பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 11, 2014

5 ஆண்டுகள் ஊதியம் இல்லாதபோதும் உழைக்கத் தயங்காத ஆசிரியை : கண்டுகொள்ளுமா தமிழகக் கல்வித் துறை?

ஆசிரியை நடத்தும் பாடத்தை கவனிக்கும் மாணவிகள். (உள் படம்) சிறப்பாசிரியை ஏ.சுகுணா.

கரூர் சிஎஸ்ஐ மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 1987-ம் ஆண்டு இயலா குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டம் (ஐஇடிசி) ஒன்றினை திருச்சியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஜெர்மனி நிதியுதவியுடன் தொடங்கியது. இங்கு காது கேளாத, வாய் பேசாத, பார்வையற்ற, மாற்றுத் திறனாளிகளுக்கும், மன நலம் குன்றிய மாணவிகளுக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது. இத்திட்டம் 1998-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மனிதவளத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்தி வந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் பல்வேறு முறைகேடு காரணமாக 1999-ம் ஆண்டு திருச்சியில் உள்ள மற்றொரு தனியார் தொண்டு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

இத்திட்டம் 2009-ம் ஆண்டு இயலா குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வித்திட்டம் (ஐஇடி எஸ்எஸ்) எனப் பெயர் மாற்றப் பட்டது. 1994-ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் சிறப்பா சிரியையாக பணியாற்றி வருபவர் ஏ.சுகுணா. 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இவருக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில் இத்திட்டத்தை கரூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துக்கு 2010-ம் ஆண்டு திருச்சி தொண்டு நிறுவனம் மாற்றியது. மாணவிகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளவும் ஆசிரியை ளை ஏற்கமுடியாது எனவும் அத்தொண்டு நிறுவனம் தெரிவித்தது. இதற்கு சிறப்பாசிரியை சுகுணா ஏதிர்ப்பு தெரிவித்தார்.

இதன்பின் சில ஆண்டுகள் கழித்து அரசே இத்திட்டத்தை ஏற்று நடத்திவரும் நிலையில், சிஎஸ்ஐ மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 20 ஆண்டுகளாக இயலாக் குழந்தைகளுக்காக பணியாற்றிவரும் ஆசிரியை சுகுணாவுக்கு 2009-ம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு ஊதியம் வழங்கப்படவில்லை. 2014-ம் ஆண்டு செப்டம்பருடன் 5 ஆண்டு களாகிவிட்ட நிலையிலும் இங்கு பயிலும் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் தொடர்ந்து ஊதியமின்றி தன் பணியை செய்துவருகிறார் சுகுணா.

கரூர் மாவட்டத்தில் இருந்து 2010-ம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்ட இயலாக் குழந்தைகளுக்கான இடைநிலை கல்வித்திட்ட சிறப்பாசிரியர் பட்டியலில் சிறப்பாசிரியை சுகுணா மற்றும் முன்பு இத்திட்டத்தில் பணியாற்றிய மற்றொரு ஆசிரியையான ஞானசெல்வி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.

2009-ம் ஆண்டு அக்டோபர் முதல் ஊதியம் வழங்கப்படாதது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர், ஆட்சியர், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், முதல்வரின் தனிப் பிரிவு, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர், டெல்லியில் உள்ள மத்திய மனித வளத்துறை உள்ளிட்ட பலருக்கு புகார் மீது புகார் அனுப்பியும் எந்த பலனும் இல்லை.
பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரியின் கருத்து

சிறப்பாசிரியை சுகுணாவுக்கு 5 ஆண்டு காலமாக ஊதியம் வழங்கப்படாதது குறித்து பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது கூறியதாவது:

‘‘மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய இடைநிலை கல்வி திட்டத்தை அரசு ஏற்று நடத்துவதற்கு முன்பு இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வந்த தொண்டு நிறுவனம் சமர்ப்பித்த ஆசிரியர் பட்டியலில் ஆசிரியை சுகுணாவின் பெயர் இடம்பெறவில்லை. அந்தத் தொண்டு நிறுவனம் சமர்ப்பித்த பட்டியலில் இடம்பெற்றிருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மத்திய அரசிடம் இருந்து ஊதியம் வாங்கிக்கொடுக்கப்பட்டு வருகிறது.

திடீரென புதிதாக ஒரு ஆசிரியருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவது சிரமம். இருப்பினும், 5 ஆண்டு காலம் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர் ஊதியம் பெறாமல் இருப்பது வருத்தத்துக்குரியது. சிறப்பாசிரியை சுகுணா இந்த திட்டத்தில் பணியாற்றியது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மூலம் விசாரித்து, அவரது ஆய்வறிக்கையின்படி தமிழக அரசு மூலமாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச் சகத்துக்கு தகவல் அனுப்பி, ஊதியம் பெற்றுத்தர முயற்சி செய்து பார்க்கலாம். எனினும், இது உடனடியாக முடிக்கக்கூடிய விஷயம் அல்ல” என்றார்.

நன்றி : தி இந்து

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment