பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, August 26, 2014

விக்ரமாதித்யன் கவிதைகள் - அறிமுகம்




“சத்தியத்தையே
எழுதுகிறேன்
அலுத்துப்
போய்விட்டது எல்லாமும்
சலிப்படையச்
செய்கிறார்கள் எல்லோரும்
எனினும்
வாழ்ந்து கொண்டும்
எழுதிக் கொண்டும்தான்
இருக்கிறேன் இன்னமும்.”

– விக்ரமாதித்யன் நம்பி

ஒன்ன நினைச்சுப் பார்க்கும் போது கவிதை அருவி மாதிரி கொட்டுது அதை எழுதணும் உட்கார்ந்தா எழுத்துதான் வரமாட்டேங்குது என குணா கமல் அபிராமியிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அதுபோலத்தான் நிறைய விசயங்களை எழுதணும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதையெல்லாம் உடனே எழுத முடியாது. அதற்கும் ஒரு வல்லமை வேண்டும்.

கவிதைகள் என்றாலே பாரதியைத்தான் எனக்குத் தெரியும் பள்ளிநாட்களில். மற்றபடி கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம். படிப்பெல்லாம் முடித்த பிறகு ஒரு சமயம் நூலகத்தில் விக்ரமாதித்யன் கவிதைகள் நூலைப் பார்த்த போது அட்டைப் படத்தில் தாடியோடிருந்த விக்ரமாதித்யன் முகம் மிகவும் ஈர்த்தது. அந்த கவிதை நூலைத் திறந்து கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தேன். மிகவும் பிடித்துப் போனது. வீட்டிற்கு எடுத்து வந்து பலமுறை வாசித்தபின் எனக்கு மிகவும் பிடித்த இருபதிற்கும் மேற்பட்ட கவிதைகளை ஒரு நோட்டில் எழுதி வைத்தேன். எனக்கு சோர்வேற்படும் போதெல்லாம் அதையெடுத்து வாசிப்பேன். அந்தளவிற்கு விக்ரமாதித்யனின் இரசிகனாகிவிட்டேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த மனதிற்கு நெருக்கமான சில கவிதைகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன் விக்ரமாதித்யன் கவிதை குறித்து ச.தமிழ்ச்செல்வன் எழுதியதையும் வாசித்துப் பாருங்கள்.

“பசியும் பட்டினியும் இயல்பென லபிக்கப்பட்ட மக்களில் ஒருவராக, வீடற்ற மனித உயிராக, தெருக்களில் திரிந்தலையும் துக்கத்தைச் சுமப்பவராக, எப்போதும் வீடுதிரும்புதல் பற்றிய கனவுகளோடும் ஏக்கங்களோடும் வாழும் ஒரு விளிம்புநிலை மனிதராக, தான் ஒரு கவியென்னும் தன்னுணர்வு சண நேரமும் விட்டகலாத கர்வத்துடனும் வாழ்கிற கம்பீரமான படைப்பாளி விக்ரமாதித்யன். சொந்த வாழ்வைப் பலி கொடுத்துக் கவி புனையும் தமிழ்க்கவி. “இருக்கிற ஸ்திதியைச் சொல்வதுதான் என் வேலை. நம்பிக்கையையோ நம்பிக்கையின்மையையோ பரப்புவது அல்ல.” என்கிற பார்வையுடன் அவர் படைக்கிறார். அவருடைய படைப்புகளில் விஞ்சி நிற்பது நம்பிக்கையா அவநம்பிக்கையா என்று பட்டிமன்றம் நடத்துவது வீண்வேலை.ஒரு கலைஞன் இச்சமூகம் இருக்கும் நிலையைக் கூர்மையாகப் பதிவு செய்தால்கூடப்போதும். அதுவே ஒரு முற்போக்கான பணிதான். அது ஏன் இப்படி இருக்கிறது என்று ஆய்வதும் அதற்கான மாற்றுகளை உருவாக்குவதும் அரசியலார் வேலை. தமிழில் அரசியலார் இந்தமாதிரிப் படைப்புகளை வாசிக்காமலும் ஏறெடுத்தும் பாராமல் இருப்பதுமே ஆகப்பெரும் வியாதியாகும்.” – ச.தமிழ்ச்செல்வன்.

அன்றாட வாழ்க்கை மிகவும் சிக்கலானது. நாம் எதிர்பார்ப்பதுபோல் எல்லாம் எளிதாக நடப்பதில்லை. நமக்கு தெரிந்தவர்கள்கூட நம்முடைய விருப்பப்படி செயல்படுவார்கள் என்று சொல்ல முடியாது. விக்ரமாதித்யன் கவிதைகள் மிகவும் எளிமையாக அன்றாட வாழ்வின் சிக்கல்களை சொல்கிறது. அதை வாசிக்கும் போது நமக்கு ஆறுதலாகயிருக்கிறது. எல்லாருடைய நிலையிலிருந்தும் வாழ்வை புரிந்து கொள்ள உதவுகிறது.

சில நேரங்களில் வாழ்க்கை மிகவும் படுத்தி எடுத்துவிடும். எதையும் சொல்ல முடியாதபடி நெஞ்சடைத்தது போல இருக்கும். நம்ப முடியாத அளவுக்கு வாழ்க்கை என்ற கவிதையை வாசிக்கும்போது நம் மனதில் உள்ளதை அப்படியே எழுதியிருக்கிறாரே என்று தான் தோன்றுகிறது.

நம்பமுடியாத அளவுக்கு வாழ்க்கை
நம்ப முடியாத அளவுக்கு
சலிப்பூட்டுகிறது
சொல்ல முடியாத படிக்கு
சாரமற்றிருக்கிறது
விழுங்கிவிட முடியாத அளவுக்கு
கசப்படிக்கிறது
துப்பிவிட முடியாத படிக்கு
சிக்கிக் கொண்டு விட்டிருக்கிறது
கனவுகாண முடியாத அளவுக்கு
வறண்டு போயிருக்கிறது
கற்பனை செய்ய முடியாதபடிக்கு
எரிச்சல் படுத்துகிறது
தீர்த்து வைக்க முடியாத அளவுக்கு
பிரச்சனை கொண்டிருக்கிறது
அணைக்கவே முடியாதபடிக்கு
கனன்று பற்றி எறிந்து கொண்டிருக்கிறது
காற்று போல நீர்போல இல்லாத
இந்த மிருகத்தை என்னதான் செய்வது

சில நேரங்களில் என்ன சொல்வதென்றே தெரியாது. அந்தளவிற்கு வார்த்தைகள் கசப்படிப்பது போல தோன்றும். எரிச்சலாகயிருக்கும். அது போன்ற மனநிலையில் சொல்வதற்கு கவிதைதான் நினைவிற்கு வரும்.

சொல்வதற்கு
சொல்வதற்கு
ஒன்றுமில்லை
கேட்பதற்கும்
ஒன்றுமில்லை
நம்புவதற்கும்
ஒன்றுமில்லை
கடைபிடிப்பதற்கும்
ஒன்றுமில்லை
வாழ்வதற்கு
ஒன்றுமில்லை
வருத்தப்படுவதற்கும்
ஒன்றுமில்லை
ஆவதற்கும்
ஒன்றுமில்லை
அழிவதற்கும்
ஒன்றுமில்லை
ஒன்றுமில்லாத உலகத்தில்
உண்டு பண்ண என்ன உண்டு

நாம் பேசிக்கொண்டிருக்கும் போது சிலர் உனக்கு ஒன்றும் தெரியாது சும்மாயிரு என்பார்கள். யோசித்துப் பார்த்தால் அது மிகவும் உண்மையெனத் தெரியும். நம்மைப் பற்றியே நமக்குத் தெரியாத விசயங்கள் நிறைய இருக்கிறது. நம்மைப் பற்றி நாமொன்று நினைத்துக் கொண்டிருப்போம். மற்றவர்கள் ஒன்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் இந்த பிரபஞ்சம் பற்றி கவிதை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்.

இந்த பிரபஞ்சம் பற்றி
இந்த பிரபஞ்சம் பற்றி
எனக்கு
தெரிந்ததெல்லாம்
வெறும் தகவல்கள்
இந்த உலகம் குறித்து
எனக்கு
தெரிந்ததும்
புஸ்தகப் படிப்பு
இந்த நாடு பற்றி
நான்
அறிந்தவையெல்லாம்
கல்வி கேள்வி
எங்கள் ஊர்
எங்கள் தெருபற்றியெல்லாம்
அனுபவம்
கொஞ்சம் கொஞ்சம்தான்
எங்கள் வீடு குறித்தே
என் அனுபவத்தில்
புரிந்து கொண்டது
கொஞ்சம் தான்
இவ்வளவு எதுக்கு
என்னைப் பற்றி
எனக்குத் தெரிந்ததே
கொஞ்சத்திலும் கொஞ்சம்
இதில் எதைப்பற்றியும்
யார் குறித்தும்
அபிப்ராயம் சொல்ல
நான் யார்

பிரச்சனை என்னவென்று தெரிந்தாலும் நாம் என்ன செய்ய முடியும்?. வலியோடு கடந்து போகலாம் அல்லது வேடிக்கைப் பார்க்கலாம். மற்றபடி நாம் நினைப்பதுபோல தீர்வு ஏற்படுமென உறுதியாகச் சொல்ல முடியாது. தீர்வு கிடைத்தாலும் அது பிரச்சனையில்லாதது என உறுதியளிக்க முடியாது.

என் பிரச்சனை என்னவென்று
என் பிரச்சனை என்னவென்று
எனக்குத் தெரியாது சத்தியமாக
உன் பிரச்சனை எதுவென்று
உனக்கு தெரியுமா நிச்சயமாக
நம் பிரச்சனைக்கு
நாம்தான் காரணமா
பிரச்சனை தெரிந்ததும்
தீர்வு கிடைத்துவிடுமா
தீர்வல்ல
பிரச்சனை
பிரச்சனையா என்பதுதான்
தீர்வு

ஒவ்வொரு நாளும் ஏன் விடியுது என்று நினைத்தபடிதான் பலரும் எழுகிறார்கள். விடிந்தால் அவ்வளவு சிக்கல்கள் அவரவருக்கேற்ப. இதில் எங்கு கலையும், இலக்கியமும் பேச?.

கலைகளுக்கு இடமில்லாத பூமி
வாடகை பாக்கிக்காய்
ஒரு பூகம்பம்
மளிகைக்கடைப்பற்றுக்காய்
ஒரு பிரளயம்
பாலுக்குக் கொடுக்கப்பட வேண்டி
ஒரு போராட்டம்
பிள்ளைகள் படிப்புச் செலவையிட்டு
ஒரு சண்டை
தீபாவளி பொங்கல் விசேஷமென்றால்
ஒரு கொந்தளிப்பு
கல்யாணம் காட்சிக்குப் போவதென்றால்
ஒரு கலாட்டா
விருந்தாளிகள் வந்தால்
ஒரு விவகாரம்
தலைவலி காய்ச்சலெனில்
ஒரு நெருக்கடி
இப்படித்தான் இருக்கிறது
இந்த ஜனங்கள் வாழ்க்கை
எப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறார்களோ
இவ்வளவுக்கும் மத்தியில் சகஜமாய்
கோயில்கள் திரையரங்குகள் மதுபானக்கடைகள்
ஜோதிட நிலையங்கள் மனநலமருத்துவமனைகள்
மட்டும் இல்லாமல்போனால் என்ன ஆகும்
வன் கொலைச்சாவு மலிந்த நாடு
கிறுக்குப் பிடித்த மக்கள் நாடு
வரலாறு படைத்துக் காட்டும்
உலகமே பரிதாபம் கொள்ளும்

பிடித்த கவிதைகள் இன்னும் நிறைய இருக்கிறது. நெருக்கடி மிகுந்த வாழ்க்கைச் சூழலில் இதுபோன்ற கவிதைகள் தான் என்னை உயிர்ப்பிக்கிறது. விக்ரமாதித்யன் கவிதைகளைத் தேடி வாங்கி வாசித்துப் பாருங்கள். உங்களுக்கும் விக்கிரமாதித்யன் கவிதைகளைப் பிடிக்கும்.

- சித்திரவீதிக்காரன்.
maduraivaasagan@gmail.com

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment