பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, October 18, 2014

நாலு என்றால் நாலடியாருமில்லை; இரண்டு என்றால் திருக்குறளுமில்லை !

ஆலும்  வேலும்  பல்லுக்கு  உறுதி;

 நாலும்  இரண்டும்  சொல்லுக்கு  உறுதி’  


 இதுஏதேனும்  செய்யுளில்  உள்ளதா  என்று  தெரியாது.  ஆனால்  அனுபவ  மொழியாகப்  பழக்கத்தில்  உள்ளது. ஆல்  என்பது  ஆலமரக்குச்சியையும்,  வேல்  என்பது வேலமரக்குச்சியையும் குறிக்கிறது.

இன்றும்  பலர்  கிராமங்களிலும்,  நகரங்களிலும்  மேற்படிக்  குச்சிகளைப் ப்யன்படுத்திப்  பல்துலக்குவதையும்,  அவர்களது  பற்கள்  ஃப்ரஷ்  &  பேஸ்ட் பயன்படுத்துவோரைவிட  நீண்ட  நாட்கள்  நோயற்று  விளங்குவதையும் பார்க்கவும்  முடிகிறது.

ஆங்கில  மருத்துவர்கள்  கூடத்  தற்போது  EXTRA  SOFT  OR  SENSODYNE ஃப்ரஷ்களைப்  பயன்படுத்துமாறு  அறிவுறுத்துகின்றனர்.  ஏனெனில் பெரும்பாலோரது  பற்கள்  அனைத்தும் தேய்ந்துபோய் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.  எப்போது  வேண்டுமானாலும் விழுந்துவிடலாம் என்பதே  உண்மை  நிலைமை.  

இப்போது, “நாலும்  இரண்டுக்கு”  வருவோம். இக்கருத்திற்கு  அவர்கள் ஆதாரமாகக்  காட்டுவது  ஒளவையாரின்  ஓர்  தனிப்பாடல்.  அப்பாடல் பின்வருமாறு :

நிழலருமை  வெய்யிலிலே  நின்றறிமின்  ஈசன்

கழலருமை  வெவ்  வினையிற்  காண்மின்  - பழகு  தமிழ்ச்

சொல்லருமை  நாலிரண்டிற்  சோழன்  கொடையருமை

புல்லறிடத்தே  யறிமின்  போய்.

ஒளவையார்  காலத்திற்குப்  பின்னால்தான்  நாலடியார்  எழுதப்பட்டது  என்ற
உண்மையே  ”நாலு”  என்பது  நாலடியாரைக்  குறிப்பதல்ல  என்பது விளங்கும்.

ஒருவேளை  இதை  எழுதிய  ஒளவையாரும்,  திருவள்ளுவர்  காலத்துப் புகழ்மிக்க  ஒளவையாரும்  வெவ்வேறானவர்களெனில்,  இப்பாடலின் முக்கியத்துவம்  மேலும்  குறைகிறது  என்று  குறிப்பிடலாம்.

திருவள்ளுவர்  காலத்திய  புகழ்பெற்ற  ஒளயையாரே  இதையும் சொல்லியிருப்பின்,  நாலடியாரில்  அநேகம்  திருக்குறள்  அடிகளை அப்படியே  கையாண்டு  இயற்றப்படிருப்பதிலிருந்தே  இங்கே  நாலு  என்பது நாலடியாரைக்  குறிக்காதென்பது  திண்ணம்.

இன்னும்  இச்செய்யுளைக்  கவனித்தால்  ,  முதலிரண்டு,  கடைசி  ஆகிய உவமைகளில்,  ஒன்றின்  பெருமையைக்  காண , அதைவிடத்  தாழ்ந்ததைக் கொண்டு  அறியும்படிக்  கூறப்பட்டிருக்கிறது.

வெயிலில்  நின்றால்  நிழலின்  அருமை  நன்கு  அறியலாமல்லவா ? அதேபோல்  இன்னுமிரண்டு  உதாரனங்களும்  கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால்,  மூன்றாவது  உதாரணத்தில்,  ‘நாலிரண்டு’  என்பதை  நாலடியாரும் திருக்குறளுமெனக்  கொண்டால்  அவை  தமிழ்ச்  சொல்லின் அருமையைவிடத்  தாழ்ந்திருக்கவில்லை அல்லவா ?  

பெரும்  புலவராகிய  ஒளவையார்  ஒரே  செய்யுளில்  மூன்றை ஒருவிதமாகவும்  ஒன்றை  மட்டும்  வேறு  விதமாகவும்  பாடினார்  என்று எடுத்துக்கொண்டால்,  அது  நாலடியாரையும்  திருக்குறளையும்  பெருமை குறைத்துச்  சொல்வதுடன் ,  ஒளவையாரின்  புலமையையும்  பழிப்பதற்கு ஒப்பாகுமன்ரோ ?

ஆகையால்  “நாலு”  என்பது  இங்கே  நாலடியாரைக்  குறிக்காதென்பது நிச்சயம். சைவசமயம்  ஓங்கியிருந்த  தென்னாட்டில்,  அக்காலத்தில்  வழங்கிய மொழிகள்  தமிழ்  மட்டுமல்ல. 

மலையாளம், கன்னடம், தெலுங்கு,  சிங்களம்  ஆகிய  நன்கு  மொழிகள் பேசுவோரின்  மத்தியில்  தமிழ்நாடு  இருந்ததால்,  “நாலு’  என்பது  இந்த நான்கு  பாஷைகளைக்  குறிக்கும்.

இரண்டு  என்பது  தமிழையும்  வடமொழியையும்  குறிக்கும். போக்குவரத்துவசதிகளில்லாதிருந்த  அக்காலத்தில்,  இந்த  ஆறு மொழிகளையே  தமிழ்  நாட்டினர்  அறிந்திருந்தனர்.  அவ்வாறு  மொழிகளில்  தமிழ்தான்  சிறந்தது  என்று  சொல்லப்பட்டிருக்கிறது.

மேலு,ம்,


“  தேவர்  குறளும்  திரு  நான்  மறை  முடிவும்

  மூவர்  தமிழும்  முனி  மொழியும்  -  கோவை

  திருவாசகமும்  திருமூலர்  சொல்லும்

  ஒரு  வாசக  மென்  றுணர். -


என்ற  வெண்பாவை  அறியாதார்  யார்  ?  இதில்  சொல்லப்பட்டுள்ள  7
தலைசிறந்த நூல்களில்  திருக்குறளுக்கே  முதலிடம்
தரப்பட்டுள்ளதையும்  பார்த்தல்  வேண்டும். 7  நூல்களில்  நாலடியார்  பின்னர்  தோன்றிய  நூல். நாலடியாரைவிட   திருக்குறளுக்கே  முதலிடம்  தரப்பட்டுள்ளதையும்  மீண்டும்  சிந்திக்கவேண்டும்.  


ஆகவே,   ”நாலு”  என்பது  மலையாளம்,  கன்னடம்,  தெலுங்கு,  சிங்களம் ஆகிய     நான்கு  மொழிகளயே  குறிக்கிறது.  இரண்டு  என்பது  தமிழ், வடமொழி    ஆகிய  இரு  மொழிகளையே   குறிக்கிறது  என்று  ஏற்பதே சாலவும்  நன்று.


பிரசண்ட  விகடன்  15-12-1951,  தினத்தந்தி  12-12-1951,  சுதேசமித்திரன் 4/5 -8-- 1951
தமிழ்நாடு  18-11- 1951, தினத்தந்தி  20-11-  1968,  மாலை  முரசின்  வேலூர்  பதிப்பு
16-03-1969,  திருச்சி  வானொலி  7-2-1970-ஆம்  தேதி    இரவு  9.15  மணிக்கு 
ஒலிபரப்பிய  மதிப்புரை  ஆகிய  பெருமைகளுக்கெல்லாம்  உரித்தான 
ஓய்வு பெற்ற  தாசில்தார் ம.சுடலைமுத்துப்பிள்ளை  (  எனது  நண்பர் 
டி.இராஜேந்திரனுடைய  தாத்தா )  எழுதியுள்ள  எண்களின்  சிறப்பு  ஆறாம் 
பதிப்பு -1979  -என்ற  நூலில்  இருந்து  நன்றியுடன்  எடுத்தாளப்பட்டுள்ளது.

சங்கர இராமசாமி.




      

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment