பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 22, 2014

இந்த வார கலாரசிகன் - 21 September 2014 01:56 AM IST

எந்த இலக்கியக் கூட்டத்தில் பங்கெடுக்கச் சென்றாலும், அந்த அமைப்பாளர்களும் நானும் கவலையுடன் பகிர்ந்து கொள்ளும் பிரச்னை, இளைஞர்கள் இலக்கியக் கூட்டங்களுக்குப் பெருமளவில் வருவதில்லை என்பதும், அடுத்த தலைமுறையில் இலக்கியம் பற்றிப் பேச யாரும் தயாராகவில்லையே என்பதும்தான். எங்களுடைய அச்சமும் நாங்கள் கொண்டிருந்த கருத்தும் தவறு என்பதை சமீபத்தில், "இளம்தமிழர் இலக்கியப் பட்டறை'யின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தெரிந்தது. தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை ஒரு மிகப்பெரிய தமிழ்ப் புரட்சியைக் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? மாவட்டம்தோறும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றை நடத்தி, அதன் மூலம் மாவட்டத்திற்குப் பத்துப் பேரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் சென்னைக்கு அரசு செலவில் வரவழைக்கப்படுகின்றனர். ஒருவாரம் அவர்கள் சுவையாக உண்ணவும் வசதியாகத் தங்கவும் இந்திரா நகர் இளைஞர் விடுதியில் அரசே ஏற்பாடு செய்கிறது.

ஒரு வாரம் நடக்கும் "இளந்தமிழர் இலக்கியப் பட்டறை'யில், அவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே இலக்கியத்தில் ஆர்வமுள்ள அந்த இளம் தலைமுறையினரின் எழுத்தாற்றலையும், பேச்சாற்றலையும் மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், இலக்கியப் பேச்சாளர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டு, அந்த இளம் இலக்கியவாதிகளுடன் கலந்துரையாடவும், அவர்களுக்குப் புதிய பல செய்திகளைத் தெரிவிக்கவும் வழிகோலப்படுகிறது.

ஒரு வாரம் நடக்கும் இலக்கியப் பட்டறையில் பட்டை தீட்டப்படும் அந்தத் துடிப்பான இளைஞர்களிடம் காணப்படும் எழுச்சியும், தமிழ்ப் பற்றும், இலக்கியத் தாகமும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்திவிட்டது. அந்தப் பிரமிப்பிலிருந்து இன்னமும்கூட நான் விடுபடவில்லை என்பதுதான் உண்மை.

ஆண்டுதோறும் 20 தரமான இலக்கியவாதிகள், இலக்கியப் பேச்சாளர்கள் மாவட்டம்தோறும் தயாராகி வருகிறார்கள். இந்தச் செயற்கரிய பணியை, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு.சேகரும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவனும் தமிழக அரசின் செய்தித் துறைச் செயலர் முனைவர் ராசாராமின் வழிகாட்டுதலுடன் செவ்வனே செய்து வருகின்றனர். இதுவரை இருந்த எந்த அரசும் செய்யாத, இலக்கிய அமைப்புகளாலோ, ஊடகங்களாலோ செய்து காட்ட முடியாத தமிழ்ப் புரட்சி இது.

அரசு விட்ட இடத்திலிருந்து, இளந்தமிழர் இலக்கியப் பட்டறையில் தயாரானவர்களை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கெல்லாம் இருக்கிறது. அனைத்து இலக்கிய அமைப்புகளும், தங்களது நிகழ்ச்சிகளில் இந்த இளைஞர்களுக்குப் பங்குபெறும் வாய்ப்பை அளிக்க வேண்டும். இவர்கள் பங்குபெறும் பட்டிமன்றம், கருத்தரங்கம், கவியரங்கம் என்று நிகழ்ச்சிகள் அமைக்கப்பட வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்துவதுபோல, பயணச் செலவு, தங்கும் வசதி, சன்மானம் ஆகியவை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான், இனி வருங்காலத்திலும் தமிழ் தழைக்கும். தமிழ் இலக்கியம் நிலைக்கும்.

இந்த இளைஞர்கள் பற்றிய விவரங்களையும், முகவரியையும் எனது அலுவலகத்தில் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம். அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் அமைப்புகளைத் தொடர்புகொள்ள அந்த இளைஞர்களுக்கும் இதன் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்களுக்கு வாய்ப்பளித்து உற்சாகப்படுத்துவதுதான், இலக்கிய அமைப்புகள் செய்யக்கூடிய உண்மையான தமிழ்த் தொண்டாக இருக்க முடியும். இந்த இளைஞர்களின் வளர்ச்சியில்தான் தமிழின் எழுச்சி அடங்கி இருக்கிறது.

"தினமணி' நாளிதழில் கரூர் வள்ளுவர் பேரவையின் சார்பில் நடத்தப்படும் கவிதை, உரைநடை, பேச்சுப் போட்டிகள் பற்றிய அறிவிப்பு ஈரோட்டிலுள்ள "வள்ளுவ நேயர்' சி. சண்முகத்தை "வள்ளுவத் தமிழ் உதய முரசக அறக்கட்டளை' என்கிற அமைப்பை உருவாக்கித் "திருக்குறள் புதையல் போட்டி' என்கிற பெயரில் கட்டுரைப் போட்டி நடத்தப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது என்பதைக் கேட்கவே மெய்சிலிர்க்கிறது.

சி.சண்முகம், வெறும் சடங்கியல் சம்பிரதாயமாகப் போட்டிகள் நடத்தாமல், திருக்குறளில் ஆழமாகப் புதைந்துள்ள வாழ்வியல் விழுமியங்களை வெளிக் கொணரக் கட்டுரைப் போட்டி நடத்தினால் என்ன என்று சிந்தித்தார். தானே அதற்கான பரிசுத் தொகையைத் தருவதாகக் கூறியும் எந்த அமைப்பும் அவரது வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காத நிலையில், வள்ளுவப் பேராசான் அவருக்கு வழிகாட்டினார்.

""குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்''

எனும் குறளுக்கு ஏற்ப, இறைச்சித்தப்படி, தானே அறக்கட்டளை ஒன்றை நிறுவிப் போட்டி ஒன்றை அறிவித்துவிட்டார். தமிழகம் முழுவதிலிருந்தும் 109 அற்புதமான கட்டுரைகள், இல்லை, வள்ளுவம் பற்றிய ஆய்வுப் பதிவுகள், அவருக்கு வந்தன. அவற்றில் 20 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து "வள்ளுவம் உள்ளுவோம்' என்கிற தலைப்பில் புத்தகமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் சண்முகம்.

""ஆவென கருத்தெழுந்து, அருகென எண்ணம் பரப்பி, காலநீர் வற்றுங்காலும் அற்ற குளத்து அறுநீர்ப் பறவையென ஆயிரமாயிரம் பற்பல பிற கட்டுரைகள் அகன்று சென்றாலும், ஆம்பலுங் கொட்டிலுமாய் ஆழ்மனதின் அடியில் உறங்கும், இந்த இருபது கட்டுரைகளும்'' என்கிற ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.க.சண்முகத்தின் அணிந்துரை உண்மையிலும் உண்மை.

வள்ளுவம் பற்றிய புதிய பார்வை; புதிய கோணம்; புதிய சிந்தனை.


ஜூலை மாத "ஆனந்த விகடன்' "சொல்வனம்' பகுதியில் "பொதுக்கழிப்பிடம்' என்கிற தலைப்பில் கயல்விழி என்பவர் எழுதியிருந்த கவிதையை நீங்கள் படித்துப் பாருங்கள் என்று மின்னஞ்சலில் அங்கயற்கண்ணி அனந்தராமன் என்பவர் கடிதம் அனுப்பியிருந்தார். சமூகப் பிரக்ஞையுடனான, எதார்த்தத்தைப் பிட்டு வைத்திருக்கும் அற்புதமான கவிதை அது. பெண்கள் படும் அவஸ்தை பெண்களுக்கு மட்டும்தான் தெரியும். சில வரிகளை மட்டும் பதிவு செய்கிறேன்.

எல்லா பேருந்து நிலையங்களிலும்
மூத்திர நெடியேறும்
ஒரு பொதுக் கழிப்பிடம் உண்டு.

செருப்புக் காலை வைக்கவும்
கூசும்படியான அருவருப்புக்குள்
நுழைவதெப்படி?

இந்த எழவுக்குத்தான்
வெளியில வந்தா
தாகத்துக்குத் தண்ணி குடிக்கவும்
யோசிக்க வேண்டியிருக்கு
எங்களுக்கு!
நன்றி : தமிழ்மணி, தினமணி, 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment