பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 25, 2014

14-04-1979-இல், பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய - பண், பா, இசை விளக்க முன்னுரை !


இயற்கை  ஓர்  ஒழுங்குடையது . நிலம்  நெறியான  ஓர்  இயல்போட்டத்தை உடையது.  கதிரவனும்  விண்மீனும்  ஓர்  ஒழுங்கான  அசைவை  உடையன. புடவியும்  பேரண்டமும்  அவற்றுள்  இயங்கும்   பல்லாயிரங்கோடி இயற்கைக் கோளங்களும்  சுடர்த்  தொகுதிகளும்  சிறிதே  ஒழிங்கின்றி  இயங்கத் தொடங்கினும்  உடனே  பேரழிவு  நேரும்.


இவ்வியற்கை  நிலையினைப்போல்,  இயற்கையுட்பட்ட  அனைத்து நிலைகளிலும்  அதனதற்குப்  பொருந்திய  ஓர்  ஒழுங்கு  கடைப்பிடிக்கப் பெறுதல்  வேண்டும்.  இயற்கை  அறிவிக்கும்  இவ்வொழுங்கு  சிதைவுறின், அச்  சிதைவுக்கேற்பேற்ப ,  படிப்படியான  அழிவுநிலைகளே  நேரும்  என்பதில் துளியும்  ஐயமன்று .


உயிர்கள்  அனைத்தினும்  மேம்பட்டு  விளங்கும்  மாந்த  இயக்கமும்  ( மனித இயக்கமும் )  அதன்  பரும ,  நுண்ம  நிலைகளுக்கேற்ப,  ஒழுங்குற இயங்குதல் வேண்டும்  என்பதே  இயற்கையின்  உட்கோளாதல்   வேண்டும்.  ஒழுங்கற்ற பரும இயக்கத்தால் உடல் சிதைவுறுதல்போல் ஒழுங்கற்ற உணர்வியக்கத்தால் உள்ளமும் சிதைவுறும். உள்ளச் சிதைவு மாந்தப் பேரழிவையே  தோற்றுவிக்கும். 


உணர்வியக்கத்தின்   தனிமைக்கூறு   மொழி.   மொழியின் படிநிலையுற்ற   ஒழுங்கியக்கம்   இலக்கணம்.   எனவே,   இலக்கணச்   சிதைவு   மொழியைச்   சிதைப்பதும்,   மொழிச்   சிதைவு   கருத்தைச்   சிதைப்பதும்,   கருத்துச்   சிதைவு  உணர்வைச்   சிதைப்பதும்,   உணர்வுச்   சிதைவு   உளத்தைச்   சிதைப்பதும்,   உளச்சிதைவு   உலகியலைச்   சிதைப்பதும் ஒன்றினின்று   ஒன்றெழும்   தொடர்   விளைவுகளாகும்.   


மொழியின்    மலர்ச்சியே    பாட்டு.   பாட்டுணர்வால்தான்   மாந்தன்   மீமிசை   உயிருணர்வை   எட்டுகின்றான்.  மற்ற உணர்வுகள் மாந்த   உணர்வுகளிலேயே அவனைத்   தேக்கி   வைத்துருக்கையில், பாடல்   உணர்வே   புற   உணர்வுத்   தளைகளைக்   கட்டறுத்து,   உலகியல்   கூறுகளினின்றும்   விடுவித்து,   அவனை   மீமிசை   மாந்த   நிலைக்கு   உயர்த்துகிறது.   பாட்டுணர்வு தாழ்ச்சியுறுதலால்   அவன்   உணர்வுயர்ச்சிக்குச்   சறுக்கல்   ஏற்படுகின்றது:   உயிர்மைக்கு அயர்வு ஏற்படுகின்றது.   இதனால்   இயற்கைத் துய்ப்பு   கெடுகிறது.   உயிமை   குன்றுகிறது;   உலகியல்   உணர்விருள்   அவனைப்பற்றி   அலைக்கழிக்கின்றது.   இவ்வியற்கைப் பொது   நிலைகளையொட்டி   ஒவ்வொருவரும்   சில   இன்றியமையாக்   கலை,   இலக்கியக்   கூறுகளை   உணர்ந்திருத்தல்   வேண்டும்.   இவற்றுள்   கலை   புறமும்,   இலக்கியம்   அகமும்   ஆகும்.   இலக்கியத்தின்   கொடுமுடி   பாடல்!   பிற   அவற்றினின்று   விரிந்து   படரும்   கொடிகளையும்   கிளைகளையும்   போன்றவை.


ஒழுங்கற்ற   ஓசையைவிட   ஒழுங்கான   ஒலி   உயிர்க்கவர்ச்சி   உடையது.   ஒலியொழுங்கோடு   உனர்வும்   சேருமாயின்   உயிர்க்கவர்ச்சியுடன்   உளக்கவர்ச்சியையும்   அஃது   உண்டாக்கி,   அறிவுணர்வு    உயர்ச்சியுடைய   மாந்தனை   அது   தன்வயப்படுத்துகிறது.   இனி,   உணர்வு   அளவொத்து   இணைதலும்,   பின்   அவற்றுடன்   ஏதாமொரு   மொழி   சேர்தலும்,   அவற்றைப்   பண்   என்றும்   பாவென்றும்   இசையென்றும்,   பாவொடு   கருத்துச்   சேர்ந்து   பாடல்   என்றும்   தமிழில்   வழங்கும்.   இனி,   பண்ணும்   பாடலும்   சேர்ந்து   நடக்கும்   இசைத்தமிழ்   என்னும்   ஒரு   மொழியியல்   மரபையே   பண்டைத்   தமிழ்மொழி   முனைவோர்   உலகோர்   உணர்ந்துய்ய   உண்டாக்கித்   தந்துள்ளனர்.   தமிழ்மொழியில் உள்ளதுபோல்,   அஃது   அத்துணையளவு   தனித்தோ,   சிறந்தோ   இயங்கவில்லை   என்பதை   அறிவினார்   உணர்வர்.


இனி,   பாடல்   என்பது   பா   தழுவிய   கருத்துமொழி   என்று   பொதுவில்   பொருள்   தரினும்,   அதற்கெனப்   பல   தனிக்கூறுகள்   உண்டு.   பாடல்   இயற்கையாக   வெளிப்படுதல்   வேண்டும்.   மனமும்   அறிவும்   வயப்பட,   உணர்ச்சியும்   எழுச்சியும்   மேம்பட்டுப்   புறநிலையழுத்தத்தால்   பீறிக்   கொண்டு   வெளியேறும்   பாடலிலேயே   இயற்கைச்   சாயல்   படிந்திருக்கும்.   மொத்தத்தில்   அஃது   ஒரு   வெளிப்பாடாக   இருத்தல்   வேண்டுமேயன்றி, வெளிப்படுதலாக   இருத்தல்   கூடாது.   அவ்வாறு   உள்ள   நிலையில்   அது   சிறவாது;   நிலைத்து   நிற்காது;   அதுவன்றிக் காலத்தில்   கரைந்து   போகும்   தன்மையுடையதாக   அஃது   இருக்கும்.


ஓர்   உணர்வு   சான்ற   இயற்கைப்பாடல்   உணர்வுள்ள   உள்ளங்களை   மட்டுமேயல்லாது,   உணர்வற்ற   உள்ளங்களையும்   அவையளவில்   தொடுதல்   வேண்டும்.   அப்பொழுதுதான்   அஃதால்   உயிர்க்கூறு   படிப்படியாக   மலர்ச்சி   எய்துதல்   முடியும்.   பிற   உள்ளங்களை   ஆட்கொள்ளூம்   நிலையில்   அஃது   மண்வெட்டியைப்போல்   பயன்படுதல்   வேண்டும்.   மண்வெட்டி   பள்ளம்   மேடுகள்   நிறைந்த   நிலத்திற்கே   மிகுதியும்   பயன்படுவதாகும்.   சமமான   தரையில்   அதன்   பயன்பாடு   மிகவும்   குறைவே.   வெறும்   சுவைக்காக   மட்டுமே   வெளிப்படும்   பாடல்கள்  மாந்த   உள்ளுணர்வுகளை   வளர்த்து   வாழ்விக்காமல்   அவற்றை   மழுங்கடித்துவிடும்.


  பாட்டுணர்வு   இயற்கையேயாயினும்,   அதன்   புறக்கூறுகள்   உலகியல்   சான்றனவே.   அப்   புறக்கூறுகள்   அசை   படிந்த   சொற்களாலும்,   சொற்களமைந்த   சீர்களாலும்,   சீர்கள்   இணந்தியங்கும்   யாப்பாலும்,   யாப்புடன்   கூடிய   அணியாலும்,   அணிபெற்றியங்கும்   கருத்தாலும்   விளங்கித்   தோன்றுவனவாகும்.   அவையே   பாடலுகுரிய   தகுதிகளும்   ஆகும்.   அவை   பதினான்கு   இன்றியமையாக்   கூறுகளைக்   கொண்டவை. அவை   இவை :


அ. சொற்கள்

1. கருத்தாழம்   நிரம்பிய   தேர்ந்த   சொற்கள்.
2. சுற்றி   வளைக்காத   சொல்லாட்சி
3. வளங்கொழுவிய   பொருத்தமான   சொற்கள்


ஆ. சீர்   அமைப்பு

1. ஒலி   நயத்தால்   இணைகின்ற   சீர்   அமைப்பு.
2. கருத்தின்   உணர்வுக்கேற்ற   சீர்   நீளம்.
3.வகையுளி   அல்லது   சொற்பிரிப்பால்   பாட்டின்   ஓட்டத்தையும்        அழகையும்    குறைக்காமல், முழுச் சொல்லால்   அல்லது   சொற்களால்   அமைந்த   சீர்கள்.

இ. யாப்பு

1. பிழையற்ற    யாப்பு.
2. கூறப்போகும்   கருத்தின்   உணர்வை   மழுங்கடிக்காத   யாப்பு   வகை.

ஈ. அணிகள்

1. எளிதே   விளங்கிப்   பாடற்   கருத்துடன்   உடனே   பொருந்துமாறு   இருக்கும்   உவமைகளும்   உருவகங்களும்
2. பாட்டின்   பெருமையைக்   குறைக்கும்   பிற   ஆரவார   அணிகள்   பெரிதும்   தவிர்க்கப்   பெறுதல்.

உ. கருத்து

1. மயக்கம் தராது உடனே புலப்படும்   தெளிவு   நிறைந்தச் கருத்து.
2. பொது   மனத்திற்குப்   புலப்படாத   உயர்ந்த கருத்து..  


இனி, முன்னைக் காலத்து, இயற்கை உணர்வின் ஒலியொழுங்குக்கொத்த மரபு தழுவிய பாடல்கள்,   தாய்மையுணர்வு   நிரம்பிய   ஓரிளம்பெண்   பெற்றெடுக்கும்,    நல்ல   அழகிய    அறிவறிந்த   நிறைமாதக் குழந்தைகள்   போன்றவை.   சோம்பலாலும்   அறிவுக்   குறுக்கத்தாலும்   மன   இழிவாலும்   பிதுக்கப்பெறும்   இக்காலத்து   மரபு   நழுவிய   பாடல்கள்,   தாய்மையுணர்வு   நிரம்பாத   பெண்னுறு   சான்ற   ஒருத்தி,   அறைகுறை   முதிர்ச்சியோடு   பெற்ரெடுக்கும்,   உறுப்புகள்   குறைவுற்று   அழகும்   அறிவும்   குறைந்த,   குறைமாதக்   குழந்தைகள்   போன்றவை.    நன்கு   வளர்ச்சியுறாத   உறுப்பு   நிலைகளும்,   உணர்வு   நிலைகளும், அக்குழந்தைகளைக்   கவர்ச்சியற்ரனவாகவும்   நீடிய   காலத்   தங்குதலற்ரனவாகவும்   ஆக்கிவிடுகின்றன.


ஒழுங்கற்ற ஓசை   இசையாகாததுபோல்,   ஒழுங்கான   கட்டுக்கோப்பற்ற   கருத்து  வெளிப்பாடும்   பாடலாகாது.


பாடல்   உள்ளத்தின்   மலர்:   உணர்வின்   மணம்;   உயிரின் ஒலியொழுங்கு.


பாடல் மலரிலிருந்தே   உரைநடையென்னும் காய்   தோன்றிக்   கதையாகக் கனிகின்றது.


பாடல்   உணர்வு   சிதைவுறுமானால்   உரைநடையாக   அது   தத்துகிறது.   உரைநடையில்   பாடல்   உண்டு.  பாடலில்   உரைநடை   இல்லை.   பாடல் உரநடையாவது,   மலர்   தன்   மென்மையையும்   மணத்தையும்   இழந்து   பருமையும்   வெறுமையும்   உறுவது   போன்றதே.   அத்தகைய   பாடற்போலிகள்   தேங்காய்   மட்டையின்   ஊறலினின்று   அடித்தெடுக்கும்   நார்   போன்றவை.


இனி,  உண்மையான   பாடலை   வெளிப்படுத்துபவனே   உயர்ந்த   பாவலன்.   பாவலன்   பிறக்கிறான்.   பாடல்   தோன்றுகிறது.   பாவலன்   படைப்பாளன். அவன்   உண்டாக்கித்தரும்   உணர்வுருவாய   கற்பனை   மாந்தர்களையே   இயற்கை   பருவுருவாக   உலகுக்குப் படைத்துத்   தருகிறது.   எனவே   உலகின் இயற்கைப்   படைப்புக்கே   அவன் உணர்வுக்   கருவைத்   தருவனாகிறான்.


உயர்ந்த   உண்மைப்   பாவலனுக்கு   இருக்க   வேண்டிய   தகுதிகள்   பத்து.   அவை.   நுண்ணோக்கு,   இயற்கையீடுபாடு,   சொல்வன்மை,   பாத்திறன்,   யாப்பறிவு,   மொழியறிவு,   கற்பனையாற்றல்,   மனவியல்,   நடுவுநிலைமை,   துணிவு   என்பனவாகும்.   இவை  ஒன்றின்   ஒன்று    சிறந்து   விளங்கிப்   பாவலன்   ஆற்றலைப்   படிப்படியாக   மிகுவிக்கின்றன.   இத்தகுதிகளின்   பொருத்தத்திற்கேற்பவே   ஒவ்வொருவரின்   பாடலும்   ஒளிர்ந்து   சுடரும்;   காலத்தை   வெல்லும்;   மக்கள்   கருத்தினை   ஆட்கொள்லும்;   அறிஞர்   மதிப்பினைப்   பெறும்.


கனிச்சாறு   என்னும்   இப்பாடல்   தொகுதி   பல   நூறு   கற்பனைத்   தோற்றங்களை   உங்கட்குக்   காட்டுவதாகும்.   பல   வாழ்வியல்   கூறுகள்   இதில்   சொல்லப்   பெறுகின்றன.   அறிவுநிலை   விளக்கங்கள்,   உரிமை   உணர்வுகள்,   மாந்தநிலை   உடிரெழுச்சிக்   கூறுகள்,   உள்ளுணர்வெழுப்பும்   மெய்யறிவு   நிலைகள்,   மொழியியல்,   இனவியல்,   நாட்டியல் புரட்சிக்கு வித்தூன்றும்  அடிப்படை   வரலாறுகள்   முதலியன   இப்   பிழிவில்   கலந்திருப்பதை நீங்கள்   சுவைத்து   உணரலாம்.

கனியைப்   பிழிந்திட்ட   சாறு   -   எம்
கதியில்   உயர்ந்திட   யாம்பெற்ற   பேறு! 

என்றும்,
கனிச்சாறு   போல்பல   நூலெலாம்   கண்டு
காத்ததும்   அளீத்ததும்   தமிழ்செய்த   தொண்டு!  


என்றும்,   பாவேந்தர்   பாரதிதாசன்   தமிழையும்   தமிழ்ப்   பனுவலின்   இனிமையையும்   உணர்த்தக்   கனிச்சாற்றை   உவமை   பேசுவார்.


எனவே   தமிழும்   தமிழுணர்வும்   செறிந்து   விளங்கும்   இப்பாடல்   தொகுதிக்குக்   கனிச்சாறு   என்று   பெயர்   தரப்பெற்றது.   மிக   அரும்பாடுபட்டு   இத்   தொகுதித்   தொடர்கள்   வெளியிடப்   பெறுகின்றன. 


தமிழினம்   தன்   நிலைப்பாட்டு   மேன்மைக்கு   இத்   தொகுதிகளைப்   பயன்படுத்திக்   கொள்ளுமாக.

சென்னை-5                                                                                                    அன்பன்

14-04-1979                                                                                                 பெருஞ்சித்திரன்  


பாவலரேறு   பெருஞ்சித்திரனார்   பாடல்கள்   கனிச்சாறு   எனும்   தலைப்பில்   ஏழு   தொகுதிகளாகக் கிடைக்கின்றன.

தமிழினம்   தகைமைபெற   பாவலரேறுவின்   பாடல்களை   ஒவ்வொரு   தமிழனும்    தவறாமல்   பாட   வேண்டும்.   மனதிலிறுத்திக்   கொள்ளவும்   வேண்டும்.   தமிழும்   வளரும்.   தமிழனும்   வளர்வான்.

வெளியீடு

தென்மொழி   பதிப்பகம்

செந்தமிழ்   அடுக்ககம்

( சி.கே. அடுக்ககம் )

மேடவாக்கம் கூட்டுச்சாலை

மேடவாக்கம் - சென்னை - 600 100

94444 40449   


     


                                                 .       


                      
Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment