பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 23, 2014

உயிர்காக்க இது நல்ல வழி!
ந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், அதில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது என்பது, இன்னும் கவலை அளிக்கத்தக்க வகையில் இருக்கிறது. பொதுவாக இதுபோன்ற விபத்துக்களில் காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தால், உயிர் பிழைத்துவிடும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அந்த சில நிமிடங்களைத்தான், ‘‘தங்கநேரம்’’ என்று டாக்டர்கள் கூறுவார்கள். 

ஆனால், விபத்தில் சிக்கியவர்கள் அசையமுடியாத நிலையிலும், ரத்தம் பெருக்கெடுத்தோடும் நிலையிலும் இருக்கும்போது, நிச்சயமாக அவர்களால் தாங்களாகவே எழுந்து மருத்துவமனைக்கு செல்லமுடியாது. அதனால், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தவுடன், விபத்து பற்றிய தகவலை 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்து மருத்துவமனையில் சேர்க்கும் பணிகளை, அந்த வழியில் போகும் யாராவது செய்யவேண்டும். 

அந்த காலத்திலேயே, இதுபோன்ற கருணை நடவடிக்கைகளை செய்த ஒருவன்பற்றி கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. வழிப்போக்கன் ஒருவனை திருடர்கள் தாக்கி, குலைஉயிரும் குற்றுயிருமாக போட்டு விட்டு சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் இருந்த அவனை அந்த வழியாகச்சென்ற மததலைவரும், தேவாலய பணி செய்த ஒருவரும் பார்த்தும் பார்க்காததுபோல சென்றுவிட்டனர். ஆனால், இவர்கள் இருவராலும் வெறுக்கப்பட்ட சமாரியன் என்ற இனத்தைச் சேர்ந்த ஒருவர் உடனடியாக முதல் உதவி கொடுத்து, அருகில் உள்ள சத்திரத்துக்கு தூக்கிச்சென்று அவனுக்கு மருத்துவ வசதி அளிக்க பணம் கொடுத்துவிட்டு சென்றார் என்று கூறப்பட்டுள்ளது. அதனால்தான் இதுபோன்ற உதவிகளை செய்பவர்களை நல்ல சமாரியன் என்று உலகம் இன்றும் புகழுகிறது. 

பொதுவாக விபத்துக்களில் சிக்கி காயம் அடைந்த நிலையில் இருப்பவர்களை, மருத்துவமனையில் சேர்க்க எத்தனையோ நல்ல சமாரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த இரக்க குணத்தால் போலீஸ் விசாரணை, கோர்ட்டு என்று அதன்பிறகு அங்கும், இங்குமாக இழுத்தடிக்கப்படுவதால் இந்த கஷ்டம் நமக்கு ஏன்வேண்டும்? என்ற உணர்வில்தான், பலர் உதவி செய்ய முன்வருவதில்லை. இதனால்தான் இதுபோன்ற விபத்து சம்பவங்களில் சிகிச்சை அளிப்பதற்கான சட்டபூர்வ அனுமதி இல்லாத மருத்துவமனைகளிலும், தனியார் டாக்டர்களும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று அனுப்பிவிடும் நிலை இருக்கிறது.

இனியும் இப்படி ஒருநிலை யாருக்கும் வரக்கூடாது என்ற வகையில், எல்லோரும் உயிர்பிழைப்பதற்கான நல்லவழியை தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்கந்தனின் அறிக்கை வகுத்துள்ளது. உச்சநீதிமன்றம் இதுபோல விபத்துக்களில் சிக்கியவர்களின் உயிரைக்காப்பாற்ற, இப்போது தமிழ்நாட்டில் பணியாற்றும் ஸ்கந்தன் முன்பு மத்திய அரசாங்க உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றியபோது, ஒரு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி, ஸ்கந்தன் கமிட்டியும் நாடுமுழுவதும் பல கூட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

அந்த அறிக்கையில் இதுபோன்ற விபத்துக்களில் சிக்கியவர்களை மருத்துவமனைகளில் கொண்டுபோய் சேர்ப்பவர்களை சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் உட்படுத்தக்கூடாது. அவர்களிடம் நீங்கள் யார்?, எந்த ஊர்? என்று அடையாளம் கேட்கக்கூடாது, கோர்ட்டு விசாரணைக்கு கூப்பிடக்கூடாது, அவர்களை மருத்துவமனையில் இருக்கச்சொல்லக்கூடாது, இப்படி யாராவது அதிகாரிகள் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தினால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், போலீசாரும் எந்த இடைஞ்சலும் செய்யக்கூடாது, எந்த ஒரு மருத்துவமனையோ, டாக்டரோ இதுபோன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கக்கூடாது, சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனையின் லைசன்சு ரத்து செய்யப்படவேண்டும் என்பது போன்ற உயிர்காக்கும் பரிந்துரைகளை கூறியுள்ளது. 

மத்திய அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் சட்ட அமைச்சகங்கள் இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு இருக்கிறது. அடுத்த வாரத்தில் உச்ச நீதிமன்றம் தன் விசாரணையின்போது இதுதொடர்பாக வழிமுறைகளை அறிவிக்கப்போகிறது. அந்த வழிமுறைகளை மத்திய–மாநில அரசாங்கங்கள் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலம் விபத்துக்கள் நடக்கும்போது ஏராளமான நல்ல சமாரியர்கள், உயிர் காப்பாற்றும் தோழர்களாக முன்வருவார்கள். ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்படும்.

நன்றி :- தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment