
அப்பா அரசியல்வாதி. திமுகவில் இருந்தார். 28 ஆண்டுகள் சங்கரன்கோவில் நகரச் செயலராக. எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பார். “அரசியல்வாதி என்றால் நாலும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்” என்பார்.
இரவு நெடுநேரம் விழித்திருந்து படிப்பார். நள்ளிரவு இரண்டு மூன்று மணிக்கெல்லாம் கூட விளக்கு எரியும். நகர்மன்றத் தலைவராக இருந்தபோது மாற்றுக் கட்சியினர் குற்றச்சாட்டுகளுக்குப் புள்ளிவிவரங்களோடு மேடையில் நீண்ட விளக்கம் தருவார். அரசியல் மேடைகளிலும் நீண்ட நேரம் பேசக்கூடியவர் என்பதால், ஏடுகளில் படித்த செய்திகளை நாள் குறிப்பில் எழுதிவைப்பார். அவரது மேசை முழுவதும் காகிதங்களாகவே பரப்பி வைத்திருப்பார். லேசில் கழிக்க மாட்டார்.
ஒருகாலத்தில் எனக்குப் பெரிய எரிச்சல் ஏற்பட்டதுண்டு. ஆனால், இன்றைக்கு ஒரு எழுத்
தாளனாக அதிலும் குறிப்பாக வரலாறை எழுதத் தொடங்கிய பிறகு, அவரது எழுத்துகள் எனக்குப் பல செய்திகளைத் தருகின்றன. பல ஆண்டுகளாக அவர் கம்பியில் குத்தி வைத்திருந்த காகிதங்கள், மடல்களைப் படிக்கிறேன். பெரும் புதையல் கிடைத்ததுபோல இருக்கிறது.
பல வீடுகளில் காகிதங்களைக் குத்தி வைத்திருப்பதைப் பார்த்து இருக்கிறேன். அதையெல்லாம் படித்துத் தொகுத்து எழுதினால் எவ்வளவு செய்திகள் கிடைக்கும் என்று தோன்றும். உங்கள் வீட்டில் இருக்கிறதா?
0 comments:
Post a Comment