பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 2, 2014

பழனியாண்டவன் காவடிச் சிந்து - முத்துக் கறுப்பணன்


பழனிப்பதி வாழும் - வேலர்
பாதம்தனை நாளும்
உளமேதினம் துதிக்க - வினை
ஒடுக்கும் கதிகொடுக்கும்
வளமேவிய பரனே - சுத்த
மடவாழு தந்திமுகனே
அழகாகிய குருவாய் - எனக்
கருள்வாய் முன்பு வருவாய்
1. சுத்தமடம் - ஊர்; தந்திமுகன் - விநாயகர்
1

சிவகிரியில் வாழ்வோன் - எனைத்
தினமும் குடி ஆழ்வோன்
தவமேவிய குமரன் - புகழ்
தானே அடியேனே
நவமீறிய காவடிச் - சிந்து
நாடத் தினம் பாட
புவனச் சரசுவதியே - சிந்து
புகல வருவாயே
2. சிவகிரி - கயிலாயம், இங்குப் பழனியில் உள்ள சிவமலையைக் குறிக்கிறது.
நவமீறிய - புதுமை மிகுந்த; புவனம் - உலகம்
2

கள்ளமாய் அன்று வனத்தில் - வள்ளி
கானத் தினைப் புனத்தில்
உள்ளமே மகிழ்வாகிக் - கிழ
உருவாய்ப் பரண் ஏகி
தெள்ளிய தினை மாவை - பொசித்
திலகும் அண்டர் கோவை
வள்ளி நாயகப் பொருளைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
3. கள்ளமாய் - களவு நிலையில்; பொசித்திலகு - உண்டு விளங்கும்
3

துண்ட வெண்பிறை அணிவோன் - அருள்
சுத்தனைப் பரிசுத்தனை
அண்டர் கோன் பயம் - தீர்ப்போன்
அடியாரைத் தினம்காப்போன்
எண்டிசை பணி நேசன் - தவம்
இலகும் கிரிவாசன்
வண்டமிழ்ப் பழனியனைக் - கொண்டு
வருவாய் தோகைமயிலே
4. துண்ட வெண்பிறை - பிறைச் சந்திரன்
துண்ட வெண்பிறை அணிவோன் அருள் சித்தன் - சிவனார் அளித்த முருகன்
அண்டர்கோன் - தேவேந்திரன்; கிரிவாசன் - மலை வாழ்பவன்
4

செய்ய தாண்டவ ராயன் - அருள்
சேயனைக் கார்த்தி கேயனை
துய்ய குஞ்சரி பங்கனை - அயில்
துலங்கும் கர துங்கனை
உய்யவே அருள் கொடுப்போன் - அன்பர்
உளத்தில் குடி இருப்போன்
வையகம் புகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
5. தாண்டவ ராயன் - ஆடல்வல்லான்
சேயன் - மகன்; முருகன்; அயில் - வேல்; துங்கன் - மேன்மை உடையோன்
குஞ்சரி - தெய்வயானை
5

ஆனைமா முகன் துணைவன் - வள்ளிக்
கழகாகிய கண்ணன்
ஞானதே சிக போதன் - நவ
வீரரும் பணி நீதன்
தேனுலா விய கடப்ப - மலர்
செறிவோன் அருள் புரிவோன்
வானவர் பணி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
6. போதன் - அறிவுடையோன், அறிவளிப்போன்
நவவீரர் - வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர்
நீதன் - நீதி உள்ளவன், தலைவன்; செறிவோன் - சூடுவோன்
6

திங்கள் சேர் நுதல் - மீனாள்
தருதேனை முருகோனை
எங்கள் நாயகப் பொருளை - பணிந்
தேற்றார் மனத் திருளைத்
துங்கமா மனம் தேம்பிட்டேன் - உனைத்
தொழுதே நிதம் கும்பிட்டேன்
மங்களம் உயர் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
7. திங்கள் சேர்நுதல் மீனாள் - பார்வதி
ஏற்றார் - கொண்டார்; துங்க - பெரிய; தேம்பிட்டேன் - கலங்கிட்டேன்
7

இச்செகம் தனில் அடியேன் - உனை
ஏற்ற தினம் போற்ற
மிச்சமாய்க் கலிவருத்த - நான்
மெலிவேனோ அலைவேனோ
அச்சமாய்த் துயர் ஓட - அருள்
நாடகக் கவி பாட
வச்சிரம் திகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
8. மிச்சமாய் - மிகுதியாய்; கலி - வறுமை; வச்சிரம் - வைரமணி, கூர்மை
வச்சிரம் திகழ் வேல் - வைரவேல் அல்லது கூர்வேல்
8

பூசுரர் வெகுமானி - சிவப்
பொருப்பில் வளர் ஞானி
தேச மேழும் புகழ் - காவடிப்
பூசை சிறக்கும் தமிழ்புரக்கும்
$........ ......... ......... ........
........ ......... ......... ........
வாசனை வடி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
9. $ ஒருவரி விடுபட்டிருக்க வேண்டும்.
பூசுரர் - அந்தணர்; சிவப்பொருப்பு - கயிலைமலை; புரக்கும் - காக்கும்
9

படியெழும் புகழ் இடும்பன் - தினம்
பணியும் மலர்க் கடம்பன்
அடியார் வினை பொடி - செய்திடும் 
மான புகழ் குமரன்
துடிமீறு மும்முரசன் - தெய்வம்
தொழுவாழ் கொலு வாசன்
வடிவேல் முருகனையே - கொண்டு
வருவாய் தோகை மயிலே
10. இடும்பன் - குமரனின் ஏவல் செய்வோன்
பொடி செய்திடும் - அழித்திடும்; மானபுகழ் - பெரும்புகழ்
துடிமீறு - மேன்மை மிகுந்த, முழக்கமிகுந்த
மும்முரசு - மங்கல முரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு
10

கர்த்தனாகிய முருகன் - அருள்
கனியும் திரு மருகன்
பத்தர்கள் மிக வாழி! - நிதம்
படிப்போர் தினம் வாழி!
சுத்தமா நகர் வாழும் - முத்துக்
கறுப்பணன் சொல் நாளும்
சித்தமேவிய பெரியோர் - தினம்
செழித்து மிக வாழி!
11. கர்த்தன் - தலைவன்; திரு - திருமகள்
முத்துக் கறுப்பணன் - நூலாசிரியர்; சித்தம் - உள்ளம்
11

பழனியாண்டவன் காவடிச் சிந்து முற்றும்


நன்றி :-http://library.senthamil.org/097.htm

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment