பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, November 11, 2014

எரிந்து போன தமிழ் நூலகம் -



முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பொரு நாள் எம் தந்தையை இழந்து எமதில்லத்தில் தவங்கிக் கிடந்த வேளையில், தட்டும் ஓசைக் கேட்டு வாயிற்கதவுகளைத் திறந்த போது மூக்குக் கண்ணாடி அணிந்த ஒரு கறுத்த உருவம் முன்வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டது. ஆம். தங்களின் தந்தையாரை நான் நன்கறிவேன். தாராவிப் பொங்கல் வீட்டில் ஒன்றாகச் சில நாள் தங்கினோம். என் மீது அன்பும் அக்கரையும் கொண்ட அவர் மறைந்தார் என்ற செய்தி என் மனதை வாட்டியது. அவர் மறைந்த செய்தியை அண்மையில் தான் அறிந்தேன் என ஆறுதல் சொற்கள் பல அளவிலா வண்ணம் வந்துதித்தன. யாமும் சற்று தெளிவு பெற்றோம். அந்த ஆறுதல் மொழிகளின் சொந்தக்காரர் தான் மும்பை நகரில்  அண்மையில் மறைவெய்திய, வாழ்வின் நிறைவெய்தியச் சீராளர் சீர்வரிசை சண்முகராசனார் ஆவார். 

இராமானுசம் புதூர் மாணிக்கவாசகம் சண்முகராசன் என்ற பெயரே இரா.மா.சண்முகராசன் என ஊரெங்கும் ஒலித்தது. உடலுக்கு ஓய்வு உயிர் பிரிகின்ற வரை, ஓய்வுக்கு ஓய்வு நாம் நம்மை அழிக்கின்றவரை என்ற வரிகளின் வரையறையாய் எண்பது ஆண்டுகள் வாழ்ந்து காட்டி ஓய்வு பெற்றுள்ளார். 

1979-80களில் மறைந்த சுயமரியாதைச் சுடொரொளி பொ.தொல்காப்பியனார் வழிகாட்டுதலில் தொடங்கப் பெற்ற பம்பாய்ப் பகுத்தறிவாளர் கழகத்தில் செயலாளராகப் பொறுப்பேற்று பொதுவாழ்வில் புதிய பாதையில் தடம் பதித்து நானும் நண்பர் தென்மாவை மு.தருமராசன் அவர்களும்  இணைந்து பணியாற்றிய நாட்கள் அவை. சண்முகராசனாரின் திராவிட இயக்க ஈடுபாடும், திருக்குறள் மீது கொண்ட பற்றும் ஒருவர்பால் ஒருவரை ஈர்த்தன. ஒரே பாதையில் பயணிக்க விருமபிய யாமும் அவருடைய நண்பர்களானோம். 

மும்பையின் பெரும் குடிசைப்பபகுதியான தாராவியில் காலக்கில்லாதான் அக்காலகட்டத்தில் சண்முகராசனாரின் இல்லம் அமைந்திருந்த இடமாகும்.  பதினைந்து  சதுரமீட்டர் கூட அளவில்லாத ஒரு சிறு குடிசையெனினும் அவர் அதற்கு வைத்திருந்த பெயர் “தமிழ் நெஞ்சம்”” என்பதாகும். நிமிர்ந்து செல்லும் அளவு உயரமில்லை எனவே குனிந்தே செல்ல வேண்டும். ஆனால் அது குடிசையல்ல கோபுரம் என்பது மும்பைத் தமிழ் இலக்கிய வரலாற்று உண்மையாகும். குருமகா சன்னிதானம் குன்றக்குடி அடிகளார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ, எழுத்தாளர் சோமலே என எண்ணற்றத் தமிழ்ச் சான்றோர்  வந்து, வாழ்த்தி, விருந்துண்டு சென்ற பெருமை பெற்றது தமிழ் நெஞ்சம் ஆகும். அப்பெருமையனைத்தும் அவர் வாழ்விணையர் தவமணி அம்மையாரையேச் சாரும். 

“முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்” எனும் வள்ளுவன் மொழிக்கொப்ப அந்நாளில் அவ்வில்லம் தமிழ்நெஞ்சம் ஒரு விருந்தகமாகவே விளங்கியது. நானும் நண்பர் தருமராசனும் தமிழ் நெஞ்சத்தைக் “குடில்”” என்றும் தவமணி அம்மையாரைத் “தாயார்”  என்றுமே அழைப்பதுண்டு. இவர்கள் பெற்ற செல்வங்கள் நான்கு, இரு ஆண் மக்கள், இரு பெண் மக்கள். பாவை, நங்கை எனப் பெண்மக்களுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர் தமிழறிஞர் மு. வ்ரதராசனார் ஆவார். பாவை என்ற அந்த நற்பாவை இன்றில்லை. இதய நோயால் அவதியுற்றாலும் இரும்பு மனம் பெற்றவள். நூல்களை வாசித்துச் சிந்தனையை விரிவாக்கித் தான் ஒரு நோயாளி என்பதையே மறந்து மனம் மகிழ்ந்து எம்மையும் மகிழ்வித்த ஓர் அதிசயப் பெண்மணி. அவளுடையப் பொது அறிவும், இலக்கிய ஆர்வமும், பகுத்தறிவுச் சிந்தனைகளும் அவளை எமக்கு ஒரு புதுமைப் பெண்ணாகக் காட்டியது. குடும்பங்கள் ஒன்றிணைந்தன. அவ்வாறு ஒன்றியிருந்த காலத்தில் உருப்பெற்றதே “பம்பாய்த் திருக்குறள் பேரவை”” என்ற அமைப்பாகும். ஒவ்வொரு ஞாயிறும் குறள் கூறும் நன்னாளாய் மலர்ந்தன. யாமும், எம் சகோதரர் சு.தாமோதரன், மைத்துனர் கவிஞர் இராசு மாதவன், நண்பர் மு.தருமராசன், செல்வி பாவை  என அனைவரின் கடமையும் பேரவைச் சேவையாய்த் தொடர்ந்தது. கவிஞர் கலைக்கூத்தன், கவிஞர் அசதுல்லா (ஞானபானு) ஆகியோரின் ஆழ்ந்த புலமையும் அறிவார்ந்த விவாதங்களும் அன்றெமெக்குத்  துளிர்விடத் தூண்டுகோலாய் அமைந்தன. அந்தத் தமிழுறவின் தடத்தில் தான் இளைய மகள் நங்கைக்கு இணையராக எம்மைத் தேர்வு செய்தார்.

தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனாரால் தொடங்கி வைக்கப்பெற்று தொய்வின்றி நடைபெற்ற திருக்குறள் பேரவையில் பேசியப் பேராளர்கள் பட்டியல் குன்றக்குடி அடிகளார், கி.ஆ.பெ.விசுவநாதம், பம்பாய் உயர்நீதி மன்ற நீதிபதிகள் எச்.எச்.கந்தாரியா, பி.பி.சாவந்த், எம்.என்.ஜாகிர்தார், சுப்பிரமணியசாமி, புத்தபிக்கு செவ்லிபோதி, கவிஞர் சிற்பி, கவிஞர் காசி ஆனந்தன், இலக்கியச் சுடர் த.இராமலிங்கம், கு.வெ.கி.ஆசான், நாஞ்சில் நாடன், பாடகர் டி.எம்.எஸ்.சவுந்திரராசன், இந்தியன் எக்ஸ்பிரஸ் பி.ரங்கநாதன், விசிட்டர் அனந்து, டாக்டர் வரதாச்சாரி, குரு கலியாணசுந்தரம், மா.செங்குட்டுவன் என நீட்சி பெற்றது. நானூற்றுக்கும் அதிகமான கிழமைகள் தொடர்ந்த அந்தச் சொற்பொழிகள் மும்பைக்குப் பல நல்ல சொற்பொழிவாளர்களை ஈன்று புறம் தந்தது. 

தமிழ்த் தொண்டு செய்வதையே தொழிலாகக் கொண்டு செயல் பட்ட சண்முகராசனார் திருக்குறள் பேரவை அமைப்பாளர், பம்பாய்த் தமிழ்மறை மன்றச் செயலாளர், பம்பாய்த் திருவள்ளுவர் மன்றத் துணைத் தலைவர், பம்பாய்த் தமிழர் பேரவைத் துணைத் தலைவர், மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் என பல்முனைத் தமிழ்த் தொண்டாற்றிய பெரியார் பெருந்தொண்டர் ஆவார். அவர் குறைவாகப் பேசி, நிறைவாக எழுதி, மறைவாகப் பல நற்பணிகளை பரப்புரையின்றிச் செய்தவர் என்பதை பயன் பெற்றோர் அறிவர். 

“சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்காலனையர் தொடர்பு” 

என்ற நாலடியார் மொழிதலுக்கொப்ப முன்பின் அவரின் முகம் பார்த்திராத நிலையிலும் அகனறிந்து அணுக்கமான நண்பர்களாய் வாழ்வோரும், வாழ்ந்தோரும் உலகெங்கும் நிரம்ப உண்டு. 

திருவள்ளுவர், தந்தை பெரியார், தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை, பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வெ.கி. சம்பத், ஆ.வி.பி. ஆசைத்தம்பி, குத்தூசி குருசாமி, சி.பி. சிற்றரசு. டி.கே. சீனிவாசன், கிருபானந்த வாரியார், கி.ஆ.பெ.விசுவநாதம், திருக்குறள் முனுசாமி, ப.ஜீவானந்தம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் என அறிவார்ந்த தமிழ்ச் சான்றோர் பலர் எழுத்தும், பேச்சும் அவர் உணர்வுகளுக்கு உரமாக அமைந்தன என்று எம்மிடம் சொல்லி மகிழ்ந்தார். முற்போக்கு சிந்தனையும், முயற்சிகளுமே ஒரு குமுகாய மறுமலர்ச்சிக்கு நாற்றாங்கால் என உணர்ந்து வாழ்வுக்கு வனப்பூட்டும் அவருடைய எழுத்துகளில் வள்ளுவரின் தாக்கமும், பெரியாரின் பெருஞ்செயலும், விழிப்புணர்வும், விவேகமும் ஊற்றுக் கண்களாயின. செரிவான சிந்தனை, அளவானப்பேச்சு, தெளிவான எழுத்து, திடமான செயல் என்பதே அவரின் இலக்குகளாய் அமைந்தன. வெற்று உணர்ச்சிகளும், வெறுமைக் கிளர்ச்சிகளும், வீம்புக்குக் குறைகாணும் போக்கும் அவரிடம் அண்ட முடியவில்லை. 

வயதும் வாழ்க்கைப் பயணத்தின் நீட்சியும் துய்ப்பும் வெவ்வேறானவை என்பதால் எம்முடன் செயலாக்கம் சிலவற்றில் வேகமும் விவேகமும் வேறுபாடாகக் காட்சியளித்த நிலைகளும் உண்டு. எனினும் அந்த இடைவெளிகள் கூட கிஞ்சிற்றும் பிணக்குகளாய் மாற்றம் கண்டதில்லை. 

கசப்பாக இருந்தாலும் சில உண்மைகளை அசை போட்டே ஆக வேண்டும். பலனை  எதிர்பார்த்துப் பல்லிளிப்போர், சத்தமின்றிச் சமரசம் செய்து கொள்வோர், செத்த பின்பு சிந்து பாடுவோர், கொள்கைகளுக்குக் குழிதோண்டுவோர் என தன்நலம்சார் பொதுநலத் தொண்டர்கள் பெருகிவரும் இக்காலகட்டத்தில் அவருடைய சொல்லும், செயலும் சிலருக்குக் கசந்தது. வாழ்த்திய வாய்ச்சொற்கள் வசையாய் மாற்றம் பெற்றது. எனினும் அவர்களைப் பற்றியப் புரிதலும், புன்னகையுமே அவரை உயர்த்தியது.  

நண்பர்கள் மறைவதுண்டு, பிரிவதில்லை. பிரிந்தால் நண்பர்களில்லை. அதையே ஐயன் வள்ளுவன் “ஒன்று ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு” என்றான். 

உறவு என உதட்டளவுச் சுரப்பாக, உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் தேனும், வேற்றுமை விதையும், வெறுமைச் செயலும் கொண்டு அகமொன்று அறிந்தாலும், புறமொன்று பேசி உடனிருந்தே ஊறுவிளைவிக்கும் உறவுகளுக்காக தம் இலட்சியப் பயணத்தின் தடத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

கழக மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக யாம் பொ.தொல்காப்பியனார், சீர்வரிசையார் உடன் பலமுறைப் பயணித்துள்ளோம். இருவருமே மூத்த வயதினராயினும் வாழ்நாள் இறுதி வரை எம்மைத் தோழர் என்றே அழைத்து அன்பு பாராட்டி உறவுக்கும், கொள்கைக்கும் உரமிட்டவர்கள் ஆவர். எம் தனி வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி மாமனார் மருமகன் என்ற உறவு நிலை, உணர்வு நிலை எண்ணங்கள் கொள்கைச் செயலாக்கங்களுக்கு அப்பால் துளிர் விட்டதே இல்லை. 

யாம் கொள்கை உணர்வொத்து, உரிமையுடன் பெருமையுடன் உள்ளன்போடு பழகிய நண்பர்களில் சிலர் மறைந்து போனார்கள். எம் நெஞ்சில் நிறைந்த அந்தச் சிலரில் வெ.பன்னீர்ச்செல்வம், கவிஞர் கலைக்கூத்தன் போன்றோர் அடங்குவர். அவர்கள் சண்முகராசனார் குறித்துச் சொன்ன கருத்துகள் சிலவற்றை நண்பர் மலரரசன் எம்முடன் வாஞ்சையுடன் பகிர்ந்து கொண்டு நினைவு கூர்ந்தார், 

“அவர் ஒரு திராவிட இயக்க வரலாற்றுப் பெட்டகம், தமிழ் அகராதி, பம்பாயில் பாதுகாக்கப் பட வேண்டிய ஒரு தமிழ் நூலகம்”  - இது வெ.பன்னீர்ச் செல்வத்தின் பார்வை. 

எண்பது ஆண்டு கால உடம்பொடு உயிர்வாழ்வில் அறுபது ஆண்டுகாலம் பதமானப் பண்டைத் தமிழ்ப் பண்புகளையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும், இதமானப் புதுமை எண்ணங்களையும் சிதிலமுறாமல் போற்றிப் பாதுகாத்த சீர்வரிசையார் என்ற நூலகம் எரியூட்டப்பட்டுக் கருகிச் சாம்பலாகி விட்டது. “தமிழ் இலெமுரியா” இதழின் தோற்றத்திற்கும் ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் துணை நின்ற தூண் ஒன்று சரிந்ததாக உணர்கின்றோம். எம் தந்தையின் மறைவில் தளிர்த்த அந்த உறவின் ஆக்கமும், ஊக்கமும் எம் பொது வாழ்வில் புதிய அத்தியாயங்களை எழுதியுள்ளன. விளைச்சலைத் தந்த வேர்கள் மண்ணில் மறைந்திருந்தாலும் நம் மனதை விட்டகலாது என்பதே வாழ்வின் நியதி. 

நன்மகள் நங்கையை இணையராய் எமக்கீந்த மாமனார் என்ற உறவைத் தாண்டி, கொள்கை உணர்வொத்தத் தோழர் ஒருவரின் பிரிவு எம்மைப் பெரிதும் வாட்டுகின்றது. கண்ணீர் ஊற்றெடுக்கக் கனத்த இதயத்துடன் பரிவும், பாசமும் பொங்க நெஞ்சார்ந்த அஞ்சலியை நிறைவெய்தியப் பெருமகனாருக்குக் காணிக்கையாக்குகின்றோம். அவர் வாழ்ந்த வழித்தடத்தை வளமாக்கி செந்தூரப் பூவாய், செம்பவழ மல்லியாய், மணக்கும் மல்லிகையாய், தழுவிடும் தண்பொழில் தென்றலாய்  மாற்றிட உறுதிப் பூணுவோம். 


நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு                  (குறள் 336)


கனிவுடன், சு.குமணராசன்
முதன்மை ஆசிரியர்.


S.KUMANA RAJAN,
Editor in Chief.

ஆவணி - 2045
(ஆகஸ்டு - 2014) 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment