பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 11, 2014

உயிர்காக்கும் வீரர்களுக்கு வணக்கம்
ந்தியா எல்லா துறைகளிலும் வேகமாக வளர்கிறது. ஆனால், வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கும் முன்னறிவிப்புகளிலும், முன் எச்சரிக்கைகளிலும் இன்னும் துல்லியமாக தெரிவிக்கும் வகையில் முன்னேறவில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும். மேலைநாடுகளில் சில நாட்கள் கழித்து நடத்த திட்டமிட்டுள்ள நிகழ்ச்சிகளையே வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் கேட்டுவிட்டு முடிவு செய்கிறார்களாம். ஆனால், இந்தியாவில் அடுத்த நாளில் வானிலை எப்படி இருக்கும் என்பதை இன்னும் சரியாக சொல்லமுடியவில்லையே என்பதை நிரூபிக்கும் சம்பவம் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு திணறிக்கொண்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. 

கடந்த சனிக்கிழமை பெய்த பெருமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மலைபிரதேசமான ஜம்மு காஷ்மீர் இப்போது கடல்போல காட்சி அளிக்கிறது. இவ்வளவு பேய் மழை பெய்து இருக்கிறது. ஆனால், இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை வெளியிட்ட முன்அறிவிப்பு வழக்கம்போல இருந்தது. பரவலாக ஆங்காங்கு கனத்த மழை முதல் பலத்த கனமழை பெய்யக்கூடும் என சாதாரணமாக அறிவிப்பு வெளியிட்டதை யாரும் குறிப்பாக அரசு நிர்வாகமும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ராணுவத்துக்குக்கூட முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. ஆனால், செப்டம்பர் 2–ந் தேதி பெருமழை பெய்தபோது எச்சரித்தோம், மாநில அரசு அதை கண்டுகொள்ளவில்லை என்று மத்திய அரசாங்க அதிகாரிகள் கூறுகிறார்கள். ஜம்மு காஷ்மீரில் உள்ள 22 மாவட்டங்களில், 10 மாவட்டங்களில் ஆகஸ்டு 28–ந் தேதி முதல் செப்டம்பர் 3–ந் தேதி வரை மழை இடைவிடாமல் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ஜீலம், செனாப், தவாய் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது மட்டுமல்லாமல், சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. 

கடந்த 109 ஆண்டுகளில் இதுபோல ஒரு வெள்ளத்தை ஜம்மு காஷ்மீர் பார்த்ததில்லை என்ற அளவுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 2,500 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. சாதாரண ஏழை–எளிய மக்கள் வசித்துவந்த வீடுகள் எல்லாம் இடிந்து தரைமட்டமாகிவிட்டன. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் தண்ணீர் வடியாததால், லட்சக்கணக்கான மக்கள் இன்னும் மீட்கப்படவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களை விமானத்தில் சுற்றிப்பார்த்து இது தேசிய பேரழிவு என்று வருத்தத்துடன் அறிவித்துள்ளார். நிவாரண பணிகளுக்காக ஏற்கனவே மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் 1,100 கோடி ரூபாய் ஒதுக்கிய பிரதமர், வெள்ளச்சேதத்தை நேரில் பார்த்தபிறகு மேலும் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பகுதிகளிலும் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளதால் மோடியும் உதவிக்கரம் நீட்டியுள்ளார். பாகிஸ்தானும் உதவிக்கரம் நீட்டுவதாக தெரிவித்துள்ளது. ஆக, மனிதாபிமானம் வென்றுள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா மற்ற மாநிலங்களுக்கு முன்னால் தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி அளிப்பதாக அறிவித்து கருணைக்கரம் நீட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவம், விமானப்படை, கடற்படை வீரர்கள் தங்கள் உயிரை பயணம் வைத்து கண்துஞ்சாமல், பசிநோக்காமல் இரவு–பகலாக பணியாற்றி வருகிறார்கள். வெள்ளத்துக்குள் சென்று இதுவரையில் ஏறத்தாழ 80 ஆயிரம் பேருக்கு மேல் மீட்டு இருக்கிறார்கள். பல இடங்களில் தற்காலிக பாலம் அமைத்து இருக்கிறார்கள். எந்த நேரமும் ஹெலிகாப்டர்களில் மீட்புபணி  நடை பெறுவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள், போர்வைகள், குடிதண்ணீர், குழந்தை உணவு, டெண்டுகள் என அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகிறார்கள். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதனை மீட்கும் வரை எங்கள் வீரர்களில் யாரும் அவர்களின் இருப்பிடங்களுக்கு திரும்பமாட்டார்கள் என்று ராணுவ தளபதி கூறியிருப்பதைக் கேட்கும்போது, நாட்டு மக்கள் அனைவரும் இந்த நாட்டை மட்டும் காப்பாற்றும் பணியில் மட்டுமல்ல, இத்தகைய பேரிடர்களிலும் மக்களைக் காப்பாற்றும் முப்படை வீரர்களுக்கு இந்தியா ஒரு வீரவணக்கம் செலுத்துகிறது. மக்களும் நிவாரண நிதிக்கு தாராளமாக உதவவேண்டும். 

நன்றி : தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment