பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, October 19, 2014

தமிழ் மறுமலர்ச்சியின் முகம்

அக்.20 - ரகுநாதன் பிறந்த தினம்

தமிழ் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய ‘சாந்தி’ இதழின் ஆசிரியர், முற்போக்கு எழுத்தாளர், புதுமைப்பித்தனின் வரலாற்றை எழுதியவர் தொ.மு.சி. ரகுநாதன். தொ.மு.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொண்டைமான் முத்தையா சிதம்பர ரகுநாதனுடைய இலக்கிய வாழ்க்கையானது பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது.

இதற்குக் காரணமாக அவர் பிறந்த குடும்பச் சூழலைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ரகுநாதனுடைய தாத்தா ஒரு கவிஞர். திருப்புகழ் சாமி என்ற முருகதாச சுவாமிகளின் சிஷ்யர் அவர். நெல்லைப் பள்ளு என்ற பிரபந்தத்தைப் பாடியுள்ளார். அவரின் தந்தை தொண்டைமான் முத்தையா சில நூல்களையும் எழுதியுள்ளார்.

தீர்க்கமான சிந்தனைகள்

சிறுவயதிலேயே பாரதியின் பாடல் களும், புதுமைப்பித்தனிடம் ஏற்பட்ட கவர்ச்சியும், இடதுசாரி அரசியல் ஈடுபாட்டால் உருவான சமுதாயக் கருத்துகளும் இதற்கு முக்கியக் காரணங்களாகத் திகழ்ந்தன. அவரது படைப்புகள் 1940-களில் பத்திரிகைகளில் வரத் தொடங்கின. 1944-ல் சென்னைவாசியாகி, புதுமைப் பித்தனோடு நேர்முகப் பழக்கம் ஏற்பட்டபோது, ஒருநாள் அவரிடம் தன்னுடைய ‘பிரிவு உபசாரம்’ கதையை ரகுநாதன் வாசித்துக் காட்ட, அதைக் கேட்டுவிட்டு, ‘ரகுநாதா! நான் உன்னில் என்னையே காண்கிறேன்!’ என்று பாராட்டியிருக்கிறார் புதுமைப்பித்தன்.

1954-ல் ரகுநாதனின் அண்ணன் பாஸ்கரத் தொண்டைமான் ஓய்வு பெற்ற சமயத்தில், இருவருக்கும் பாகப்பிரிவினை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. ரகுநாதனின் பங்காக அவருடைய சகோதரர் மூவாயிரம் ரூபாயைக் கொடுத்தார். அந்தப் பணத்தை மூலதனமாகக் கொண்டே, 1954-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘சாந்தி’ என்னும் கலை, இலக்கிய மாத இதழை அவர் தொடங்கினார். ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்’ என்ற பாரதியின் வரிகள் ‘சாந்தி’ இதழின் மணிவாக்காக இடம்பெற்றிருந்தன.

சாந்தியில் எழுதிய எழுத்தாளர்கள்

முதல் இதழில், திருச்சிற்றம்பலக் கவிராயர் என்னும் புனைப்பெயரில் ரகுநாதன் எழுதிய கவிதையும், கவிஞர் தமிழ் ஒளி எழுதிய கவிதையும், சுந்தர ராமசாமி, அகிலன், சி.வி.எஸ்.ஆறுமுகம் ஆகியோரது கதைகளும் இடம் பெற்றிருந்தன. 

இரண்டாம் இதழின் அட்டைப் படமாக வண்ண ஓவியம். இதழின் உள்ளடக்கமாக, டிசம்பர் 5,
1954-ல் கல்கி மறைந்ததையொட்டி அவர் குறித்தும், சென்னையிலே கூடவிருந்த உலக சமாதான மாநாட்டை வரவேற்றும், சென்னை அரசாங்கம் நாடகத்துக்கு விதித்திருந்த தடைச் சட்டத்தைக் கண்டித்தும் தலையங்கம் இடம்பெற்றிருந்தது.

புதுமைப்பித்தன் மலர்

‘சாந்தி’ 1955, ஜூலை இதழ் புதுமைப்பித்தன் மலராக உருவாக்கம் பெற்றிருந்தது. புதுமைப்பித்தன் குறித்து ரகுநாதன் எழுதிய நீண்ட தலையங்கமும், ‘வெட்டரிவாள் பாட்டுண்டு’ கட்டுரையும், வையாபுரிப் பிள்ளை எழுதிய ‘புதுமைப்பித்தன்’ கட்டுரையும், ‘புதுமைப்பித்தனும் இளம் எழுத்தாளரும்’ என்ற கு.அழகிரிசாமியின் நினைவுக் குறிப்புகளும், எஸ்.சிதம்பரத்தின் ‘கடைசி நாட்களில்’ கட்டுரையும், ‘பித்தன்’ என்ற தமிழ் ஒளியின் கவிதையும், புதுமைப்பித்தனின் ‘அன்னை இட்ட தீ’ நாவலின் முதல் அத்தியாயமும், திருச்சிற்றம்பலக் கவிராயரின் ‘உன்னைத்தான் கேட்கிறேன்’ கவிதையும் இவ்விதழிலே இடம்பெற்றிருந்தன.

ஆகஸ்ட், 1955 இதழிலிருந்து ‘நெஞ்சிலே இட்ட நெருப்பு’ என்ற தன்னுடைய தொடர்கதையை எழுத ஆரம்பித்திருந்தார் ரகுநாதன். 1955, செப்டம்பர் இதழ் பாரதி மலராக வெளிவந்தது. இவ்விதழில், சாமி சிதம்பரனார், ப.சீனிவாசன் ஆகியோரின் பாரதி குறித்த கட்டுரைகளும், ‘சூரியன் பேசுகிறதா?’ என்கிற நா.வானமாமலையின் விஞ்ஞானக் கட்டுரையும் இடம்பெற்றிருந்தன. டிசம்பர் 1955 இதழ் ‘சாந்தி’யின் ஆண்டு மலராக வெளிவந்தது. சாமி சிதம்பரனார், எஸ்.சிதம்பரம், நா.வானமாமலை, க.கைலாசபதி, ப.ஜீவானந்தம் ஆகியோர்களின் கட்டுரைகளும், குயிலன்,
கே.சி.எஸ்.அருணாசலம், திருச்சிற்றம்பலக் கவிராயர் போன்றவர்களின் கவிதைகளும், தி.க.சி.யின் ஓரங்க நாடகமும், புத்தக விமர்சனமும், திரை விமர்சனமும் இவ்விதழிலே இடம்பெற்றிருந்தன.
சாந்தி நிறுத்தப்பட்டது

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சுதேசமித்திரன், ஈழகேசரி, சுதந்திரன், தேசாபிமானி, பிரசண்ட விகடன் ஆகிய இதழ்களின் வரிசையில் இடம்பெற்ற ‘சாந்தி’ கலை இலக்கிய இதழ், பொருளாதாரப் பின்னடைவு காரணமாக 1956 ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்டது. நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்றபோது தன்னைவிட ஒரு வருடம் மூத்தவராக, சீனியர் இண்டர்மீடியட் மாணவராகப் பயின்ற தொ.மு.சி.ரகுநாதன் குறித்து தன்னுடைய கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார் தி.க.சி.:

‘‘ரகுநாதன் உணர்ச்சியைவிட உணர்வுக்கே சிறப்பிடம் அளிப்பவர். பேச்சைவிடச் செயலையே பெரிதும் மதிப்பவர். பணத்தைவிடப் பண்பையே மிகுதியாகப் பாராட்டுபவர். ரகுநாதன் ஒரு கொள்கை வீரர். பட்டம், பதவி, பணம் ஆகியவற்றுக்காகத் தன் ஆன்மாவை விலை பேசாத அபூர்வ எழுத்தாளருள் ஒருவர். ரகுநாதனிடம் ஆணவமுண்டு.

ஆனால் அது அரை வேக்காட்டு இலக்கிய அறிவிலோ, எழுத்துத் திறனிலோ பிறந்ததல்ல. அது பழுத்துக் கனிந்த தமிழ்ப் பண்பாட்டிலும், தன்மானத்திலும், நாட்டுப் பற்றிலும், மக்கட் பற்றிலும் பிறந்த ஆணவம். ஒவ்வொரு எழுத்தாளனிடமும் இருக்க வேண்டிய தூய முனைப்பு. ரகுநாதனின் இலக்கிய ஆண்மை என்றே கூற வேண்டும். இந்த ஆண்மையை அவருக்கு அளித்த மாபெரும் குற்றவாளிகள் - கம்பனும், பாரதியும் புதுமைப்பித்தனுமேயாவர்…’’

தொடர்புக்கு: aavaarampoopublications@gmail.com


நன்றி :- தி இந்து

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment