த. பார்த்திபன், தருமபுரி
வரலாற்றுப்போக்கில், அசோகனுக்கு பிறகு மெளரியப் பேரரசு நலிவுற்ற நிலையை சாதகமாக்கிக்கொண்டு, கலிங்கத்தைத் தன் தனியாட்சிக்குக் கொண்டுவந்தவன் காரவேலன். இவன் சேதியரசர்களில் மூன்றாம் தலைமுறையினன் என்பது கல்வெட்டல் இருந்தே பெறப்படுவது. இவனது ஆட்சிக்காலமான மு.பொ.ஆ. 175 - 163 என்பது, தமிழகம் சீரும் சிறப்புமாக இருந்த காலகட்டமான சங்ககாலம் ஆகும்.
மெளரியர் படையெடுப்பு
காரவேலனுக்கு முன்னர், வடபுலத்தில் இருந்து தமிழகத்துக்குள் மெளரியர் ஊடுருவ முயன்றதை, அகநானூறு 69, 251, 281 மற்றும் புறநானூறு 175 ஆகிய சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன. உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், அகம் 69-ம் பாடல், 10 - 12 வரிகளில்,
“விண்பொரு நெடுங் குடை தேர் மோரியர்
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
அறை இறந்து அகன்றனர்”
என்று, அதாவது “வானை முட்டும் மலை ஒன்று, உயர்ந்த குடையை உடைய மோரியரின் (மெளரியர் என்பதன் திரிபு) தேர்ப்படையை குறுக்கிட்டு நின்றது. தங்கள் தேரானது தடையின்றி உருண்டு செல்ல, அம்மலையில் பாறையைக் குடைந்து செம்மையான பாதையை அமைத்தனர்” குறிப்பிட்டுள்ளார்.
மாமூலனார், அகம் 251-ம் பாடல், 10 - 14 வரிகளில்,
“… … … … மோகூர்
பணியா மையின், பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்குவெள் அருவிய அறைவாய்”
என்று, அதாவது “மோகூர் பணியாத்தால், அதாவது மோகூர் மன்னன் பழையன், மோரியரின் தலைமையை ஏற்கப் பணியாததால், பெரும் படையுடைய புதியதாக எழுச்சியுற்ற மோரியர் பகைமை கொண்டு, (தென் திசை மேல் – தமிழ் மன்னர் மேல்) படையெடுக்க முனைந்தனர். அதற்காக அவர்கள் வெண்மையான அருவிகளை உடைய உயர்ந்த மலையைக் குடைந்து, தங்கள் தேர்ச்சக்கரங்கள் தடையற்றுச் செல்வதற்காக வழியமைத்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் ஒரு சான்றாக, அகம் 281-ம் பாடல், 8 - 12 வரிகளில்,
“முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து
ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறைஇறந்து அவரோ சென்றனர்”
என்று, அதாவது “வலிமைமிக்க வடுகர் படைத்துணையாய் முன்நிலையில் வர, மோரியர்கள் தென்திசையில் படையெடுக்க, விண்முட்டும் அளவுக்கு உயர்ந்த பனியுடைய மலையைக் குடைந்து வழி செய்து கொண்டனர். அவ்வழியே தங்கள் தேர்களை உருட்டிச் சென்றனர்” என்று குறிப்பிடுகிறார்.
இம்முயற்சிகள், அசோகரின் தந்தை பிந்துசாரர் காலத்தில் நிகழ்ந்தவை என்பர். இம்முயற்சியில், மெளரியர் போதுமான வெற்றிபெறவில்லை என்பதை அறியமுடிகிறது. தமிழ் அரசுகளின் கூட்டுப்படைகளின் வலிமை காரணமாகவே, தமிழ் அரசுகளுடன் அசோகன் நட்புப்பேணி, தமிழ் நிலத்தில் அறச்செயல்களில் ஈடுபட்டான் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அசோகனது அறச்செயல் பற்றியும், கள்ளில் ஆத்திரையனாரின் புறநானூறு 175-ம் பாடல் அறியத்தருகிறது. அது,
“... … … … … வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
மலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே.”
அதாவது, “உயர்ந்த குடை, கொடிகள் கட்டப்பட்ட மோரிய மன்னரின் வலிமையான தேரின் சக்கரங்கள் சுழல்வதற்கு, அவர்கள் உயர்ந்த மலைத் தொடரில் குடைந்து கணவாய் அமைத்தனர். அது, இரு நிலங்களை, அதாவது வடநாட்டையும் தென்நாட்டையும் இணைத்தது. அந்த எல்லையில் மிகப்பெரிய அறச்சாலை ஒன்று அமைக்கப்பட்டு, நாள்தோறும் பலரைப் பாதுகாக்கிறது” என்று சுட்டுகிறது.
மெளரியர் குறித்த சான்றுகள் இவ்வாறு விரிவாக இருக்கிறது. ஆனால், காரவேலனின் படையெடுப்புகளைப் பற்றி சங்க இலக்கியத்திலிருந்து ஒன்றையும் பெற முடியாதுள்ளது.
தமிழ்கொழு மூவர் காக்கும் பல்மலை
தமிழ்கொழு மூவர் காக்கும் மொழி பெயர்த் தேயத்தில் இருந்த பல்மலை ஒன்றை பற்றி மாமூலனாரின், அகநானூறு 31-ம் பாடல், 12 - 15 வரிகள் குறிப்பிடுகிறது.
“… … … … (வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண்வாழ்க்கைத்)
தமிழ்கொழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பல்மலை (இறத்தே).
(அடைப்புக்குறிகள், இவ்வாசிரியரால் இடப்பட்டவை. அவற்றுள் இருப்பவை, தலைவிக்குத் தோழிக்கூற்றுகள் என்பதால் பிரிக்கப்பட்டுள்ளன).
மொழி பெயர்த் தேயத்தில் அமைந்திருந்த பல அடுக்குகளையுடைய இம்மலை எது என்பதை அறிய முடியவில்லை. இருந்தும், இவ்விலக்கியச் சான்று காரவேலனின் கல்வெட்டுச் சான்றுடன் இணைத்து ஒப்பாய்வு செய்ய உதவுகிறது.
1300 ஆண்டுகளும் 113 ஆண்டுகளும்
காரவேலனின் கல்வெட்டின் 11-ம் வரியிலேயே, பிதும்டாவுக்கு அடுத்து வரும் செய்தி, தமிழ் அரசுகளின் கூட்டணிப் படை பற்றியது. அக்கூட்டணிப் படையைக் காரவேலன் உடைத்ததைக் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படும் ஆண்டு எண்ணிக்கை, அதன் சிக்கலான வாக்கிய அமைப்பு அல்லது குயுக்தியான படித்தறிதல் அல்லது புத்திசாலித்தனமான படித்தறிதல் காரணமாக, விமரிசனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது. கல்வெட்டில், அத்தமிழ்க் கூட்டணிப் படை 1300 ஆண்டுகள் நீடித்து இருந்தது குறிப்பிடப்படுகிறது. இவ்வளவு பழைமை கொண்டதாக தமிழ் அரசுகளோ, அவ்வரசுகளின் தமிழ்க் கூட்டணிப் படையும் இருக்கமுடியாது என்ற ஊகத்தின் பின்னணியில், 1300 ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட காலக்குறிப்பு எனக்கொண்டு, இது 113 ஆண்டுகளாகவே இருக்கமுடியும் என கே.பி.ஜேயசுவால் மற்றும் ஆர்.டி.பானர்ஜியால் வெளியிடப்பட்ட செம்மையான படித்தறிதலில், இவ்வாறான திருத்தம் நிகழ்த்தப்பட்டது (Epigraphia Indica, Vol.XX, 1929-30, p.88). இதே மாதிரியான காலக்கணக்கு, இக்கல்வெட்டில் வரும் தனசூலியக் கால்வாய் கட்டிய ஆண்டுக் குறிப்பிலும் (300 - 103) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு திருத்திய ஆண்டுக் கணக்கே, வரலாற்று ஆசிரியர்களால் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், திருத்த படித்தறிதல் தேவையற்றது என்பதை வலியுறுத்துவதுபோல், கல்வெட்டில் 300 மற்றும் 1300 ஆண்டுகள் என்றே தெளிவாக உள்ளதாக, தற்கால ஆங்கில, ஹிந்தி, சமஸ்கிருத மொழிபெயர்ப்புகள் பலவும் தெரிவிக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று, சதானந்த அகர்வாலுடையது. (www.Jatland Wiki). (சதானந்தர் அகர்வால் பற்றி முந்தைய அத்தியாயம் -2 இல் காண்க)
கல்வெட்டில் வரும் இவ்விரு ஆண்டுக்காலக் குறிப்புகளை, சசிகாந்த் அவர்கள் (‘The Hathikumba Inscription of Karavela and the Bhabru Edict of Asoka’) தெரிவித்தபடி, மகாவீரர் மறைந்த ஆண்டுக்கணக்கில் கொள்வதா அல்லது நந்தராஜன் ஒருவன் தொடங்கிய ஆண்டுக்கணக்கில் கொள்வதா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சசிகாந்த் (மு.கு.நூ.) அதனை மகாவீரர் மறைந்த மு.பொ.ஆ.527-ஐ ஆண்டுக்கணக்கின் துவக்கப்புள்ளியாகக் கொள்ள, சிலர் மற்றொரு கருத்தில் நிற்க, வேறு கணக்கீட்டில், அவனது ஆட்சியாண்டுக் கணக்கில் கணக்கீடு கொள்வதில் சிலர் நிற்கின்றனர். ஒத்திசைவான இணைச் சான்றொன்று இன்மையால், இதில் ஒருமித்த போக்கு உருவாக அரிதான இடமே உள்ளது.
எவ்வாறாயினும், 1330 அல்லது 113 என்ற ஆண்டுகளின் திருத்த படித்தறிதலுக்கு இது பாதிப்பு செய்வதில்லை. ஆனால் அது, 1330 அல்லது 113 ஆண்டுக்கணக்கை கணிப்பது எவ்வாறு? காரவேலனின் 11-ம் ஆட்சியாண்டில் இருந்தா? நந்தராஜன் ஒருவன் தொடங்கிய ஆண்டுக்கணக்கிலா? அல்லது மாகாவீரர் இறந்த ஆண்டுக்கணக்கிலா? என்ற கணக்கிடலில் பாதிப்பு செய்கிறது.
மேலும் சில படித்தறிதல்களில், கல்வெட்டின் 11-ம் வரி பெரிதும் சிதைவுக்கு உள்ளாகி இருப்பதால், செய்திகளைக் கிஞ்சித்தும் அறியமுடியவில்லை என்ற தகவல் இடம்பெற்று, அவ்வரிக்கான இடம் வெற்றிடமாகவும் விடப்பட்டுள்ளது என்பதையும் மறைப்பதற்கில்லை. இவ்வளவு முரண்பாடு ஏன் எழுந்தது? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
கல்வெட்டுச் செய்தி தரும் ஆண்டுக் கணக்கின் மீது கூடுதல் ஆய்வைச் செலுத்தும்முன், கல்வெட்டின் செய்திகளை அதன் அர்த்தத்தில் உள்வாங்கிக்கொள்ள சில விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவரலாம்.
அத்திக்கும்பா கல்வெட்டுச் செய்தியின் தொனி
அத்திக்கும்பா கல்வெட்டின் தொனி, காரவேலனின் வாழ்க்கையை முன்நிறுத்தி, அவனது குடிப்பெருமைகளை, வெற்றிகளை, சாதனைச் செயல்களை, அரசபீடத்தில் அமர்ந்த முதலாம் ஆண்டில் இருந்து பதிமூன்றாம் ஆண்டுவரை, காலவரிசையில் பிரஸ்தாபிப்பதாகும். தற்புகழ்ச்சியற்ற இயல்புத்தன்மையை, இக்கல்வெட்டு தம்முள் எங்கும் கொண்டிருக்கவில்லை. இங்கு, சசிகாந்த் அவர்கள் (மு.கு.நூ.) சுட்டிக்காட்டும் (அரசின்) பொது அறிவிப்புக்கு, சாணக்கியரின் ‘அர்த்தசாஸ்திரம்’ குறிப்பிடும் அறுவகை இலக்கணங்களான ‘ஒழுங்கு, தொடர்பு, நிறைவு, இனிமை, மாட்சிமை, தெளிவு’ ஆகியவற்றைக் கொண்டதாக இக்கல்வெட்டு இருந்தாலும், தொனி வேறு வகைப்பட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது. தமிழ் அரசுகளையோ அல்லது அவனது காலத்தின் எந்த ஒரு அரசனையோ, அரசுகளையோ முன்நிறுத்துவதோ, புகழ்வதோ கல்வெட்டின் நோக்கமல்ல. இக்கல்வெட்டு, கலிங்கத்தின் அண்டை, பகை நாடுகளையும், அவற்றின் அரசுகளையும் அரசர்களையும் இழிவுபடுத்திக் கூறுவதுடன், அவர்களைச் சற்றும் அங்கிகரிப்பதோ, சமமாகக் கருதுவதோ இல்லை. மேலும், அவர்களை மேன்மைப்படுத்துவதோ, மிகைப்படுத்துவதோ காட்டாத மொழியைக் கொண்டிருப்பது. இம்மொழி, அசோகரின் கல்வெட்டுகளின் தொனியில் இருந்து முற்றாக வேறுபட்டது.
இதன் தொனி இவ்வாறு உள்ளது –
4, 5-ம் வரிகளில், சதகர்ணி அரசனைப் பொருட்படுத்தாமல், கலிங்கத்தின் மேற்கே அமைந்த கன்ஹவேம்னா (கன்னவேணி – கன்னபெண்ணை - கரும்பெண்ணை) ஆறு வரை சென்று, அங்கு அமைந்திருந்த மூசிக (அசிக) நகரத்தை நோக்கி குதிரை, யானை, காலாள் மற்றும் தேர் கொண்ட மிகப்பெரிய படையைச் செலுத்தினான்; 5, 6-ம் சிதைந்துள்ள வரிகளில், இதற்கு முன்னர் கடக்கப்படாத கலிங்கத்தின் முந்தைய அரசர்கள் உருவாக்கிய வித்யாதர பகுதியை கடந்துவந்த ரதிகா, போஜகாவின் மன்னர்கள் வித்யதரம் அழிபடுவதற்கு முன், தங்கள் அணிமுடியை இழந்தனர், அவர்களது குடையும், அரச சின்னங்களும் எறியப்பட்டன, இன்னும் அவர்களது ஆபரணங்கள் மற்றும் சொத்துகள் கைப்பற்றி அவர்களைக் காலடியில் பணியச்செய்தான்; 7, 8-ம் வரிகளில், கொரதகிரியின் வலிமையான கோட்டையைத் தகர்த்த மிகப்பெரிய படை, ராஜகிருகத்துக்கு நெருக்கடி கொடுத்தது; 8, 9-ம் வரிகளில், இதனைக் கேள்வியுற்று மனம்கலங்கி நம்பிக்கை இழந்திருந்த தம் படைவீரர்களை அதிலிருந்து விடுவித்து, மதுராவுக்குப் பின்வாங்கினான் யவனராஜா (பெயர் சிதைந்துள்ளது - (டிமி(டா) - திமெத்ரியசு எனப் படிக்கப்பட்டுள்ளது). 10-வது வரியில், சாம, பேத, தண்டம் என்னும் கோட்பாட்டுக்கு இணங்க, பரதவர்சம் முழுவதும் தம் பெரும் படையை அனுப்பி பல நாடுகளைத் தோற்கடித்து, அவர்களிடமிருந்து மணிகளையும் ரத்தினங்களையும் கைப்பற்றினான். 11, 12-ம் வரிகளில், நூறு ஆயிரம் போர்வீரர்களைக் கொண்டு, உத்திரபாதத்தின் அரசர்களை நடுங்கச் செய்தான், மகதத்தின் அரண்மனைக்குள்ளே தம் யானைகளை அனுப்பி மக்களை மிரளச் செய்தான். மகதத்தின் மன்னன் பாசாஸ்டிமித, இவனது காலடியில் தலைவணங்கினான்.
இவ்வாறான, தன்னை முன்நிறுத்திய பிற யாவரையும் சிறுமைப்படுத்தும் இத்தொனியின் பின்புலத்தில், காரவேலனின் கூற்றுகள் தமிழரசுகளைச் சிறுமைப்படுத்துவதாகவே இருக்கமுடியும். அதைவிடுத்து, காரவேலன் தமிழ்க் கூட்டுப் படை 1300 ஆண்டுகள் நீடித்திருந்ததாக மிகைப்படுத்திக் கூறினான் என்று கருதிய திருத்திய படித்தறிதல், ஆசிரியர்களின் சொந்த விருப்பு வெறுப்பு மற்றும் முன்தீர்மான கருத்துருவத்தின் அடிப்படையானதாகவே கருதமுடிகிறது. மேலாக, இம்முடிவுக்கு வரும்முன், அத்திக்கும்பா கல்வெட்டு குறிப்பிடும் வகைவகையான எண்ணிக்கைகள் எல்லாவற்றிலும், தற்புகழ்ச்சி நீங்கிய, இயல்பு மீறிய மிகைப்படுத்தலை அடையாளப்படுத்த வேண்டும். ஆனால், காலம் பற்றிய அளவீட்டினை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி காலக்கணக்கு விளக்கப்பட்டதில், மொழிப் பயன்பாடு அனுமதிக்கும் வசதி தவிரவும் முன் குறிப்பிட்ட ஆசிரியர்களின் சொந்த விருப்பு வெறுப்பு மற்றும் முன்தீர்மான கருத்துருவத்தின் அடிப்படைகள் கூடுதல் காரணம் செயல்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது.
அத்திக்கும்பா கல்வெட்டு மு.பொ.ஆண்டு 165-ல் வெளியிடப்பட்டது எனில், தமிழ் அரசுகளின் கூட்டுப் படை ஏறத்தாழ மு.பொ. 1465 ஆண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது, பொ.ஆ. 2015-ஐ கணக்கீட்டின் புள்ளியாகக் கொண்டால், இன்றைக்கு ஏறத்தாழ 3480 ஆண்டுகள் பழைமைக் கணக்கு வரும். தமிழ் அரசுகளின் கூட்டுப் படை மு.பொ.ஆ. 1465 அளவில் இருந்திருக்க முடியாதே! அவ்வளவு பழைமையான காலக்கட்டத்தில், தமிழகம் கூட்டுப் படையை நிலைநிறுத்தி வைக்கும் அளவு வலிமையும் தேவையும் கொண்டதாக இருந்ததா என்று கே.பி.ஜேயசுவால் மற்றும் ஆர்.டி.பானர்ஜியின் மனத்தில் உதித்த கேள்விகள் (இக்கேள்விகளை அவர்கள் வெளிப்படையாக விவாதிக்கவில்லை), இவ்வாறான திருத்த படித்தறிதலுக்கு இடமளித்தன எனலாம்.
எது முதல்?
இப்பின்னணியில், தமிழக வரலாற்றுப் பார்வையில், காரவேலன் கல்வெட்டில் பயின்றுவரும் செய்திகளில் விவாதத்துக்குச் செல்லும்முன், பெருமைபட்டுக்கொள்வதற்கும், சிறுமைப்படுத்தப் பட்டுள்ளதாக ஆவேசப்படுவதற்கும் முன், முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. இவனது 11-ம் ஆட்சியாண்டில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்படும் செய்திகள் இரண்டும் தனித்தனிச் செய்திகளா? அல்லது ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஒரே செய்தியின் பகுதிகளா? இத்தெளிவின்மை, இதுவரையிலான தமிழகப் படித்தறிதல்களில் அறிந்தவற்றில் உள்ள பல முரண்களை அடையாளப்படுத்துகிறது. காரவேலனின் கல்வெட்டு, அவனது ஆட்சியாண்டுகளின் சாதனைகளைக் காலக்கிரமமாக வரிசைப்படுத்துவது. எனில், அவனது 11-ம் ஆட்சியாண்டின் முதல் சாதனை, பிதும்டா நகரை அழித்தது. இரண்டாவது சாதனை, கூட்டுப் படையைச் சிதைத்தது.
இப்புரிதலுடன், இதுவரையிலான தமிழகக் கண்டுபிடிப்புகளை (விவரங்களுக்கு பார்க்க முந்தைய அத்தியாயம்-2) முன்வைத்து சிலவற்றை ஆலோசிப்போம்.
பிதும்டா, சேரமான் அந்துவன் உருவாக்கிய திருச்சி - கரூர்தான் எனில், அது இன்றைய தமிழகத்தின் மையத்தில் இருப்பதாகும். இதனை அழிக்கும் முன், அவன் கலிங்கத்தில் இருந்து வந்து தாக்குவதற்குரிய சாத்தியப்பாடுகளையும் வழிகளையும் ஆலோசிக்கவேண்டி உள்ளது. திருச்சி – கருர், ஓர் உள்நாட்டு நகரம். கடற்கரைகளைக் கொண்டிராதது. எனில், கடற்படையெடுப்பின் சாத்தியம் குறைவு அல்லது சாத்தியமற்றது. ஆக, தரைவழிதான் சாத்தியத்துக்கு அருகில் இருப்பது. எனில், காரவேலன், சாதவாகனர் என்ற சதகர்னி என்ற ஆந்திரர்கள் என்ற தமிழிலக்கியம் அழைக்கும் நூற்றுவர் கண்ணர்களையும், குறுநில மன்னர்களையும், அதியர்களையும், சோழர்களையும் வீழ்த்தியே கரூரை அடைந்திருக்கமுடியும். இவ்விடத்தில், கலிங்கத்துக்குத் தெற்கிலும் தென்கிழக்கிலும் இருந்த அருவாளர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். இதைப்பற்றிய குறிப்புகள் கல்வெட்டில் இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தின் எல்லைப்புறத்தில் நிறுத்தப்பட்ட கூட்டுப் படை அப்போது என்ன ஆயிற்று? காரவேலனின் வரலாற்று நிகழ்வுகளில், பிதும்டாவுக்கு அடுத்து தமிழகக் கூட்டுப் படை சிதைப்பு இரண்டாவதாக இடம் பெற்றது ஏன்? தமிழகத்தின் மையப்பகுதி தாக்கி அழிக்கப்பட்ட பிறகு தமிழரசுகளின் கூட்டுப் படை சிதைக்கப்பட்டதாகக் குறிப்பிடுவது ஏன்? வடக்கில் இருந்து அல்லது வடகிழக்கிலிருந்து தெற்காகப் பயணப்படும் படை அணிவகுப்பு, முதலில் கூட்டுப்படையை அல்லவா தகர்த்திருக்க வேண்டும். ஒவ்வொன்றும் தொடர்புடையதோ அல்லது தனித்தனி நிகழ்வுகளோ, வடக்கில் இருந்து தெற்கு நேக்கிய பயணத்தில் எது முதலில் நிகழ்ந்திருக்க முடியும் என்ற கேள்விக்குப் பதில் காணாமல், காரவேலனிடம் தமிழகத்தின் அடையாளங்களை முறையாகக் காண்பது என்பது இயலாத ஒன்றே.
காரவேலன், சோழர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் காரணமாகவே கூட்டணிப் படையை உடைத்தான் என்று சசிகாந்த் (மு.கு.நூ.), இராம கி (சிலம்பின் காலம், 2011) ஆகியோர் கருதுவதை ஏற்க, கல்வெட்டில் அகச்சான்றோ, வேறு புறச்சான்றுகளோ இன்மையால், அதுபோன்று ஒன்று கிட்டும் வரை இக்கருத்தை ஏற்பதைத் தள்ளிவைக்கலாம்.
மெளரியரின் வழியும் காரவேலனின் வழியும்
மெளரியர், மகதத்திலிருந்து தமிழகம் நுழைய எப்பாதையைத் தேர்ந்தெடுத்திருக்க முடியும் என்பதும், எம்மலையைக் குடைந்து தம்முடைய தேர்ச்சக்கரங்களை எளிதாக உருளவைத்தனர் என்ற கேள்வியை எழுப்பி விடை காண்பதும், தற்சமயம் அவசியமாகிறது. அதற்குமுன், பண்டைய தமிழகத்தின் அல்லது தென்இந்தியாவின் வடபுலத்தின் நிலவியலை அறிவோம்.
பண்டைய தமிழகத்தின் அல்லது தென்இந்தியாவின் வடபுலத்தின் நிலவியல்
இந்தியா, வடஇந்தியா - தென்னிந்தியா என்று இரண்டாக, விந்திய மலைத் தொடர்களால் பிரிக்கப்பட்டது. சத்புரா மலைத்தொடரும் இதற்கு சிறிது உதவியது எனலாம். அன்றைய வடஇந்தியாவையும் தென்னிந்தியாவையும் தரைவழியாக இணைத்த ஒரே பாதுகாப்பான வழி, ‘தட்சிணப் பாதை’ மட்டுமே ஆகும். வாரணாசி என்கிற காசிக்கு, யாத்ரிகர்களாலும் வணிகர்களாலும் மட்டும் இப்பாதை பெருமளவில் பயன்பட்டது. பர்காம்பூர் பாதை (Burhampure Road) என்பது பழைய தட்சிணப் பாதையே ஆகும் என்பர். (S.Krishnasamy Aiyankar, 1918, p.101). இந்திய வரலாறு நெடுகிலும் இப்பாதை ‘தட்சிணப் பாதை’ என்றே குறிப்பிடப்படுகிறது. இப்பெயறே, இது வடபுலத்து மக்களால் சூட்டப்பட்ட பெயர் என்பதை தெரிவிக்கிறது. இதன் பொருள், “தெற்குப் பாதை” என்பது. தமிழில் “வடுகு வழி” என்ற ஒரு பாதை உண்டு. அது இப்பாதையைக் குறிப்பதன்று. இரு பெயர் மரபை அடையாளப்படுத்திக்கொள்ளவே இங்கு குறிப்பிடப்படுகிறது. இத்தட்சிணப் பாதை தவிர, தென்னிந்தியர் வேறு இரு பாதைகளை வடபுலங்களுக்குச் செல்ல பயன்படுத்தியுள்ளனர்.

குறிப்பு: படத்தில் 1 எண்ணிடப்பட்ட பகுதி பிரம்ம வர்தத்தையும், 2 எண்ணிடப்பட்ட பகுதி ஆரிய வர்தத்தையும், 3 எண்ணிடப்பட்ட பகுதி தட்சிணப் பதத்தையும் ஏறத்தாழ குறிப்பிடுவன ஆகும்.
கிருஷ்ணா நதிக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட தட்சிணப் பாதையின் இருபுறமும், கடக்கமுடியாத பகுதிகளான கிழக்கே தண்டகாரண்யம் என்ற அடர்ந்த வனப்பகுதியும், மேற்கே விரிந்து பரந்த பாலைவனப் பரப்பும் கொண்டது. கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியின் கடற்கரைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி கிழக்கு மேற்காக ஓடிக் கடலில் கலக்கும் ஆறுகளின் கழிமுகப் பகுதிகளின் செழுமையால், கழிமுகங்கள் வாழிடங்களாக மாறியிருந்தன. மகாநதி மற்றும் கோதாவரி ஆறுகளின் சார்பு நிலங்கள், டெக்கான் பகுதி வளர்ச்சியோடு தொடர்புடையதாக உள்ளது. டெக்கான் பகுதியின் வளர்ச்சி, சாதவாகனர்களின் வளர்ச்சியோடு மு.பொ. 1-ம் நூற்றாண்டிலிருந்து விரிவடைகிறது.
இப்பகுதிகள், மக்கள் வாழத் தகுதியற்ற இடங்கள் என்பதல்ல. இவ்விடங்களில் மக்கள் வசித்தனர். துவக்க நிலை புதிய கற்கால மக்களும், வேட்டைச் சமூக மக்களும் இவ்விடங்களை தம் வாழிடங்களாகக் கொண்டிருந்ததை, கிடைத்துள்ள தொல்பொருள் சான்றுகளும் (The Foote Collection of Indian Prehistorical and Protohistorical Collection & Robert Sewell, List of The Antiquarian Remains in The Madras Presidency), இன்றும் அப்பகுதிகளில் வாழும் மக்களின் சமூக வாழ்வின் ஆதிக்குடிப் பண்புகளும் காட்டுகின்றன. தட்சிணப் பெருவழியின் இருபுற சமவெளிப் பகுதிகளிலும், மலைச்சார்பு நிலங்களின் கணவாய்ப் பகுதிகளிலும் இரும்புக் கால - பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்து வந்தார்கள் (K.S.Ramachandran, Neolithic Cultures of India). கடற்கரை, கழிமுகப் பகுதிகளில் நெய்தல் திணை மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதை முன்னரே பார்த்தோம்.
எனில், தமிழரசுகளின் கூட்டுப் படை, தட்சிணப் பாதையில் வடக்கும் தெற்கும் சந்திக்கும் ஒரு புள்ளியில் மேற்கே நிலைநிறுத்தப்பட்டிருக்கக்கூடும். ‘ஒருகல்’ என்று தொன்மையான பெயரைக்கொண்ட, இன்று திரிபடைந்து ‘வாரங்கல்’ என்று அழைக்கப்படும் நகர், அப்புள்ளியாக இருக்கலாம் என்று ஒரு ஊகமாகக் குறிப்பிடலாம். இதன் வலிமை கருதியே, மெளரியர் இதற்கு அருகாமையில் உள்ள மலைகளைக் குடைந்து தனி வழி அமைத்தனர் போலும். அநேகமாக, இவ்வாறாக அமைக்கப்பட்ட பாதை ஒன்றில்தான், கள்ளில் ஆத்திரையார் குறிப்பிடும் அறச்சாலை செயல்பட்டிருக்க வேண்டும். மெளரியரின் படையெடுப்பு, அவர்களுக்குக் கணிசமான வெற்றியைத் தரவில்லை. ஆனால், வடபுலத்தில் இருந்து அலையலையாக மக்கள், குறிப்பாக வடுகர் இனக் குழுக்கள் தென்புலம் புகுந்தனர் எனலாம்.
பிற இரு பாதைகள்
தென் இந்தியாவையும், வட இந்தியாவையும் இணைக்க, தட்சிணப் பாதை தவிர வேறு இரு பாதைகள் இருந்துள்ளன. இவ்விரு பாதைளில் ஒன்று, இந்தியாவின் கிழக்குப் பகுதியை இணைத்தது. இப்பாதை, குமரி முனையில் இருந்து கிழக்குக் கடற்கரை ஓரமாக அமைந்து, கலிங்கத்தையும் தாண்டி வட இந்தியாவின் கிழக்கு, வடகிழக்குப் பகுதிகளை இணைத்தது. மற்றொரு பாதை, குமரி முனையில் இருந்து கிளம்பிய தட்சிணப் பாதையில் இன்றைய கர்நாடகப் பகுதியில் இருந்து கிளைத்து, மேற்காக வடபகுதியை இணைத்தது. இவ்வாறு கிளைத்துச் சென்ற பாதையின் தென்னிந்திய வட எல்லை ‘படித்தானம்’ என்ற பெயர், வழக்கில் மருவி இன்று ‘பைத்தான்’ என்று அழைக்கப்படும் நகரத்தை மையப்புள்ளியாகக் கொண்டிருந்தது என ஊகிக்கலாம்.
இவ்வாறு, தென்னிந்தியாவில் இருந்து வட இந்தியாவுக்கு மூன்று பாதைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்தொட்டே இருந்துள்ளன. இந்தியாவின் வரலாற்றுக் காலம், நந்தப் பேரரசு மற்றும் மகதப் பேரரசுகளை மையம் கொண்டிருந்ததாக முதன்முதலில் கருதப்பட்டதால், குமரியையும் மகதத்தையும் இணைத்த பாதையே தட்சிணப் பாதை என்ற கருத்துருவம் வரலாற்றில் பதிந்துவிட்டது. இப்பாதை, பிர்காம்பூரை இணைத்தது என்ற பார்வை எழவும் இதுவே காரணம். மகதத்தை மையம் கொள்ளாத பிற பாதைகள், வரலாற்றுக் காலத்தில் ஏடுகளில் இடம்பெறாமல் போயின.
பண்டைய இந்தியா மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது. அவை - 1. பிரம்ம வர்த்தம், 2. ஆரிய வர்த்தம், 3. தட்சிணா வர்த்தம் என்பன. ‘வர்த்தம்’ என்பது பகுதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதாக உள்ளது. இதற்கு இணையான சொல்லாக ‘பதம்’ என்பதும் பயன்பாட்டில் இருந்துள்ளது. இம்மூன்று பகுதிகளும், முறையே பிரம்ம பதம், ஆரிய பதம் மற்றும் தட்சிணா பதம் என அழைக்கப்பட்டன.
பிரம்ம பதம் பகுதி, மேற்கு - வட மேற்கு இந்தியாவின் பகுதிகளைக் கொண்டது. சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த பகுதிகளுடன் இன்றைய ஆப்கானிஸ்தான் (பண்டைய காந்தாரம்) நாட்டும் அடங்கியிருந்தது. தட்சிணா பதம் மற்றும் பிரம்ம பதம் நீங்கிய பிற பகுதிகள் ஆரிய பதம் என அழைக்கப்பட்டன. பொதுவாக, ஆரிய பதம் அல்லது ஆரிய வர்த்தப் பகுதியே வட இந்தியா என அழைக்கப்பட்டதாகக் கருதலாம்.
இந்த வகையில், தென்னிந்தியாவில் இருந்து மூன்று பாதைகள் வட இந்தியாவை இணைத்துள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து வழக்கில் இருந்துள்ள இந்தப் பாதைகள் குறித்து ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் இலக்கியங்கள் மற்றும் வாணிபம் மையம் கொண்டிருந்த ஊர்களின் அமைவிடங்கள் போன்ற ஆதாரங்கள் கொண்டு அறியமுடிகிறது. அதே சமயத்தில், தட்சிணப் பாதை என்பது இன்றைய காஷ்மீரையும் குமரியையும் இணைத்த பாதை என்றும் மகதத்தையும் குமரியையும் இணைத்த பாதை என்றும் கருத்து முரண்பாடான வழக்குகள் நிலவி வருவதில் இருந்து, தட்சிணப் பாதையின் ஒரு வழி பிரம்ம வர்த்தப் பகுதிகளையும், மற்றொரு வழி ஆரிய வர்த்தப் பகுதியை இணைத்தது எனலாம். ஆரிய வர்த்தத்தை கிழக்குக் கடற்கரைச் சாலையும் இணைத்தது. அது குறிப்பாக, வடகிழக்குப் பகுதிகளை இணைத்தது.
இங்கு, சங்ககால கரிகாலச் சோழன், இமயம் சென்று திரும்பிய பாதை குறித்த ஆய்வுகளை மனங்கொள்ளலாம். இப்பாதை, நிச்சயம் தட்சிணப் பாதையைக் குறிப்பதன்று. இது, கிழக்குக் கடற்கரையை ஒட்டி இமயமலை வரை சென்றதையும், வரும் வழி வடபுலத்தில் இருந்து இன்றைய கர்நாடகப் பகுதி, தகடூர் நாடு வழியாக கரூர் வரை வந்து சோழ நாடு திரும்பியதைக் காட்டுகிறது. இந்த வரைபடத்தில் உள்ள வழிகள் தட்சிணப் பாதையின் பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

மெளரியப் பேரரசன் சந்திர குப்தனின் தமிழக குடியேற்றம் அல்லது தஞ்சம்
அக்காலத்தில், வடபுலத்தில் நிலவிய கடுமையான பஞ்சம் குறிந்த வரலாற்றை, சமணம் தமிழகம் பரவிய நிகழ்வாக உள்ள, சிரவணபெளகுளாவில் சமண முனிவர் பத்திரபாகுவும், மெளரிய பேரரசன் சந்திரகுப்தனும், உடன் 12,000 சமண முனிவர்களும் தஞ்சம் புகுந்தனர் அல்லது குடியேறினர் என்ற செய்தி சான்றாகலாம் (M.S. Ramasamy Iyangar (1922), pg.20-21, மயிலை சீனி. வேங்டசாமி, (2004), ப.6). இவர்களுடனும், இவர்களைத் தொடர்ந்தும் மெளரிய நாட்டு மக்களும் புலம் பெயர்ந்திருக்கலாம். மேலும், இவர்கள் பண்டைய தமிழகம் வர தேர்ந்தெடுத்த பாதையும் தட்சிணப் பாதையாகவே இருந்திருக்க வேண்டும். ஏனெனில், தஞ்சம் புகுந்த அல்லது குடியேறிய பகுதி சிரவணபெளகுளாப் பகுதியானது, இன்றைய கர்னாடகாவின் தட்சிணப் பாதைக்கு கிழக்கே அதன் அருகாமையில் அமைந்துள்ள வளமையான பகுதியாகும்.
இவ்வாறான புலப்பெயர்வு, அசோகன் காலம் வரை மெள்ள மெள்ள நிகழ்ந்தது எனலாம். படையெடுப்பு போன்ற ஒன்று நிகழாமல், இனக்குழுக்களின் மெள்ள பரவலால், வட எல்லைப்புற தமிழ் வேளிர் குடியினர் வலிமை குன்றினர் எனலாம். இவ்வலிமை குன்றலைப் பயன்படுத்திக்கொண்ட மெளரியருக்குச் சார்பாக இருந்த சாதவாகனர் மற்றும் வடுகர்கள், தமது ஆட்சியை இப்பகுதியில் நிலைநிறுத்திக்கொண்டனர் என்றும் கொள்ளலாம். இவர்கள், மெளரியப் பேரரசுக்குச் சார்பாக இருந்தவர்கள் என்பதால்தான், அசோகனின் கல்வெட்டுகள் பண்டைய தமிழகமும் இன்றைய கர்நாடகத்தின் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி, கவிமாத் பால்கிகுண்டு, பெல்லாரி மாவட்டத்தில் நிட்டூர், ஊடேகொளம் ஆகிய இடங்களிலும், சித்திரதுர்க்கா மாவட்டத்தில் பிரம்மகிரி, சித்தாபுரம், ஜடிங்க-ராமேஸ்வரம் ஆகிய இடங்களிலும், இன்றைய ஆந்திரத்தில் கர்நூல் மாவட்டத்தில் எர்ரகுடி, ராஜீலா-மண்டகிரி, மற்றும் குண்டூர் மாவட்டம் அமராவதி ஆகிய இடங்கள் வரை காணப்படுவதன் ரகசியம் ஆகும். நிகழ்வுகளை காலவரிசைப்படுத்திக்கொண்டால், மெளரியருக்கு வடுகர் படை உதவியதாகச் சொல்லப்படும் சங்க இலக்கியச் செய்தி, இவ்வாறாக வடுகர்கள் தாம் பரவிய நிலங்களில் நிலைபெற்றிரு தங்கியிருக்கவே எனலாம். இதன் காரணமாக மௌரியப் பேரரசு விரிவடையவில்லை என்பது எந்த அளவு உண்மையோ; அதே அளவு உண்மை, வடுகர் இனக்குழுக்கள் உறுதியாகப் பரவியதில் உள்ளது.
வடபுல இனகுழுக்களின் பரவலும் தமிழ் வேளிர் புலப்பெயர்வும்
இவ்வாறான வடுகர் இனக்குழுக்களின் போர் அற்ற பரவலை, எல்லைப்புறத்தில் நிறுத்தப்பட்ட தமிழர் கூட்டுப் படை தடுக்க முடியாது போயிருக்க வேண்டும். அவசியமற்றதாகவும் அக்கால தமிழ் அரசுகள் கருதியிருக்கலாம். பிற எல்லைப்புற நன்னன்குடி உட்பட வேளிர் குடியினர், கிருஷ்ணா நதிக்கும் வடபெண்ணைக்கும் இடைப்பட்ட நிலங்களுக்குக் கீழிறங்கிக்கொண்டனர். பின்னர் அவர்கள் பரவல் தென்பெண்ணை வரை நிகழ்ந்தது. தகடூர்ப் பெரும்போரில் அதியர்கள் வீழ்ந்தது இவ்வாறான பரவலுக்கு எளிதான வாய்ப்பை நல்கியது. இக்காட்சிகள், சங்க இலக்கியத்தில் இருந்து பெற முடிவதே. கொங்காணத்து நன்னர்கள் தெற்கே கோவைக்கும், கிழக்கில் செங்கம் பகுதிகளில் நன்னன் குடியினரின் ஆட்சியைக் காண்பது இதன் வழிபட்டே. (த.பார்த்திபன், சங்க காலத் தமிழகமும் அதியர் மரபினரும், பக்.192-193). இவை, ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நிகழ்ந்த உடனடி நிகழ்வுகளல்ல. மெள்ள மெள்ள, இரு நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்தவை. கொங்காணத்துக் கொங்கர்களும், கோசர்களும் கொங்குப் பகுதியை அடைந்ததும், சங்க இலக்கியத்தில் இருந்து பெற முடிவதே. இந்நிகழ்வில் அதிகம் பாதிக்கப்பட்டது கடம்பர்களே. கடம்பர்கள் தம்மிடத்தை மாற்றிக்கொள்ளாமல் இருந்துகொண்டனர். சாளுக்கர்களுக்கும் கடம்பர்களின் நிலையே பொருந்தும். சாதவாகனர்களுக்குப் பிறகு, இவ்விரு குடியினரின் எழுச்சியும் பிரம்மாண்டமானது. ஏனெனில், இவ்விருவரின் ஆட்சியும் சாதவகனர் என்ற பேரரசின் அடித்தளத்தின் மீது தமது சீரிய எழுச்சியை அமைத்தவர்கள்.
இந்த நிகழ்வுகளின்பொழுதுதான், ஒருகட்டத்தில் கலிங்கத்துக்கு அருகாமையில் இருந்த அருவாளரின் பிதுண்டாவை, காரவேலன் முதலில் சிதைத்துள்ளான். ஏனெனில், அருவாளரின் பிதுண்டாவுக்கும் தமிழர் கூட்டுப் படை நிறுத்தப்பட்ட இடத்துக்கும் தொடர்பில்லை.
மேலும், முன் விளக்கிய இனக்குழுக்களின் போரற்றப் பரவல், தமிழர் கூட்டுப் படையின் நோக்கத்துக்கு எதிரானதாகவும், திகைப்புக்கு உள்ளாக்குவதாகும் செய்திருக்கலாம். நந்தப் பேரரசு வீழ்ச்சி, அலெக்சாண்டர் படையெடுப்பு, மெளரியப் பேரரசின் ஈவு இரக்கமற்றப் பரவல், பிந்துசாரரைத் தொடர்ந்து நிலவிய பஞ்சம் போன்ற காரணங்களால், வடபுலத்தில் இருந்து மக்கள் தென்னிந்தியா புக ஆரம்பித்துவிட்டார்கள். பிந்துசாரரின் சிரவணபெளகுளா குடியேற்றம், இத்தகைய புலம் பெயர்வுகளை மேலும் எளிதாகியது. இந்நிலையில்தான், தமிழரசுகளின் கூட்டுப் படையை அடக்கியவனாக காரவேலன் காட்சியளிக்கிறான்.
கலிங்கத்தை அச்சுறுத்திய தமிழரசுகளின் கூட்டுப் படை
காரவேலனின் கல்வெட்டு ஒரு செய்தியை தெளிவாகத் தருகிறது. அது, காரவேலனின் நாட்டுக்கு, அதாவது கலிங்கத்துக்கு அச்சுறுத்தலின் காரணியாக இருந்த தமிழரசுகளின் கூடுப் படையை முழுமையாக உடைத்தான் என்பதுதான்.
எனில், தமிழரசுகளின் கூட்டுப் படையானது பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த உண்மையை அறியமுடிகிறது. வடபுலத்துக்கும் தென்புலத்துக்கும் இருந்த ஒரே வழியான தட்சிணப் பாதையில் இருந்த தமிழரசுகளின் கூட்டுப் படை குறித்த செய்திகளை, சங்க இலக்கியம் வழி அறியமுடிகிறதென்றால், கலிங்கத்துக்கு அருகில் தமிழரசுகளின் கூட்டுப் படை பற்றிய செய்தியை அத்திக்கும்பா கல்வெட்டு வழி அறியமுடிகிறது.
தமிழரசுகளின் கூட்டுப் படையின் வீழ்ச்சி, காரவேலனைவிட சாதவாகனர்களுக்கே சாதகமானது. போலவே, காரவேலன் வீழ்ச்சியும், தமிழ் அரசுகளைவிட சாதவாகனர்களுக்கே சாதகமானது. தொண்டை மண்டலம் நீங்கிய அருவாளரின் நாட்டுப் பகுதிகள் சாதவாகனர்களுக்குக் கிடைத்துவிடுகின்றன. இதே காலகட்டத்தில், அருவாளார் நாட்டில், சோழர்களின் ஆதரவுடன் குடியேறிய தொண்டைமான்களின் ஆட்சி அமைந்தது. இம்மூன்று நிகழ்வுகள் காரணமாகவே, அதாவது வடுகர்களின் தெற்கு நோக்கியப் பரவல், சாதவாகனர்களின் ஆட்சி, தொண்டைமான்களின் ஆட்சி காரணமாக, அருவாளர் தம் நிலங்களை இழந்தது, வரலாற்றில் தம் சுவடுகளை இழக்கத் துவங்கினர்.
இந்த வகையான இனக்குழுக்களின் மெள்ளப் பரவலுடன், தமிழ் அரசுகளின் நலிவும் இணைய உருவானதுதான், சங்ககால முடிவு என்ற தமிழகத்தில் களப்பிரர் இனக்குழுவினரின் ஆட்சி; கங்கர் மற்றும் வாணர் ஆட்சிகள். மற்றொரு நிகழ்வு, சாதவாகனர் ஆட்சியின் நலிவைப் பயன்படுத்திக்கொண்ட பல்லவர் ஆட்சி.
கிருஷ்ணா முதல் தென்பெண்ணை வரையிலான சங்ககாலத்துத் தமிழகத்தின் வடபுலம் இவ்வாறு, பல்லவர், கங்கர், பாணர் குடியினர் வசமானது. தென்பெண்ணைக்குக் கீழ் குமரி முனைவரை, களப்பிரர் குடியினர் வசமானது. இவை மெள்ள மெள்ள நடைபெற்ற நிகழ்வுகள் என்பதை, வலுவான இன்னொரு சான்றாலும் உறுதி செய்யலாம். தமிழ்க்குடிகளாக இருந்த கடம்பர், பாணர், கங்கர், சாளுக்கர், இருங்கோவேள், பிற்காலத்திய ஒய்சாளர்கள் போன்றோர், வடுகுமொழிகள் கொண்டவர்களாக மாறியது. களப்பிரர் என்ற களப்பாளர்களுக்கும் இது பொருந்தும் விதியாகும்.
இவ்வாட்சி மாற்றங்களுக்குக் காரணமாகப் பெரிய போர்களைத் தேடினால், சுவடற்ற காட்சியே விடையாக இருக்கும். போர் இல்லாமல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்காது என்று கருதினாலும், அவை தமிழகம் நிகழ்த்திய, சங்க இலக்கியம் போற்றிப் பாதுகாத்த போர்கள் போன்று இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.
கலிங்கத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது தமிழ் வணிகர்களின் கூட்டுப் படை என்றும், அது கலிங்கத்திலேயே இருந்த படை என்றும், அந்தப் படையையே காரவேலன் சிதைத்தான் என்றும் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுகிறார். (மயிலை சீனி. வேங்கடசாமி, (2004) ப.7). தமிழ் வணிகர்கள் தமது பாதுகாப்புக்குச் சொந்தமாக ஒரு படையைக் கொண்டிருந்ததை வரலாற்றின் பக்கங்களில் காணமுடிகிறது ஒன்றுதான். ஆனால், அப்படையின் நோக்கம், வாணிபம் புரியச் சென்ற நாடுகளை அச்சுறுத்துவதோ அல்லது நாடு பிடிப்பது, ஆட்சியை மாற்றுவது போன்ற நோக்கங்களைக் கொண்டிருந்ததாகவோ அறியமுடியாது. எனில், மயிலையாரின் கூற்றுக்கு மேலும் சான்றுகள் தேவைப்படுகிறது எனலாம்.
பாண்டியனின் பரிசுகள்
13-ம் வரியில், பாண்டியனிடமிருந்து முத்தும், அணிமணிகளையும், விலைமதிப்பற்ற கற்களையும் காரவேலன் பெற்றதைப் பிரஸ்தாபிக்கிறது. இவ்வார்த்தைகளில் பெரும் விவாதங்கள் இல்லை. விவாதம், பாண்டியனிடமிருந்து கப்பமாகப் பெற்றானா? நட்புரீதியில் பெற்றானா? என்பதாக நடந்துவருகின்றன. கல்வெட்டு, நேரடியாகவோ தொனிப் பொருளிளோ இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை. நட்பு பாராட்டியே என்பது பொரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது. ஏனெனில், படையைச் செலுத்தியதற்கான எந்தக் குறிப்பும் கல்வெட்டில் இல்லை. படையின் வீரத்தால் கிடைத்த வெற்றியாக அது இருந்திருப்பின், வேறு எந்த நாட்டின் மீதான படையெடுப்பைவிடவும் விரிவாக பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கும். சதகர்ணி புறக்கணிப்பு, யவனராஜாவின் மீதான வெற்றியைவிட, ராஜகிருகத்தின் மீதான வெற்றியைவிடவும் மிகையாக.
எது எவ்வாறு இருப்பினும், அந்நிய ஆட்சியர் ஒருவர் தமிழகத்தின் மீது படையெடுத்து வெற்றிபெற்றதைக் குறிப்பிடும் இம்முதல் சான்று, முழுமையான அல்லது போதுமான விவரங்களை அளிக்காதிருப்பது அவப்பேறே. கல்வெட்டை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தும்போது, கலிங்கத்திலிருந்து நாற்புறமும் மேற்கொள்ளப்பட்ட அவனது படையெடுப்புகளில், தென் திசை தவிர பிற திசைப் படையெடுப்புகளின் விவரங்கள், அலை அலையாக அடுக்கப்படுபவையாக உள்ளன. தென்திசையின் செய்திகள், குறிப்புகள் என்ற அளவை மீறி, குழப்பத்தை ஏற்படுத்தும், கூடுதல் தகவல்களைத் தராமல், சொல்லப்போனால் தெளிவை நோக்கி துல்லியமாக நகர்த்தமுடியாப் போக்குடனே உள்ளன.
பார்வை நூல்கள்
|
(காரவேலன் கல்வெட்டும் தமிழகத் தொன்மைச் சான்றுகளும் –
தொடர்ச்சி அடுத்தவாரம்…)
யுத்தபூமி குறித்த வாசகரின் கருத்துகளுக்கும் சந்தேகங்களுக்கும்
ஆசிரியர் த.பார்த்திபன் அவர்களின் பதிலுரை…
உங்கள் 4.9.2015, 11.9.2015 தேதியிட்ட கட்டுரைகளைத் தொல்லியல்மணியில் கண்டு மகிழ்ந்தேன். விரிவான அறிமுகம் கொடுத்துள்ளீர்கள்.
இந்தக் கட்டுரைத் தொடர், எந்தக் கால கட்டங்களை அடக்க உள்ளது?
கட்டுரைப் பகுதி 2-ல், காரவேலனின் கல்வெட்டு, தமிழர்களுக்கு எந்த வகையில் முக்கியமானது என்பதைப் பற்றிய குறிப்பு இருந்தால் சிறப்பாக இருக்கும். (மிகப் பழமையானது என்பதாலா? தமிழகத்துக்கு வெளியில் இருக்கும் கல்வெட்டு தமிழக அரசுகள் தொடர்புடையதாக இருப்பதாலா?).
அத்திக்கும்பா எங்கே இருக்கிறது? ஒடிஸா மாநிலம் என்று ஊகிக்கிறேன். இருப்பினும், முற்கால எழுத்தாளர்கள்போல, இடத்தின் விவரங்களைக் குறிப்பிட்டால், கட்டுரையின் சுவை கூட வாய்ப்புண்டு.
நான் வணிகக் குழுக் கல்வெட்டுகளைத் தொகுக்கும்போது, தமிழகத்தில் நிகழ்ந்த போர்களைப் பற்றிய பட்டியல் இருக்குமா என்று தேடியபோது, அவ்வாறு எந்தப் பட்டியலும் தொகுக்கப்பெறவில்லை என்று அறிந்தேன். போர்கள் பொருளாதார, மக்கள் தொகை மற்றும் அரசியல் வணிக மாற்றங்களை ஏற்படுத்துவதால், இத்தகைய பட்டியல் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நீங்கள் யுத்தங்களைப் பற்றி பேசப்போவதால், உங்கள் திட்டத்தில் இவை பற்றிப் பேச இருக்கும்பட்சத்தில், பட்டியல் தருவதைப் பற்றி ஆலோசிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்,
சூலூர் தெய். சேஷகிரி(Email - giri81170@gmail.com)
*
வணக்கம்,
‘யுத்தபூமி’யில் பேசப்பட்ட செய்திகளுடன் மேலும் உரையாட வாய்ப்பளித்த உங்களுக்கு, நன்றியுடன் உங்கள் கேள்விக்கான என் பதில்...
‘யுத்தபூமி’யின் பெரும் பகுதி முன்னரே எழுதப்பட்டதால், அது தமிழர்களுக்கு எந்த அளவு முக்கியம் என்ற பார்வையை நான் கொண்டிருக்கவில்லை. காரவேலன் செய்திகள் எந்த அளவுக்குப் பொருட்படுத்த வேண்டியவை, மற்றும் அக்கல்வெட்டுச் செய்திகள் குறித்து நம்மிடையே நிலவி வரும் கருத்துகளில் இருந்து நான் மாறுபடும் இடங்களைச் சுட்டிக் காட்டுவது என்பதில் மட்டும் கவனம் கொண்டுள்ளேன். இதன் 2 மற்றும் 3-ம் பகுதிகளையும் படித்தபிறகு உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.
இவ்விரட்டைக் குன்றுகளில் எதன் மீது நின்று பார்த்தாலும் அசோகரின் கல்வெட்டு பொறிக்கப்பட்ட ‘தெளலி’ குன்றை பார்க்க முடியும் என்பது அனுபவித்தவர்களின் வார்த்தைகள்.
நன்றி.
த. பார்த்திபன், தருமபுரி
நன்றி :-தினமணி
|
Related Posts:
வரலாறு- யுத்த பூமி : அத்தியாயம் 4 - காரவேலன் கல்வெட்டும் தமிழகத் தொன்மைச் சான்றுகளும் - த. பார்த்திபன், தருமபுரி
- யுத்த பூமி : :அத்தியாயம் 3 - காரவேலன் கல்வெட்டும் தமிழ் அரசுகளின் கூட்டுப்படையும் -த. பார்த்திபன், தருமபுரி
- சாகித்ய அகாடமிக்கு எழுத்தாளர்கள் தொடர்ந்து போர்க்கொடி: பொதுக்குழு உறுப்பினர் ராஜினாமா கேரளா எழுத்தாளரும் விருதை திருப்பி அனுப்பினார்
- யுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்
0 comments:
Post a Comment