பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 22, 2014

48 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத மதுராந்தகம் ஏரி


போதிய நீரின்றி சிறு ஓடைபோல்

 காட்சி அளிக்கும் மதுராந்தகம் ஏரி.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாக திகழும் மதுராந்தகம் ஏரி கடந்த 48 ஆண்டுகளாக தூர்வாராததால், தற்சமயம் கோடை வறட்சியால் போதிய நீரின்றி, பயிர் வைத்த விவசாயிகளும், குடிநீர்ப் பற்றாக்குறையால் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.
மழைக் காலத்தில் மதுராந்தகம் ஏரியின் நீரைப் பார்க்கும்போது, அகண்டு விரிந்த குட்டிக் கடல் மாதிரி காட்சி அளிக்கும்.
இதன் நீர்மட்டக் கொள்ளளவு 21.5 அடியாகும். பொதுவாக இந்த ஏரி ஐப்பசி, மார்கழி, கார்த்திகை போன்ற மாதங்களில் பெய்கிற வடகிழக்குப் பருவமழையால், நிரம்பி வழியும். ஏரியின் நீர்ப் பாசனக் கால்வாய் மூலம் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
பாசன வசதியை மதுராந்தகம், முள்ளி, முன்னித்திகுப்பம், கிணார், கத்திரிச்சேரி, வளர்பிறை, கடப்பேரி போன்ற 20 கிராமங்கள் பயன்பெறுகின்றன.
உத்தரமேரூர், வேடந்தாங்கல் போன்ற ஏரிகளில் பெரும் மழையின்போது வருகிற வெள்ளநீரினால் நிரம்பி வழியும்.
இதுமாதிரி நிரம்பி வழியும் உபநீர் கால்வாய் வழியாக மதுராந்தகம் ஏரியை வந்தடைகிறது. மதுராந்தகம் ஏரியின் நீர் நிரம்பி வழியும் காலங்களில், கல்லாற்றின் வழியாக உபரிநீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏரியின் மதகுகளில் 84 லாக்குகள் உள்ளன. அவற்றில் 32 தானியங்கி லாக்குகள் உள்ளன. இவைகளின் மூலம் திறந்து விடுவதால், உபரிநீர் கால்வாய்களின் மூலம் எளிதில் வெளியேற்ற முடியும். இத்தகைய உபரிநீர் பெரிய கால்வாய்களின் வழியாக, 30 ஏரிகளில் நிரம்ப வழி செய்யப்பட்டுள்ளது.
அருங்குணம் ஏரி, காவாதூர் ஏரி, வீராணகுணம் ஏரி, சீவாடி ஏரி, நீலமங்கலம் ஏரி, நெசப்பாக்கம் ஏரி போன்ற ஏரிகளில் நிரந்தரமாக நீர் தங்க வழி செய்யப்பட்டுள்ளது.
30 ஏரிகளின் வழியாக 4746.93 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி கிடைக்கிற நிலை ஏற்படுகிறது. இப்பகுதி விவசாய மக்களுக்கு மதுராந்தகம் ஏரி நீரினால், 3 போகம் விவசாய பயிர்களை விளைவித்து வந்தனர்.
மழைக்காலங்களில் வழிந்தோடி வருகிற மழைநீர் முறையாக ஏரிக்குச் செல்ல முடியாமல், நீர்வழி கால்வாய்களை பலர் ஆக்கிரமித்துள்ளதால், தடை ஏற்படுகிறது. மதுராந்தகம் ஏரி நீர்ப் பகுதியை அரசியல் கட்சி பிரமுகர்கள், குறிப்பாக மோச்சேரி பகுதியில் ஆக்கிரமித்து பயிரிட்டு வருகின்றனர். அவர்கள் ஏரிப் பகுதியை தமது சொந்த நிலம் மாதிரி பராமரித்து வருகின்றனர்.
தற்சமயம் மோச்சேரி மக்கள், ஏரி நீர் இருப்புப் பகுதியில் பயிரிட்டு வருவதால், இதை நீர்ப் பாசன பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறையினர் கண்டுக் கொள்ளாமல் இருப்பதால், மதுராந்தகம் ஏரி அதன் பரப்பளவில் நாளுக்கு நாள் மிகவும் சுருங்கி வருகிறது.
ஆக்கிரமிப்புகளை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், உயர்மட்டக் கால்வாய் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
இதற்கான செலவீன மதிப்பீடாக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் எஸ்.டி.உகம்சந்த் முன்னின்று இப்பணிகளை செய்து முடித்தார். ஏரியில் அதிக நீர்வரத்து இருக்கும்போது, அதன் நீர் சிறிய கால்வாய் மூலம் அருகில் உள்ள ஏரிகாத்த ராமர் திருக்கோயிலின் குளத்துக்கு வந்து சேரும்.
இதனால் அத்திருக்குளம் என்றும் வற்றாத நீர்த்தடாகமாக திகழ்ந்து வந்தது. அந்த கால்வாயை மூடி பலர் வீட்டை கட்டியுள்ளனர். கடந்த 1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, இந்த ஏரியை தூர்வாரும்போது, நேரில் வந்து பார்வையிட்டுள்ளார்.
அந்த நேரத்தில், மதுராந்தகம் ஏரியை ஒட்டியுள்ள மோச்சேரிக்குச் செல்ல வழிப்பாதைக்காக தூர்வாரப்பட்ட மண்ணை எடுத்துள்ளனர். மதுராந்தகம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிற கட்சி வேட்பாளர்கள் தன்னை வெற்றி பெற வைத்தால், முதல் வேலையாக இந்த ஏரியை தூர்வார ஏற்பாடுகளை செய்வதாக வாக்குறுதியை கொடுத்து, தேர்தலில் வெற்றி பெறுகின்றனர். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றபின் கொடுத்த வாக்குறுதியை மறந்து விடுவர்.
 இது குறித்து மதுராந்தகம் ஏரி நீர்ப் பாசன சங்கத் தலைவர் ஜி.நாராயணன் கூறியது:
"கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரி நீரின் மூலம் 3 போக பயிர்களை வைத்து விவசாயம் செய்த நிலை மாறி, தற்சமயம் 1 போக பயிர்களை வைக்க கூட நீர் இல்லாத நிலை உள்ளது.
மழைக்காலத்தில் வெள்ளநீரால் அடித்து வரப்படுகிற மணலை அப்படியே ஏரியில் படிந்து நாளுக்கு நாள் அவை ஏரியின் ஆழத்தை குறைத்துக் கொண்டே வருகிறது.
ஏரியில் நீர்மட்டக் கொள்ளளவு 21.5 அடியில், தற்சமயம் 15 அடி கூட இல்லை. அந்தஅளவுக்கு ஏரி தூர்ந்து போயுள்ளது. இந்த ஏரியில் நீர் இருந்தால்தான் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 1 மணி நேரமாவது குடிநீரை வழங்க முடியும்.
தற்சமயம் ஏரி வற்றிவிட்டதால், நகராட்சி சார்பில், முழு அளவில் குடிநீரை வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அரசு உடனடியாக தலையிட்டு, ஏரியை தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் போன்ற பணிகளை உடனடியாக செய்ய முன்வர வேண்டும்' என்றார் அவர்.
அரசின் பொதுப்பணித் துறை (ஏரிப் பாசனம் பிரிவு) உதவிப் பொறியாளர் பாஸ்கர் கூறியது: "இது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. நான் தனிப்பட்ட முறையில் எடுக்கப்படுகிற முடிவு அல்ல. மேல் அதிகாரிகளின் உத்தரவு வந்தவுடன், உரிய டென்டர் மூலம் ஏரியை தூர்வாரும் பணியை செய்ய முடியும்' என்றார்.
நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment