பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, August 26, 2014

புதுச்சேரியில் 300 கணினி வல்லுநர்கள் பங்கேற்கும் 13-வது உலகத் தமிழ் இணைய மாநாடு!

இணையத்தில் தமிழ் மொழியை மேம்படுத்தும் நோக்கத்தில் 13-வது உலகத் தமிழ் இணைய மாநாடு, புதுச்சேரியில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட கணினி வல்லுநர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முந்தைய மூத்த மொழி என போற்றப்படும் தமிழ் மொழியானது ஓலைச்சுவடி காலம் தொடங்கி பல்வேறு விதமான கால கட்டங்களை கடந்து இணையம் வரை வளர்ந்து நிற்கிறது. இந்த விஞ்ஞான யுகத்தில் ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ் மொழியும் கணினி மற்றும் இணையத்தில் கோலோச்சி நிற்பதற்கு காரணம், தமிழ் மென்பொருள் வளர்ச்சி. தமிழ் மீது பற்று கொண்ட கணினி வல்லுநர்களால் தமிழ் மென்பொருள், இணையத்துக்கான தமிழ் எழுத்துரு (ஃபான்ட்), யுனிகோடு ஃபான்ட் போன்றவை உருவாக்கப்பட்டதாலேயே இது சாத்தியமானது.
இணையத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி தமிழ் மொழியை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் இதுபோன்ற தமிழ் ஆர்வலர்களின் புதிய சிந்தனைகளைப் போற்றி பாதுகாப்பதோடு பாராட்டி ஊக்குவிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட அமைப்பு, ‘உத்தமம்’. சர்வதேச அமைப்பான இதன் விரிவாக்கம், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம். இந்த அமைப்பின் தற்போதைய தலைவர், வாசு ரங்கநாதன். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றுகிறார். தமிழ் மொழியை அறியாத வெளிநாட்டு மாணவர்களும் தமிழ் கற்கும் வகையிலான தமிழ் மென்பொருளை வடிவமைத்த பெருமை இவருக்கு உண்டு.
இணைய வழித் தமிழை வளர்ப்பதற்காக மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் உலகத் தமிழ் இணைய மாநாட்டை உத்தமம் அமைப்பு நடத்தி இருக்கிறது. தமிழகத்திலும் தமிழக அரசின் முழு உதவியோடு 1999 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்று இருக்கிறது. கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோதும் மாநாட்டின் ஒரு அங்கமாக உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி மாநிலத்தில் முதன்முறையாக இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. புதுச்சேரியில் 13-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்தும் முயற்சியில் முழு ஈடுபாட்டுடன் இறங்கி இருப்பவர், உத்தமம் அமைப்பின் இந்திய பொறுப்பாளர், முனைவர் இளங்கோவன். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தில் தமிழ்த் துறை பேராசிரியர். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இளங்கோவன், இந்த மாநாடு குறித்து கூறியதாவது:
கால மாற்றத்துக்கு ஏற்ப நம்முடைய தமிழ் மொழியையும் டிஜிடல் யுகத்துக்கு மாற்ற வேண் டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உலகம் முழுவதும் பல்வேறு வல்லுநர்களும் புதிது புதிதாக மென்பொருட்களை உருவாக்கி வருகின்றனர். அதே நேரத்தில், கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு இணையவழி தமிழ் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இல்லை. கணினியில் ஃபான்ட் எனப்படும் தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்துவதில்கூட இன்னமும் தடுமாற்றங்கள் உள்ளன.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி மாநாடு தொடங்குகிறது. மாநாட்டை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார். முதல் நாள் நிகழ்வில் கணினி வல்லுநர்களின் ஆய்வரங்கம் நடைபெறுகிறுது. 20-ம் தேதி புதுச்சேரி கடற்கரை காந்தி திடல் அருகே கண்காட்சி நடைபெறுகிறது. அதில் தமிழ் மென்பொருள், குறுந்தகடுகள், டிஜிடல் மயமாக்கப்பட்ட தகவல்கள் மற்றும் கணினித் தமிழ் தொடர் பான அனைத்து பொருட்களும் காட்சிப் படுத்தப்படும்.
நிறைவு நாளான 21-ம் தேதி மக்கள் அரங்கம் நடைபெறும். அதில், கணினி தமிழ் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாநாட்டை முன்னிட்டு மாணவர் களுக்கும் பொதுமக்களுக்கும் புதிதாக வலைப்பூ (பிளாக்) உரு வாக்கும் போட்டி அறிவிக்கப்பட் டுள்ளது. பங்கேற்க விரும்புவோர் Loc2014@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரியில் செப்டம்பர் 10-ம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.
பள்ளி மாணவர், கல்லூரி மாணவர், பொதுமக்கள் என மூன்று பிரிவுகளில் தலா 3 சிறந்த வலைப்பூக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மாநாடு குறித்த கூடுதல் தகவல் களை infitt.org என்ற இணையதள முகவரியில் பெறலாம் என்றார் இளங்கோவன்.
நன்றி : தி இந்து

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment