பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, October 19, 2014

சாவானா மில் படுகொலைப் பாட்டு

செய்தித்தாள்கள் புகாத ஊர்ப் புறங்களில் செய்திகளை விரித்துச் சொல்ல, சிந்து கவிஞர்கள் தோன்றியதைப் பார்க்கிறோம். இச்சிந்து கவிஞர்கள் ‘டேப்பு’ எனும் கருவியின் மூலம் இசைத்து மக்களிடையே செய்திகளை உலவவிட்டார்கள்.

1895-ல் வந்த படுகளச் சிந்து, 1888-ல் வந்த தீப்பற்றிய சிந்து, 1906-ல் கம்பம் தாதப்பன் குளச்சிந்து, 1970-ல் திருத்தணி முருகன் குளத்தில் தற்கொலை செய்துகொண்ட தற்கொலைச் சிந்து, 1987-ல் அரியலூர் ரயில் விபத்து எனப் பாடப்பட்ட செல்வாக்குப் பெற்ற சிந்துகள் பல. இப்படிப்பட்ட சிறப்புக்குரிய பெருவழக்காகப் பாடப்பட்ட கொலைச் சிந்துவைக் கையாண்டதில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் ஒருவர். இவரின் பாடல்கள், மொழி உணர்வு இவரின் அரசியல் கருத்துகள் எனச் சிலவற்றைத்தான் யாவரும் பேசுவர். ஆனால் புரட்சிக் கவிஞருக்கு இருந்த நாட்டார் வழக்காற்றியல் குறித்த பார்வை தமிழகத்தின் கவனத்துக்கு வரவே இல்லை.

கொலைச்சிந்துவின் நோக்கம்

மனித உயிரிழப்புச் செய்திகளைப் பாடுபொருளாகக் கொண்டு பாடப்படும் கொலைச் சிந்துகளின் நோக்கம் செய்திகளை மட்டும் மக்களிடத்தே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதல்ல. கொலை நிகழ்வைக் காரணங்களாகச் சுட்டிக்காட்டி அத்தகைய காரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதேயாகும்.

குடும்ப நலத்திட்டம், மாமியார் மருமகள் சிக்கல், பொருந்தா மணம், பொருளாசை கூடாது, ஒற்றுமை, இரக்கம் எனப் பல பாடுபொருள்களை உள்ளடக்கியும் கொலைச் சிந்துகள் பாடப்பட்டவைதான். இதில் மிக முக்கியமானது புரட்சிக் கவிஞர் பாடிய ‘சாவானா மில் படுகொலைப் பாட்டு’. கவிஞர் குறிப்பிடும் படுகொலைப் பாட்டு என்பது கொலைச் சிந்துதான்.

தொழிலாளர் போராட்டம்

19-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸ் அரசு புதுவையில் பெரிய பஞ்சாலையைத் தொடங்கியது. இது அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருந்தது. ஆசிய நாடுகளிலேயே பெரிய பஞ்சாலைகளாகச் சென்னை பக்கிங்ஹாம் கர்நாட்டிக் மில்லும் (பி அண்ட் சி) புதுவை சாவானா டெக்ஸ்டைல்ஸ் மில்லும் விளங்கின. ‘சாவானா’, இப்போது சுதேசி மில் எனப் பெயர் மாறி உள்ளது.

1900-லிருந்து 1935 வரை சாவானா மில்லில் சங்கம் கிடையாது. தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சிறுசிறு போராட்டம் மட்டும் செய்து வந்தனர். ரேடியர் மில்லில் தொடங்கிய சம்பளப் போராட்டம், 1935-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் தேதியில், 10 மணிநேர வேலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துப் போராடத் தூண்டியது. 1936-ல் சோசலிஸ்ட், தீவிர சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி ஆட்சி பிரான்சில் வந்தது.

மக்கள் தலைவர் வ.சுப்பையா ஜூலை கடைசி வாரத்தில் 3 மில் தொழிலாளிகளையும் இணைத்துப் போராட, அப்போதைய புதுவை பிரான்சு அரசு போராடும் தொழிலாளிகள் மீது இராணுவத்தை ஏவி பீரங்கியால் சுட்டது. 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
1936-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தொழிலாளிகளின் மீது பாடப்பட்டதே இப்படுகொலைப்பாட்டு:

பார்க்கப் பரிதாபமே - மில்லில்
பாடுபட்டோர் சேதமே - உளம்
வேர்க்கும் அநியாயமே - மக்கள்
வீணில் மாண்ட கோரமே

அன்றைய அச்சம்பவம் வியாபாரிகள், தொழிலாளிகள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் எனப் பலரையும் கண்டனம் செய்ய வைத்தது. சர்வதேசத் தாக்கத்தையும் இச்சம்பவம் கண்டது. புதுவையின் அனைத்துப் பொதுக்கூட்ட மேடையிலும் பாரதிதாசனின் இப்படுகொலைப் பாட்டு தொடர்ந்து பாடப்பட்டது. தொழிலாளர் வர்க்க வரலாற்றையும் சமதர்மத்தையும் இப்பாடல் பேசியது.

ஏழையாம் தொழிலாளர் உரிமைதனைக் கேட்பதற்கும்
இங்கொரு வழியுமில்லை
ஏகாதிபத்தியத் திமிர் கொண்டு நம்மவர்க்கே
இழைத்திடு கின்றார் தொல்லை!

எனப் பாடிய பாரதிதாசனின் புதுவை சாவானா மில் படுகொலைப் பாட்டைத் தொடர்ந்து பல இடதுசாரிக் கவிஞர்களும் இந்நிகழ்வைப் பாடியும் எழுதியும்வந்தனர். ‘வெண்மணி தினம்’ என்பது போல புதுவை சாவானா மில் படுகொலைச் சம்பவத்தை ‘ஜூலை தியாகிகள் தினம்’ என இன்றும் நினைவுகூர்வர். இதற்கு பாரதிதாசனின் கொலைச்சிந்து எடுத்துகாட்டாகும்.

கட்டுரையாளர், பாரதிதாசன் ஆய்வாளர், 


தொடர்புக்கு: narpanbu@gmail.com

நன்றி :- தி இந்து 



Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment