பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 15, 2014

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்!உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட்பாகி, நட்பு உரிமை கலந்த உறவாகிக் கேண்மையாகி விடுகிறது என்பதன் வரலாறு இவர்கள் உறவு எனலாம்.

பறம்புமலை சாட்சியாய் இவர்கள் பழகிய பொழுதுகளின் அழகிய பதிவுகள் கபிலர்தம் பாடல்கள் என்றால் மிகையாகாது.

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் என்று கபிலரின் நற்றிணைத் தலைவி பேசும் தொடர்கள் பாரிக்கும் பொருந்தும். 

கபிலர் பாரியுடன் இருந்து பருகிய சுனைநீர், உவலைக் கூவற்கீழ் மான் உண்டு எஞ்சிய கலுழிநீரானபோதும் தேன் மயங்கு பாலினும் இனியதாகச் சுவைப்பது அவர்தம் நட்பின் சுவையே.

காதல் கடந்த அன்பில் ஒருபடி மேலே போய்க் கடவுளாகவே பாரியைக் கருதுகிறார்,  கபிலர். 

அதனால்தான்,
நல்லவும் தீயவும் அல்ல குவிஇணர்ப்
புல்இலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கை வண்மையே
(புறம்-106)
என்று பாடுகிறார்.

பாரியைத் தவிர, வேறு யாரையும் பாடா மரபுடைய கபிலர்தம் பாராட்டுரைதான் மூவேந்தர்களையும் முற்றுகை இட வைத்தது என்பது உண்மை. 

முந்நூறு ஊர்களும் தம்மை நாடிவந்த இரவலர்க்கு நல்கி, கலையும் இசையும் களிநடம் புரியப் போரை முற்றத் துறந்த பாரியது பறம்பைப் பகைவர் முற்றுகை இட்டபோது, 

கபிலர் பாடுகிறார்:

கடந்து அடுதானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே,
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே
(புறம்-110)

இப்போது நாடு இல்லை. மலைதான் உண்டு. மலை நிகர்த்த பாரி உண்டு. இடையில் தான் உண்டு. யார் வேண்டுமோ, ஆடுநர் பாடுநராகச் சென்று வேண்டினால் பாரி தன்னையே ஈவான். மலையே வேண்டினும் நல்குவான். இதுவரை அவனைத் தவிர வேறு யாரையும் பாடாத அவனிடம் கபிலனாகிய என்னை இரந்தால் தயங்காது தருவான் என்று குறிப்பால் உணர்த்தும் கபிலர்கோமான், பாரி சொன்னால் உம்மையும் பாடுவேன் என்று சொல்லாமல் சொல்கிறார் எனலாம்.


அதனால்தான், பாரி மறைந்த பின்னர், பாரிமகளிரைக் காக்கும் பொருட்டுப் பிறமன்னர்களைப் பாடும் நிலைக்குக் கபிலர் தள்ளப்படுகிறார். அப்போதெல்லாம் நொந்த உள்ளத்தின் உள்ளே இருந்து வெந்த சொற்களாய் வெளிப்படும் கவிதைகளில் பாரியை இழந்த பறம்புமலையின் நீலவண்ணச் சோகமாய் நிலைத்துநிற்கும் காட்சி அவர்தம் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றில் புலனாகிறது. பயில்வோர் நெஞ்சைப் பிழியும் அந்தச் சோககீதங்கள் கையறுநிலைப் பாடல்களாகக் கபிலரின் வாக்கில் பிறந்து அமரத்துவம் பெற்றுநிற்கின்றன. 


அவற்றின் உச்சம் அவர்தம் இறுதிப் பாடல் எனத்தகும் புறப்பாடல்.

பறம்புமலையளவு உயர்ந்த வாழ்வு, பெண்ணையாற்றருகே உள்ள குன்றளவு குன்றிய சோகத்தில் நின்ற கபிலருக்கு, அக்குன்றின் தோற்றம், பறம்புமலையின் பலாப்பழத்தை நினைவூட்டி விட்டதுபோலும். குறிஞ்சி வேடர்கள் பலநாள்பட வைத்து உண்ண வேண்டிய பலாப்பழத்தை, குரங்கு தான் உண்ணக் கிழித்த-அல்ல, கிழிந்த-கோபமும் வருத்தமும் கூடிவரப் பாடுகிறார். தொட்டதும் கிழியும் அளவிற்குப் பக்குவமாய்ப் பழுத்த அப்பலாப்பழமோ, முழவு என்னும் இசைக்கருவிபோல் தோற்றம் உடையது. ஆதிக்க வர்க்கக் குரங்கின் கைப் பலாவாய், இசைநிறை பாரி இருந்து இறந்த சோகக்காட்சியை, மங்கிய சுடராய் மனதில் நிறைத்துக் கபிலர் பாடல் கண்முன் விரிகிறது.


வள்ளல் பாரியின் கடைசிக் கணம், உடன் தானும் மடியச் சித்தமாகிக் கபிலர் துடிக்கிறார். கை காட்டி மறுக்கிறான் பாரி. ஒழிக என்று இறுதிக்குரல் கொடுத்துக் கண்மூடிவிடுகிறான். நட்பில் பூத்த உரிமையில் மரணம் கூடப் பிரிக்கமுடியாத நிலையில் கலக்கத்துடித்த கேண்மை உறவை மறுதலித்துவிட்டான் பாரி, கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் என்று பாரி தம்மை ஒதுக்கிவிட்டது ஏனோ என்று எண்ணி எண்ணிக் கண்ணீர் சிந்திக் கலங்குகிறார் கபிலர். எனினும்,  கடமை மறவாமல், பாரி மகளிரைக் காத்து வந்த கபிலர் அவர்களைப் பார்ப்பாற்படுத்துத் தனித்து வந்தபின் கடைசிக்கண்ணீர் வடிக்கிறார்.


இப்பிறவி நீங்கி, மறுபிறவி எடுத்து வாழும் காலத்தில், இப்பிறவியில் போலவே இனிய நட்பில் உடன் உறையும் அற்புத வரம் அருளவேண்டும். எப்போதும், எப்போதும் இடையீடு இல்லாமல், உன்னுடனேயே உறைந்து வாழும் உரிமையை, உன்னத வாழ்வை, உயர்ந்த ஊழ் கூட்டுவிக்கட்டும் என்று வேண்டுகிறார்.


காரைக்காலம்மை ஈசனிடம் வேண்டிய வரத்துக்கு முன்னோடியாய்க் கபிலர் உயர்ந்த ஊழிடம் வரம் வேண்டும் அப்பாடல் பின்வருகிறது.
கலை உணக் கிழிந்த.......
.........................
யான் மேயினேன் அன்மையானே  ஆயினும்,


இம்மைபோலக் காட்டி, உம்மை
இடைஇல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே
(புறம்-236)

பொதுவாய், உயர்ந்த நட்புக்கு ஒரு சான்றாகக் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரைச் சுட்டுவது வழக்கம். 

முகங்காணாதே அகத்தால் ஒத்துணர்வு கொண்டு மரணத்தறுவாயில் ஒருங்கிருந்து உயிர்விட்ட பெருமக்கள் அவர்கள். அப்படியொரு வாய்ப்புத் தனக்குக்கிட்டாது போன வருத்தத்தைக் கபிலர் தமது கடைசி வாக்குமூலமான கவிதையில் வைத்து முடிப்பது, அவர்தம் உள்ளத்தின் உள்ளூரப் பொதிந்த நட்பின் ஆழத்தை, அதன் அழுத்தமுறு அன்பை, இறுக்கவுணர்வை இறக்கிவைக்கும் சுமைதாங்கிக் கல்லாக்கி, தென்பெண்ணை யாற்றுக் (கபிலர்) குன்றைக் காலகாலத்திற்கும் சாட்சியாக்கி வைத்து வெளிப்படுத்திவிடுகிறது.

கபில பாரியின் கடைசி வாக்குமூலங்களைத் தாங்கிய இப்புறநானூற்றுப் பாடல், நட்பின் சாசனம்.  என்றென்றும் நின்று வாழும் மக்களுக்கு வழிகாட்டும் இலக்கிய வரலாற்று ஆவணம்.

நன்றி :- தினமணி, 18-07-2010 -தகவல் : முனைவர் சொ.சேதுபதி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment