பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 2, 2014

139 – வயது மங்காத்தா பார்வையில் கோபல்லகிராமம்

கோபல்ல கிராமம்

கோபல்ல கிராமம்
எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு.
அதைச் சொல்வதுதான் கோபல்ல கிராமம்.
தெலுங்கு தேசத்திலிருந்து தமிழகத்தில் தஞ்சமடையும் கம்மவார்களின் வாழ்க்கை முறை பற்றி பதியப்பட்ட நாவல். அற்புதமான நடை. அங்கங்கே மெய்சிலிர்க்க வைக்கும் சில நிகழ்வுகளை கி.ரா அருமையாய் விவரித்திருக்கிறார்.
தெலுங்குதேசத்தில் வளமையான குடும்பத்தில் பிறந்த சென்னாதேவி என்ற பெண்ணின் அழகினை கேள்விப்பட்டு அவளை அடையவிரும்பும் துலுக்க ராஜா. அவரிடமிருந்து சென்னாதேவியை அழைத்துக்கொண்டு சென்னாதேவியின் குடும்பத்தார் மொத்தமும் காட்டுவழியே தப்புகிறார்கள். பின்னால் துலுக்கராஜா அனுப்பிய ஆட்கள் துரத்துகிறார்கள். அப்போது ஒரு பெரிய நதி குறுக்கிட அவர்களிடம் மாட்டிக்கொள்வதை விட நதியில் விழுந்து உயிரைமாய்த்துக்கொள்ள நினைக்கிறார்கள். நதியின் அக்கரையிலிருந்த அரசமரமொன்றுநதிக்கு குறுக்காக வீழ்ந்து அவர்கள் அனைவரையும் ஏந்திக்கொள்ள, அவர்கள் அனைவரும் நதிக்கு அக்கரைக்கு போய்சேர்கிறார்கள். துலுக்க ராஜாவின் ஆட்கள் திரும்பிவிடுகிறார்கள்.
இது தொட்டு ஆரம்பிக்கிறது இவர்களது பயணம். இடையிடையே நிறைய உதவிகளும், இடைஞ்சல்களும் ஏற்படுகிறது. காய்ச்சலாலும், தீராத நடைப்பயணத்தாலும்சென்னாதேவி இறந்துவிடுகிறாள். அவர்களோடு வந்த சில வயதாளிகளும், குழந்தைகளும் இறந்துவிடுகிறார்கள். இருப்பினும் மனம் சோராமல் நடைப்பயணம் தொடரபொட்டி அம்மன் எனப்படும் ஒரு வனதேவதையால் வழிகாட்டப்பட்டு அரவநாடு (தமிழ்நாடு) வந்தடைகிறார்கள். அவர்கள் வந்தடைந்த இடத்தை அவர்கள் தங்கள் கடின உழைப்பினால் செம்மைப்படுத்துவதே கோபல்ல கிராமம் நாவல்.
மங்கத்தா யார் என்ற 139 வயது மூதாட்டி தன் அனுபவங்களை தனது பிள்ளைகளிடம் கதை போல் பகிர்ந்துகொள்வது போல் அமைகிறது கதையின் நடை. அவரின் மகன்களான கோவிந்தப்ப நாயக்கர் முதலான எட்டு மகன்களை உள்ளடக்கிய கோட்டையார் வீடு என்று அனைவராலும் மரியாதையாக அழைக்கப்படும் இவர்களே கதையின் மாந்தர்களாக கதை நெடுகவும் பயணிக்கிறார்கள்.
கம்மாளர்கள் எனப்படும் அவர்கள் அனைவரும் தாம் வந்தடைந்த இடத்தை செம்மைப்படுத்தி வாழ்வதற்கேற்ற இடமாக மாற்றிக்கொண்டதை மிகவும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் கி.ரா.மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் எழுத்தாக இருக்கிறது.
ஒரு நிலையில் நாட்டை ஆண்ட கும்பினியாளர்கள் கோட்டையார் வீட்டை அணுகி கும்பினி அரசின் சார்பாக அந்த ஊர் மணியமாக இருக்கக் கோருகிறார்கள். இந்த ஊரின் வளமை அவர்களின் கண்ணைப் பிடுங்குகிறது. அறுவடைக்குத் தயாராகியிருந்த கம்பம் பயிர்களையெல்லாம் விட்டில் பூச்சிகள் வந்து அழித்துவிட ஊரில் பஞ்சம் வந்துவிடுகிறது. இது குறித்து கும்பினிக்கு எழுதி போட்டாலும் எந்த ஒரு பயனுமில்லாது போய்விடவே அவர்கள் அனைவரும் மனமுடைந்து போய்விடுகிறார்கள்.
மேலும் இவர்களின் கிராமம் சாலையோரமாய் அமைந்துவிட, கும்பினியாளர்கள் பளு தூக்கிகளாக இவர்களைப் பயன்படுத்துகிறார்கள். வெள்ளைக்காரர்களைக் குறித்த ஏகப்பட்ட வதந்திகளாலும், கட்டபொம்முவைத் தூக்கிலிட்ட செய்தி அறிந்ததாலும் மனமுடைந்த நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் விக்டோரியா மகாராணியார் தானே ம்பினி ஆட்சியை எடுத்தாளப்போவதாகவும், அதன் பொருட்டு நாட்டில் அமைதி நிலவப்போகிறது என்றும் அவரின் பேரறிக்கையை எடுத்துக்கொண்டு மீண்டும் ஊருக்குள் நுழைகிறார்கள் வெள்ளையர்கள்.நிறைய வாக்குறுதிகளைத் தருகிறார்கள். இந்த மக்களும் விக்டோரியா மகாராணியாரை ராணி மங்கம்மாவாகுக்கு இணையானவராக இருப்பார் என்று ஒப்பிட்டு அவர்களின் வாக்குக்கு உடன்படுகிறார்களென கதை முடிகிறது.
ஆனால் கதையின் இறுதியில் // அப்போது அங்கே நிலவிய அமைதி, வரும் ஒரு புயலுக்கு முன்னுள்ளது என்று யாரும் அறியவில்லை அப்போது // என்று சொல்லியிருப்பார்.
இந்த வாக்கியங்களைப் படித்து முடித்தபின், இனி கம்மாளர்களின் நிலை என்னவாயிருக்கும் என்று இனம் காண முடியாத ஒரு பயம் வருவதை தவிர்க்கமுடியாது. ஏனெனில் கி.ரா கதையை நடத்திச்சென்றவிதம் அவ்வாறு இருக்கிறது.
கோபல்ல கிராமம்
கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்



ஆசிரியர்: கி.ராஜநாராயணன்
பதிப்பகம்: அன்னம்
விலை : ரூ. 80
நூல் அறிமுகம்
அமிர்தவர்ஷினி அம்மா

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment