இது சுய சரித்திரங்களின் காலம். பதவி இழந்த அமைச்சர்கள், உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், மார்கெட்டை பறிகொடுத்த நடிகர்கள், விளையாட முடியாமல் மைதானத்தைவிட்டு வெளியேறிய விளையாட்டு வீரர்கள் எல்லாரும் அவசர அவசரமாக சுய சரித்திரம் எழுதி புத்தகமாகப் போடுகிறார்கள்.
தங்களால் எழுத முடியாதவர்கள் ஆள் வைத்து எழுதி பெரிய விழா எடுத்து புத்தகத்தை வெளியிடுகிறார்கள். தனது புகழ் மங்குவதற்குள் சுய சரித்திரத்தை விற்றுப் பணம் பண்ணுவதில் குறியாக இருக்கிறார்கள். வாழ்க்கை என்பதே விற்பனைப் பொருளாகி விட்ட காலத்தில் சுய சரித்திரமும் அதோடு சேர்ந்து போகிறது.
சிலரின் சுய சரித்திரங்கள் வெளிவந்ததும் பலரைப் பதற வைத்து விடுகின்றன. அவர்கள் பதிலுக்கு தாங்களும் சுய சரித்திரம் எழுதப் போவதாக சவால் விடுகிறார்கள். தன்னைப் பற்றி அவதூறு எழுதப்பட்டிருக்கிறது என்றும், பல சம்பவங்கள், பேச்சுகள் திரித்து எழுதப்பட்டுள்ளன என்றும் கூறுகிறார்கள்.
அதற்குப் பதில் சொல்ல, தன் சுய சரித்திரம் எழுதப்பட்டு, உண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஒருவர் தன் சொந்த வாழ்க்கையை, தானே எழுதுவதுதான் சுய சரித்திரம். ஆனால், எழுதுவதிலேயே மிகவும் சிரமமானது சுய சரித்திரம் எழுதுவதுதான். ஏனெனில், நடந்தவற்றை நடந்த மாதிரியும், பேசிய பேச்சை பேசிய மாதிரியும், கேட்டதைக் கேட்ட மாதிரியும் அப்படியே எழுத வேண்டும்.
ஆனால், அது மனித ஆற்றலுக்கு இயலாத விஷயமாக இருக்கிறது. ஏனெனில், எதையும் நடந்த மாதிரி சொல்ல முடியவில்லை. அது மட்டுமல்ல, உண்மையைச் சொன்னால் குடும்பம், சமூகம் என்ன சொல்லும் என்ற பயமும் வந்துவிடுகிறது. எனவே, பொய்யைப் புனைந்து, உண்மையை மறைத்து எழுத நேர்ந்துவிடுகிறது. எனவேதான், பலர் சுய சரித்திரம் எழுதுவது இல்லை.
சுய சரித்திரம் என்பது ஒவ்வொரு மனிதனும் - மனுஷியும் எழுதக்கூடியது. ஏனெனில், அது அவர்கள் வாழ்க்கை. அறிந்து வாழ்ந்து எழுதினாலும் சரி - அறியாது வாழ்ந்து எழுதினாலும் சரி.
எளிய மக்கள், தங்கள் வாழ்க்கையில் மற்றவர்களுக்குச் சொல்ல ஒன்றுமில்லை என்று எண்ணி, சுய சரித்திரம் எழுதாமல் விட்டு விடுகிறார்கள். அதனால், அசலான மனிதர்கள் வாழ்க்கை அறியப்படாமல் போய்விடுகிறது.
தன் காலத்தின் மகத்தான மனிதர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், சமய ஞானிகள், தன் வாழ்க்கை மற்றவர்களுக்கு வழிகாட்டும் என்று நம்பியவர்கள், காலத்தின் கதாநாயகன் என்று பிரகடனப்படுத்தப்பட்டவர்கள் எல்லாம் சுய சரித்திரம் எழுதி இருக்கிறார்கள்.
அது பெரும் பிரிவு. அதில் அடங்காத இன்னொரு சிறு பிரிவு இருக்கிறது. வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாதவர்கள் எழுதியது. அவர்கள் தாங்கள் வாழும் காலத்திலேயேகூட சமூகத்தால் பெரிதாக அறியப்பட்டவர்கள் இல்லை.
ஆனால், நாணயமாக வாழ்ந்தவர்கள். நீதி, நேர்மை என்பதை பழக்கமாகக் கொண்டெழுதியவர்கள். குடும்பத்திலும், சமூகத்திலும் நடந்தவற்றை நடந்தவாறு சொன்னவர்கள்.
தங்களின் பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்ளவோ - மற்றவர்கள் புரிந்த கெடுதல்களைப் பற்றியோ எழுதாதவர்கள். தன் வாழ்க்கையைத் தன்னால் மட்டுமே சரியாக எழுத முடியும் என்று நம்பி எழுதியவர்கள்.
சுய சரித்திரம் என்பது ஓய்வுக் காலத்தில் - முதுமையில்தான் எழுதப்பட வேண்டும் என்பதில்லை. வாழ்க்கை என்பது வயது சார்ந்ததில்லை. அது பலவிதமான முறையில் எழுதப்படுகிறது. சிலர் வாழும் காலத்திலேயே நாள் குறிப்பேட்டில் எழுதுகிறார்கள்.
அன்றைய வாழ்க்கை அதே உணர்வுடன் எழுதப்படுகிறது. ஆர அமர யோசித்து நாள் குறிப்பு எழுதப்படுவதில்லை என்பதால் அது குறைபாடு உடையதில்லை. நிகழ்வின் உடனடிப் பதிவு என்பதாலேயே "டைரி' என்னும் நாள்குறிப்பு வடிவான சுய சரித்திரம் முதன்மையானதாகிறது. அடுத்துதான் வாழ்க்கைக் குறிப்புகள், வரலாறு எல்லாம் வருகின்றன.
எழுத்து என்பது உண்மையானது என்று சொல்லிக் கொண்டாலும், அது சொந்த விருப்பு, வெறுப்பு சார்ந்ததுதான். எவ்வளவு கவனமாக எழுதினாலும் அதில் சொந்த விருப்பம் என்பது ஏறிவிடுகிறது.
இரண்டாவது அம்சம், எழுதும் மொழி. தாய்மொழியில் எழுதினாலும் சரி, கற்ற வேறு மொழியில் எழுதினாலும் சரி எதையும் பூரணமாகச் சொல்ல முடியவில்லை. எழுதப்படும்போது தொனியே மாறி விடுகிறது.
எனவேதான், சுய சரித்திரத்தில் எழுதப்பட்டதுதான் நடந்தது என்றோ, பேசப்பட்டதுதான் எழுதப்பட்டிருக்கிறது என்றோ உறுதியாகச் சொல்ல முடியவில்லை. டைரி என்னும் நாள் குறிப்பு அச்சாகும் என்றோ, பலரும் படித்து விமர்சிக்கப்படும் புத்தகமாகுமென்றோ எண்ணி எழுதப்படுவதுமில்லை.
அது ஒரு தனிப்பட்ட மனிதனின் தன்னளவிலான எழுத்து. தன் மனமும் விமர்சனமும் சார்ந்தது. அதனால் உயிர்ப்பு கொண்டது. அதற்கான குடும்ப, சமூக, அரசியல், கலாசார அங்கீகாரம் என்பது அதன் உள்ளே இருந்து கிடைப்பதுதான். எனவேதான் சுய சரித்திரம் என்பதில் நாள் குறிப்பேட்டை முதலில் வைத்திருக்கிறார்கள்.
தமிழில் நாள் குறிப்பு வடிவில் முதல் சுய சரித்திரம் எழுதியவர் புதுச்சேரியில் பிரெஞ்சு இந்தியாவின் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை. அவர் 1736-ஆம் ஆண்டில் தன் நாள் குறிப்பை எழுத ஆரம்பித்தார். அதில் இருந்து தன் மரணம் வரையில், தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் எழுதினார்.
ஐயாயிரம் பக்கங்கள் கொண்ட அவருடைய நாள் குறிப்பேட்டில், சொந்த வாழ்க்கை என்பது குறைவாகவும் சமூக, வணிக, அரசியல் அதிகமாகவும் இருக்கிறது என்றாலும், அது அவரின் சுய சரித்திரந்தான். அது 250 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் அச்சாகியது. ஆனாலும், அதன் வனப்புக் குன்றிவிடவில்லை.
சுய சரித்திரம் ஒரு பொழுதும் பழசாவது இல்லை. அதை எழுதியவர் உயிரோடு இருக்கிறாரா? இறந்து விட்டாரா என்று பார்த்துப் படிக்கப்படுவதில்லை. ஒரு மனிதரின் சொந்த வாழ்க்கையைச் சொல்கிறது என்பதற்காகவே அது படிக்கப்படுகிறது.
இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்த சுய சரித்திரம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் சுய சரித்திரமான சத்திய சோதனை. குஜராத்தி மொழியில் நவஜீவன் பத்திரிகையில் தொடராக எழுதினார். ஆரவாரம், பரபரப்பு இல்லாத சுய சரித்திரம்.
சுய சரித்திரம் எழுதும்போது அவருக்கு ஐம்பத்தெட்டு வயதாகி இருந்தது. அதன் பின்னர், அவர் இருபத்தோரு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். பல போராட்டங்கள், சத்தியாக்கிரகம் எல்லாம் மேற்கொண்டார்.
ஆனால், அவையெல்லாம் அவர் சுய சரித்திரத்தில் சொல்லப்படவே இல்லை. அவர் சுய சரித்திரம் இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் கவர்ந்தது.
அவர்கள் தங்கள் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதைப் படித்து அவரைத் தெரிந்து கொண்டார்கள். இந்தியாவில் அதிகமானவர்கள் படித்த சுய சரித்திரம் காந்தியின் சத்திய சோதனைதான்.
மகாத்மா காந்தியின் சத்திய சோதனை அதன் சத்தியத்திற்காக - உண்மையையே பின்பற்றி நடக்க வேண்டும் என்று சொன்னதற்காகவே படிக்கப்பட்டது. அதனை மறுத்தோ - அவர் மிகைப்படுத்தி எழுதியிருக்கிறார் என்றோ - தன்னைக் குறைத்துக் கொண்டு எழுதியுள்ளார் என்றோ குறைகள் சொல்லப்படவில்லை.
ஏனெனில், அவருக்கு உண்மையை மட்டும் எழுத வேண்டும் என்ற நினைப்புதான் இருந்தது. அவர் மொழி சார்ந்தோ, சுவாரசியம் சார்ந்தோ, தன் மேதைமையை நிலைநாட்டும் விதமாகவோ எழுதவில்லை. அதன் காரணமாகவே காந்தியின் சுய சரித்திரம் எழுதப்பட்டு 99 ஆண்டுகள் கடந்த பிறகும் படிக்கப்படுகிறது.
ஒரு சுய சரித்திரம் என்பது எழுதியவரின் சொந்த வாழ்க்கையைத்தான் சொல்கிறது என்றாலும், அதன் பொதுத் தன்மையே அதைப் படிக்க வைக்கிறது. தமிழர்கள் விரும்பிப் படிக்கும் சுய சரித்திரம் உ.வே. சாமிநாத ஐயர் எழுதிய என் சரித்திரம்.
அவர் தமிழ் மட்டுமே அறிந்த பேரறிஞர். அவருக்குப் பணம் சம்பாதிக்கும் ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தெலுங்கு மொழிகள் தெரியாது. ஒற்றை மொழி தமிழ் மட்டும்தான். குருகுல முறையில் படித்து இருந்தார்.
பன்மொழிப் படிப்பால் ஒருவர் மேதையாவதில்லை. தன் மேதைமையைத் தனக்குத் தெரிந்த மொழியில் நிலைநாட்டியவர். அவர் சுய சரித்திரத்தில் சொல்லப்பட்டிருப்பதும், விடப்பட்டிருப்பதும் அதுதான். அவர் தன் 85}ஆவது வயதில் சுய சரித்திரம் எழுத ஆரம்பித்தார். 44 ஆண்டு கால வாழ்க்கையைச் சொல்லும் போது காலமாகிவிட்டார். எத்தனை ஆண்டுகளை சுய சரித்திரம் சொல்கிறது என்பது முக்கியமல்ல. அதன் உண்மையும் உணர்வும்தான் அதனை ஜீவிதமாக்குகிறது.
ஆனி பிராங் என்ற யூதச் சிறுமி தன் பதினான்காவது வயதில் நாள் குறிப்பை எழுதினார். மறைந்து வாழ்ந்த அவர் குடும்பத்தினரை ஹிட்லர் காவல் படை பிடித்துக் கொண்டு போய் வதை முகாமில் போட்டுவிட்டது. அவரின் டச்சு மொழி நாள் குறிப்பேட்டை பணிப்பெண் கண்டெடுத்து பாதுகாத்து வந்தார்.
இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்த பின்னர் வதை முகாமில் இருந்து உயிர் பிழைத்து வந்த ஆனி பிராங் தந்தை அந்த நாள் குறிப்பை அச்சிட்டார். உலகத்தின் மிகச் சிறந்த சுய சரித்திரங்களில் ஒன்றாக அது இருக்கிறது. தமிழ் உள்பட அறுபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது.
சுய சரித்திரம் எழுத மொழியோ, வயதோ ஒரு தகுதி இல்லை. உள்ளொளி இருக்கிறவர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் எழுதுகிறார்கள். அது மற்றவர்களால் படித்துப் பாராட்டப்பட்டு வருகிறது.
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment