பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, October 5, 2015

நினைவில் வாழும் பெரியார் சாக்ரடீசு - உடுமலை

வாழ்ந்து கொண்டிருக்கிறார் பெரியார் சாக்ரடீசு!
-உடுமலை 

ந்தநாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை; வான் மதியும் மண்ணும் கடல் நீரும் நதியும் மாறவில்லை என்ற கண்ணதாசனின் திரைப்படப் பாடல் ஒன்று என்றுமே காதுகளில் ரீங்காரம் செய்யக்கூடியவை. இதன் தொடர்ச்சியாக மனிதன் மாறிவிட்டான் என்று முடியும். ஆமாம் மனிதன் மாறித்தான் விட்டான். மாறத்தான் வேண்டும். ஆனால், எப்படி மாறியிருக்கிறான்? ஜாதியாக, மதமாக, மூடநம்பிக்கையாளனாக, பெண்ணடிமையைப் பேணுபவனாக, ஆதிக்கத்திற்கு அடிபணிபவனாக... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

இவ்வளவாக இருக்கிறானேயொழிய தேடிப்பார்த்தாலும் மனிதனாக இல்லையே என்றுதான் கவலையாக இருக்கிறது. அந்தக் கவலைக்கு மருந்தாக, இப்படிப்பட்ட காலகட்டத்திலும் இந்தப்பிரிவினைகள், பாகுபாடுகள் இவற்றையெல்லாம் கடந்து  மனிதன் இருக்க முடியுமா? இருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். ஒன்றல்ல, ஆயிரமாயிரம் பேர் மனிதர்களாக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

அப்படி வாழ்ந்து கொண்டிருந்த வாழையடி வாழையாக வந்த பெரியார் சாக்ரடீசு இறந்து விட்டார். அதுவும் 44 வயதிலேயே. ஆம் அவர் சேகரித்து வைத்திருந்த அறிவையெல்லாம் நாம் இழந்து விட்டோம். அனுபவங்களை தொலைத்துவிட்டோம். இனிமேல் அவற்றைப் பயன்படுத்த இயலாது. இன்னுமவர் பல ஆண்டுகாலம் அவர் வாழ்ந்திருந்து, தனது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் எவ்வளவோ பயன்பட்டிருக்க வேண்டியவர். 

08-05-2014 தியாகராயர் நகரில் இரவு நேரத்தில், சாலை விபத்தொன்றில் சிக்கி அரசு மருத்துவ மணையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி 12-05-2014 அன்று இறந்து போனார். மனிதர்களுக்கு மட்டுமல்ல, உயிரினங்களுக்கே இது இயல்பானதுதான். ஆனாலும், மற்றவர்களைக் காட்டிலும் ஒரு பகுத்தறிவாளர் இறந்து போகும்போது கூடுதலாக மனசு  கனத்துப்போகிறது. காரணம், சமூகத்தை முற்போக்குப் பாதையில் கட்டி இழுத்துச் செல்லுகிறவர்களில் ஒருவர் குறைந்தாலும் இழப்பு தனிப்பட்ட மனிதர்களுக்கல்ல, சமூகத்திற்குத்தான். 

அப்படிப்பட்ட இழப்பை எப்படி ஈடு செய்வதென்று மக்கள் தொடர்பியலில் முதுகலை மற்றும் மதிநிறைஞர் பட்டங்களைப் பெற்றவரும், திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடமைச் சிந்தனையாளருமான முனைவர் நாச்சிமுத்து, தமிழகம் அறிந்த எழுத்தாளரும், பெரியார் விருது பெற்றவருமான அஜயன் பாலா ஆகிய இருவரும் இணைந்து அவர்களின் நண்பர்களின் துணையுடன் அவர் பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கவும், ஒவ்வொரு ஆண்டும் உரியவர்களை தெரிந்தெடுத்து, பெரியார் சாக்ரடீசின் பெயரில் விருது வழங்கவும் ஏற்பாடு செய்து, 12-05-2015 அன்று கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள டிஸ்கவரி புக்பேலசில் முதலாமாண்டு நினைவு நாளை ஒரு எளிமையான நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தனர். 

நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், இதழாளர்கள் மை.பா. நாராயணன், கோவி லெனின், முகில் ஆகியோர் கலந்து கொண்டு பெரியார் சாக்ரடீசுடனான தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். 

அறிமுகவுரையாற்றிய முனைவர் நாச்சிமுத்து அவர்கள், நெருக்கடியான காலகட்டத்தில் செம்மொழி பற்றி 10 பக்க கட்டுரையை இரண்டே மணி நேரத்தில் எழுதி கொடுத்ததையும்; பலர் எழுதி கொடுத்திருந்தாலும் இவர் எழுதியதுதான் மத்திய அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுக்காக செம்மொழி சிற்பிகள் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தொகுப்பை மேற்கொண்டதில் அவருடைய பங்கையும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தார். 

அவரைத்தொடர்ந்து ஆன்மிகத்தில் பெரிதும் நம்பிக்கையுள்ள மை.பா. நாராயணன் அவர்கள், நட்புக்கு ஜாதி, மதம், குலம், கோத்திரம் எதுவும் தேவையில்லை என்பதை நான் சாக்ரடீசிடம்தான் கண்டுகொண்டேன் என்றார். இன்னும் ஒருபடி மேலே சென்று, பெரியார் சாக்ரடீசு மாதிரி ஒரு மனிதநேயரை ஒரு ஆன்மிகவாதியாகவே நான் இருந்தாலும் வேறு ஒருவரை என்னால் காணமுடியவில்லை என்றார் உள்ளம் திறந்து பேசினார். அவரைத் தொடர்ந்து பேச வந்த எருத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள், தாமதமாக வருகிறார்கள் என்பதற்காக, நான் யாருக்காகவும் தாமதித்துப் பேசியதில்லை. ஆனால், பெரியார் சாக்ரடீசுக்காக நான் பேச நேர்ந்தது. அது ஒரு மழைக்காலம். நிகழ்ச்சி ரஷ்யக் கலாச்சார மய்யத்தில் நடந்து கொண்டிருந்தது. இதோ நான் வந்து கொண்டிருக்கிறேன். பேசத்தொடங்கிவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். நானும் இணங்கினேன். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற தேடல் உடையவர். இப்படிப்பட்டவர்களால்தான் நான் ஊக்கமடைகிறேன் என்றும், சாக்ரடீசு ஒரு விடிவெள்ளி போல வந்து மறைந்துவிட்டார் என்றும் நெகிழ்ந்தார்.

தொடந்து பேசிய இதழாளர் கோவி. லெனின் அவர்கள், உரசலோடுதான் எங்கள் நட்பு தொடங்கியது. திராடவிடர் கழகத்தைப்பற்றியும், இதன் தலைவரைப்பற்றியும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுவிட்டால் உடனடியாக அவற்றை ஆதாரங்களோடு மறுத்து கடிதம் எழுதிவிடுவார். எழுதியதோடு நில்லாமல் பேசியில் தொடர்பு கொட்டும் விளக்கம் அளித்துவிடுவார். அப்படி ஏற்றுக்கொண்ட கொள்கைக்கும், தலைமைக்கும் நூற்றுக்கு நூறு விழுக்காடு நேர்மையாக இருப்பவர் என்று பேசினார்.

முன்னதாக விருதுபெறும் ஆர்.பி. அமுதன் இயக்கிய கூடம்குளம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. எழுத்தாளர் அஜயன்பாலா அவர்கள் விருது பற்றிய விளக்கத்தை வாசித்தார். இதழாளர் முகில் விருதுபெறும் ஆர்.பி. அமுதன் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பை வாசித்தார். இறுதியாக அவருக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் அவர்கள், தி. பெரியார் சாக்ரடீசு நினைவு விருதை வழங்கி சிறப்பித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், பெரியார் சாக்ரடீசுக்கும் தனக்குமான முதல் சந்திப்பே மிகப்பெரிய விவாதித்தில் முடிந்ததாகவும், தொடர்ந்து தங்களுக்குள் கருத்துப்போர் நடந்துகொண்டிருந்ததாகவும் சில சம்பவங்களை சுட்டிக்காட்டினார். ஆனாலும் தங்களுக்கிடையே இருந்த நட்பு தொடர்ந்தது என்றும், தனக்கு பெரியார் விருது கிடைத்தற்கு பெரியார் சாக்ரடீசும் ஒரு காரணம் என்று நினைவு கூர்ந்தார். தொடர்ந்து ஆவணப்படங்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டுவிட்டு, அமுதனைப் பாராட்டியதோடு, ஆவணப்படங்கள் தயாரிப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும். அதற்கான முன்முயற்சிகளை அனைவரும் சேர்ந்து எடுக்கவேண்டும் என்றும் பேசினார். 

இறுதியாக விருதுபெற்ற ஆர்.பி. அமுதன் இந்த விருது தன்னை ஊக்கப்படுத்தியிருக்கிறது என்றும் வாழ்நாளில் இந்த விருது முக்கியமானது என்றும் கூறி தன்னுரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரிய தொகுப்பான செம்மொழி சிற்பிகள் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. வேடியப்பன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். ஒட்டுமொத்தமாக மாற்றுக் கருத்துள்ளவர்களும்கூட, கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தாலும் அனைவருடனும் நட்பாகவும், மனிதநேயத் தன்மையுடன் இருந்த ஒருவர் மறைந்து விட்டதை இந்த கொள்கைக்கு எதிராக உள்ளவர்களேகூட தாங்கிக்கொள்ளாமல் பேசியதை காணும் பொழுது பெரியார் சாக்ரடீசு மறையவில்லை, எண்ணங்களால் மற்றவர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று உணர முடிந்தது.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment