பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, October 14, 2014

செங்கோட்டை ஆவுடையக்காள் கோலாட்டப் பாட்டுதமிழகத்தில் நமது ஞானப் பரம்பரையில், பட்டினத்தார் போல், காரைக்கால் அம்மையார், தாயுமானவர், வள்ளலார் என சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஞானிகளின் வரிசையில் ஒப்பற்ற இடத்தை வகிப்பவர் செங்கோட்டை ஆவுடையக்காள்.

அறியாப் பருவத்தில் மணம் முடிந்து, வயதுக்கு வரும் முன்னே விதவைக் கோலம் பூண வைக்கப்பட்டவர். ஊராரால் கேலிப் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகி, ஒதுக்கி வைக்கப்பட்டு, தனிமை வாசம் அனுபவித்தவர். திருவிசைநல்லூர் வேங்கடேச ஐயாவாள் மூலம் உபதேசம் பெற்று அத்வைத பரமாக பாடல்கள் பல எழுதினார். இவர் பாடல்களில் கவரப்பட்டு பாரதியார் பின்னாளில் பாடல்களை எழுதினார் என்பர். இது அவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

இதுதான் செங்கோட்டை ஆற்றங்கரைத் தெரு கடைக்கோடி. நடுவில் தெரியும் மண்டபம் தெருவுடன் இணைந்த சத்திரத்துக்கானது. ஆவணி அவிட்டம், இத்யாதிகள் எல்லாம் இங்குதான் நடத்தப்பட்டு வந்தது. கீழே ஆற்றங்கரைப்படி.. அருமையாக இருக்கும். குளித்துக் களிக்க ஏற்ற வகையில்! இந்த மண்டபத்தின் உள்ளேதான் ஒரு டி-ஜாயிண்ட், கர்லாக்கட்டை, பளுக் கல், கம்பி, பெஞ்ச் என வைத்திருந்து, தெரு இளைஞர்களான நாங்கள் உடற்பயிற்சி செய்து வந்தோம். இப்போது அதெல்லாம் இல்லை!

செங்கோட்டை ஞானி ஆவுடையக்காளின் சரிதையில் வரும் குறிப்புகளில் இருந்து… இந்த மண்டபத்தை அடுத்த வீடுகளில்தான் அவர் வாழ்ந்திருக்க வேண்டும். தெருவின் கடைக்கோடி வீட்டில் வாழ்ந்ததாகவும், மண்டபத்தை அடுத்த மரத்தின் அடியில் அவருக்கு ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் ப்ரும்ம உபதேசம் செய்து, ஞானம் அளித்ததாகவும் தெரிகிறது. இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்பதால், இப்போதிருக்கும் எவருக்கும் இதுதான் என்று ஆவுடையக்காள் வாழ்ந்த வீட்டையோ சம்பவங்களையோ உறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.

செங்கோட்டை வி.ஜனார்த்தனன் என்ற ஆசான் இது பற்றியெல்லாம் சொல்வதற்கு எனக்கு இருந்தார். அவரிடம் சிலவற்றைக் கேட்டிருக்கிறேன். இனி வருங்காலத்தில் ஆவுடையக்காளை நினைவுகூர ஊரில் யாரும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை! அந்தத் தலைமுறை போய்விட்டது.
80களில்… பள்ளி விட்டு வீட்டுக்குத் திரும்பும்போது, அம்மா வீட்டில் இல்லை என்றால், கிழக்கே டீச்சர் வீட்டில் பாடிக் கொண்டிருப்பார்கள் என்று ஓடுவோம்.

வாரும் சோதர சோதரிகாள்.. என்று பாடல் துவங்கும் சத்தம் கேட்கும். தொடர்ந்து கும்மிப்பாட்டு, கோலாட்டப் பாட்டு, சிந்து எனக் களைகட்டும். பஜனைப் பாடல்களாக! ஏதோ ஒன்றிரண்டு இன்னும் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது.!

இப்போது அந்தத் தலைமுறை தெருவில் இல்லை..! எல்லாம் சூனியம்! மாயை! ஆவுடையக்காள் சொன்னதுபோல..!!!

============================
ஆதியில் ஒன்றானாய் கோலே
அப்புறம் இரண்டானாய் கோலே
வேதமும் அறியாக் கோலே
வேதாந்தக் கோலே!

காடு மேடு எல்லாம் திரிந்தாய்
காம வேதை கொண்டு அலைந்தாய்
வீடு அறியாமல் மெலிந்தாய்
மெத்தவே நொந்தாய்!

சொன்ன வகையை மறந்தாய்
சுய புத்தியைத் துறந்தாய்
என்ன மெய் என்று இருந்தாய்
ஏனடா நீ பிறந்தாய்?

நத்தையாய் புழுவாய் நண்டாய்
நரியாய் பரியாய் வண்டாய்
எத்தனை ஜென்மமோ கொண்டாய்
என்னத்தை நீ கண்டாய்?

எப்போதும் நன்மை வேணும்
ஈசுவர அனுக்ரஹம் வேணும்
சாதன சம்பத்து வேண்டும்
சத் குரு வேணும்!

காசி ராமேசுவரம் சென்றாய்
காகம்போல் முழுகியே நின்றாய்
உன்னாசை போச்சோ மூடா
என்றால் ஆச்சுதோ நன்றாய்?

அண்ட கோளம் எல்லாம் சுற்றி
அணு அணுவாகப் பற்றி
ஒண்டியாய் திரிந்தாய் உக்தி
ஓஹோ உன் புத்தி!

போற்றியார் அடிபணிந்து
பந்துக்களும் வீடும் விட்டு
கூற்றுவன் அழைக்கும் போது
கூட வா ராது!

புருஷன் பெண்டாட்டி பொய்யே
புத்திரன் பிதாவும் பொய்யே
பெருமை சிறுமை பொய்யே
பிரம்மமே மெய்யே!

ஆகா வழிக்கு அதிதூரம்
ஆத்ம அனாத்ம விசாரம்
தொகுத்துப் பார்க்க இது நேரம்
தோன்றுமே சாரம்!

- செங்கோட்டை ஆவுடையக்காளின் கோலாட்டப் பாட்டு!

- By Sriram Senkottai,dinamani

செங்கோட்டை  ஸ்ரீ  ஆவுடை  அக்காள்  

 பக்தி, யோக, ஞான,  வேதந்த  ஸமரச  பாடல் திரட்டு 

பதிப்பாசிரியர்

நித்யானந்தகிரி  ஸ்வாமிகள்

2002

ஸ்ரீ  ஞானாந்த  நிகேதன்

ஸ்ரீ  ஞானாந்த  தபோவனம்

தபோவனம்  அஞ்சல் - 605 756

விழுப்புரம்  ரா.ப.  மாவட்டம்

தமிழ்நாடு
-------------------------
ரூ.80/-
----------------------------------
website  :  gnanananda_niketan.org

 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment