தான் குழந்தையிடம் நல்ல குணங்கள் படியும் என்பதால் அந்தப் பருவத்தில் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார் மான்டிசோரி. 


 உனக்கு வேண்டியதை நீயே தேர்ந்தெடுத்துக்கொள் என்று கூறும்போது குழந்தை தனக்குப் பிடித்ததைத் தேர்வுசெய்து ஆர்வத்துடன் அதில் ஈடுபடுகிறது. வேலை செய்வதற்கு ஏற்ற சூழலைத் தருவதுடன் அதில் சில சவால்களும் இருக்கும்படி செய்தால் குழந்தை அதிலும் தன்னுடைய ஆற்றலுக்கேற்ற தேர்வுகளைச் செய்துகொள்கிறது. நாலைந்து வழிகளில் ஏதோ ஒன்று என்றில்லாமல், படிப்படியாக வளர்ச்சி பெற்ற வழியையே தேர்ந்தெடுக்கிறது. இயல்பாகவே அது முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது. ஆரம்பப் பாடசாலைகளின் வகுப்பறைகளில்கூட இதை நாம் காணலாம். தான் செய்ய வேண்டிய வேலையைத் தானே தேர்வு செய்ததன் மூலம், குழந்தை தன்னுடைய செயலுக்குத் தானேபொறுப்பேற்றுக் கொள்கிறது. 


 அந்தப் பணியைச் செய்யும்போது தரையில் எதையாவது கொட்டினால் தானே துடைக்கிறது. பெரியவனாகும்போதும் அதே பொறுப்புணர்வு தொடருகிறது. 


 எதைச் செய்வது என்பதில் சுதந்திரம் இருந்தாலும் தேர்வு செய்த வேலையைச் செய்வதில் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது வேலையைத் தேர்வு செய்தபிறகு அதை நிறைவேற்றும்போது உடலியக்கமும் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. குழந்தை ஒரு பொருளை அதற்குரிய இடத்தில் வைக்கக் கற்றுக்கொள்கிறது. இதன்மூலம் அடுத்தவர் அதை பயன்படுத்துவதும் எளிதாகிறது. இச்செயல், மற்றவர்களுக்காகக் கவலைப்படுவதையும், அடுத்தவர்கள் தேவையை உணர்ந்து செயல்படுவதையும் ஒருங்கே ஊட்டுகிறது.


 குழந்தையிடம் படைப்பாற்றலை ஏற்படுத்த இதுவே சிறந்த வழி. தானே செய்து பார்த்து, தவறுகளைத் திருத்திக்கொண்டு, வெற்றிகரமாக முடிப்பதே வேலையை மிகுந்த ஆர்வத்துடன் செய்வதற்கு குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறது. தானே கற்றுக்கொள்வது, தானே தவறைத் திருத்திக்கொள்வது என்பது குழந்தையின் ஆளுமையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 


 தானியங்களைப் பாட்டிலில் நிரப்ப வேண்டுமென்றால் அதை எந்த அளவுக்குச் சாய்க்க வேண்டும் என்பதே நேரடியாகச் செய்துபார்த்து குழந்தை கற்றுக்கொள்கிறது. இது திட்டமிட்டு, கவனத்துடன், கச்சிதமாகச் செய்துமுடிக்க உதவுகிறது. ""டம்ளரை பத்திரமாக வை'' என்று குழந்தையிடம் கூறும்போது அதன் இறுதிப் பயன் என்ன என்று அதற்குத் தெரியாது. இருந்தாலும் சொல்லப்பட்டதுவரை அது சீராகவே செய்யும். 


 ஒரு வேலையைச் செய்வதைப் போலவே அதை முடிப்பதும் முக்கியமானது. அதுவும் குழந்தைக்குப் பயனுள்ளது. இதனால் எடுத்தகாரியத்தை இறுதிவரை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைக்கு ஏற்படும். ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அதை முற்றாக முடிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியை அது கற்றுத்தரும். இது அந்தக் குழந்தையின் ஆளுமைக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கும்.


 ஒரு வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதால் ஆராய்ச்சி மனப்பான்மை ஏற்படும்,விடாமுயற்சி வளரும், அனுபவம் கூடும். அனுபவம் அந்த வேலைக்கு மதிப்பைக் கூட்டும். மேலே குறிப்பிட்ட குணங்கள் அனைத்தையும் ஒரு வகுப்பறையில் நேரில் பார்த்துவிட முடியும். இவை ஆன்மிகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. நேரில் பார்க்கும்போது நம்பக்கூட முடியாது. குழந்தைகள் வேலையைச் செய்யும்போது தாங்களே உணர்ந்து கொள்வதால் இந்த குணங்கள் அனைத்தும் அவர்களுடைய ஆளுமையில் அப்படியே ஐக்கியமாகிவிடும்.


 மான்டிசோரி இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றுவது வருவாய் தரக்கூடிய வேலையைக் குறிவைப்பதற்காக அல்ல. குழந்தைகளின் நலன்களுக்கானது.


 - லதா ராமகிருஷ்ணன். 


நன்றி : தினமணி
 
 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment