பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 2, 2014

சங்ககாலக் கூத்தும் இன்றைய தெருக்கூத்து மரபுகளும், முனைவர் அ. அறிவுநம்பி - 27 AUGUST, 2005

Past and Present dramas and its traditionals - Tamil Literature Ilakkiyam Papers
தமிழகத்தின் மிகப்பழமையான கலைகளுள் ஒன்று தெருக்கூத்து. நாட்டுப்புறக்கலைக்களான பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகங்களுக்கு முன்னோடியான தெருக்கூத்து, மிகமிகக் காலத்தினால் பழமையானது என்பதற்கு அதன் வாய்மொழித்தன்மை, முழுவதும் பாடல்களால் அமையும் பாங்கு, நடனத்தொடு இலைந்து வரும் தன்மை, களம், காட்சி என்ற பிரிவுகள் இல்லாமை போன்றவை காரணமாகின்றன. அதன் தோற்றுவாய் எக்காலம் என ஒர்தல் அவசியமாகின்றது.
"நாடகங்களில் இருபெரும் பிரிவுகள் இருந்தன. அவை வேற்றியல் (வேத்தியல்) என்றும் பொதுவியல் என்றும் கூறுவர் நாகரிகம் மிக்கவர் கலைப்பாணியில் உயர்ந்தவர் அனுபவிக்கின்ற நாடகங்களை வேத்தியம் நாடகங்கள் எனவும் சாதாரணப் பொதுமக்கள் அனுபவிக்கின்ற நாடகங்களைப் பொதுவியல் நாடகங்கள் என்றும் பிரித்தார்கள் என்பர். இவ்விருவகைக் கூத்துக்களையும் சிலப்பதிகாரம் அழகுபட மொழிகின்றது. கூத்தச் சாக்கைன் ஆடிய கொட்டிச்சேதம் எனப்படும் கூத்து தெருக்கூத்து எனலாம். ஏனெனில் இன்றைய கேரளத்தில் சாக்கையர்கள் ஆடும் கூத்து தமிழகத்தின் மலையாள வடிவமே. எனவே, சிலம்பிற்கு முன்பே தெருக்கூத்து வழக்கில் இருந்திருக்க வேண்டும். "கி.பி.225 இலிருந்து ஏறக்குறைய எல்லாவிதமான கூத்து முறையும் வளரத் தொடங்கியது" என்பர் வென்ஸ் என்ற அறிஞர்.
வி.கே. சூரிய நாராயண சாத்திரியார் "பெருமை வாய்ந்த நாடகத்தமிழின் தோற்றமென்ன? தமிழ்நாடகம் முதலில் உண்டானது மதவிடயமாகவே என்பது துணியப்படும். அது கடவுளர் திருவிழாக்காலங்களில் ஆடல் பாடல்கள் இரண்டையும் சேர நிகழ்த்துவதனின்றும் உண்டாயிற்று கி.மு. மூன்றாம் நூற்றாண்டினாதல் அல்லாக்கால் அதனினும் சற்று முற்காலத்தினாதல் நாடகத் தமிழ் உயர்நிலையுற்றிருத்தல் வேண்டும் என்பர் இன்றும் தெருக்கூத்து மதவிடயமாகவே, கடவுளர் திருவிழாக்காலங்களில் ஆடப்படுகின்றது என்பது நோக்குதற்குரித்து, சங்க காலத்தில் கூத்தரை மற்றொரு கூத்தர் குழாம் ஆற்றுப்படுத்தியதாகக் கூத்தராற்றுப்படை என்ற தனி நூலொன்று எழுமளவிற்குக் கூத்து வளம்பெற்றிருந்ததை உணருதல் வேண்டும்.
"மன்றுதொறு நின்று குரவை, சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டம் விரைகு
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்
சேரி விழவின் ஆர்ப் பெழுந் தாங்கு
முந்தை யாமன் சென்ற பின்றை" (615-620)

என்ற மதுரைக்காஞ்சி வரிகள் கூத்தைப்பற்றிக் கூறுகின்றன. இரவில், உரை பாட்டு ஆட்டம் கலந்ததாகக் கூத்துகள் நிகழ்ந்தமையையும் இவ்வரிகள் இயம்பும். சிறுத்தொண்டர் கூத்து நடைபெறுவது இன்றுமுண்டு. ஒருவரது பிறந்தநாளில் கூத்தாடும் சங்கால மரபு தெருக்கூத்தில் காணப்படும் ஒன்றெனக் காணுகின்றோம்.
இசைக் கருவிகளைச் சங்க நூல்கள் காட்டும். யாழ், பதலை எனப்படும் ஒரு தலை முழவு, மத்தளம் ஆகியவை அவை. யாழ் இன்று வழக்கில் இல்லை. ஆனால் மத்தளமும், தபேலா எனப்படும் பதலையும் கூத்தில் உண்டு. பதிற்றுப்பத்தில் காணலாகும். கூத்துச் செய்திகள் பல. தெருக்கூத்தில் இன்றும் ஆடுகளம் அடையும் கூத்தர்கள், களரி கட்டுதல் என்ற பெயரில் கூத்தின் தொடக்கத்தையும் இசை முழக்கிக் காட்டுவர். சங்க காலக் கூத்தர்களும் ஊர்ப் பொதுமன்றிடை வந்து யாழ் மீட்டித்தம் வரவைப் புலப்படுத்துதல் உண்டென்பதைப் பதிற்றுப்பத்து (3:3:5-6) விளக்கும்.
"மன்றம் போந்து மறுகுசிறை பாடும்
வயிரிய மாக்கள்...."

என்ற வரிகளுக்கு வயிரிய மாக்கள் கூத்தர். இக்கூத்தர் முதற்கண் ஊர்மன்றத்தை அடைந்து தம் இசைக் கருவியை இசைத்துத் தம் வரவு தெரிவித்தல் மரபாதலின் மன்றம் போந்து, என்றார் என்ப. பதிற்றுப்பத்தில் 47ஆம் பாடலில் வரும் பாண்டில் விளக்கின் பரூஉச்சுடர் அழல என்ற வரிக்கு உரையெழுதும் வேளையில் மண்ணெண்ணெய் விளக்குகள் வருமன்னர் வழக்கிலிருந்த வரிச்சில் விளக்குகளை விளக்குவர். தீவட்டி ஏந்தி ஆடுகளம் புகும் தெருக்கூத்தொடு இப்பகுதி ஒப்புநோக்கற்குரியது. இரவில் விழாவில் இசையுடன் அமையும் சங்கக் கூத்தின் ஆடற்களம் திறந்த வெளியரங்காகவே இருந்தமையை மேற்சுட்டிய வரிகள் சுட்டும். "திறந்தவெளி நாடக அரங்கு அமைப்பது நமக்குக் புதிது அன்று. பண்டைக் காலத்தில் நாடகம், நடனம், பிற கூத்து வகைகள் எல்லாம் திறந்தவெளி மேடைகளில்தான் நடைபெற்று வந்தன. தமிழ்நாட்டில் சிறப்புக்குரிய கோயில்களில் எல்லாம் விழாக்காலங்களில் அன்றும், இன்றும் கலை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் திறந்தவெளிகளில்தான் நடைபெற்று வருகின்றன.
இந்த திறந்தவெளி அரங்குகளைத் தெருக்கூத்து மேடைகள் என்று மக்கள் குறைவாகக் கருதி வந்தார்கள். சென்ற பல ஆண்டுகளாகத் திறந்தவெளி அரங்கின் நினைவு மாறாமல், அழியாமல் பாதுகாத்து வந்தவர்கள் தெருக்கூத்து ஆடியவர்கள்தாம் என்பது மறுக்கமுடியாத உண்மை என்பது ஒளவை சண்முகனாரின் கருத்து.
சங்க காலக் கூத்துக்கள் இன்றைய தெருக்கூத்தைப் போன்றவை என்பதைப் பா. வரிகளில் மட்டும் இன்றி இலக்கிய வடிவத்திலும் காணலாம். "நாடகக் காட்சிகள் கலித் தொகையில் மிகவும் சிறப்பாக அமைவதைக் காணலாம். ஒருத்தி ஊர்க்கால் நிவந்த சோலை வழி நிலா கதிர்சிந்துவது போல் சிரித்த முகத்தோடு நடைபயின்று வருகின்றாள். அதனைக் கண்ட ஆடவன் காதல் கொண்டு
"ஈங்கே வருவாள் இவள் யார் கொல்; ஆங்கே ஒர்
வல்லவள் தைஇய பாவைகொல்; நல்லார்
உறுப்பெல்லாம் கொண்டு இயற்றியார் கொல் வெறுப்பினாள்
வேண்டுருவம் கொண் தோர் கூற்றம் கொல்"

என்று பலவாறு ஐயங்கொண்டு பேசுவதும் இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து என்று நெருங்குவதும் நல்லாய்கேள் என்று பேசமுற்படுவதும் சிற்றூர்ப்புறங்களில் நடைபெறும் தெருக்கூத்தின் அமைப்பைப் போன்றே அமைகின்றன. அங்கு அரங்கின் இரு ஓரங்களில் வீரனும் மங்கையும் வந்து நிற்கும் காட்சி தொடங்கும். யாரிவள்? இந்திரனோ? தேவருலகத்துப் பெண்மணியோ? இங்கு - இப்போது - இவளோடு - பேசிப்பார்க்கலாம் என வசனம் பேசும் முறைக்கு கலித்தொகை அமைப்பிற்கும் வேறுபாடில்லையல்லவா? என்று பானைச்சோந்தின் பதச்சோறு போலச் சான்று காட்டுவார் தே. ஆண்டியப்ப பிள்ளை.
சங்க காலத் தமிழக எல்லை பறந்தது. அதனெல்லை வடவேங்கடம், தென்குமரி. இப்பரப்பில் அன்று நிகழ்ந்த கூத்துத்தன்மை இன்றும் வாழலாம். தெருக்கூத்து என்ற பெயரமைப்பைப் போலவே வீதி நாடகம் என்ற பெயரில் அமையும் ஆந்திரக் கூத்தும், தெருக் கூத்தைப் போலவே அமைந்துள்ள சன்னாட்ட என்ற பெயரில் அமையும் கர்நாடகக் கூத்தும், சாக்கையர்கள் ஆடும் கூடியாட்டம் உட்படத் தெருக்கூத்தைப் போன்று நிகழும் மலையாளக் கூத்தினங்களும் அமையக் காணலாம். இவற்றை மீட்டுருவாக்குவதன் மூலம் பண்டைத் தமிழகத்தின் கூத்தின் செய்திகளைப் பெறக்கூடும் என்பது தனி ஆய்வாகும். சங்கக் காலக் கூத்தின் மரபிலேயே இன்றைய தெருக்கூத்தும் அமைகின்றது. இதனால் தெருக்கூத்து இயைபுகளின் தோற்றுவாய் சங்ககாலக் கூத்தாக அமைவதை உணரலாம்.
நன்றி: வேர்களைத் தேடி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment