பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 7, 2015

யுத்த பூமி : அத்தியாயம் 4 - காரவேலன் கல்வெட்டும் தமிழகத் தொன்மைச் சான்றுகளும் - த. பார்த்திபன், தருமபுரி

By த. பார்த்திபன்

First Published : 25 September 2015 10:00 AM IST
காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டில் சொல்லப்படும் செய்திகள் குறித்து இத்தொடரின் அத்தியாயம் 2 மற்றும் 3-ல், முறையே ’காரவேலன் கல்வெட்டும் ஆவா அரசர்களும் பிதும்டா பட்டினமும்’ மற்றும் ‘காரவேலன் கல்வெட்டும் தமிழ் அரசுகளின் கூட்டுப்படையும்’ தலைப்புகளில் விளக்கப்பட்டன. இம்மூன்றாம் பகுதியில், காரவேலனின் கல்வெட்டை முன்வைத்து, கலிங்க நாடு மற்றும் சேதி மரபினர் தமிழத்துடன் கொண்டுள்ள தொடர்புகள் மற்றும் உலகம் முழுவதும் பரவலாகக் கிடைக்கும் தமிழகச் தொன்மைச் சான்றுகள் குறித்து விளக்கப்படுகின்றன.
தமிழரின் காலப்பழமை குறித்த முக்கிய சான்றாகக் கருதப்படும் காரவேலனின் கல்வெட்டு எந்த அளவு பொருட்படுத்த வேண்டிய ஒன்றாகவும், பல்வேறு மாறுபட்ட படித்தறிதல்கள் காரணமாக அது உருவாக்கும் சிக்கல் குறித்தும், முன் இரு அத்தியாயங்களில் விளக்கப்பட்டது.
இக்கல்வெட்டு மீதான எல்லாப் படித்தறிதல்களும் முரண்படாத இடம் ஒன்று உண்டெனில் அது, முதல் வரியில் காணப்படும் காரவேலன் ‘சேதி மரபை’ச் சார்ந்தவன் என்பதாகும். காரவேலன், கலிங்கத்தை ஆட்சிபுரிந்த ’சேதி’ மரபைச் சார்ந்த மூன்றாம் தலைமுறையினன் என்ற செய்தியையும் அது கூடுதலாகத் உறுதிப்படுத்துகிறது.
சேதி மரபினரும் கலிங்கமும்
காரவேலலின் சேதி மரபு குறித்து வரலாற்று நூல்களில் விரவியிருக்கும் செய்திகளைத் தொகுத்து பின்வருனவற்றை அறியமுடிகிறது. ‘சேதி மரபினர், ஆதியில் இரு பிரிவுகளாகப் பிரிந்து நேபாளத்திலும், பண்டில்கண்டி என்று அழைக்கப்படும் கெளசாம்பிக்கு அண்மையில் அமைந்த பகுதியிலும் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் ‘சேத்தா’ என்றும் ‘சைத்ரா’ என்றும் ‘சேதியா’ என்றும் அழைக்கப் பட்டனர். சேத்தா அல்லது சேதியா என்பது பண்டில்கண்டியையே குறிக்கும். பண்டைய சான்றுகளின்படி, இவர்களால் உருவாக்கப்பட்ட ‘சேதிநாடு’, யமுனை ஆற்றுக்கும் குரு, வச்சலம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்திருந்ததை அறியமுடிகிறது. மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் ’சுத்தி மாதி’, அதாவது ‘சோத்திவதி நகரம்’ இதன் தலைநகராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருந்தும், யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருந்த ‘சகாசாதி’ நகரமே இவர்களது சிறந்த நகராகும்’.
சேதி மரபினரில் ஒரு கிளையினரே, அசோகருக்கு முற்பட்டே கலிங்க நாட்டை ஆட்சி புரிந்தவர்களாக இருக்கின்றனர். சான்றுகளின்படி, கலிங்கத்தை ஆட்சி புரிந்த மூன்றாவது மரபினரே சேதியர் ஆவர். இவர்கள், ‘மகா மேகவானன்’ குடும்பத்தினராவர். ஒரு சிலர், மைய தேசம் என்ற மகத நாட்டிலிருந்து கலிங்கத்துக்கு சேதி மரபினர் குடிபெயர்ந்து, அங்கு தங்கள் ஆட்சியை ஏற்படுத்தினர் என்று குறிப்பிடுகின்றனர். கல்வெட்டு, காரவேலன் ஆரிய மாமன்னர் என்று குறிப்பிட, ‘காரவேலனின் சேதி மரபினர், திராவிடர் ஆவர்’ என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. (கோ.தங்கவேலு, இந்திய வரலாறு, தொகுதி-1, ப. 311).
அசோகன் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து வெற்றிகண்ட பிறகும், போரின் கொடுமைகளைக் கண்டு மனம் திருந்தி பெளத்தத்தைத் தழுவினான் என்பது வரலாறு ஆகும். ஆனால், அசோகன் வீழ்த்திய கலிங்க மன்னனின் பெயரை அறிய முடியாது உள்ளது.


காரவேலன், அத்திக்கும்பா கல்வெட்டு
 
கலிங்கமும் தமிழகமும்
சங்க இலக்கியத்தில் இருந்து, கலிங்கத்துடன் தமிழகம் வலுவான தொடர்பு கொண்டிருந்ததை அறிய முடிகிறது. கலிங்கத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணிவகை ஒன்று ‘கலிங்கம்’ என்ற பெயரிலேயே அறியப்பட்டிருந்தது.
கொடுந்தமிழ் நாடுகளில் ஒன்று கலிங்கம்!
தொல்காப்பியம் சொல் 400 சூத்திரம் குறிப்பிடும் ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ என்ற தொடரைக் கொண்டு, மொழி வழக்கு அடிப்படையில் பண்டைய தமிழகம், செந்தமிழ் நிலம் ஒன்று மற்றும் கொடுந்தமிழ் நிலம் அல்லது திரிதமிழ் நிலம் பன்னிரெண்டு, என பதின்மூன்று நிலங்களைக் கொண்டிருந்தது என்பர். இந்த பதின்மூன்று நிலங்களை அடையாளம் காண்பதில் கருத்துமுரண் உண்டு. தெய்வச்சிலையர், வேங்கடம் முதல் குமரி வரையுள்ள நிலத்தை செந்தமிழ் நிலம் என்பார். தனிப்பாடல் ஒன்றும், நச்சினார்க்கினியர், சேனாவரையர் போன்றோரும், பாண்டி நாடு, செந்தமிழ் நிலம் மற்றும் 1. குட்டநாடு, 2. குடநாடு, 3. கற்கா நாடு, 4. வேணாடு, 5. பூழிநாடு, 6. அருவாநாடு, 7. அருவா வடதலை நாடு, 8. சீதநாடு, 9. மலாடு, 10. புனல் நாடு என பன்னிரு நிலங்கள் என்பர். இவர்கள் கருத்து பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்குரியது. அதனால், தொல்காப்பியர் காலத்தியதாகாது என மறுப்பவர்கள் உண்டு. அவர்கள், கொடுந்தமிழ் நிலங்களாக ‘1. குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபம், 2. கொல்லம், 3. கூபகம், 4. சிங்களம், 5. கொங்காணம், 6. துளு, 7. குடகம், 8. குன்றகம், 9. கன்னடம், 10. வடுகு, 11. தெலுங்கு, 12. கலிங்கம்’ என அடையாளம் காண்பர். இந்த அடையாளத்துடன், கலிங்க நாடு பண்டையக் காலத்தில் கொடுந்தமிழ் நிலங்களில் ஒன்றாகும்.
தமிழக சேதி அரசர்கள்
கடையேழு வள்ளல்களில் ஒருவனான காரி மரபில் வந்தவர்கள், சங்ககாலத்துக்குப் பிற்பட்ட ஆவணங்கள் மூலம், தங்களை சேதி மரபினர் என அழைத்துக்கொண்டதை அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இதற்கான சான்று இல்லை என்பதையும் நினைவுகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். எனில், வடபுலத்தில் இருந்து கலிங்கம் வந்து, அங்கு தமது ஆட்சியை அமைத்த சேதி மரபினருக்கும், தமிழகத்து சேதி மரபினருக்கும் தொடர்பு உண்டா என்ற தேடுதலைச் செய்ய வேண்டியவர்களாக நாம் உள்ளோம். இன்றைய நிலையில், நமக்குக் கிடைத்துள்ள சான்றுகள், முற்றான முடிவுகளை வழங்குபவையாக இல்லை என்று குறிப்பிட்டு, இந்த ஆலோசனையை இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்.
மலை நாடு என்ற பெயர் ஒன்றுமை!
வள்ளல் காரி ஆட்சி புரிந்த நாடு ‘மலை நாடு’ என்று அழைக்கப்பட்டது. அது வழக்கில் மருவி ‘மலாடு’ என்றானது. அதுபோலவே, விந்தியமலைக்கு வடபகுதியில் அமைந்திருந்த சேதி நாடும், மகத நாடும், மலைநாடு என்றே அழைக்கப்பட்டன என்பதும், ஆய்வு செய்ய வேண்டிய பெயர் ஒற்றுமை ஆகும். மலை மீது அமைந்த நாடுகள் மலை நாடு என அழைக்கப்பட்டன என்ற காரணப் பெயர் மட்டுமே இதற்குக் காரணம் என்பது இதற்கு விளக்கமாக மனத்தில் தோன்றினாலும், மேலும் ஆய்வைத் தொடர கூடுதல் சான்றுகளைத் தேடவும் விரும்புகிறது.
வடபுலத்து வேளிரின் இடப்பெயர்வு
கலிங்கம் மற்றும் தமிழக சேதி மரபினர் குறித்து அறியும் அவசியம், வேறு ஒரு காரணத்தாலும் முக்கியத்துவம் உடையதாகிறது. அது, வடபுலத்து வேளிரின் தமிழக இடப்பெயர்வுடன் தொடர்புடையது. இவ்வாறான இடப்பெயர்வு நிகழ, அன்றைய நிலையில் உருவான அரசியல், பொருளாதார மற்றும் வாழ்வியல் காரணங்களை அறியும் வரலாற்று விருப்பமே.


கல்வெட்டு - எழுத்து வடிவம்
 
காரவேலன் கல்வெட்டும் தமிழர் தொன்மையும்
காரவேலன் கல்வெட்டு, தமிழர்களை வசீகரித்ததற்கு முக்கியக் காரணம், அது தமிழ் அரசுகளின் கூட்டுப்படை 1300 ஆண்டுகள் நீடித்திருந்த பழைமையைச் சுட்டுவதால்தான். அதனாலேயே, ஆண்டுக் குறிப்பு 113 ஆண்டுகளாகக் குறைத்து படித்தறியப்பட்டபோது விவாதத்துக்கு உள்ளானது; உள்ளாக்கப்படுகிறது. இக்கல்வெட்டுச் செய்திக்குச் சங்க இலக்கியச் சான்றுகள் கொண்டுள்ள சில ஒப்புமைகளும் ஈர்ப்பை கூடுதலாக்கியது.
தொன்மைச் சான்றுகளும் நமது ஆய்வுகளின் போக்குகளும்.
இவ்விடத்தில், தொல்பொருள் சான்றுகளை இலக்கிய, இலக்கண மற்றும் தொன்மச் சான்றுகளுடன் அல்லது எதிரெதிர் மாறாக தரப்புச் சான்றுகளை இணைப்பதற்கு முன், இந்நாள் வரை எவ்வளவு நுட்பமாக அவற்றை அடையாளம் கண்டுள்ளோம், எந்தெந்த துறை அறிவைப் பயன்படுத்தியுள்ளோம்? தொகுத்தளித்துள்ளோம்? அண்டை, அயலகச் சான்றுகளை நமக்கு உரிமைக்கிக்கொண்டுள்ளோம்? என்பது போன்ற சுய பரிசீலனைக் கேள்விகளை எழுப்புவோம்.
இக்கேள்விகளை எழுப்புவதால், இது நம்மை நாமே குற்றம் சாற்றும் மனோபாவம், எதிர் கேள்வி மூலம் பிற தரப்புகளை முடக்கும் போக்கு என சிந்தனையைச் செலவிட வேண்டாம். இச்செயல், நமது முந்தைய ஆய்வாளர்களின் பங்களிப்பை புறக்கணித்த பார்வையும் அல்ல. அவர்கள் விரித்த பாதையில் காலம் விளைவித்துள்ள சிதைவுகளைச் செப்பனிடச் செய்த பணிகள் நிரந்தரமானவையா? தாற்காலிகமானவையா? பொருத்தமானவையா அல்லது பொருத்தமற்றவையா? என்ற புரிதலைத் தேடியவைதாம்.
தென்னிந்திய தமிழரின் தொன்மைச் சுவடுகளை வெளிப்படுத்தும், நம்மிடையே வழக்கில் உள்ள இலக்கண, இலக்கிய, தொன்மச் சான்றுகள் தவிர, உலகின் பல்வேறு இடங்களில் கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சான்றுகள் சிலவற்றைப் பற்றி நம் தரப்பிலிருந்து காலவரிசையில் ஆலோசிப்போம்.
  • மு.பொ.ஆ. 4000-ல், தமிழகத்தின் தேக்கு மரமும், சிந்து எனப்படும் மஸ்லீன் துணியும் பாபிலோனியரால் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. இவை கிடைத்த சுமேரியத் தலைநகரான ‘ஊர்’ (Ur) என்ற இடப்பெயரும், தமிழ்த் தொடர்பை வெளிப்படுத்தப்படுவதே. ஊர், மு.பொ.ஆ. 4000 ஆண்டுக்கு முற்பட்ட தொன்மையுடைய நகரம்.
  • மு.பொ.ஆ. 3000-ல், எகிப்தியர் தம் கடவுள் பூசைக்குத் தமிழகத்தின் சாம்பிராணியும், நறுமணப் பொருட்களும், ரத்தினங்களும் பயன்படுத்தியுள்ளனர். இவற்றுடன் யானைத் தந்தம், பருத்தி நூற்புடவை முதலியவையும் வாணிகப்பொருளாக இருந்துள்ளன.
  • இதே காலகட்டத்தில், எகிப்திய பிரமிடுகளைக் கட்ட பயன்படுத்தப்பட்ட சுத்தி, உளி முதலான எஃகு-இரும்புக் கருவிகள், தமிழகத்தின் (தகடூர் நாட்டுக் கஞ்சமலையின்) உற்பத்திப் பொருட்கள்.
  • பண்டைத் தமிழகத்தின் கோலார் தங்கம் மற்றும் தமிழகத்தில் மட்டும் கிடைக்கும் நீலக் கல்மணிகள், மு.பொ.ஆ. 3000-1500 இடைப்பட்ட ஆண்டுக்காலங்களில், சிந்துவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • மு.பொ.ஆ. 2000 முதல் மு.பொ.ஆ. 930 வரை, யூதர்கள் நாட்டுக்கு தமிழகத்தில் இருந்து ஏலம், இலவங்கம், சந்தனம், மயில் தோகை முதலியவை ஏற்றுமதியாயின. பைபிளின் பழைய ஏற்பாட்டில், தோகை என்பது துகி என்று திரிபுடன் வழங்கப்பட்டுள்ளது.
  • மு.பொ.ஆ. 800-களில், தமிழகத்தில் இருந்து அசிரியாவுக்கு யானைகள் அனுப்பப்பட்டுள்ளன.
  • மு.பொ.ஆ. 600-களில், தமிழகத்தில் இருந்து கிரேக்க நாடுகளுக்கு அரிசி, இஞ்சி வேர், கருவாப்பட்டை முதலியவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை முறையே, அருசா, ஜிஞ்சிபொ, கர்பியன் என்று அவர்களிடையே வழக்கில் இருந்தன.
  • புதையுண்ட பாம்பி நகரில், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஓவியம் ஒன்று, தமிழரின் உருவமைப்பிலும், பண்பாட்டுச் சாயலுடனும் உள்ளது.
இவை விவாதம் ஏதும் தேவையற்ற தொல்பொருள் சான்றுகள். பண்டைய உலக நாகரிகங்களின் அகழ்வுகளில் இருந்து பலதரப்பு ஆய்வாளர்களால் முன்நிறுத்தப்பட்டிருப்பவை. காலக் கணிப்பும் ஐயமற்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளவை. நிராகரிக்க முடியாதுள்ளவை.
மேலே குறிக்கப்பட்டவை, சங்க இலக்கியக் காலத்துக்கு முற்பட்ட தொன்மை கொண்ட தொல்பொருள் சான்றுகள். சங்க இலக்கியக் காலத்தின் பகுதியாக இருக்கும் மு.பொ. 3-ம் நூற்றாண்டு முதல் மு.பொ. 1-ம் நூற்றாண்டு வரை எகிப்தை ஆண்ட தாலமி அரசர்களின், தமிழகத்துடனான வாணிகத் தொடர்புகள் குறித்து கிடைக்கும் சான்றுகள் மிகுதியானவை. தாலமிகளுக்குப் பிறகு உரோமர்களுடனான வாணிகத் தொடர்புச் சான்றுகளும் மிகுதியாகக் கிடைத்துவருகின்றன. உரோமப் பேரரசுக் காலத்தில்தான், கிரேக்க ஆசிரியர்களான ஸ்ட்ராபோ, பிளினி மற்றும் பெரிபுளுஸை எழுதிய ஆசிரியரும் தம் நூல்களை எழுதினர்.
மு.பொ. 2-ம் நூற்றாண்டில், இந்திய வாணிகத்தைக் கவனிப்பதற்கு, தாலமிகள் தனி அதிகாரி ஒருவனை நியமித்திருந்தனர். அகஸ்டஸ் சீசர் (மு.பொ.ஆ. 44-14) ஆட்சியாண்டுகளில், பாண்டியன் ஒரு தூதுக்குழுவை அவனது அவைக்கு அனுப்பிவைத்துள்ளான்.
இதே நூற்றாண்டில், சீனாவுடனான வாணிகமும் செழித்திருந்தமைக்குச் சான்றாக, தமிழகத்தில் சீன நாணயங்கள் கிடைத்துள்ளன. பொ.நூ. 1-ன் சிந்துப்பகுதியைச் சார்ந்த அசுவபர்மன் நாணயமும் நிச்சயச் சான்றுகள்.
இவ்வாறு, மு.பொ.ஆ. 4000 ஆண்டுகளில் தொடங்கும் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இச்சான்றுகளை, குறிப்பாக வாணிகச் சான்றுகள் என வகைப்படுத்தலாம். இவ்வாணிகச் சான்றுகள், பொ.ஆ. 600 வரையிலும் ஏறத்தாழ 4500 முதல் 5000 ஆண்டுகளின் அறுபடா தொடர்ச்சியைக் கொண்டிருப்பவை. உலகின் வேறு எப்பகுதியும், இவ்வளவு நெடிய அறுபடாத தொடர்ச்சியைக் கொண்டிருப்பதாக அறிய முடியவில்லை. சீனா, விதிவிலக்காக இருக்கக்கூடும்.
இங்கு அறுபடாத தொடர்ச்சி என்று முன்நிறுத்துவது, கேள்விகளுக்கு உள்ளாக்கப்படலாம். இதற்கு விடை, உலகின் அறியப்பட்ட எல்லா தொன்மையான நாகரிகத்திலும் தமிழரின் / தென்னிந்தியாவுடனான தொடர்பு என்பது நிகழ்ந்துவந்தே இருக்கிறது என்பதே.
வரலாற்றுச் சிந்தனையாளர் தாயின்பி (Toynbee) அவர்கள், உலகின் இன்று வரை மலர்ந்து மறைந்ததாகக் கணக்கிட்டுள்ள 21 நாகரிகங்களையும், காலநிரல்படுத்தி ஒன்றைத் தெளிலாம். அறியப்பட்ட மலர்ந்து மறைந்த எல்லா நாகரிகங்களும், ஒன்றை அடுத்து ஒன்று கட்டமைக்கப்பட்டவை. சில, ஒன்றின் மீது ஒன்று எழுப்பப்பட்டவை. வெகு சிலவே, சம காலத்தில் நிகழ்ந்தவை. பொது அடிப்படை ஒன்றை இவை தமக்குள் கொண்டிருந்தாலும், ஒரு நாகரிகத்தை வளர்த்தெடுத்த இனக்குழுவை வீழ்த்தி வெற்றிபெற்ற இனக்குழு, புது நாகரிகத்தைத் துல்லியமான வேறுபாட்டுடன், வீழ்ந்த நாகரிகத்தை நிராகரித்துப் புதிய துவக்கத்தில் இருந்து கட்டமைத்தவை. உண்மையில், இப்புதிய துவக்கம் என்பது ஒருவகையில் கலப்புப் பண்பாட்டின் துவக்கமே. அது வீழ்ந்த, வீழ்த்திய இனக்குழுக்களின் பண்பாடுகளின் கலப்பால் உருவானது. இந்நாகரிகங்கள் பலவும் நிராகரிக்காத ஒன்று, தென்னிந்தியாவுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்பு மட்டுமே. இதனை இப்படியும் கூறலாம் – ‘உலகின் அறியப்பட்ட எல்லா தொன்மையான நாகரிகத்துடனும் தென்னிந்தியா வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது’. இதன் தாக்கமே, தமிழ் மற்றும் தமிழ்க் கிளைகளின் பண்பாட்டின் சுவடுகளையும், சாயல்களையும் உலகின் அறியப்பட்ட எல்லா தொன்மையான நாகரிகத்திலும் காணமுடிவதாகும்.
வாணிகத் தொடர்பின் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வியை எழுப்பும்முன், சான்று கிடைக்கும் மு.பொ.ஆ. 4000 முதல் இன்று வரை தொடர் வாணிகம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது, நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றால், அதற்குப் பின்புலமாக முறைப்படுத்தப்பட்ட நெறிகளும், குறுகிய வாணிக நோக்கங்கள் கொண்டிராத தன்மையும் இருந்திருக்க வேண்டும். ஆளும் அரசுகள் மாறினாலும், இவை இரண்டும் நீடித்திருக்க வேண்டும். இந்த வகையான பல ஆயிரம் ஆண்டுக்கால வலிமையான தொடர்ச்சிக்கு, காலத்துக்குத் தக்க வளர்ச்சி கொண்ட பண்பாடும், உற்பத்திப் பொருட்களின் தரமும் இருந்திருக்க வேண்டும், வணிகர்களிடையே வலிமையான கூட்டுறவு இருக்க வேண்டும். கடல் வழிகள் குறித்த தெளிவான அறிவும், படகு, கப்பல் போன்ற போக்குவரத்துச் சாதனங்களின் வளர்ச்சியும் இருந்திருக்க வேண்டும்.
வாணிகத் தொடர்பின் முக்கியத்துவம் என்ன என்ற கேள்விக்கு எவையெல்லாம் விடையாக இருக்கமுடியும்? நாகரிகம் பரவுவதற்கு, மொழி பரவுவதற்கு, சிந்தனை, தத்துவம் வளர்வதற்கு, வாழ்க்கை நிலை உயர்வதற்கு என பொதுப்படையாகவும், உட்கூறுகள் விளக்கத்துடனும், சான்றுகளின் துணைகொண்டு விடை அளிக்கலாம். ஏனெனில், இவற்றில் தென்னிந்தியாவின் பங்கை விவரிக்கும் தொல்பொருள் சான்றுகள் உலகளாவிய நிலையில் கிடைத்துவருவது போன்றே, மானிடவியல், இடப்பெயர், மொழியியல், தத்துவம் மற்றும் பண்பாட்டுப் பரவல் எனப் பலவகையிலும், தென்னிந்தியாவின் பங்கை விவரிக்கும் தொன்மையான சான்றுகள், தனித்தனி துறைகளாக வகுத்துப் பார்க்கும் எண்ணிக்கை மிகுதியில் கிடைத்துவருகின்றன.
தென்னிந்தியாவின் தொன்மைக்கு நிராகரிக்கமுடியாத சான்றாக இருக்கும் இவை, உலகில் பல்வேறு இடங்களில் விரவியும், பரக்கவும் கிடைப்பது குறித்து முன்னரே குறிப்பிடப்பட்டது. இவை குறித்து நாம் அறியவந்து 100- 150 வருடங்களுக்கு மேலாக இருக்கும். இத்தனை ஆண்டுகளில், இவை குறிப்புகள், வரலாற்று வரைவுக்கான சான்றுகள், வரலாற்றின் பெருமைமிகு பக்கங்களை அலங்கரிக்கும் தொல்பொருட்கள் என்பதை மீறி, எந்த அளவுக்கு அவற்றை ஆய்வுப்பூர்வமாக அணுகியுள்ளோம்? இவற்றில் இழையோடும் நுட்பமான கூறுகளை உள்வாங்கியிருக்கிறோம்? இவற்றின் மீது எந்த அளவு மீளாய்வு மேற்கொண்டு, முந்தைய அறிதல்களை மேலும் வளப்படுத்தியுள்ளோம்? என்னென்ன புதிய உண்மைகளைக் கண்டடைந்திருக்கிறோம்? கண்டடைந்தவற்றை எந்த அளவுக்கு ஆய்வுப் புலங்களிடையே பரிமாறிக்கொண்டிருக்கிறோம்? அவற்றை யாவருக்கும் அறியவும், ஏற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறோம்? மேலும், மதிப்பளிக்கத் தகுந்த மறுப்புரைகளை கவனத்தில் கொண்டு, நமது ஆய்வுகளை எந்த அளவுக்கு விரிவாக்கியுள்ளோம்?
உண்மையில், இவை என்று எந்நிலையில் ஒரு பருப்பொருளாக நமக்குக் கிட்டினவோ, அதே பருப்பொருளாவே இன்றும் இருக்கின்றன. இவற்றின் பொருண்மைகளை எந்த அளவு நாம் அறிந்துள்ளோம்; அறியச் செய்துள்ளோம். முதலில், இவை பொருண்மையான குணங்களையும் பெற்றிருக்கின்றன என்பதையாவது உணர்ந்திருக்கிறோமா? உணர்ந்து அவற்றை பொருண்மைகளுடன் முறைப்படுத்திக்கொண்டிருக்கிறோமா? காலநிரல்படுத்திக் கொண்டிருக்கிறோமா? என்ற கேள்விகளை எழுப்புவோம்.
இக்கேள்விகள், நமது பெருமிதங்களைச் சிறுமைப்படுத்த எழுப்பப்பட்டவை அல்ல என்ற தெளிவே சிந்திக்கத் தூண்டுகிறது. சிந்தனையின் முடிவு இதற்கான விடையைத் தருகிறது. இந்த எல்லாக் கேள்விகளுக்கான ஐயமற்ற விடை உள்ளது. அது, ‘தெளிவான மெளனத்தின் மொழியாக இருக்கிறது; சிறிதே முணுமுணுப்பின் மொழியாக இருக்கிறது. இதற்குப் போர்வையாக, ஆர்ப்பாட்டமான அடுக்குமொழிக் குரல்கள் திசையெட்டும் கவிழ்ந்திருக்கின்றன’.
ஆர்ப்பாட்டமான குரல்களின் கதகதப்பான போர்வையில், நமது மெளனமான, முணுமுணுக்குப் பதில் சொல்லிக் கழிக்கும் சுகம் நிரந்தரமல்ல. ஏனெனில், எந்த கேள்விக்கும் ஆசைகள் பதில்களாக முடியாது; விருப்பங்கள் வரலாறாக இருக்க முடியாது. ஆர்ப்பாட்டமான ஆசையோ, விருப்பமோ நிரந்தரமற்றது. ஆனால், பதில்கள்தாம் நிரந்தரமானவை. பதில் என்பது உண்மையின் பெருங்குரல். அதாவது, பதில் என்ற உண்மைதான் நியாயமான வரலாற்றை வழங்கும்.
இந்த உணர்தல் எழுந்த பிறகு, நினைவுக்கு வந்த ஒரே பொருண்மையை அறியத் தேடியதாக உள்ள கட்டுரை, ஹெப்சிபா ஜேசுதாசனின் ‘Countdown from Solomon’ என்ற தலைப்பிட்ட முன்னுரை மட்டுமே. பழைய ஏற்பாட்டில், ஹீப்ரு மொழியில் காணப்படும் தமிழ்ச் சொற்களை ஆய்வது. இது சங்கத்துக்கு முற்பட்ட காலத்துக்கு உரியது. சங்ககாலச் சான்றுகள் பல, உலகின் பல இடங்களில் இருந்து அறிந்தவை, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஆர். நாகசாமி, நடன காசிநாதன், ஏ. சுப்பராயலு, க. ராசன் போன்றோரின் பங்களிப்பு கணிசமானது.
இப்புரிதலுக்குப் பிறகு பின்னேக்கிய பார்வையில், கற்றவற்றில் இருந்து மீண்டும், இந்திய வரலாற்றின் மீது மாற்றுச் சிந்தனை கொண்ட வின்சென்ட் ஸ்மித் அவர்களின் வார்த்தைகளே நினைவுக்கு வருகின்றன. அவர் இவ்வார்த்தைகளைக் குறிப்பிடும்போது, இந்திய வரலாறு என்பது கங்கைச் சமவெளியின் வரலாறு. அதாவது, மத்திய இந்தியாவின் வரலாறு. சற்று விரித்துப் பார்த்தால், வடஇந்தியாவின் வரலாறு மட்டுமே என்ற மேலோங்கிய பார்வை நிலைபெற்றிருந்த காலமாகும். அத்திக்கும்பா கல்வெட்டு அறியப்பட்டபோது, சிந்துவெளி நாகரிகம் என்று இன்று போற்றப்படும் உலகம் வியக்கும் நாகரிகத்தின் சுவடுகள் கண்டறியப்படவில்லை. மு.பொ.ஆ. 1500 அளவில், இந்தியப் பகுதிக்கு வந்த ஆரியரின் வருகையேடுதான் பண்டைய இந்தியாவின் வரலாறு தொடங்குகிறது என்ற பருந்துப் பார்வை வலிமையுற்றிருந்த காலத்தில், அவர் வலியுறுத்திய வார்த்தைகள் இவை -
‘தென்னிந்திய வரலாற்றில் ஆர்வமுள்ள ஒருவர் கீழ்வருமாறு உரைப்பார் - ‘கங்கைச் சமவெளியை ஆதாரமாகக்கொண்டு வரலாறு எழுதும் வழக்கம், வரலாற்றாசிரியர்களின் குருதியோடு நன்றாகக் கலந்துவிட்டது. பல ஆண்டுகளாக அதுவே சிறந்த முறையென்று கருதப்படுகிறது. ஆனால், சிறந்ததோர் வரலாறு எழுத விரும்பும் ஆசிரியன், தென் திசையிலுள்ள கிருஷ்ணா, காவிரி, வைகை நதிகளின் (மதுரை, பாண்டி நாடுகளில் உள்ள) முகத்துவாரத்தில் தொடங்கி நூலெழுதுவது சாலச்சிறந்த விஞ்ஞான ரீதியான முறையாகும். பெரும்பாலும், இவ்வார்த்தைகளுடன் பல மேற்கோள்கள் நம்மிடையே உண்டு. அது, வடஇந்திய வரலாற்று ஆசிரியர்களின் போக்கைச் சாடுவதற்குத் தக்க கருவியாகப் பயன்படுத்தப்படுவது’. இதனைத் தொடர்ந்து அவர் சுட்டும் வார்தைகள், இவ்வார்த்தைகளைவிடப் பொருள் பொதிந்தது; இன்றளவும் பொருத்தமுள்ளதாக உள்ளது. ‘கொள்கை அளவில் இதைச் சிறந்த அறிவுரையாக ஏற்றாலும், தற்போதுள்ள நிலையில் இதைக் கடைப்பிடிப்பதென்பது சாத்தியமில்லை. என் அறிவுக்கு எட்டியவரை, அவ்வாறு முயல்வது வீண் என்றே தோன்றுகிறது’. (ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு, பாகம்-1, தமிழில், ப. 15).
அவர் வீண் என்று உணர்ந்ததை நாம் எப்போதும் அங்கிகரித்து வந்திருப்பவர்களாக மட்டுமே காட்சி அளிக்கிறோம். இதில் உள்ள நியாயம் புரிபட உணர்ச்சிக் கொந்தளிப்பான நிலையில் இருந்து விலகி இருந்து பார்க்க வேண்டியுள்ளது. அவர் வீண் என்று உணர்ந்த கூற்றை மறுக்கும்படியாக நம் செயல்களை அமைத்துக் கொள்வதுதான், பதில் என்ற உண்மையை நாட்டுவதாக இருக்கும்.
தமிழரின் தொன்மையை விளக்க, மு.பொ.ஆ 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்பொருள் சான்று இருக்க, முழு முற்றானது என அறுதிசெய்யப்படாத, சிதைவுற்ற, மாறுபட்ட பொருள்கொள்ள வாய்ப்பளிக்கிற காரவேலனின் கல்வெட்டு, தமிழர் வரலாற்றுக்கு ஒரு நிழல் சான்றே தவிர, ரத்தமும் சதையுமான முதுகெலும்பு கொண்டு நிமிர்ந்து நிற்கும் சான்றல்ல.
*
கேள்விகளை எழுப்பிவிட்டு, என்ன செய்யாமல் இருக்கிறோம் என்பதை சுட்டிவிட்டு, என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடாமலும், இந்நிலை ஏன் ஏற்பட்டது என்பதை அறியாமல் விடுவதும் முறையானதாகத் தோன்றவில்லை. இந்நிலை ஏன் ஏற்பட்டது என்பதற்கு அடிப்படையான காரணம், இச்சான்றுகள் பல்வேறு நாடுகளில் இருப்பவை. குறிப்பாக, பண்டைய சின்ன ஆசியப் பகுதிகளான துருக்கி, இரான், இராக், ஆப்கனிஸ்தான் மற்றும் கிரீஸ், பாகிஸ்தான் நாடுகளில் இருப்பவை. சில, மேற்கு நாடுகளின் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுபவை.
முதன்மையான செயலாக, முதலில் இவற்றை நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு ஆவணப்படுத்த வேண்டும். இவை குறித்து அயலகத் தொல்லியலாளர்களின் ஆய்வுக்குறிப்புகளையும், கருத்துகளையும் கேட்டறிந்து, யாவரும் அறியச் செய்ய வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை நமது அரசிடமும், நமது பல்கலைக் கழகங்களிடமும் முன் வைக்கலாம். அந்தப் பகுதியில் வாழும் தொல்லியல் ஆர்வளர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும், மேலாக பல்கலைக் கழக, தொல்லியல் துறையினரிடமும் கோரிப் பெறலாம்.

பார்வை நூல்கள்
  1. S.K. Aiyangar, Beginning of South Indian History, The Modern Printing Works, Madras, (1918)
  2. Jouveau Dubreuil.G, Ancient History of Deccan, (Tr. By) V.S.Swaminatha Dikshitar, Pandicheeri, (1920).
  3. R.G. Bandarkar, Early History of Dekkan, Chokaraverthy Chatterjee & Co Ltd, Calcutta, (1928).
  4. Benimadhab Baruva, Old Brahmi Inscriptions in Udayagiri and Kandagiri caves, University of Culcutta, Culcutta, (1929)
  5. ஆசிரியர் குழு, தொல்பழங்காலம், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரகம், சென்னை (1975).
  6. ஆசிரியர் குழு, சங்ககாலம், அரசியல், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரகம், சென்னை (1975).
  7. கே.கே. பிள்ளை, தென்னிந்திய வரலாறு, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, (1958).
  8. கா. அப்பாத்துரை, தென்னாடு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, (2001).

(‘காரவேலன் கல்வெட்டும் தமிழகமும்’ பகுதி, இந்த அத்தியாயத்துடன் முடிவுபெறுகிறது.
அடுத்த பகுதி, ‘கல் சொல்லும் வீரம்’ அடுத்த வாரம்).
***
திரு. குமரேசன் (Kumaresan150489@gmail.com) அவர்களுடைய கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்…
  1. தட்சிணாபதா, தட்சிணபாதா என்பவை ஒரே பொருள் கொண்ட சொற்களா? வரலாற்று நூல்களில் அது தென்னிந்தியாவைக் குறிக்கும் சொல் என்று விளக்கப்பட்டுள்ளது அல்லவா?
  • இரண்டும் வேறுவேறு பொருள் தரும் சொற்கள்.
  • தட்சிணபதா என்பது தட்சிணப்பதம் என்பதன் மருவு வழக்காக உள்ளது. தட்சிணம் என்பது தெற்கு என்று பொருள் வழங்கப்பட்டுள்ளது. பதம், நிலப்பிரிவைக் குறிக்கப் பயன்படுவதாகும். தட்சிணபதம் என்பது தெற்குப்பகுதி, தெற்கு நாடு, தென்நாடு என்று பொருள் வழங்கும் சொல்லாகும்.
  • தட்சிணபாதா என்பது தட்சிணபாதை என்பதன் மருவு வழக்காக உள்ளது. தட்சிணபாதா என்பது தென்இந்தியாவையும் வடஇந்தியாவையும் இணைத்த பெருவழியைக் குறித்த சொல்லாகும்.
  • நமது வரலாற்று நூல்களில், இருசொற்களும் பேதமற்றுப் பயன்படுத்தப்படுவதைக் கண்டுவருகிறேன். பொருள் கிட்டிவிடுவதால் பிரச்னையின்றி இருக்கிறோம். இனி, பொருள்மயக்கம் தராத வகையில் பொருத்தமான சொல்லைப் பயன்படுத்தி சுவையைக் கூட்டிக்கொள்வோம். 
  1. டெக்கான் என்பது தட்சிணம் என்பதின் மருவு எனக் கேள்விப்பட்டேன். அப்படியென்றால், டெக்கான் என்பது தென்இந்தியா முழுவதும் குறிப்பதா? வரலாற்று நூல்கள், டெக்கான் என்று தென்இந்தியாவின் வடபகுதி என்று குறிப்பிடுவதில் இருந்து இது மாறுபட்ட பிழையான பொருளில் உள்ளதல்லவா?
  • டெக்கான் என்ற சொல் குறித்து பண்டார்கர் (R.G. Bandarkar, Early History of Dekkan, Chockaraverthy Chatterjee & Co Ltd, Calcutta, (1928)) செய்துள்ள ஆய்வை முழுமையானதாகக் கருதுகிறேன். நீங்கள் அதைப் படித்துள்ளீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் தட்சிணம் என்பதின் திரிபுதான் டெக்கான் என்கிறார்.
  • பொதுவாக, தட்சிணம் தென்னிந்தியாவைக் குறிப்பதுதான் எனில், டெக்கான் தென்னிந்தியாவை அல்லவா குறிக்க வேண்டும் என்ற உங்கள் கேள்வி நியாயமான புரிதலில் இருந்து எழுந்ததே. டெக்கான் என்ற சொல் உருவான காலகட்டம், சுல்தான்களின் தென்னிந்திய வருகையுடன் தொடர்புடையது எனலாம். ஆங்கிலேயர் காலத்தில் அது வலுப்பெற்றுவிட்டது. தென்னிந்தியாவில் சுல்தான்கள் ஆட்சி அமைத்த பகுதிகள், தென்னிந்தியாவில் சுல்தான் பகுதிகள் என்று பெருள்படும் ‘டெக்கான் சுல்தான் நாடுகள்’ என்ற தொடர் வழக்குப் பெற்றது. பிற்காலத்தில், டெக்கான் என்பது மகாநதிக்கும் நர்மதா நதிக்கும், சிலபொழுது சுல்தான் நாடுகளின் விரிவாக்கத்தின்படி, கிருஷ்ண நதி வரையுள்ள பகுதிகளைக் குறிப்பிடும் சொல்லாவிட்டது. இதே காலகட்டத்தில், தென்னிந்தியாவில் டெக்கான் சுல்தான்கள் ஆட்சிப்பகுதிகள் போக எஞ்சிய பிற பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்டதால், டெக்கான் பெயர் தென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசுக்கு உட்படாத இடங்களைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது.
நன்றி :- தினமணி
***
தருமபுரியைச் சேர்ந்த முருகேசன் அவர்கள் தொலைபேசி மூலம் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள்…
  1. தட்சிணப்பாதை என்பது இன்றைய தேசிய நெடுஞ்சாலை 7 (NH 7) என்பதில் உடன்பாடு உண்டா?
  • உண்டு. தற்காலத்தில் புதிய இணைப்பிடங்களைக் கொண்டு வளர்ந்திருக்கலாம். இதன்காரணமாக, பண்டைய சில இடங்களின் தொடர்பு தற்காலத்தில் அறுபட்டிருக்கலாம்.
  1. தட்சிணப்பாதை என்பது குமரியையும் மகதத்தையும் இணைத்ததா? அல்லது காசியையும் ராமேஸ்வரத்தையும் இணைத்ததா? ஏன் இந்த அடையாளச் சிக்கல்?
  • அது, குமரியை துவக்கப்புள்ளியாகக் கொண்டு, இமயத்தின் அடிவாரம் சென்று, சீனாவுக்கு வழியமைக்கும் பள்ளத்தாக்குப் பகுதி வரை சென்றிருக்கலாம் எனக் கருதலாம். அல்லது இணைப்புச் சாலைகளால், அது இமயத்தின் அடிவாரம் வரை சென்றதாகவும் கருத இடமுள்ளது. இப்பாதையானது, ஒரு பெருவழியாக வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து பயன்பாட்டில் இருப்பதால், நாட்டின் கிளைச் சாலைகளால் அது இணைக்கப்பட்டிருக்கலாம்.
  • ‘காசியையும் ராமேஸ்வரத்தையும் இணைத்து’ என்பது ஆன்மிகம் வழங்கிய குறிப்பாக இருக்கலாம். இதுகுறித்து, ‘சங்ககாலத் தமிழகமும் அதியர் மரபினரும்’ புத்தகத்தில் சிலவற்றை ஆலோசித்துள்ளேன். என்னளவில், ராமேஸ்வரம் – மதுரை - கரூர் வரையிலான சாலை ஒரு இணைப்புச் சாலையே.
  • தற்போது, பூங்குன்றன் ஐயா அவர்களின் ’சங்க கால அரசியல்’ தலைப்பிலான சொற்பொழிவை அச்சாக்கத்தில் கட்டுரை வடிவில் படித்தேன். (வெளியீடு, அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம், தருமபுரி). அதில் அவர், தேசிய நெடுஞ்சாலையாக விளங்கும் 7-ம் எண் நெடுஞ்சாலை, சாதவாகனர் தலைநகரான பைத்தான், யவனர் வாழ்ந்த பிரம்மகிரி, சந்தவெல்லி, அதிய மாங்கடூர்(?), கரூர், மதுரை வழியாக ராமேஸ்வரம் சென்றடைந்ததாகக் குறிப்பிடுகிறார். பண்டைய வணிகப் பாதைகள் குறித்து கருத்து முரண்பாடுகள் உள்ளதையே இது காட்டுகிறது.
3.  தென்னிந்தியாவையும் வட இந்தியாவையும் இணைக்கும் 3 பாதைகளைக் குறிப்பிட்டுவிட்டு, குடவாயிலாரின் இருவழி வரைபடத்தைக் காட்டியுள்ளது. முழுமையாக இல்லை. இதனைத் தவிர்த்து மூன்று வழிகளையும் கொண்ட ஒன்றை வெளியிட்டிருக்க வேண்டும்.
  • உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். உங்களுடைய முந்தைய கேள்வி மற்றும் இக் கருத்தும் இரண்டும், என் நிலைப்பாட்டை உறுதிசெய்துகொள்ளவும் அல்லது மாற்றுக் கருத்துகளை ஏற்கவும் விரிவான ஆய்வை மேற்கொள்ளத் தூண்டுகிறது. முயற்சிக்கிறேன். 
***
திரு. மணி பாரி அவர்களின் கருத்துகளுக்கான பதில்கள்…
உங்களின் நான்கு பதிவுகளைக் கண்டேன். ‘காரவேலனின் கல்வெட்டும் தமிழகமும்’ பகுதியில் இரண்டு அத்தியாயங்களும், இன்று வெளியாகியிருக்கும் 4-வது அத்தியாயத்தையும் சேர்த்துப் படித்த பிறகு, உங்கள் கருத்துகளில் மாற்றம் உருவாகலாம் என்று நினைக்கிறேன். 
என் ஆய்வுகள் அனைத்தும், பாரிஸ்டர் கே.பி.ஜேயசுவால் மற்றும் பேராசிரியர் ஆர்.டி.பானர்ஜி, சதானந்த அகர்வால் (2000) மற்றும் சசிகாந்த் (2000) ஆகியோரின் படித்தறிதல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்தி சிலவற்றைக் கூறுகிறேன்.
காரவேலன் தம்மை சேத ராஜ (சேர ராஜ என்பதே சேத, சேதி என்று திசைச் சொல்லானது) என்றும் வசு குலத்தவன் (வசு = அக்கினி, வன்னி) என்றும் கூறுகிறான். அவனின் கல்வெட்டு ஒரிய (ஓரி) நாட்டில் கிடைத்தாலும் அவனது தலைநகரம் எது என்பது புலப்படவில்லை. அவன் நன்ன/நந்த மரபினராக இருக்கலாம். அவனின் தலைநகரம் கொங்கு நெடுந்தொடர் நிலமாக இருக்கலாம். அவன் காவேர (காவிரி என்பதன் திரிபு) தடாகத்தை (ஆற்றை) புதுப்பித்ததாகக் கூறுகிறான். எனவே, காவிரியின் தந்தையாகக் குறிப்பிடப்படும் ‘கவேரன்’ என்பவன் இவனாகவே இருக்கக்கூடும். இவன் பெயராலேயே காவிரிபூம்பட்டினம் ‘கவேரப்பட்டினம்’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. இவன் கொங்கு நிலத்தின் வழியாக தமிழகம் வந்திருக்கவே வாய்ப்பிருக்கிறது. இவன் படையெடுத்த மூசிக நகரம் என்பது சாத்பூர/ஏழுமலை/எலிமலை என்பதை மூசிக மலை என்று வெளிநாட்டவர் குறிப்பதால், விந்திய மலையின் மேலக் கடைசி மலையான ‘வாணமலை’யில் உள்ள நகராக இருக்கலாம். அங்கு இடிபாடு உள்ள ஒரு கட்டிடம் மூசிக ‘கோ இல்’ எனப்படுகிறது. அதன் அருகில் உள்ள வணிகத் துறைமுக நகரான ‘மாந்தை’ அல்லது ‘பாழி நகர்’ என்பதே பிதும்ப நகராக இருக்கலாம்.
  1. சேரர் என்பதன் திசைச் சொல்லே சேதி என்பதில் உடன்பாடு இல்லை. போலவே அவன் நன்னன், நந்த மரபினன் என்பதிலும் உடன்பாடு இல்லை. சேரர் மரபின் திரிபே சேதி ஆயின், நன்னன்/நந்த மரபினருடன் ஏன் அடையாளம் காண முயல வேண்டும். வரலாறு முழுவதும், சேதி மரபினர் தனி அடையாளம் கொண்டு விளங்குகிறார்கள். அத்தியாயம் 4-ல் இம்மரபினர் குறித்து சில குறிப்புகளை அளித்துள்ளேன்.
  2. கல்வெட்டில், வசு குலம் என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியவில்லை.
  3. அவனது தலைநகரம் ‘கலிங்க நகரம்’ என்று என்று கல்வெட்டு தெளிவாகக் குறிப்பிடுகிறது. கலிங்க நகரை கலிங்க நாட்டுக்குள்தான் தேட வேண்டுமே தவிர, கொங்கு நாட்டில் அல்ல. மேலும், ‘கொங்கு மேட்டு நிலம்’ அவனது தலைநகராக இருக்கலாம் என்று நீங்கள் குறிப்பிடுவது புதிராக உள்ளது. இது, இரண்டு கேள்விகளை எனக்குள் எழுப்புகிறது. 1. ‘கொங்கு மேட்டு நிலம்’ என்ற ஊர் எங்குள்ளது? அதன் தற்போதைய பெயர் என்ன? 2. உங்கள் கருத்துப்படி, சங்க காலத்தில் கொங்குப் பகுதி கலிங்க நாட்டைச் சார்ந்தது. அப்படித்தானே?
  4. அவன், கலிங்க நகரில் கிபிர ரிஷி பெயரில் அமைந்த ஏரியை புதிப்பித்தான் என்றுதான் குறிப்பிடுகிறான். கிபிர என்பது காவேர என்று நீங்கள் சொல்வதுபோல் எடுத்துக்கொண்டாலும், கலிங்கத்தில் காவிரி ஆறு ஓடியதை நீங்கள் நிறுவ வேண்டும். அல்லது, காவிரிக் கரையில் கலிங்க நகர்  அமைந்திருந்ததைக்  காட்ட வேண்டும். மேலும், நீங்கள் குறிப்பிடும் ‘கொங்கு மேட்டு நிலம்’ காரவேலனின் தலைநகரம் எனில், காவிரிக் கரையில் ‘கொங்கு மேட்டு நிலம்’ என்ற நகரை எங்கு இருக்கிறது என்பதை அடையாளப்படுத்துங்கள். ‘தடாகம்’ என்பது ஆற்றைக் குறிக்கும் சொல் என்பதற்குச் சான்றுகள் உண்டா?   
  5. காவிரியின் தந்தை ‘கவேரன்’ என்று எப்புராணத்தில் சொல்லப்படுகிறது? அறியத் தாருங்கள்.
  6. காவிரி இவன் பெயரில் அமைந்தது எனில், ஏன் புராணங்கள் உள்பட நமது இலக்கியங்கள், காவிரியைப் பெண்ணாகவும் தாயாகவும் குறிப்பிடுகின்றன?
  7. காவிரிப்பூம்பட்டினம் இவனது பெயரில் அமைந்த நகரென்று நீங்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வோம் எனில், காவிரிப்பூம்பட்டினம் பற்றிக் குறிப்பிடும் சங்க இலக்கியத்தின் எல்லாப் பாடல்களையும், மு.பொ.ஆண்டு 176-க்குப் பிற்பட்டதாக வைத்து, நமது ஆய்வுகளையும் புதுப்பிக்க வேண்டும், சங்க காலத்தின் காலவைப்பையும் பின்தள்ளி வைக்க வேண்டும். காலம் எப்படியாயினும், காவிரிப்பூம்பட்டினம் ’கவேரப்பட்டினம்’ என்று அழைக்கப்பெற்றதற்கு இலக்கிய, கல்வெட்டுச் சான்று இருந்தால் சொல்லுங்கள். சங்க காலத்தில், காவிரிப்பூம்பட்டினத்துக்கும் காரவேலனுக்கும் உள்ள தொடர்புகளை மேலும் விளக்க வேண்டுகிறேன். அதன் வழி, சங்க இலக்கியச் செய்திகளை மறுபரிசீலனை செய்து, புதிய தரவுகளைத் தமிழக வரலாற்றுக்கு வழங்க வேண்டுகிறேன்.
  8. இவன் ஏன் கொங்கு வழியாக படைகொண்டு தமிழகம் வர வேண்டும். உங்கள் கூற்றுப்படி, இவனது தலைநகரமே ‘கொங்கு மேட்டு நிலம்’தானே.
  9. சங்க இலக்கியம் குறிப்பிடும் நகரங்களான மாந்தையும், பாழியும் ஒன்று என்று நீங்கள் குறிப்பிடுவது, சங்க இலக்கியம் காட்சிப்படுத்தும் செயல்களுக்கு முரணாக இருப்பதாகப் படுகிறது. இரண்டும் ஒன்றுதான் என்பதற்குக் கூடுதல் சான்றுகள் கொண்டு விளக்க வேண்டுகிறேன். ஏனெனில், இது நிரூபிக்கப்பட்டால் சங்க கால வரலாறு புதிய அடையாளத்துடன் இருக்கும். மேலும், காரவேலன் வரலாற்றுக்கும் இது சிறப்பு சேர்க்கும்.
  10. விந்திய மலை, மேலக் கடைமலையான வாணமலைக்கு அருக்கில் அமைந்த மாந்தை எனக் குறிப்பிடுவது பதிவில் உண்டான குழப்பமா? எனத் தெரியப்படுத்துங்கள். விந்திய மலைக்கும் சேரரின் மாந்தை நகருக்கும், கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று துணிந்து கூறுவேன்.
மூவேந்தர் கூட்டணி என்பது பற்றி அத்திக்கும்பா கல்வெட்டிலோ, வேறு சான்றுகளோ எதுவும் இல்லை. அதை தாம் (காரவேலன்) உடைத்ததாக பொருள்படும் சொற்கள் எதுவும் அத்திக்கும்பா கல்வெட்டில் இல்லை. தமக்கும் தாமிரக/திரமிட அரசர்களுக்கும் 1300 ஆண்டுகளாகத் தொடரும் ‘தேக சங்காத்தம்’ (உடல் மற்றும் குருதித் தொடர்பு) என்ற தொடர்பை, அவர்கள் மீது போர் செய்வதன் மூலம் உடைத்துக்கொண்டதாகக் கூறுகிறான். இது, காரவேலன் 1300 ஆண்டுகளாக தமிழக அரசர்களுடன் உடல் ரீதியாகவும் குருதி வழியாகவும் உறவுடையவன் என்பதைத்தான் கூறுகிறது.
  1. மூவேந்தர் கூட்டணி என்று அத்திக்கும்பா கல்வெட்டு குறிப்பிடவில்லை என்பதில் நான் உடன்படுகிறேன். ஆனால், அத்திக்கும்பா கல்வெட்டு, தமிழரசுகளின் கூட்டுப்படை இருந்ததை நான் மேலாய்வுக்கு எடுத்துக்கொண்ட முன்பு குறிப்பிட்ட படித்தறிதல்கள் உறுதி செய்கின்றன. தமிழரசுகளின் கூட்டுப்படையை மூவேந்தர் கூட்டணிப் படை என தமிழக வரலாற்று ஆசிரியர்கள் மயங்கியுள்ளனர். இம்மயக்கத்துக்கு, மாமூலனாரின் அகநானூறு 31-ம் பாடலின் 14 மற்றும் 15-ம் வரிகள் குறிப்பிடும் ‘தமிழ்கொழு மூவர் காக்கும் / மொழிபெயர் தேஎத்த பல்மலை’ செய்தியே காரணமாகியுள்ளது. தமிழ்கொழு மூவர் என்பது சேரர், சோழர், பாண்டியராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் வலியுறுத்துவேன்.
  2. காரவேலன் தேக சங்காத்தத்தைதான் உடைத்தான் என்பது புதிய செய்தி. உங்கள் கருத்து யாருடைய படித்தறிதலின் அடிப்படையானது எனக் கூறுங்கள். காரவேலன் கல்வெட்டு பற்றி ஏற்றுக்கொண்டுள்ள படித்தறிதல்கள் எல்லாவற்றையும் மறுக்கும் Benimadhab Baruva, Old Brahmi Inscriptions in Udayagiri and Kandagiri caves, University of Culcutta, Culcutta, (1929)-வின் படித்தறிதல்கூட இச்செய்தியை வழங்கவில்லையே.
சோழர், பாண்டியர், சேரர் என்பது குடியின் பெயர் என்பதற்குச் சான்றுகள் இல்லை. இவர்கள் தொடர்பாக, குடி என்ற சொல் குடும்பம் என்ற பொருளில் இலக்கியங்களில் ஆளப்படுகிறது. சோழ அரசுரிமை கோரி 9 குடும்பங்களைத் தோற்கடித்து, கரிகாலன் அரசுக் கட்டில் ஏறினான். பாண்டியர் பஞ்சவர் ஆவர். அதியர்கள், பனம்பூ மாலையும், வில் அம்பு சின்னமும், வஞ்சி அரசர் என்று கல்வெட்டு மற்றும் இலக்கியங்கள் கூறுகின்றன என்பதன் மூலம், அவர்கள் சேரக் கிளையினர் என்பதை அறியலாம். சேர - சோழ - பாண்டிய என்பது அரசுகளின் பெயர்கள். அதை ஆள்பவர், சேர சோழ பாண்டியர் எனப்பட்டனர். இவர்கள் தனித்தனி இனத்தினர் அல்லது குடியினர் என்பதற்குச் சான்றுகள் இல்லை.
  1. கரிகாலன் குறித்த செய்தியிலும், பாண்டியர் பஞ்சவர் என்ற உங்கள் கருத்துக்கும் உடன்படுகிறேன். ஆனால், அதியமான் குறித்த செய்தியில் உடன்பாடு இல்லை. அதியனுக்கு உரிய பனம்பூ மாலை, அதியனை வென்றதால் சேரருக்கு உரிமையாற்று எனக் கருதுகிறேன். ‘சங்க காலத் தமிழகமும் அதியர் மரபினரும்’ நூலில் இது குறித்து ஆலோசித்துள்ளேன்.
  2. சேரர், சோழர், பாண்டியர் என்பவை அரசுகளின் பெயர் என்பதானால், அவ்வரசுகள் யாரால், எக்காலத்தில் உருவாக்கப்பட்டன? அவை அப்பெயர் பெற்றதற்கான காராணங்கள் பற்றி விரிவாக எழுத வேண்டுகிறேன்.     
கார வேள் (முருகன் ஒரு சிங்காரவேலன்) ஒரு தமிழ் வேளிர் ஆவான். அவனது பெயரும் அவன் கல்வெட்டில் உள்ள தமிழும் அதை உறுதி செய்கிறது. இதன் அடிப்படையில், அக்கல்வெட்டைப் பற்றிக் கூறுங்கள்.
  1. காரவேலன் என்ற பெயர் இயற்பெயரா? சிறப்புப்பெயரா? எவ்வாறு எடுத்துக்கொள்வது. காரவேள் இயற்பெயர் எனில், அவன் இறைவன் முருகனின் பெயரைச் சூட்டி மகிழ்ந்துள்ளான் என்பதில் மறுப்பில்லை. கார வேள் எனக்கொண்டு, வேளிர் மரபு விளக்கத்துடன் அப்பெயரைக் காண வேண்டும் என்றால், கார என்பது அவன் இயற்பெயரோ, குடிப்பெயராகவோ ஆகும். இதன் அடிப்படையில் உங்கள் கருத்துகளை விளக்குங்கள்.
  2. காரவேலன் கல்வெட்டில் தமிழ் மொழி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது முற்றிலும் புதிய செய்தி. அக்கல் வெட்டில் நீங்கள் அறிந்த தமிழை யாவரும் அறியத்தாருங்கள்.
  3. காரவேலனின் தமிழ் / திராவிடத் தொடர்பு குறித்து சில செய்திகளை அத்தியாயம் 4-ல் ஆலோசித்துள்ளேன்.
நன்றி :- தினமணி


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

1 comments:

  1. Coin Casino Review (2021) - Casinoworld.com
    Coin Casino reviews by real septcasino players, ✓ Find bonus codes, free 메리트카지노총판 spins & promotions for trusted casinos. Play at the best casino site in the UK 인카지노 with Casinoworld

    ReplyDelete